'மாட்டிக்கொண்ட மோடி

 

மக்களை உளவுப்பார்க்க பெகாசஸ் செயலி பயன்படுத்திய விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

.இந்நிலையில், அந்த குழு முன் ஆஜரான இரண்டு சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், மனுதாரர்களின் சாதனங்களில் பெகாசஸ் மால்வேர் பயன்படுத்தியதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள், உச்ச நீதிமன்றக் குழுவின் முன் ஆஜராகி, அவர்களது தடயவியல் பகுப்பாய்வு விவரங்களை வழங்கினர்

இரண்டு ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் ஏழு பேரின் ஐபோன்களை ஆய்வு செய்துள்ளார். அதில் இருவரது மொபைல் பெகாசஸ் செயலியின் தடம் இருப்பதை கண்டறிந்ததாக  தெரிவித்தார்.

இரண்டு நபர்களின் சாதனங்களிலிருந்து தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தரவை நீக்கிய பிறகு, ஏப்ரல் 2018 இல் மனுதாரர்களில் ஒருவரின் செல்போனில் பெகாசஸ் செயலி ஊடுருவலையும், மற்றொரு போனில் 2021 ஜூன் மற்றும் ஜூலை காலக்கட்டத்தில் மால்வேர் ஊடுருவலின் பல தடயங்களை கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற குழு முன் வாக்குமூலம் அளித்த அந்த நிபுணர், மார்ச் 2021 இல் பல முறை நடைபெற்ற பெகாசஸ் ஊடுருவலை பார்க்கையில், அந்த மால்வேர் மூலம் பிராசஸ் டேபிள் டேட்டாபேஸில் உள்ள என்டீரிஸ்களை டெலிட் செய்ய முயற்சித்துள்ளனர் என்றார்.

மேலும், இந்த வழக்கில் மனுதாரர்கள் ஆறு பேரின் ஆண்ட்ராய்டு போன்களை ஆய்வு செய்த மற்றொரு சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர், நான்கு போன்களில் வித்தியாசமான மால்வேரின் தடயத்தையும், இரண்டு செல்போனில் ஒரிஜினல் பெகாசஸின் தடயத்தையும் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ” எங்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு எமுலேட்டர் மூலம், போனில் உள்ள மால்வேர் இருப்பை கண்டறிந்தோம். இந்த மால்வேர் மிகவும் ஆபத்தானது. இதனை முறையான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது. 

இந்த மால்வேர் உங்கள் சாட்களை படிப்பது மட்டுமின்றி வீடியோஸை எடுப்பது, ஆடியோ அல்லது வீடியோ வசதியை எப்போது வேண்டுமானாலும் ஆன் செய்திட முடியும்” என்றார்.

இவ்விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் மேற்பார்வையில், மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி நியமித்தது.

அந்த குழுவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் டீன் டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் பேராசிரியர் டாக்டர் பிரபாகரன் பி, இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இன்ஸ்டிடியூட் சேர் அசோசியேட் பேராசிரியர் டாக்டர் அஷ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் உள்ளனர்.

இதற்கிடையில், இந்தாண்டு ஜனவரி 2 ஆம் தேதி, இந்த குழுவினர் அறிக்கை ஒன்றை வெளிட்டனர். 

அதில், பெகாசஸ் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என கருதும் நபர்கள், ஜனவரி 7க்கு முன்பு கமிட்டி முன்பு ஆஜராகி தெரிவிக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

அப்படி பெகாசஸ் உளவு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால், உங்களது சாதனங்களை சோதனைக்காக ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், குழுவினரை சந்தித்த மனுதாரர்கள் சிலர், தங்களது சாதனங்களை சோதனைக்கு ஒப்படைப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். 

இதுகுறித்து பேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், சாதனங்கள் ஒப்படைக்க வேண்டும் என கூறுவது அவசியமற்றது. அவர்கள் முன்பாகவே எளிதாக போன் டேட்டாவை காப்பி செய்துவிட்டு, சாதனங்களை ஒப்படைக்கலாம்” என்றனர்.

கடந்தாண்டு ஜூலை மாதம், இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் சாப்ட்வேர், பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது சட்டவிரோதமாக உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், அப்போதைய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, அஷ்வினி வைஷ்ணவ், இந்தியன் எக்ஸ்பிரஸின் மூன்று ஆசிரியர்கள் உட்பட சுமார் 40 பத்திரிகையாளர்கள் உட்பட பலரின் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த உளவு பற்றியே தெரியாது என்று ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

ஆனால் இஸ்ரேல் சென்று ஆயுதங்கள் வாங்க ஒன்றிய முக்கிய அமைச்சர் மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தம் மூலம்தான் இந்த 

பெகாசஸ் உளவு மென்பொருள் இந்திய ஒன்றிய அரசு வாங்கியுஉள்ளது என நியுயார்க் டைம்ஸ் ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது.

--------------------------------------------------------------------------------

கைலாசா" என்ற கப்சா!

தான் போன ‘கைலாச’த்துக்கு எல்லாரையும் கூப்பிடுகிறார் சாமியார் நித்யானந்தா. செல்லப்பிராணிகளுடன் வரலாம் என்று சலுகையும் அறிவிக்கிறார். தன்னை ஒரு பரதேசி, பொறம்போக்கு என்று சொல்லிக்கொள்ளும் நித்தியானந்தா, தனக்கான நாட்டை உருவாக்கிவிட்டதாக கூறுவதும் அங்கே எல்லாரும் வந்து தங்கிக் கொள்ளலாம் என்பதும் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாக இருக்கிறது.


 

kailaasa

     

இந்தியாவில் எதிர்கொள்ளும் பாலியல் வழக்குகளிலிருந்து தலைமறைவாகி, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹைதி நாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் நித்தியானந்தா, தென்அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை வாங்கி, அரசியல் சார்பற்ற இந்து நாடாக உருவாக்கிவிட்டதாக அறிவித்தார். அந்த நாட்டுக்கு தன் படத்தையும் நந்தி படத்தையும் போட்டு ஒரு கொடியையும் உருவாக்கி, தேசிய பறவை, தேசிய மலர், தேசிய விலங்கு ஆகியவற்றையும் அறிவித்து, “எல்லாரும் கைலாசா நாட்டுக்கு வாங்க” என்று இணையதளத்தில் கூவினார்.
 

kailaasa



ஈக்வடார் தூதரகம் பதறிப்போய், “எங்கள் நாட்டில் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் எதுவும் தரவில்லை. எந்தத் தீவையும் அவருக்கு விற்கவில்லை. தனி நாடு என இணையத்தில் அவர் தெரிவிக்கும் தகவல்கள் எல்லாம் தவறானவை” என உண்மையை போட்டு உடைத்தது.
 

      திருநெல்வேலி இருட்டுக் கடை ஒரிஜினல் அல்வா வாங்குவதற்கே சரியான திட்டமிடலும் முயற்சிகளும் தேவைப்படும்  உலகில், ஒரு நாட்டை நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிவிட்டதாக எல்லாருக்கும் அல்வா கொடுக்கிறார் நித்தியானந்த சாமியார். 30 ஆண்டுகளுக்கு மேல் ஆயுத போராட்டம் நடத்திய ஈழ மண்ணில் தனித் தமிழீழம் அமையவில்லை. ஸ்பெயின் நாட்டில் கேட்டலோனியா பகுதி மக்களின் தனி நாடு கோரிக்கை நிறைவேறவில்லை.

 

kailaasa


அமெரிக்கா தயவு வைத்தால், ஐ.நா.அவையின் ஒத்துழைப்புடன் புது நாடு உருவாக்கப்படும் என்பதற்கு இந்தோனேஷியாவிலிருந்து 2002ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட கிழக்கு தைமூரும், சூடானிலிருந்து 2011ல் பிரிக்கப்பட்ட தெற்கு சூடானும் அண்மைக்கால எடுத்துக்காட்டுகளாகும். இந்த இரண்டு நாடுகளும் தங்களின் விடுதலைக்காக நடத்திய உள்நாட்டுப் போராட்டங்கள் நெடிய வரலாற்றைக் கொண்டவை. அதனை உலக அரசியல் கண்ணோட்டத்தில் தனக்கான  சாதக-பாதகங்களின் அடிப்படையில் அமெரிக்கா அணுகியதன் விளைவாகவும், ஐ.நா.அவையின் உறுப்பு நாடுகள் பல ஆதரவளித்ததன் காரணமாகவும் இவை தனி நாடுகளாயின.

 

ஒரு நாட்டிற்குள் வாழும் மக்களின் விருப்பம், அதன் புவியியல் அமைப்பு, வரலாற்றுப் பின்னணி, சமூகச் சிக்கல், இனம்-மொழி-பண்பாட்டுக்கூறுகள் உள்ளிட்டவை அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்டே தனி  நாடு உருவாக்கப்பட்டு, ஐ.நா.வால் ஏற்பளிக்கப்படுகிறது.

 

சாமியார் நித்தியானந்தா ஒளிந்திருப்பது  தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான். பூமிப்பந்தில் உள்ள பெருங்கடல்களிலேயே பெரியது பசிபிக் பெருங்கடல். அதில் உள்ள ஏராளமான சிறிய தீவு நாடுகளில் ஒன்று பப்புவா நியூ கினியா. இது ஆஸ்திரேலியாவுக்குப் பக்கத்தில் உள்ளது. கடல் வழி கண்டுபிடித்த ஐரோப்பியர்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் குடியேறியதுபோல பப்புவா நியூ கினியாவிலும் டச்சுக்காரர்கள், பிரெஞ்சுகாரர்கள், பிரிட்டிஷார் என மாறி மாறி குடியேறினர். ஜெர்மனியர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்கர்கள் எனப் பலரும் தங்கள் ஆளுகையில் வைத்திருந்தனர். பின்னர், அது ஆஸ்திரேலியாவிடமிருந்து 1975ல் விடுதலை  பெற்றது.

 

celebration


பப்புவா  நியூ கினியா எனும் சிறிய நாட்டுக்குள் போகெய்ன்வில்லே  என்ற குட்டித் தீவு உள்ளது. பழங்குடி மக்கள் நிறைந்த அந்தத் தீவில் உள்ள கனிம வளங்கள்தான் பப்புவா  நியூ கினியாவின் பொருளாதார வளம். தனியார் மூலம் சுரங்கங்களை வெட்டி அந்தக் கனிம வளம் மூலம்  கிடைத்த பணத்தைக் கொண்டு அரசு நிர்வாகம் நடைபெற்றது. தங்கள் பகுதியில்  உள்ள தாமிரம் உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்துக்கொண்டு நியூ கினியா  வளர்வதும், தங்கள் பகுதியில் இயற்கை வளம் அழிவதுடன், தங்களுக்கு எந்த  முன்னேற்றமும் கிடைக்க வில்லை என்பதும் போகெய்ன்வில்லே மக்களை, தனி நாட்டிற்கானப் போராட்டத்தில் இறங்க வைத்தது.

 

vote


1980களிலிருந்து தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தால் 20ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர். ஆனாலும் பப்புவா நியூகினியா அரசுப்படைகளுக்கும் போகெய்ன்வில்லே போராட்டப் படையினருக்குமான சண்டை ஓயாமல் நீடித்தது. பின்னர், நியூசிலாந்து  தலையீட்டில் போர் நிறுத்தமும் ஒப்பந்தமும் உருவாகும் சூழல் ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டில் நியூகினியா நாட்டுக்குள் போகெய்ன்வில்லா தன்னாட்சி கொண்ட பகுதியாக உருவானது. அந்தத் தீவு மக்களின் தனி நாடு கோரிக்கை தொடர்ந்தது.    

 

பப்புவா நியூ கினியா நாட்டு  அரசும், போகெய்ன்வில்லே தன்னாட்சி அமைப்பும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக, தனி நாட்டிற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 3 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையைக்  கொண்ட தீவில் 2019 டிசம்பர்  7ந் தேதியுடன் முடிவடைந்த இரண்டுவார கால வாக்கெடுப்பில் 85% பேர் கலந்துகொண்டனர்.


 

bougainville



எல்லை வரையறை, துறைமுகங்கள் நிர்வாகம், தனியார் சுரங்கங்களுடனான ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் சுமூகமான  தீர்வுகள் காணப்படவேண்டும். ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட  நாடுகளின் சமரச முயற்சிகளும், அமெரிக்காவின் ஆதரவும், ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பும் பசிபிங் பெருங்கடல் பகுதியில் ‘போகெய்ன்வில்லே’ என்ற புதிய நாட்டை உருவாக்கித் தரும் வாய்ப்பு உள்ளது.

அப்படியென்றால், கைலாசா?

அது, கைலாசம்தான்.


நக்கீரனில் கோவி லெனின்.



-------------------------------------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?