பஞ்சாப்
ஒரு பார்வை.
சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநில அரசியல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விவசாயம் முதல் ராணுவம் வரை கடின உழைப்பை செலுத்துவதில் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்பவர்கள்.
1966ஆம் ஆண்டு மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பஞ்சாபில் சீக்கியரை தவிர வேறு யாரும் முதல்வராக இருந்ததில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலிலும் சீக்கியர்களை முன்னிலைப்படுத்தி தேசிய கட்சிகள் முதல் பிராந்திய கட்சிகள் வரை களம் காண மும்முரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக பாஜக அரியணையில் அமராத சில மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று. இங்கு பாஜக கூட்டணி ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. ஆனால் பாஜக முதல்வர் பதவியில் இருந்ததில்லை.
இந்நிலையில் பாஜகவின் கனவை தவிடுபொடியாக்கும் வகையில் 2017ல் ஆம் ஆத்மி களமிறங்கி புதிய அத்தியாயம் எழுதத் தொடங்கியது. வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி விடும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

1962ல் இருந்து 2017 வரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் ஷிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் தான் பெருவாரியான வெற்றியை பதிவு செய்துள்ளன.
கடைசியாக நடந்த தேர்தலில் காங்கிரஸ் 66 சதவீதமும், ஷிரோன்மணி அகாலி தளம் 13 சதவீதமும், பாஜக 2.6 சதவீதமும், பிற கட்சிகள் 19 சதவீதமும் வாக்குகளையும் பெற்றன. நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் (31.9%) அதிக அளவில் இருப்பது பஞ்சாப் மாநிலத்தில் தான்.
எனவே தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இவர்களின் வாக்குகள் இருக்கின்றன.
தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த முதல் பஞ்சாப் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அடுத்த இடத்தில் ஜாட் சீக்கியர்கள் (20%) உள்ளனர். வழக்கமாக காங்கிரஸ் மற்றும் ஷிரோன்மணி அகாலி தளம் என இருமுனைப் போட்டியாக தான் தேர்தல் களம் இருந்திருக்கிறது.
எனவே 1967 தேர்தலில் இருந்து தற்போது வரை இந்த கட்சிகளில் ஒன்று தான் ஆட்சியில் அமர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வருகையால் போட்டி அதிகரித்தது.
அதிலும் இம்முறை காங்கிரஸ், பாஜக - பஞ்சாப் லோக் காங்கிரஸ் - ஷிரோன்மணி அகாலி தளம் (சன்யுக்த்), ஆம் ஆத்மி கட்சி, ஷிரோன்மணி அகாலி தளம் - பகுஜன் சமாஜ், சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா என ஐந்து முனைப் போட்டியாக சட்டமன்ற தேர்தல் களம் மாறியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பாயும் சட்லஜ் நதியின் தெற்கே அமைந்துள்ள பகுதியை மால்வா மண்டலம் என்று அழைக்கின்றனர். இங்கிருந்து சட்டமன்றத்திற்கு 69 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே இந்த மண்டலத்தை கைப்பற்றினால் ஆட்சி அமைத்துவிடலாம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. இந்தியாவில் நீண்ட காலம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் பஞ்சாப் (1,745 நாட்கள்) இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
அதாவது ஜூலை 18, 1990 முதல் அக்டோபர் 9, 1996 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்துள்ளது.
முதலிடத்தில் ஜம்மு காஷ்மீர் (2,270 நாட்கள்) உள்ளது. இம்மாநிலத்தில் இருந்து ஒரு குடியரசுத் தலைவரும், ஒரு பிரதமரும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளனர்.
கடந்த 1982 - 1987 காலகட்டத்தில் ஜியானி ஜெயில் சிங் குடியரசுத் தலைவராக பதவி வகுத்தார். இவரது பதவிக் காலத்தில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், இந்திரா காந்தி கொல்லப்பட்டது, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் என அரசியல் நெருக்கடியாக அமைந்தது.
2004 - 14 காலகட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.
---------------------------------------------------------------------------
உலகின் மிக மோசமான
7 கப்பல் விபத்துகள் !
https://youtu.be/f27nNphvHuc
---------------------------------------------------------------------------