Stalin4SocialJustice

- ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிலுரை.

​அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டோம், அம்மா உணவகத்தைக் கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பட்டியல் படித்தார். இதுபோன்ற பட்டியலைப் படிக்க வேண்டுமானால் என்னிடம் நிறையவே இருக்கிறது.

​தலைவர் கலைஞர் அவர்களால் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற - தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு, அது அன்றைய மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் சட்டமன்றமும் நடந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சட்டமன்றம் நடந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்? பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா நினைவாக 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு மாடி அளவில் கட்டப்பட்ட மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முனைந்ததும், பராமரிக்காமல் பாழடைய வைத்ததும் யார்? 

அங்கிருந்த பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கீழ் இருந்த கலைஞர் பெயரை மறைத்தது யார்?



கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கலைஞர் பெயரை நீக்கியது யார்? செம்மொழிப் பூங்காவில் கலைஞர் பெயரை செடி, கொடிகளை வைத்து மறைத்துப் பராமரிக்காமல் விட்டது யார்? கடற்கரைப் பூங்காவில் இருந்த கலைஞர் பெயரை எடுத்தது யார்? ராணி மேரி கல்லூரியில் கலைஞர் அரங்கத்தின் பெயரை நீக்கியது யார்? கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்காகப் பெரியார் பெயரில் அமைந்த சமத்துவபுரங்களை பாழ்படுத்தியது யார்? உழவர் சந்தைகளை இழுத்து மூடியது யார்? தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிமிடெட்டை முடக்கியது யார்? நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், வருமுன் காப்போம் திட்டம் ஆகியவற்றைக் கிடப்பில் போட்டது யார்? மதுரவாயல்-சென்னை துறைமுக உயர்மட்டச் சாலைத் திட்டத்தை முடக்கியது யார்? சமச்சீர்க் கல்விப் பாடப்புத்தகத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும், 7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நாடகக் கலை குறித்த பாடத்தில் இருந்த கலைஞர் பெயரையும் ஸ்டிக்கர் வைத்து மூடி மறைத்தது யார்?

இப்படி வரிசையாக நீண்டநேரம் என்னால் சொல்ல முடியும். பல கேள்விகளைக் கேள்வி கேட்க முடியும். இதை எல்லாம் நீங்கள் செய்தீர்கள்-அதனால் நாங்கள் செய்தோம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நடந்துகொள்ளக்கூடிய எண்ணம் எனக்கு ஒருகாலும் ஏற்பட்டதில்லை; வரவும் வராது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என்றுதான் இன்றைக்கும் இருக்கிறது. தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் என்றுதான் இன்னமும் இருக்கிறது. சென்னை உயர்கல்வி மன்றத்துக்குள் அவருக்குச் சிலை இருக்கிறது. அவரது நினைவகம், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதை இந்த அரசே பராமரித்துக் கொண்டும் இருக்கிறது. அம்மா கிளினிக் என்று பெயர் வைத்தீர்களே தவிர, கிளினிக் இல்லை. இல்லாத ஒன்றை எப்படி இந்த அரசு மூட முடியும்? அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

மாண்புமிகு அவை முன்னவர் கூட, கலைஞர் பெயரில் இருந்த திட்டங்கL மாற்றப்பட்ட ஆதங்கத்தில் "ஒரு உணவகத்தை மூடினால் அதில் என்ன தவறு?" என்று ஒரு கேள்வியை எழுப்பினார். என்னைப் பொறுத்தமட்டில், நான் அப்படி நினைக்கவில்லை. எந்த அம்மா உணவகமும் மூடப்படக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். அதனால்தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அம்மா உணவகங்கள் தொடரும் என்று நான் அறிவித்தேன். இன்றுவரை அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். நிச்சயமாக இருப்பேன், அதில் எந்தவிதத்திலும் மாற்றம் ஏற்படாது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அவர்களுக்கு நான் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஆளுநர் உரை என்பது ஓராண்டுக்கு ஒருமுறை ஆற்றப்படுவது. ஆனால், சென்ற ஆளுநர் உரைக்கும், இப்போதைய ஆளுநர் உரைக்கும் ஆறு மாதம்தான் இடைவெளி. முந்தைய ஆளுநர் உரை, கடந்த ஜூன் 21 ஆம் நாள் ஆற்றப்பட்டது. இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் மிகக் குறைவுதான். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்திலே ஏராளமான சாதனைகளையும் நாங்கள் செய்திருக்கிறோம்; ஏராளமான சோதனைகளையும் நாங்கள் சமாளித்திருக்கிறோம். கொரோனா என்கிற பெருந்தொற்று காலத்திலே ஆட்சிக்கு வந்தோம். போர்க்கால வேகத்திலே செயல்பட்டோம். அதனால் இரண்டாவது அலைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். அதிலிருந்து மீண்ட நிலையிலே, வரலாறு காணாத மழை, வெள்ளம் என்கிற இயற்கைப் பேரிடர் நம்மைச் சூழ்ந்தது. அதற்கான நிவாரணப் பணிகளையும் மின்னல் வேகத்திலே செய்து கொடுத்தோம்.

தேர்தலுக்கு முன்பு, நாம் பெற்றிருக்கக்கூடிய நம்பிக்கையை விட, இப்போது பல மடங்கு நம்பிக்கையை மக்களிடையே இந்த அரசு பெற்றுள்ளது என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களுடைய மனசாட்சி கூட மறுக்காது என்பதை நான் நம்புகிறேன். மக்களுக்கு உண்மையாக இருந்தோம். அதனால் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம். இதே உண்மைத் தன்மையோடுதான் நான் என் வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன் என்று திட்டவட்டமாக இந்த மாமன்றத்திலே உறுதி அளிக்கிறேன்.

நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி இங்கு பேசினார்கள். கொரோனாவைத் தடுக்கின்ற அரண் என்பது தடுப்பூசிதான். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டிலே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 8.09 விழுக்காடு மட்டும்தான். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 2.84 விழுக்காடு மட்டும்தான். அதாவது முதல் நான்கு மாதங்களில்​ செலுத்தப்பட்ட தடுப்பூசியின் அளவு இவ்வளவுதான். ஆனால், அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்த ஏழே மாதங்களில், மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்திக்கொள்வதை மக்கள் இயக்கமாக ஆக்கினோம். தற்போது தமிழ்நாட்டு மக்களிலே 87.27 விழுக்காடு மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) 61.25 விழுக்காடு மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 8.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. 15 முதல் 18 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஜனவரி 3 ஆம் தேதி தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்தேன்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 60 வயதுக்கும் மேற்பட்ட எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் “கூடுதல் தவணையில்” தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தடுப்பூசியைப் பெரும்பாலானவர்களுக்கு செலுத்தியதுதான் காரணம். கொரோனா வார்டுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். சாலையில் இறங்கி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் அணிவித்தேன். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்ற உன்னதமான எண்ணம்தான் இதற்குக் காரணம். உங்களின் அரசாக மட்டுமல்ல; உயிர் காக்கும் அரசாக இந்த அரசு இயங்கி வருகிறது என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் மட்டுமல்ல; அனைத்துத் துறைகளும் இந்த அரசைப் பொறுத்தவரையில் மக்கள் நல்வாழ்வுத் துறைதான். அந்த எண்ணத்தோடுதான் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம். கடந்த ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் 49 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது என்பதை பெருமையோடு இந்த மாமன்றத்தில் பதிவு செய்கிறேன். மீதமுள்ள 17 அறிவிப்புகளில் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளவை 3. இன்னும் அரசாணை வெளியிட வேண்டிய அறிவிப்புகள் 14 என்ற நிலையில் உள்ளது. இவை ஏதோ அறிவிப்புகளாக மட்டுமல்ல; வெளியிட்ட அறிவிப்புகளில் 6 மாதத்தில் 75 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. ஆகவே, இந்த அரசு அறிவிப்போடு நிற்பது இல்லை. எல்லா அறிவிப்புகளையும் ஆணைகளாக வெளியிடுகிற அரசு என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

சொற்கள் தனி மனிதனுடைய வெறும் சொற்களாக இல்லாமல், அரசாங்கத்தினுடைய ஆணைகளாக அதை மாற்றி வருகிறோம். இந்த ஆணைகள் அனைத்திற்கும் செயல் வடிவம் கொடுத்து வருகிறோம். அந்த அரசாணைகளில் மிக முக்கியமானவைகளை மட்டும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, கொரோனா கால நிவாரணமாக 4,000 ரூபாய்; ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; இலங்கைத் தமிழர்களுக்கு ரூபாய் 317 கோடியிலான பல்வேறு திட்டங்கள்; பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாட்டம்; மீனவர்களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு உதவித் தொகை 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்வு; விழுப்புரத்தில் சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம்; நெசவாளர் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரி ரத்து; அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம்; கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்களும், தமிழக வரலாற்றில் முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முழுமையாக ரத்து - இப்படி எண்ணற்ற சாதனைகளைச் செய்திருக்கிற அரசுதான் இந்த அரசு, உங்கள் அரசு என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினோம். குறுகிய காலத்தில் அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டு அவைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் என்பது ஐந்து ஆண்டுகள். அந்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்பதுதான் தேர்தல் அறிக்கையின் சாராம்சம்.

ஆனால் பெரும்பாலான வாக்குறுதிகளை 5 மாத காலத்திலே நிறைவேற்றியுள்ள ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்பதை இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றியும், பேரறிஞர் அண்ணா அவர்களே முதலமைச்சராக இருந்தபோது விளக்கம் தந்திருக்கிறார்கள். நீங்கள் இந்தத் தேர்தல் வாக்குறுதிகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். கேட்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் கேட்பதற்கு முழு உரிமை பெற்றவர்கள் எங்களுக்கு வாக்களித்தவர்கள். ஏனென்றால் நம்பி எங்களுக்கு வாக்களித்தார்கள். அவர்கள் கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள். பரவாயில்லை. ஏன் பராவாயில்லை என்று சொல்கிறேன் என்றால், வாக்காளர்களுக்கு அந்த அவநம்பிக்கை ஏற்படவில்லை. ஆகையால் அவர்கள் எங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள் என்ன ஆயிற்று என்று? நான் முன்பே சொல்லியிருக்கின்றபடி படிப்படியாக முறையாக உரிய காலத்தில் உரிய அளவிற்கு நிச்சயமாக அது நிறைவேற்றப்படும். உடனே இல்லை, எல்லாம் மொத்தமாக இல்லை, எதையாவது விட்டுவிடுவீர்களா, அதுவும் இல்லை என்றால் நிறைவேற்றப்படுமா? உரிய காலத்தில் முறையாக, படிப்படியாக, அதற்கென்ன தேவை, எது முதலில், எது இரண்டாவது, எது மூன்றாவது என்ற priority தேவை. எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியான பேரறிஞர் அண்ணா அவர்களின் விளக்கத்தை அனைவரும் ஆய்ந்து சிந்தித்துப் பார்த்து ஏற்க வேண்டும் என்று நான் மிகுந்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சொன்னதை மட்டும் செய்யாமல் – சொல்லாததையும் செய்யக்கூடிய அரசுதான் இந்த அரசு. அந்த அடிப்படையில், சில முக்கிய சாதனைகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கொரோனாவால் குழந்தைகள் பள்ளிகளில் படிக்க முடியாததால் கற்றல் இழப்புப் பிரச்சினை பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. அந்தக் கவலையைப் போக்க வந்ததுதான் “இல்லம் தேடி கல்வி” என்கிற திட்டம். 200 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 12 மாவட்டங்களில் முன்மாதிரி அடிப்படையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 80 ஆயிரத்து 138 இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80 ஆயிரம் அலுவலர்களைப் பயன்படுத்தி, ஜி.பி.எஸ். செயலி வாயிலாகக் கணக்கெடுத்து, இன்றைக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 792 இடைநின்ற குழந்தைகள், அவரவர் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

“மக்களைத் தேடி மருத்துவம்” என்கிற மகத்தான திட்டம். மருத்துவ சேவையை மக்களின் இல்லத்திற்கே கொண்டு சேர்க்கின்ற திட்டம்தான் இது. 257 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 43 லட்சத்து 66 ஆயிரத்து 518 பேர் பயனடைந்திருக்கிறார்கள். மாநிலமெங்கும் மருத்துவ முகாம்கள் நடத்தி, இந்த முன்னோடித் திட்டம், இன்றைக்கு மக்களின் “இல்ல மருத்துவமனைகள்” போல செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசாங்கப் பள்ளிக்கூடங்களை அனைவரும் விரும்பும் பள்ளிக்கூடங்களாக மாற்றிட இந்த அரசு முனைப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. நான், சென்னை மாநகர மேயராக இருந்தபோது மாநகராட்சிப் பள்ளிகளை அந்தளவுக்கு தரம் உயர்த்தி நான் மேம்படுத்தினேன் என்பது உங்களுக்கே தெரியும். அதேபோல, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசாங்கப் பள்ளிகளையும் நாங்கள் விரைவில் மேம்படுத்துவோம் என்பது உறுதி.

அதனால், இந்த ஆளுநர் உரையில் - மிக மிக முக்கியத் திட்டமாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் “ஸ்மார்ட் கிளாஸ்” என்கிற திட்டம் - அதாவது திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்குகின்ற திட்டம் வெளியிடப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டிலுள்ள 24 ஆயிரத்து 345 தொடக்கப் பள்ளிகளிலும் திறன்மிகு வகுப்பறைகள் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகள், அந்தப் பள்ளிகளின் வரலாற்றில் - இது ஒரு மாபெரும் கல்விப் புரட்சியை உருவாக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் - இந்தியாவிற்கே முன்னோடியாக செயல்படுகின்ற பெயரை எட்டிட இந்த அரசு தனது அனைத்து சக்தியையும் பயன்படுத்தும் என்பதை நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் பதிலுரையாற்றினார்

---------------------------------------------------------------------------------

சமூக நீதி மு.க.ஸ்டாலின்.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித ஒதுக்கீடு கிடைக்க போராடிய திமுகவிற்கும் அதன் தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கும் வடஇந்தியர்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.


மருத்துவ படிப்புகளில் அகில் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மிக பெரிய சட்ட போராட்டத்திற்கு பின் இந்த உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டி உள்ளது. மண்டல் கமிஷனின் பரிந்துரையை ஏற்று முறையான இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் வைத்த நிலையில் இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.



திமுக சட்ட போராட்டம்

ஒவ்வொரு வருடமும் 4000க்கும் அதிகமான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இதனால் தங்கள் வாய்ப்புகளை இழந்தனர். மருத்துவ படிப்பில் இவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. ஆதிக்க சாதிகளின் சூழ்ச்சியால் இவர்களின் மருத்துவ கனவு பறிபோனது. இப்போது இந்த சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் திமுகவின் மிக நீண்ட சட்ட போராட்டம் இருக்கிறது.

திமுக ஓபிசி இடஒதுக்கீடு

முதலில் 2017ல் ஜூலை மாதம் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து திமுக எம்பி பி வில்சன் மாநிலங்களவையில் பேசினார். இதுதான் திமுக போட்ட முதல் விதை. அதன்பின் நவம்பர் 1 2019 என்று இந்த ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக அப்போதைய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு திமுக கட்சி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர் அதே மாதம் திமுக சார்பில் மாநிலங்களவகையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக மோடி வெள்ளை அறிக்கை வெளியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். பின்னர் 16.12.2019 அன்று OBC இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் பி.வில்சன் எம்.பி. பேசினார். இந்த பேச்சுதான் அப்போது தேசிய அளவில் கவனம் பெற்றது. ஓபிசி பிரிவு மக்கள் இடையே இந்த பேச்சுதான் மிக முக்கியமான கவனத்தை பெற்றதோடு மற்ற வட மாநிலங்களிலும் இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.


திமுக OBC இட ஒதுக்கீடு



அதன்பின் திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, பி வில்சன் தொடர்ந்து இது குறித்து மாநிலங்களையில் கருத்து தெரிவித்து வந்தனர். பின்னர் முதல் கட்சியாக கடந்த 28.05.2020 - அகில இந்திய மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு பின்பற்றப்படட் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் படி ஏறியது திமுக. திமுக கட்சி சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டதோடு, மத்திய அரசுக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டு வந்தது. திமுக சார்பாக தொடர்ந்து OBC இடஒதுக்கீடு பற்றி பேசிய அதே எம்பி வில்சன்தான் உச்ச நீதிமன்றத்திலும் வாதாடினார்.

ஸ்டாலின் OBC இட ஒதுக்கீடு

வழக்கறிஞரான இவர் தானே வாதிட்டு தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய வாதங்களை வைத்து வந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு செல்ல அங்கு OBC இடஒதுக்கீடு வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது மொத்த இந்தியாவிற்குமான தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து திமுக தொடுத்த வழக்கு காரணமாக சென்றது. ஆனால் மத்திய அரசு இதை செயல்படுத்தாமல் இருந்த நிலையில்தான் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

ஸ்டாலின் மருத்துவ படிப்பு

இந்த வழக்கில்தான் தற்போது மருத்துவ படிப்புகளில் அகில் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த OBC இடஒதுக்கீடு வழக்கில் திமுகவின் சட்ட போராட்டம் மிக முக்கியமானது. இதன் காரணமாக தற்போது வடஇந்தியாவில் இருக்கும் OBC அமைப்புகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சங்கங்கள், பல்வேறு முற்போக்கு அரசியல் அமைப்புகள் முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் பாராட்டி வருகின்றன

சமூக நீதிக்கான ஸ்டாலின் என்ற பொருள்படும் வகையில் #Stalin4SocialJustice என்ற டேக் இதனால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. OBC இடஒதுக்கீ குறித்து வடஇந்திய தலைவர்கள் யாரும் கவலைப்படவில்லை. வடஇந்திய பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் அமைதியாக இருந்த போது ஸ்டாலின் மக்களுக்கான உரிமையை நிலைநாட்டி இருக்கிறார். அவர் ஒரு மாநில தலைவர் அல்ல.. அவர் ஒரு தேசிய தலைவர். தமிழ்நாடுதான் மக்களுக்கான உரிமையை பெற்று கொடுத்து இருக்கிறது என்று பலர் பாராட்டி உள்ளனர்.


Stalin4SocialJustice

இந்தியாவின் மிகவும் முற்போக்கான தலைவர் அவர்.ஸ்டாலினின் இந்த முயற்சிக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். வடஇந்திய தலைவர்கள் இப்போதெல்லாம் செய்ய தவறும் விஷயத்தை முதல்வர் ஸ்டாலின் செய்து இருக்கிறார், அவருக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நன்றி என்று வடஇந்தியர்கள் பலர் இணையத்தில் #Stalin4SocialJustice டேக்கில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். நேற்று பிற்பகலில் தொடங்கிய டிரெண்ட் இப்போது வரை நீடித்து வருகிறது.

வடஇந்தியா.  பாராட்டும்   ஸ்டாலின் 

நீங்கள் வட இந்தியாவை சேர்ந்தவரா.. நீங்கள் ஓபிசியா.. அப்படி என்றால் உங்களுக்கும் சேர்ந்து தமிழ்நாடு போராடி உள்ளது. ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல நீங்கள் மறக்க வேண்டாம் என்று மண்டல் கமிஷன் தலைவர் மண்டலின் வாரிசு திலீப் மண்டலும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசி இருக்கிறார். திமுகவின் சட்ட போராட்டம் காரணமாகத்தான் ஓபிசி ஒதுக்கீடு மருத்துவ படிப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தேசிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.



-----------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?