புதுமைப் பெண் வங்கி
ஏன் நடவடிக்கை இல்லை?
பங்குச் சந்தை என்றாலே சாதாரண மக்களுக்கு மர்மம் நிறைந்த இடம். அங்கு எப்படி வர்த்தகம் நடக்கிறது, எவ்வளவு பணம் புரள்கிறது, யார் சம்பாதிக்கிறார்கள், யார் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதெல்லாம் த்ரில்லர் வகைப் படங்களுக்கு இணையானது.
யார் யோக்கியர், யார் அயோக்கியர் என்பதை இயல்பாகக் கண்டுபிடிக்க முடியாது.
இந்தியப் பங்குச் சந்தைகளின் ஒழுங்காற்று மையமான செபி கடந்த வெள்ளியன்று 190 பக்க அளவில் ஒரு புகார் உத்தரவை வெளியிட்டிருக்கிறது.
அதன் மையமான விஷயம் என்னவென்றால் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகியும் மேலாண்மை இயக்குநருமான சித்ரா ராமகிருஷ்ணா எனும் பெண்மணி ஏதோ ஒரு இமயமலை சாமியாருடன் சேர்ந்து மாபெரும் ஊழல் செய்திருக்கிறார் என்பதே.
இந்திய மூலதனச் சந்தையில் கிட்டத்தட்ட 70% வர்த்தகம் தேசியப் பங்குச் சந்தை வர்த்தகத்தின் மூலம்தான் நடக்கிறது.
அந்த வர்த்தகத்தின் திட்டமிடல்கள், கொள்கைகள், அதிகாரிகள், பதவிகள், இதர ரகசியங்கள் சித்ரா ராமகிருஷ்ணாவிற்கும் அடையாளம் தெரியாத இமயமலை சாமியாருக்கும் இடையே மின்னஞ்சல் மூலம் பரிமாறப்பட்டிருக்கின்றன.
சித்ரா தனது விளக்கத்தில் சாமியாரோடு மின்னஞ்சல் தொடர்பு மட்டும் இருந்ததாகவும், நேரில் சந்தித்தத்தில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால் அவர் கங்கைக் கரையில் அந்த சாமியாரை 20 வருடங்களுக்கு முன்பு சந்தித்திருப்பதும், செஷல்ஸ் தீவில் அவரோடு கடலில் குளித்ததையும் மின்னஞ்சல் மூலம் செபி அம்பலப்படுத்தியிருக்கிறது.
அந்த மர்ம சாமியார் பினாமி பெயரில் பங்குச் சந்தை தரகராக இருந்திருக்கிறார்.
அவரது அறிவறுத்தலின் பெயரில் ஆனந்த சுப்ரமணியன் என்பவரை தேசியப் பங்குச் சந்தையன் முக்கியப் பதவி - தலைமை மூல உத்தி அதிகாரி- ஒன்றில் அமர்த்தியிருக்கிறார் சித்ரா.
அவருக்கு வருட சம்பளம் 1.38 கோடி ரூபாய். இதற்கு முன் இதே ஆனந்த சுப்ரமணியன் வேறு நிறுவனத்தில் பணியாற்றியபோது அவருடைய வருட ஊதியம் வெறும் 15 இலட்சம் மட்டுமே.
கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு ஊதிய உயர்வு. மேலும் இந்த ஆனந்த் என்பவர் குழு அமலாக்க அதிகாரி என்ற பொறுப்பிலும் பணி உயர்த்தப்பட்டிருக்கிறார்.
அவருக்கு ஐந்து நாட்கள் வேலை என்றாலும் அவர் மூன்று நாட்கள் மட்டும் நினைத்த நேரத்தில் வந்து போவார். எல்லாம் சாமியாரின் ஆசீர்வாத உத்தரவு.
சித்ரா பதவியில் இருந்த காலத்தில் தினசரி 49 கோடி வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார்.
இதன் மதிப்பு தினசரி 64 ஆயிரம் கோடி ரூபாய்.
இத்தனை ஆயிரம் கோடி வர்த்தகத்தையும் சித்ரா மூலம் கட்டுப்படுத்தி ஊழல் செய்தும் செய்ய வைத்தும் இருக்கிறார் அந்த சாமியார்.
2013,2016ஆம் ஆண்டுகளுக்கிடையில் தேசியப் பங்குச் சந்தையின் பொறுப்பில் இருந்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன்.
இப்போது இரண்டு கருத்துகள் ஊகிக்கப்படுகின்றன.
சித்ராவே சாமியார் மாதிரி ஒரு பினாமி பெயரில் இயங்கினாரா அல்லது சாமியார் சிபாரிசு செய்த ஆனந்த சுப்ரமணியன்தான் அந்த சாமியாரா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. சித்ரா பற்றிய புகார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தாலும் இத்தனை ஆண்டுகளாக விசாரித்த செபி இப்போதுதான் புலனாய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை பெகாசஸ் மூலம் உளவு பார்க்கும் நாட்டில் பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் பங்குச் சந்தையில் நடந்த ஊழலை விசாரிக்க இத்தனை வருடங்கள். சரி, இந்த விசாரணை முடிவில் செபி என்ன உத்தரவு போட்டிருக்கிறது தெரியுமா?
சித்ராவுக்கு மூன்று கோடி அபராதம், ஆனந்த சுப்ரமணியனுக்கு 2 கோடி ரூபாய் அபராதம். மற்றபடி கிரிமினல் பிரிவு வழக்குகளோ, நிறுவன விதி மீறல் குற்ற வழக்குகளோ இல்லை.
பாஜக ஆசைப்பட்டபடி தஞ்சை மாணவி லாவண்யா மரணத்திற்கு சிபிஐ விசாரணை என்றால் செபியின் விசாரணைக்கு சிபிஐ ஏன் நியமிக்கப்படவில்லை.
காரணம் இதில் சம்பந்தப்பட்டவர் இந்து சாமியார் என்பதாலா?
அந்த இமாலய சாமியாரின் மின்னஞ்சல் முகவரி rigyajursama@outlook.com. அந்த மின்னஞ்சலில் ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம் மூன்றும் இருக்கிறது.
இந்த மூன்று வேத சாமியார்தான் மூன்று வருடங்களாக தேசியப் பங்குச் சந்தையை இயக்கியிருக்கிறார்.
இந்த சாமியார் இமயமலையில் எங்கோ வாழும் ஒரு ஆன்மீக சக்தி என்று வருணித்திருக்கிறார் சித்ரா. பொதுவில் பங்குச் சந்தையில் நன்றாக வேலை செய்வது குறித்து நிபுணர்களுக்கிடையே இயல்பாக பேசிக்கொள்வது வழக்கம்.
அப்படித்தான் சாமியாருடன் பேசினேன் என்கிறார் சித்ரா. சரி சாமியாருக்கும் நிபுணருக்கும் என்ன சம்பந்தம்?
அவர் சொன்னபடி ஆட்களைப் போடுவது, திட்டமிடுவது எல்லாம் இயல்பா, ஊழலா?
இத்தனைக்கும் சித்ரா பதவியில் இருந்த மூன்று ஆண்டு காலத்தில் பல நிறுவனங்கள் அவரது செயல்பாடு குறித்தும், ஆனந்த சுப்ரமணியன் குறித்தும் செபிக்கு புகார்கள் அளித்துள்ளன. அதன் பிறகே செபி மெல்ல விசாரித்து ஆறு வருடங்களுக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் தேசியப் பங்குச் சந்தை, செபிக்கு ஒரு கடிதம் அளித்திருக்கிறது. அதில் மனித உளவியலில் நன்கு பரிச்சயம் கொண்ட ஆனந்த் சுப்ரமணியன்தான் அந்த சாமியார் என்றும் அவரே சாமியார் பெயரில் சித்ராவை கைப்பாவையாக நடத்தியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறது.
இந்த கைப்பாவைத்தனத்தில் பக்தி, ஆன்மீகம், வேதம் எல்லாம் இருக்கிறது. எதற்காக? பங்குச் சந்தையில் ஊழல் செய்வதற்காக!
சித்ரா தனது மின்னஞ்சலில் தேசியப் பங்குச் சந்தையின் ஐந்தாண்டுத் திட்டங்கள், முன் ஊகித்தல்கள், பங்குகளுக்கான கழிவு விகிதம், வணிகத் திட்டங்கள், என்எஸ்இ-இன் கூட்ட நிகழ்ச்சி நிரல்கள், என்எஸ்இ ஊழியர்களின் பணி தரப்படுத்தல்கள் அத்தனையையும் அனுப்பியிருக்கிறார்.
இவையெல்லாம் எந்த நாட்டிலாவது நடக்குமா?
இது மட்டுமல்ல பங்குச் சந்தை வர்த்தகத்தின் அன்றாட நடவடிக்கையிலும் சாமியார் சித்ரா மூலம் பங்கு பெற்றிருக்கிறார்.
அந்த மின்னஞ்சல்களில் சாமியார் சித்ராவின் சிகை அலங்காரத்தை வருணிக்கிறார்.
தமிழ் பக்திப் பாடல்களை சேர்ந்து கேட்டிருக்கிறார். செஷல்ஸ் தீவிற்கு கடல் குளியல் போட்டு கடற்கரையில் ஓய்வெடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.
இடையில் புகார் பிரச்சினை வந்தபோது சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் வழியாக செஷல்ஸ் தீவு செல்ல ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருக்கிறார்.
இவற்றையெல்லாம் பார்த்தால் இதுநாடா இல்லை ஹாலிவுட் பணம் கொள்ளையடிக்கும் படமா என்று தெரியவில்லை.
ஒருபக்கம் வங்கி மோசடி என்றால் மறுபக்கம் பெரும் பதவியில் இருப்பவர்களின் திருவிளையாடல்கள்.
இதைக் கேட்டால் காங்கிரஸ் ஆட்சியிலேயே நடக்கவில்லையா?
அப்போதே இது ஆரம்பம் என்பார் நிர்மலா.
----------------------------------------------------------------------------
புதுமைப் பெண் வங்கி
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணியுடன் வாக்கு சேகரிப்பு நிறைவு பெற்றதை ஒட்டி தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு தேர்தல் பரப்புரையை நிறைவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடைசி நேரத்தில் வாக்காளர்களை கவர பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு குறுக்குவழியில் அ.தி.மு.க பா.ஜ.க கட்சிகள் செயல்பட்டு வருகிறது.பல இடங்களில் பணப்பட்டுவாடா கொடுத்தவர்களை மக்களே பிடித்து போலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் மீண்டும் சென்னையில் அரங்கேறியுள்ளது.
2014 தேர்தலில் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் டெபசிட் செய்யப்படும் எனக் கூறிய பா.ஜ.கவினர், அதைப்போல தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களை ஏமாற்ற போலி காசோலை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியின் 110 வார்டின் புஷ்பா நகரில் பா.ஜ.கவைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகரன் என்பவர் போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் வாக்குச் சேகரிக்கும்போது, பா.ஜ.கவிற்கு வாக்களித்தால், 5 லட்சம் மருத்துவ காப்பீடுக்கு உதவும் வகையில் காசோலை வழங்கப்படும் என்றும், மேலும் 5 லட்சம் வரை உதவும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்து தரப்படும் என்றுக் கூறி வாக்குக் கேட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, மாதிரி காசோலையை ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
இதனையறிந்த தி.மு.கவினர் அவர்களை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் அவர்கள் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், புதுமைப்பெண் வங்கி என்ற என பெயரிட்டு போலி வங்கி காசோலையை தயாரித்து வைத்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலிஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
----------------------------------------------------------------------------
பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பொய் பிரச்சாரத்தை பத்திரிகையாளர் ஒருவர் உடனடியாக அம்பலப்படுத்தியுள்ளார்.
பா.ஜ.கவினர் பொய்களையே தங்களது பிரச்சார உத்தியாகக் கையாண்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் குஜராத் கட்டுக்கதைகளைப் பயன்படுத்தியே ஆட்சிக்கு வந்தார். அவரைப் பின்பற்றி பா.ஜ.கவினர் பலரும் பொய்க்கதைகளைப் பரப்பி அம்பலப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க அரசின் சாதனைகள் என்றும், யோகி ஆதித்யநாத்தின் சாதனைகள் என்றும் போட்டோஷாப் படங்களையும், பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர் பா.ஜ.கவினர்இதுகுறித்து அண்மையில் பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், “பா.ஜ.க பொய்களின் பொதிமூட்டையாக உள்ளது.
பா.ஜ.கவின் சிறிய தலைவர்கள் சிறிய பொய்களையும், பெரிய தலைவர்கள பெரிய பொய்களையும், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் மிகப்பெரிய பொய்களையும் கூறி வருகின்றனர்'' என பா.ஜ.கவை விமர்சித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, தான் காரில் பயணிக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, “யோகியின் ஆட்சியில் லக்னோ டு கன்னுஜ் எக்ஸ்பிரஸ்வே” எனக் குறிப்பிட்டு யோகி ஆட்சியில் உருவாக்கப்பட்ட சாலை என்பதைப் போல பதிவிட்டிருவருகின்றனர்.
தேஜஸ்வி சூர்யாவின் இந்தப் பொய்யான ட்வீட்டை அம்பலப்படுத்தி பத்திரிகையாளர் ஒருவர் உடனடியாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.
அவரது பதிவில், “இந்த எக்ஸ்பிரஸ்வே அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது 2016 நவம்பர் 23ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகப் பதவியேற்றதே 2017 மார்ச் 19 அன்றுதான்.” என அம்பலப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் பா.ஜ.க எம்.பியின் போலி விளம்பரத்தை அம்பலப்படுத்தி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அடுத்தவனுக்குப் பிறந்த குழந்தைக்கு தன் இன்சியலை வைக்கும் பேர்வழி பா.ஜ.க.
மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பதில் பொய் சொல்லியே ஆட்சிக்கு வர விரும்பும் கட்சி பா.ஜ.கவைத் தவிரே வேறு இருக்க முடியாது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
--------------------------------------------------------------------------
ஏபிஜி ஷிப்யாா்ட் ஊழல்
வங்கி மோசடி என்பது காலங்காலமாக இருந்து வந்தாலும், உலகமயத்தின் அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு வாடிக்கையாக மாறிவிட்டது.
அதன் சமீபத்திய எடுத்துக்காட்டுதான் ரூ.23,000 கோடி ஏபிஜி ஷிப்யாா்ட் (கப்பல் கட்டும் நிறுவனம்) ஊழல்.
ரூ.14,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் நீரவ் மோடி ஊழலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து அதைவிடப் பெரிய ஊழல் இப்போது தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒன்றை ஒன்று இந்த ஊழலுக்குப் பழி கூறினாலும், அந்த இரண்டு கட்சிகளும் அவரவர் காலக்கட்டத்தில் நடந்த தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய புலனாய்வுத் துறை, குஜராத்திலுள்ள திவாலாகியிருக்கும் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவன இயக்குநா்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் இந்தியாவில் இருந்தாலும் தலைமறைவாகி இருக்கிறாா்கள்.
அவா்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
1995 முதல் குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 2006-இல் பரூச் மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்துக்கு மாநில அரசின் குஜராத் துறைமுகக் கழகம் (குஜராத் மேரிடைம் போா்ட்) அனுமதி வழங்கியது.
30 ஆண்டு குத்தகைக்கு கடற்கரையையொட்டிய நிலப்பகுதி அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
மாநில பாஜக அரசு ஏபிஜி ஷிப்யாா்ட் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது என்றால், அதன் மூலம்,அதைக் காண்பித்தே அந்த நிறுவனத்துக்கு பொதுத்துறை வங்கிகள் மூலமாக எல்லா சலுகைகளையும் வழங்கப்பட்டது.
அது மட்டுமல்ல, கடலோரக் காவல் படைக்கு ரோந்துக் கப்பல்களும், இந்திய கடற்படைக்கான கப்பல்களும் கட்டுவதற்கான வாய்ப்பை வழங்கியது.
அதனால், வங்கிகளில் இருந்து கணக்கு வழக்கில்லாமல் அந்த நிறுவனத்தால் கடனுதவி பெற முடிந்தது.
2014 ஜூலை மாதம் குஜராத் சட்டப்பேரவையில், ஏபிஜி நிறுவனத்தின் ரூ.2.1 கோடி அளவிலான குத்தகைக் கட்டணம் நிலுவையில் இருப்பதைக் கணக்குத் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டி குஜராத் துறைமுகக் கழகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தது.
அப்போதே அந்த நிறுவனம் குறித்த எச்சரிக்கை ஏற்பட்டிருந்தால், ரூ.22,842 கோடி அளவிலான இழப்பைத் தடுத்திருக்க முடியும்.
ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 28 வங்கிகளின் கூட்டமைப்பு ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்துக்கு கடன்களை வழங்கியிருக்கிறது. 2019 ஜனவரியில் பாரத ஸ்டேட் வங்கி மோசடியைக் கண்டறிந்தது.
ஆனால், 2019 நவம்பரில்தான் அது குறித்த புகாரைப் பதிவு செய்தது. அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரான ரிஷிகமலேஷ் அகா்வால் மீதும், ஏனைய இயக்குநா்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது.
28 வங்கிகள் வெவ்வேறுவிதமான கடன் வசதிகளை வழங்கியிருப்பதால், அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பது சிபிஐ தாமதத்துக்குக் குறிப்பிடும் காரணம்.
அது மட்டுமல்லாமல், ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்தின் 98 இணை நிறுவனங்களையும், அவற்றுடனான தொடா்பையும் விசாரிப்பதற்கும் காலதாமதமானதாக சிபிஐ தெரிவிக்கிறது.
வங்கிகளின் தணிக்கை அமைப்புகளாலும், ரிசா்வ் வங்கியின் தணிக்கையாளா்களாலும் 28 வங்கிகளின் மூலம் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனம் நடத்திய மோசடி குறித்து உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்றால், அவா்களது ‘சிஸ்டம்’ சரியில்லை என்பது தெளிவாகிறது. ஒருபுறம் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனம், 98 போலி நிறுவனங்களை உருவாக்கி வங்கியிலிருந்து பெற்ற கடனை எல்லாம் மடைமாற்றம் செய்துகொண்டிருந்தபோது,
இன்னொருபுறம் கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் ஏபிஜி நிறுவனத்துடன் கப்பல் கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொண்டதை என்னவென்று சொல்வது?
வங்கி மோசடி என்பது அதிகாரிகள், அரசு நிா்வாகிகள், அரசியல் தலைவா்கள் ஆகியோரின் பாதுகாப்பும் உதவியும் இல்லாமல் நடைபெற வாய்ப்பே இல்லை.
ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, 2020-21-இல் மட்டும் ரூ.1,38,422 கோடி அளவிலான 7,363 மோசடி வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.1,85,468 கோடி அளவிலான 8,703 மோசடி வழக்குகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
வங்கிகளில் காணப்படும் ரூ.8 லட்சம் கோடி வாராக்கடனில் பெரும்பாலானவை இதுபோன்ற மோசடிகளால் ஆனவை என்று தெரிகிறது.
ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனம், கப்பல் கட்டுவதற்காகப் பெற்ற ஒப்பந்தங்களுக்குப் பின்னால் மிகப் பெரிய கையூட்டுக்கள் இருக்கக் கூடும். அந்த நிறுவனத்துக்கு உதவிய அன்றைய அமைச்சா்களும், அரசு உயரதிகாரிகளும்கூட இந்த ஊழலில் விசாரிக்கப்பட வேண்டும்.
மத்திய - மாநில ஆட்சியாளா்களின் பரவலான ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு கப்பல் கட்டும் நிறுவனம் ரூ.22,842 கோடி முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பே இல்லை.
நிறுவனத்தின் முதலாளிகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வியாபாரிகள். அவா்கள் மன்னிக்கப்பட்டாலும், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அவா்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட்ட வேண்டும்.
பல மோசடிகள் நடந்த பின்னரும் அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேருவதும்,பணபலன்கள் கிடைப்பதும்தான் அதிகாரிகள் மீண்டும்,மீண்டும் கோடிகளை மோசடி பேர்வழிகளுக்கு கொடுக்க காரணம்.
எனவே அதிகாரிகளை பணி நீக்கம் செய்வதும் முறைகேடாக சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்வதும் ,அவர்களுடன் இணந்த அரசியல் வாதிகள் மீதும் அதே நடவடிக்கைகளை எடுப்பதும்தான் பின்வரும் காலங்களில் மோசடிகள் தொடராமல் செய்யும்.
இப்படியெல்லாம் இன்றைய இந்தியாவில் நடக்காது.ஆனால் நடந்தால் நல்லாயிருக்கும்.
------------------------------------------------------------------