காஷ்மீர் ஆவணம்

இந்த பட்டியல் போதுமா?

 தமிழ்நாடு சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்ல்வம் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தாலிக்குத் தங்கம் வழங்கக்கூடிய திட்டத்தை நிறுத்தியதாக ஒரு கருத்தை நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே பதிவு செய்திருக்கின்றார்.

 அ.தி.மு.க தொடங்கிய திட்டங்களை, ஏதோ திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் நிறுத்தி விடுவதைப்போல ஒரு போலித் தோற்றத்தை இங்கே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் தனது உரையிலே உருவாக்கியிருக்கிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, முந்தைய உங்களுடைய அரசு திட்டங்களை முடக்குவதற்குப் பெயர் போன அரசு; அது உங்களுடைய அரசு. 

இது கடந்த காலங்களில், பல நேரங்களில் நிரூபணமாகியிருக்கக்கூடிய உண்மை. ஊடகத்தினர், பொதுமக்கள் என அனைவரும் இதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

 ஆகவே, தலைவர் கலைஞர் அவர்களால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு, அன்றைக்குப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களால் அது திறந்து வைக்கப்பட்டது. 

அந்த இடத்தில்தான், சட்டமன்றமும் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப்பிறகு, சட்டமன்றம் நடைபெற்ற அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழா நினைவாக, 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8 மாடிகள் கொண்ட அளவில் ஒரு பெரிய மாளிகையை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை தி.மு.க. ஆட்சி கட்டியது. அந்த மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற நினைத்ததும், அதைப் பாழடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதும் யார்? அங்கிருந்த அண்ணாவினுடைய சிலைக்குக் கீழே கல்வெட்டு இருக்கும். 

அந்தக் கல்வெட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்களது பெயர் இருந்தது. அந்தப் பெயரையே எடுத்த ஆட்சி எது?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திலே, கலைஞர் வீடு வழங்கக்கூடிய திட்டத்திலே இருந்த கலைஞர் பெயரை நீக்கியது யார்?

 செம்மொழிப் பூங்காவிலே, கலைஞருடைய பெயரை மறைப்பதற்காக செடி, கொடிகளை கொண்டுபோய் வைத்து, அதை முழுமையாக மூடி மறைத்தது யார்? 

கடற்கரைப் பூங்காவில் இருந்த கலைஞர் பெயரை எடுத்தது யார்?

இராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு, அங்கிருந்த கல்லூரியை அப்புறப்படுத்த நினைத்தது உங்களுடைய ஆட்சி. 

அதை இடிக்கக்கூடாது, அந்தக் கல்லூரி பழமையான கல்லூரி, பல நூற்றாண்டுகளைக் கண்டிருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புக்குரிய கல்லூரி என்று நாங்கள் அன்றைக்குத் தி.மு.க. சார்பில் குரல் கொடுத்தோம். அதற்காகச் சிறைபிடிக்கப்பட்டு, சிறைக்குப் போய் பல நாட்கள் இருந்து வந்திருக்கிறோம்.

 அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகு, அந்தக் கல்லூரி வளாகத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு, கலைஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. 

நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அந்த கலைஞர் மாளிகையில் இருந்த கலைஞர் பெயரை நீக்கியதுதான் உங்களுடைய சாதனை.

ஆகவே, கலைஞர் கொண்டுவந்தார் என்பதற்காகவே சமத்துவபுரங்கள் எல்லாம் பழுதுபார்க்கப்படாமல், அவற்றைப் பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்கு, அதைப் பாழடித்தது யார்?

 உழவர் சந்தைகளை மேலும் மேலும் வலுப்படுத்தக்கூடாது என்று அதை இடித்து மூடியது யார்?

 தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்-ஐ முடக்கியது யார்? நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வருமுன் காப்போம் திட்டம் போன்ற இந்தத் திட்டங்களையெல்லாம் உங்கள் ஆட்சியில் முடக்கினீர்கள். 

அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இன்னொன்று, முக்கியமான விஷயம்; இங்கே மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர் மட்டச் சாலைத் திட்டம் குறித்தும் பேசினார்கள். அந்தத் திட்டத்தை முடக்கியது யார்? 

சமச்சீர் கல்விப் பாடப்புத்தகத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும், 7 ஆம் வகுப்புப் பாடத் திட்டத்திலே நாடகக் கலை குறித்த பாடத்தில் கலைஞர் அவர்களது பெயரையும் ஸ்டிக்கரை வைத்து மறைத்தது யார்?

இப்படி வரிசையாக என்னால் சொல்ல முடியும். அதற்காக, பழிவாங்குவதற்காக நாங்கள் செய்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

 நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும், முறையான திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றுகிற ஆட்சிதான், கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கக்கூடிய, எங்கள் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சி என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

-------------------------------------------------------------------------------


காஷ்மீர் ஆவணம்

1965ஆம் ஆண்டு அமானுல்லா கான், மக்பூல் பட் மற்றும் சில இளைஞர்கள் இணைந்து காஷ்மீர் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் 'பிளபிசைட் ஃப்ரண்ட்' என்ற கட்சியை உருவாக்கினர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாலும் காஷ்மீர் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து இந்த முன்னணி, ஜம்மு காஷ்மீர் தேசிய விடுதலை முன்னணி (JKNLF) என்ற தனது சொந்த ஆயுதப் பிரிவை உருவாக்கியது. அல்ஜீரியாவில்,நிகழ்ந்தது போல,ஆயுத மோதல்களால் மட்டுமே காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்.

"JKLF 1989 கோடையில் 'காஷ்மீரை விட்டு வெளியேறு' என்ற முழக்கத்தை எழுப்பத் தொடங்கியது,"என்று அசோக் பாண்டே 'காஷ்மீர்நாமா'வில் எழுதுகிறார்.

"நிலைமையை மேம்படுத்துவதற்காக, பாகிஸ்தானில் இருந்து திரும்பி வரும் வழியில் கைது செய்யப்பட்ட 72 பேரை அரசு விடுவித்தது. அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தனர்."

"அது உதவவில்லை. அடுத்த நாள் CRPF முகாம் தாக்கப்பட்டு மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்."

"1989 ஆகஸ்ட் 21 அன்று ஸ்ரீநகரில் முதல் அரசியல் படுகொலை நடந்தது. இதில் தேசிய மாநாட்டின் வட்டாரத்தலைவர் முகமது யூசுப் ஹல்வாய் சுட்டுக் கொல்லப்பட்டார்."

"ஹப்பா கதல் பள்ளத்தாக்கில் ஒரு முக்கிய இந்துத் தலைவரும் வழக்கறிஞருமான, டிக்காராம் டிப்லுனி செப்டம்பர் 14 அன்று படுகொலை செய்யப்பட்டார். மக்பூல் பட்டை தூக்கிலிட்ட நீதிபதி நீல்காந்த் கஞ்சு நவம்பர் 4 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்."

இந்த புத்தகத்தின்படி, இந்த கொலைகளுக்கு JKLF பொறுப்பேற்றுள்ளது.

இதற்கிடையில், டிசம்பர் 8 ஆம் தேதி, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முகமது சயீத்தின் மகள் டாக்டர் ரூபியா சயீத் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க ஐந்து தீவிரவாதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு அடிபணிவதை ஃபரூக் அப்துல்லா கடுமையாக எதிர்த்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை.

இந்த சம்பவத்துக்குப் பிறகு தீவிரவாதிகளின் மனோபலம் அதிகரித்தது. பலரை சிறையிலிருந்து விடுவிக்கச்செய்ய கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அதை கட்டுப்படுத்தும் பொறுப்பு ஆளுனர் ஜக்மோகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜக்மோகன்

பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜக்மோகன் காஷ்மீரைக் காப்பாற்றினாரா?

ஜக்மோகன் முதன்முதலில் காஷ்மீர் ஆளுநராக 1984 ஏப்ரலில் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் காஷ்மீரிகளிடையே பிரபலமானார்.

"அவர் பள்ளத்தாக்கில் இந்து ஆதரவாளர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார்."என்று அசோக் குமார் பாண்டே 'காஷ்மீர்நாமா'வில் எழுதுகிறார்.

ஜக்மோகன் ஆளுனர் ஆன உடனேயே, காஷ்மீரைச் சேர்ந்த ஒரு முஸ்லிமை (முப்தி முகமது சயீத்) உள்துறை அமைச்சராக்குவதன் மூலம் காஷ்மீரிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கான முயற்சி தோல்வியடைந்தது.

"ஜனவரி 18 அன்று, துணை ராணுவப் படைகள் காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று தேடுதல் பணியைத் தொடங்கின. ஜனவரி 19 அன்று, ஜம்முவில் ஜக்மோகன் பொறுப்பேற்ற நாளில், சுமார் 300 இளைஞர்களை CRPF காவலில் எடுத்தது."

ஜனவரி 20ஆம் தேதி ஜக்மோகன் ஸ்ரீநகரை அடைந்தபோது அவருக்கு எதிராக ஏராளமானோர் திரண்டனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் இதில் அடங்குவர்.

"அடுத்த நாள் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 'காவ் கதல்' என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 35 தான். இது இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரே சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்."

ஜக்மோகன் தனது 'மை ஃப்ரோசன் டர்புலன்ஸ் இன் காஷ்மீர்' புத்தகத்தில், காவ் கதல் துப்பாக்கிச் சூடு தனது (ஜக்மோகனின்) உத்தரவின் பேரில் நடந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அசோக் குமார் பாண்டே அத்தகைய மற்றொரு சம்பவம் பற்றி பேசுகிறார்.

"1990, மே 21 அன்று மிர்வாய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போதைய தலைமைச் செயலர் ஆர் ட்க்கர், தனிப்பட்ட முறையில் அங்கு செல்லுமாறும் அல்லது மூத்த அதிகாரியை அனுப்பி அவரது கல்லறைக்கு மலர் தூவிடுமாறும் ஜக்மோகனுக்கு ஆலோசனை கூறினார். ஆனால் ஜக்மோகன் ஒப்புக்கொள்ளவில்லை.

"அவர் ஊர்வலம் செல்லும் பாதை மற்றும் ஊர்வலத்திற்கான கட்டுப்பாடுகள் குறித்து சில குழப்பமான உத்தரவுகளை வழங்கினார். இந்த குழப்பத்தைத் தொடர்ந்து, ஊர்வலம் அதன் கடைசி நிறுத்தத்தை அடையவிருந்தபோது துணை ராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்."

" இந்த துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை 47 என்று இந்தியாவின் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் பிபிசியின்படி இந்த எண்ணிக்கை 100 ஆக இருந்தது. சில தோட்டாக்கள் மிர்வைஸின் உடலையும் தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டது."

அசோக் குமார் பாண்டே 'காஷ்மீர்நாமா'வில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

"ஜக்மோகன் ஆளுநராக இருந்த காலத்தில், பள்ளத்தாக்கில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகை அதிகரித்தது. 

முஸ்லிம்களைக் கொல்ல ஜக்மோகன் அனுப்பப்பட்டதாக அவர்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக தனது நடவடிக்கைகளால் அதை அவர் உண்மையாக்கினார்.

"மிர்வைஸின் இறுதிச் சடங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்ப்ட்ட தேடுதல் நடவடிக்கை பலரைத் தூண்டியது.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சுதந்திர இயக்கத்தைத் தீவிரப்படுத்த பயிற்சி எடுக்க எல்லையைத் தாண்டினர்."

"ஜக்மோகனின் காலத்தில், மனித உரிமை ஆர்வலர்கள் அவமானப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டில் தலையிட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. 

இந்தச் சூழலை தீவிரவாதிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, சந்தேகம் மற்றும் அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கினர்."

எம்.ஜே.அக்பரின் 'காஷ்மீர் பிஹைண்ட் தி வால்' புத்தகத்தை குறிப்பிட்டு, "காஷ்மீரில் சுதந்திரத்திற்கான பொதுமக்களின் மறைமுக ஆதரவு, ஜனவரி 19 க்குப் பிறகு வெளிவந்தது." என்று அசோக் பாண்டே எழுதுகிறார்,

இருப்பினும், தான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் தான், காஷ்மீர் உடைந்து போகாமல் காப்பாற்றப்பட்டது என்று ஜக்மோகன் கூறினார்.

மூத்த பத்திரிக்கையாளர் கல்யாணி சங்கருக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் வந்தபோது அங்கு அரசு என்று எதுவும் இல்லை. தீவிரவாதிகளின் ஆட்சிதான் இருந்தது என்று கூறி அவர் தன்னை நியாயப்படுத்திக்கொண்டார்.

1989 ஆம் ஆண்டு ஆப்கன் போர் முடிந்தது. ஐஎஸ்ஐ எல்லா முஜாகிதீன்களையும் காஷ்மீருக்கு அனுப்பியது .

"அவர்களிடம் எல்லா வகையான நவீன ஆயுதங்களும் இருந்தன. ஆப்கானிஸ்தானில் கொரில்லா போரில் அனுபவம் பெற்றவர்கள் அவர்கள். ஐஎஸ்ஐ-யின் நிதி உதவியும் அவர்களுக்கு இருந்தது."

"பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அவர்களுக்கு பணம் கொடுத்தது. அவர்களுக்கு பயிற்சி அளித்தது, ஆயுதங்கள் கொடுத்தது. இந்தியாவுக்கு எதிராக நீங்கள் போராடுங்கள், ஜிகாத் செய்யுங்கள் என்று அவர்களுக்குள் இஸ்லாமிய வெறியை உருவாக்கியது. இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது."

"ஆஃப்கான் போரின் போது அவர்கள் எதைக் கற்றுக்கொண்டார்களோ, அதை காஷ்மீரில் முயற்சித்தனர்," என்று ஜக்மோகன் கூறினார்.

"ஆளுநராக எனது முதல் பதவிக்காலம் முடிவடைந்தபோது, ஐஎஸ்ஐ விளையாடுகிறது, காஷ்மீர் விடுதலை முன்னணி, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளன என்று நான் எச்சரித்திருந்தேன். "

" இப்போது செயல்படாவிட்டால் நிலைமை கைமீறிப்போய்விடும் என்று நான் ஒரு கடிதமும் எழுதினேன். ஆனால் எனது பதவிக்காலம் முடிந்ததால் நான் அங்கிருந்து செல்லவேண்டியதாயிற்று."

"காஷ்மீரில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது. சுமார் 600 வன்முறை சம்பவங்கள் நடந்தன, ரூபியா சயீத் கடத்தப்பட்டார். பல முக்கிய காஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். 

இந்திய அரசுடன் பணிபுரிபவர்கள் அனைவரும் குறிவைக்கப்பட்டனர். அத்தகைய சூழ்நிலையில், நான் மீண்டும் அங்கு அனுப்பப்பட்டேன். என்னால் நிலைமையை சீராக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

" 1990 ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு சுதந்திரத்தை அறிவிக்க மக்கள் இத்காவில் கூட திட்டமிட்டனர். அதை செய்யாமல் தடுப்பதே எனது கடமையாக இருந்தது. அந்த நாடகம் நடக்காமல் இருக்க நான் வகை செய்தேன். இப்படியாக காஷ்மீர் காப்பாற்றப்பட்டது."

காஷ்மீர் ஃபைல்ஸ்: காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிவந்த அந்த இரவின் கதை

யாரால் அநீதி 

தனது முயற்சியால் காஷ்மீர் பிரிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டிருப்பதாக ஜக்மோகன் கூறுகிறார். ஆனால் பண்டிட்களின் வெளியேற்றத்தை அவரால் தடுக்க முடியவில்லை என்று பண்டிட்டுகள் கூறுகின்றனர்.

தீவிரவாதம் தொடங்கிய பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த 3.5 லட்சம் காஷ்மீரி பண்டிட்டுகளில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறி ஜம்மு அல்லது நாட்டின் பிற பகுதிகளில் குடியேறினர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பண்டிட்கள் வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தொடங்கியதில் இருந்து 1990 வரை குறைந்தது 399 காஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 1990 முதல் 20 ஆண்டுகளில் மொத்தம் 650 காஷ்மீரிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் காஷ்மீரி பண்டிட் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் சஞ்சய் டிக்கு கூறுகிறார்.

1990 ஆண்டு மட்டுமே 302 காஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக டிக்கு தெரிவிக்கிறார்.

1989 முதல் 2004 வரை காஷ்மீரில் 219 பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் அரசு 2010ல் சட்டப்பேரவையில் தெரிவித்தது. அந்த நேரத்தில் காஷ்மீரில் 38,119 பண்டிட் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன, அதில் 24,202 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்றும் மாநில அரசு கூறியது.

 இன்றும்808 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,456 காஷ்மீரி பண்டிட்டுகள் தற்போது காஷ்மீரில் வாழ்கின்றனர், அவர்களுக்காக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறுகிறார்.

"கடந்த ஏழு ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது. காஷ்மீரி பண்டிட்களுக்கு மறுவாழ்வு வழங்குவதை யார் தடுக்கிறார்கள்? 

கடந்த பட்ஜெட்டில் பண்டிட்களின் மறுவாழ்வுக்காக எவ்வளவு நிதி வழங்கப்பட்டது?"

என்று பிபிசி குஜராத்திக்கு அளித்த பேட்டியில் அவர் கேள்விகளை எழுப்பினார்.

இதேபோன்ற குற்றச்சாட்டை அகமதாபாத்தில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட் ஏ.கே.கெளலும் முன்வைக்கிறார்.

"பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுமே காஷ்மீரி பண்டிட்களின் விஷயத்தை, தங்கள் அரசியலுக்காக பயன்படுத்தின.

நான் குஜராத் அரசிடம் பல விளக்கங்களை அளித்துள்ளேன். மேலும் மாநிலத்தில் எங்களுக்கு நிலம் அல்லது வேறு ஏதேனும் உதவிகளை வழங்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் குஜராத் அரசு எங்களுக்காக எதையும் செய்யவில்லை."என்று பிபிசி குஜராத்திக்கு பேட்டியளித்த ஏ.கே.கெளல் குறிப்பிட்டார்.

"காங்கிரஸும் எங்களைப் பயன்படுத்தியது, பாஜகவும் எங்களைப் பயன்படுத்தியது, அவர்கள் இன்னமும் எங்களைப் பயன்படுத்துகிறார்கள். மோதி அரசும் காஷ்மீரி பண்டிட்களின் பெயரை பயன்படுத்தியது."

"குஜராத் அரசு எந்த உதவியும் செய்யவில்லை. நான் மோதி அரசுக்கு மூன்று முறை கடிதம் எழுதியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை."

குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மட்டுமின்றி, காஷ்மீர் மக்கள் அனைவருக்குமே அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று அசோக் குமார் பாண்டே கருதுகிறார்.

அசோக் குமார் பாண்டே தனது 'காஷ்மீர் மற்றும் காஷ்மீரி பண்டிட்ஸ்: 1,500 ஆண்டுகள் குடியேற்றம் மற்றும் சிதைவு' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்.

"நீதி என்பது தங்களுக்கு கிடைக்கவில்லை என்று காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு தரப்பினரும் நினைகிறார்கள்."

எல்லையை ஒட்டியுள்ள காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தனக்கு அளிக்காமல், மவுண்ட்பேட்டனில் இருந்து ஹரிசிங் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை வரை அனைவருமே தனக்கு அநீதி இழைத்ததாக பாகிஸ்தான் உணர்கிறது.

"இந்தப்பகுதிக்காக பெருமளவு பணம் செலவழித்தாலும் கூட, இங்குள்ள மக்கள் தன்னுடன் நிற்கவில்லை, இது அநீதி என்று இந்தியா கருதுகிறது."

"காஷ்மீர் முஸ்லிம்கள் அநீதி இழைக்கப்பட்டதாக உணர்கிறார்கள், ஏனென்றால் வாக்குறுதி அளித்தபடி கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் ஜனநாயகம் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

 தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தனது வாழ்நாள் முழுவதும் ஷேக் அப்துல்லா நினைத்தார். மூவர்ணக் கொடியை தான் ஏற்றிவைத்தபோதும் தன்னை யாரும் நம்பவில்லை என்று ஃபரூக் அப்துல்லா கருதுகிறார்."

" தாங்கள் இந்தியாவுடன் நின்றபோதிலும் கூட 1990 இல் தங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்று காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான பண்டிட்டுகள் நினைக்கின்றனர். அதே நேரம் அரசு தங்களை புறக்கணிப்பதாக, காஷ்மீரில் வசிக்கும் பண்டிட்கள் உணர்கிறார்கள்."

-------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?