டெக் ஃபாக் செயலி.

ஜி-20

உலக நாடுகளின் பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதே ‘நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுனர்களின் அமைப்பு.’

இது இருபது உலக நாடுகள் மற்றும் அதில் உள்ள நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்களைக் கொண்ட கூட்டமைப்பாகும்.

இதனையே ‘Group of Twenty’ (20-களின் குழு) என்றும், சுருக்கமாக ‘ஜி-20’ என்றும் அழைக்கிறார்கள்.

இதில் இடம் பிடித்துள்ள 20 நாடுகளின் பட்டியல் பின் வருமாறு:- இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம்.

ஜி-20அமைப்பின் தலைவராக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன.

அந்த வகையில் வரும் டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதிவரை, அந்த தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வருகிறது.

-----------------------------------------------------------------------------

ஸ்டாலின் கொடுத்த மூன்று வாய்ப்புகள்.

ராஜ கண்ணப்பன் அடுத்தது ?


துபாய் சென்று வந்த கையோடு அமைச்சரவையில் முதல் மாற்றத்தை அரங்கேற்றியிருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் மீது எந்த புகார் வந்தாலும் அது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நேரத்திலேயே எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகின. 

இந்த விஷயத்தில் கலைஞர் கருணாநிதி போல் விட்டுபிடிப்பவர் அல்ல ஸ்டாலின், ஜெயலலிதா போல் உடனடியாக மாற்றம் தான் என திமுகவினரும் கூறிவந்தனர். 

இந்நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற பத்து மாதங்களில் அமைச்சரவையில் முதல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சராக பதவி வகிக்கும் எஸ்.எஸ்.சிவசங்கரை போக்குவரத்து துறை அமைச்சராகவும், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் மாற்றி உத்தரவு வெளியாகியுள்ளது.

ராஜ கண்ணப்பனை குறிவைத்து தான் இந்த மாற்றம் அரங்கேறியிருக்கிறது என்பது அரசியல் வட்டாரம் அறிந்த செய்தி தான். உண்மையில் பத்து மாதம் என்பதே அதிகம் தான். 

ராஜ கண்ணப்பன் விஷயத்தில் கடந்த சில மாதங்களாகவே முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் போக்கும் வரத்துமாய் இருந்த ராஜகண்ணப்பன் 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் திமுகவில் ஐக்கியமானார்.

 சட்டமன்றத் தேர்தலில் முதுகளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அவரை அமைச்சராக்கினார் ஸ்டாலின்.

திமுக அரசின் மீது எந்த புகாரும், விமர்சனங்களும் வந்துவிடக்கூடாது என்பதில் ஆரம்பம் முதலே கவனமாக இருந்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் தீபாவளிக்கு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்குவதற்காக ஆவின் நிறுவனத்தை தவிர்த்து வேறொரு தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய டெண்டர் வழங்க திட்டமிட்டதாகவும், இதற்காக பெற இருந்த கமிஷன் குறித்தும் தகவல் வெளியானது. 

 முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆவின் நிறுவனத்துக்கு அந்த டெண்டர் வழங்கப்பட்டது. அப்போதே ராஜகண்ணப்பன் மீது ஒரு கண் வைத்துவிட்டார் ஸ்டாலின்.

அதைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை ராஜகண்ணப்பனை சுற்றி வட்டமடித்தது. விசிக தலைவர் திருமாவளவனை அழைத்து பேசிய அமைச்சர், தான் ஒரு பெரிய சோபாவில் அமர்ந்து கொண்டு, அருகில் இன்னொரு ஷோபா இருந்தபோதும் பிளாஸ்டிக் சேரில் திருமாவளவனை உட்கார வைத்துவிட்டார் என்றொரு சர்ச்சை கிளம்பியது.

அது மட்டுமல்லாமல் போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் தோறும் டார்கெட் நிர்ணயித்து பணத்தை கறப்பதாகவும் புகார் ஒன்று மேலிடத்துக்கு சென்றது. 

இதன் தொடர்ச்சியாக எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டு 35 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. 

தமிழக அரசின் அலுவலகம் ஒன்றில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி பணத்தை கைப்பற்றியது அரசுக்கு தலை குனிவை ஏற்படுத்தியது. இதனால் உடனே அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.

அதன்பின்னர் பட்ஜெட் கூட்டத் தொடர், துபாய் பயணம் ஆகியவற்றை முடித்த ஸ்டாலினுக்கு வந்த உடனே இன்னொரு தகவலும் சொல்லப்பட்டுள்ளது. 

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக எழுந்த புகார் தான் ஸ்டாலினை உடனடியாக இலாகா மாற்ற முடிவை எடுக்க வைத்துள்ளது என்கிறார்கள்.

இலாகா மாற்றமும் தற்காலிக நடவடிக்கை தானாம், மே மாதம் அமைச்சரவை மாற்றம் இருக்கும் அதில் ராஜ கண்ணப்பன் பெயர் இடம்பெறாது என அடித்து சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

--------------------------------------------------------------------

டெக் ஃபாக் செயலி.

காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !

பா.ஜ.க. என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர்களின் பொய்களும் புரட்டுகளும், அந்த பொய்-புரட்டுகளை வைத்து அவர்கள் நடத்தும் கலவரங்களும்தான். இவைகளையெல்லாம் நடத்துவதற்கு தோதாக அவர்கள் மிகப்பெரிய தொழில்நுட்ப அணியையே வைத்துள்ளார்கள்.
பா.ஜ.க.வுடைய பொய் பிரச்சாரங்களை நாம் எளிதாக எண்ணிவிட முடியாது. 2013-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தின்போது, ஒரு போலியான வீடியோ பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. சங்கீத் சிங் என்பவரால் பரப்பப்பட்டது. ஆனால் அந்த வீடியோ இரண்டு ஆண்டுகள் பழையது என பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், அதற்குள் அந்த நச்சுப் பிரச்சாரத்தால் தூண்டப்பட்டு நடைபெற்ற கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்தார்கள்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மற்றும் மோடி அரசை விமர்சிப்பவர்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கி துன்புறுத்துவதும் அத்தொழில்நுட்ப அணியின் முக்கியமான பணியாக உள்ளது. பா.ஜ.க.வின் இந்த பின்னணி குறித்து பலரும் ஆய்வு செய்து கட்டுரைகள், நூல்களை வெளியிட்டுள்ளனர். 
பா.ஜ.க.வின் இணைய துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட சுவாதி சதுர்வேதி என்ற பத்திரிகையாளர், பா.ஜ.க இவற்றை எப்படி செய்யமுடிகிறது என இரண்டு ஆண்டுகள் கள ஆய்வு செய்து “நான் ஒரு ட்ரால் – பா.ஜ.க டிஜிட்டல் ராணுவத்தின் இரகசிய உலகத்திற்குள்ளே” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு கட்சிகளும் தொழில்நுட்ப அணியை வைத்திருந்தாலும் அக்கட்சிகளுடையதை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் இணையப் படையோடு ஒப்பிட முடியாது. முதலாவதாக, டிஜிட்டல் உலகின் புதுப்புது தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதில் மிகவும் முன்னேறியது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க .
இரண்டாவது வெறும், கவர்ச்சிவாத பிரச்சாரங்களைச் செய்வதற்காக மட்டும் அவர்கள் இதைப் பயன்படுத்தவில்லை. தங்கள் காவி பாசிச பயங்கரவாத செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும் இந்த முன்னேறிய தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றது.
அவ்வாறான முன்னேறிய தொழில்நுட்ப செயலி ஒன்றுதான் டெக் ஃபாக். காவி பாசிஸ்டுகளுடைய ஊடகப் பிரச்சாரத்தில் முக்கியமான பங்குவகிக்ககூடிய இது ஒரு இரகசிய செயலி ஆகும். 
தற்போது வயர் இணையதளம் இதைப் பற்றி புலனாய்வு செய்து ஆய்வுக் கட்டுரை வெளியிட்ட பிறகுதான் பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாசிஸ்டுகளின் கைகளில் சமூக ஊடகங்கள்
மக்களிடையே கருத்துருவாக்கம் செய்ய அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளில் முக்கியமானது டெக் ஃபாக் செயலியை கொண்டு டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கின் டிரெண்டிங் பகுதியை கட்டுப்படுத்துவது. பா.ஜ.க.விற்கு ஆதரவான கருத்துகளை டிரெண்ட் செய்வது; பா.ஜ.க.விற்கு எதிராக ஏதாவது பிரச்சினை எழும்போது, அதை மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்காக வேறொன்றை டிரெண்ட் செய்வது; பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளை துன்புறுத்த அவர்களை இழிவாக சித்தரித்து டிரெண்ட் செய்வது என பல வகைகளில் டிரெண்டிங் பகுதியை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பயன்படுத்திக் கொள்கிறது.
சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக, சமூக ஊடகங்களில் சங்க பரிவாரத்தினரால் பரப்பப்படும் இந்துமதவெறி நச்சுப் பிரச்சாரத்திற்கு ஒரு சான்று.
டெக் ஃபாக் செயலி தானியங்கு முறையில் வேலைசெய்யக் கூடியதாக உள்ளது. அதாவது இதன் மூலம் தனிநபர்கள் அல்லது குழுக்களின் டுவிட்டுகளை தானாகவே மறுபதிவிட மற்றும் பகிரச் (re-tweet and auto-sharing) செய்ய முடியும். 
இவற்றை  தானியங்குப்படுத்த டாஸ்கர் (Tasker) போன்ற ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்துகிறார்கள். இந்த டாஸ்கர் என்பது தொலைபேசியில் உள்ள பயன்பாடுகளை தானியங்கு படுத்த உதவுகின்ற ஒரு செயலியாகும்.
எனவே, ஒரு டெக் ஃபாக் செயலியை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளைக்கூட தனி ஒரு நபரால் கட்டுப்படுத்த முடியும். 
இதனால் அவர்கள் உருவாக்கும் இடுக்கைகளை (post) டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் டிரெண்டிங் பகுதியை மிக எளிதாக அடைய வைக்க முடியும்.
2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானின் கொட மாவட்டத்தில் கட்சியின் தொழில்நுட்ப அணியிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உண்மையோ அல்லது பொய்யான ஒன்றோ அதை வைரலாக மாற்றக்கூடிய சக்தி நம்மிடம் உள்ளது” என பேசினார். 
அத்தகைய சக்தியை டெக் ஃபாக் போன்ற செயலிகளே வழங்குகின்றன.
பொதுவில் ஒரு செய்தியை டிரெண்டிங் செய்வது என்று மட்டுமில்லாமல், டெக் ஃபாக் செயலியைப் பயன்படுத்தி ஒருவருக்கு தனிப்பட்ட முறையிலும் பொய்ச் செய்திகளைப் பரப்ப முடியும். 
மேலும் ஒருநபரின் தனிப்பட்ட தரவுகளை திருடவும் முடியும்.
குறிப்பிட்ட நபர்களை இலக்குவைத்து வாட்சப்பில் ஒரு படம் அல்லது வீடியோவை அனுப்புகிறார்கள். அந்த நபர் அப்படம் அல்லது வீடியோவை தரவிறக்கம் செய்தவுடன் அவரின் அலைபேசியில் ஒரு உளவு மென்பொருள் (spyware) நுழைந்து அவரின் வாட்சப் கணக்கை டெக் ஃபாக் செயலியுடன் இணைத்து விடும். 
அதன்பின், அவரின் தொலைபேசியில் இருக்கும் தொடர்பு பட்டியல் மற்றும் தனிப்பட்ட விவரங்களும் டெக் ஃபாக் செயலியால் திரட்டப்பட்டுவிடும்.
தொடர்ந்து அந்நபரை கண்கானித்துக் கொண்டே இருப்பார்கள்.
 ஒருவேளை அந்த நபர் தனது அலைபேசியிலிருந்து வாட்சப் செயலியை அழித்துவிட்டாலோ (Uninstall) அல்லது அலைபேசியை மீட்டமைத்தாலோ (ரீசெட் – Reset) அதனை அறிந்துகொண்டு அவரின் செயலற்று போயிருக்கும் வாட்சப் கணக்கை கையகப்படுத்தி, அவரது தொடர்பு பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் தங்களது பொய் பிரச்சார செய்திகளை அனுப்ப முடியும்.
இந்த செய்திகளை பெறுபவர்கள் தனக்கு நெருங்கிய நபர்தான் பகிர்கிறார் என நம்பத் தொடங்குவார். 
ஆனால் இதைப் பற்றி அக்கணக்கின் உரிமையாளருக்கு ஒன்றுமே தெரியாது. ஒருவேளை அதன் உரிமையாளருக்கு இதைப் பற்றி எதாவது சந்தேகம் எழுந்து ஆராயத் தொடங்கினால் ஒரு நொடியில் எல்லா தரவுகளும் அழிந்துவிடும் வகையில் வடிவமைத்துள்ளார்கள்.
மற்ற சமூக ஊடகங்களை போலல்லாமல் வாட்சப்-பை மக்கள் பார்ப்பதில்லை. 
வாட்சப்-இல் நமக்கு தெரிந்தவர்களிடம் இருந்து மட்டுமே நாம் செய்திகளை பெறுகிறோம் என்பதால் எந்த சந்தேகமுமின்றி மக்கள் நம்புகிறார்கள்.
 மேலும் வாட்சப் நிறுவனம் கொடுப்பதாக சொல்லப்படும் தகவல் பாதுகாப்பு உறுதிப்படும் அதை நம்பி பயன்படுத்துவதற்கு காரணம். இதையெல்லாம் இச்செயலியின் பயன்பாடு பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் கேள்விக் குறியாக்கிவிட்டது.
கருத்துருவாக்கம் செய்வதற்கு டெக் ஃபாக் செயலி பல்வேறுவிதமான முறைகளை வைத்துள்ளது. செய்திக் கட்டுரைகளில் இருக்கும் முக்கியமான சொற்களை மாற்றுவதன் மூலம் கட்டுரையை திரித்து, அதன் இணைப்பை சமூக ஊடகங்களில் பரப்புவது என்பது அதில் ஒரு முறை. 
சான்றாக, பா.ஜ.க.வை விமர்சிக்கும் ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு, அதில் பா.ஜ.க. என்ற சொல்லை காங்கிரஸ் என்று திரித்து பரப்புவது. இதுபற்றி வாசகர்களுக்கு எந்த சந்தேகமும் வராத வகையில் இக்கட்டுரையின் பக்கம் அது இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் வலைதளத்தைப் போலேவே அச்சு அசலாக இருக்கும்.
செய்திகள் மற்றும் தகவல்களின் வழியாகத்தான் மக்கள் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். 
இன்றைய காலகட்டத்தில் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது தகவல்களை அறிந்துகொள்வதில் சமூக ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் வகிக்கின்றனர்.
 அந்த சமூக ஊடகங்களை பாசிச சக்திகள் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு மக்களிடையே எது பிரபலமாக இருக்க வேண்டும், மக்கள் எதைப் பற்றி பேச வேண்டும், அவர்களது விருப்பு-வெறுப்புகள் எப்படி அமைய வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இது உண்மையில் நம்மை அச்சுறுத்தக் கூடிய விசயமாகும்.
நிழல் உலக பாசிச வன்முறை!
இந்த டெக் ஃபாக் செயலியுடன் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தரவு தளத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். 
இந்த தரவுத்தளத்தில் அவர்களால் கண்காணிப்புக்குள்ளாக்கப்படும் நபர்களின் தொழில், வயது, மொழி, மதம், பாலினம், அரசியல் விருப்பம், உடல் பண்புகள் உட்பட அனைத்துவகை அந்தரங்க விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளார்கள்.
அவர்கள் துன்புறுத்த இலக்காக வைக்கும் நபர்களின் தனிப்பட்ட விவரங்களை இந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்தி முதலில் தெரிந்து கொள்வார்கள். 
பின் டெக் ஃபாக் செயலியால் நிர்வகிக்கப்படும் பல்வேறு கணக்குகளிலுருந்து தொடர்ந்து அவர்களுக்கு ஆபாசமாக, இழிவுபடுத்தும் நோக்கில் செய்திகளை அனுப்பி சித்திரவதைக்கு உள்ளாக்குவார்கள். 
இந்த அளவிற்கு கொடூரமாக இருக்கும் என்றால், காவி பாசிஸ்டுகளால் குறிவைக்கப்படுவது ஒரு பெண் பத்திரிகையாளர் எனில், அவரின் மார்பக அளவைப் பற்றிக் கூட துல்லியமாக அறிந்துகொண்டு ஆபாசமாக செய்திகள் அனுப்பி துன்புறுத்துகிறார்கள்.
பா.ஜ.க.வின் இந்துராஷ்டிர கனவிற்கு எதிராக உள்ள அனைவரையும் இலக்கு வைத்து தாக்க இந்த தரவுத்தளம் அவர்களுக்கு பயன்படுகிறது. 
இதுவரை இந்த டெக் ஃபாக் செயலியின் மூலம் பெரும்பாலான முஸ்லீம்கள் மற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள் இணைய வழியில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொடங்கி மே மாதம் இறுதிவரையான ஐந்து மாத காலகட்டத்தில் மட்டும் 280 பிரபலமான பெண் பத்திரைக்கையளர்களின் டுவிட்டுகளுக்கு வந்த 46 இலட்சம் பதில்களை ஆராய்ந்ததில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பதில்கள் டெக் ஃபாக் செயலியால் நிர்வகிக்கப்படும் கணக்குகளில் இருந்து வந்தவை மற்றும் அதில் 67 சதவிகித பதில்கள் அவர்களை ஆபாசமாகவும் இழிவாகவும் சித்தரிக்கும் நோக்கில் வந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த காஷ்மீரைச் சேர்ந்த மாணவியான ஷேஹ்லா ரஷீத் ஷோரவை இந்த டெக் ஃபாக் செயலியின் மூலமாக சித்திரவதைப் படுத்தியுள்ளது 
காவி கும்பல். அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்கள், பல்வேறு கணக்குகளைப் பயன்படுத்தி நாள்தோறும் அவருக்கெதிராக இழிவான கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்கள். இறுதியில் அந்த மாணவி 2018-இல் டுவிட்டரிலிருந்தே வெளியேறிவிட்டார்.
அடுத்து 2020-ம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று, வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் இந்த டெக் ஃபாக் செயலியின் பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. டெல்லியில் சி.ஏ.ஏ.விற்கு எதிராக போராடிய முஸ்லீம் மக்கள்மீது காவி கும்பலால் வன்முறை ஏவி விடப்பட்டது. இதில் மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டு, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 
முஸ்லீம்களின் வீடுகள், உடைமைகள் சூறையாடப்பட்டன. இந்த கலவரம் நடந்த அன்று இந்த போராட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா என்பவன் “போராடுபவர்களை தெருக்களில் இருந்து மூன்று நாள்களில் போலீஸ் சுத்தம் செய்யாவிட்டால் நாங்கள் அதைச் செய்வோம்” என பகிரங்கமாக கலவரத்திற்கு அறைகூவல் விடுத்தான். இது டெக் ஃபாக் கணக்குகள் மூலமாக பெருமளவில் பரப்பப்பட்டுள்ளது. எனவே டெல்லி கலவரத்திற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைகிறது.
இதேபோல, 2020-ல் நடந்த தப்லீகிக் ஜமாத் மாநாட்டை மையமாக வைத்து முஸ்லீம்கள் ‘கொரோனா ஜிகாத்’ நடத்துகிறார்கள். 
எச்சில்கள் மூலமாக கொரோனாவை பரப்புகிறார்கள் என கேவலமானதொரு பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது சங்கப் பரிவாரக் கும்பல்கள். #தப்லீக் ஜமாத் ஜிஹாத், #தப்லீக் ஜமாத் வைரஸ் போன்ற ஹாஷ்டாக்குகளை 1 இலட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமான டுவிட்டுகளாக டெக் ஃபாக் செயலியை வைத்து பெருக்கியுள்ளார்கள். இந்த நச்சுப் பிரச்சாரம் இணையத்தில் சுமார் எட்டு கோடி பேரைச் சென்றடைந்துள்ளது. அப்போது நாடுமுழுவதும் முஸ்லீம்கள்மீது காவி கும்பல்கள் நடத்திய தாக்குலுக்கு கருத்தியல் ஆதரவாக இது அமைந்தது.
காவிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான கூட்டு
டெக் ஃபாக் செயலி போன்ற உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்க பிரசிடெண்ட் சிஸ்டம் மற்றும் மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் என இரு கார்ப்பரேட் தொழிநுட்ப நிறுவனங்கள் உடந்தையாக இருந்துள்ளன.
பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி எழுதிய “நான் ஒரு ட்ரோல் : பிஜேபி டிஜிட்டல் இராணுவத்தின் இரகசிய உலகத்திற்குள்ளே” என்ற நூல்.
இதில் மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் என்பது சமூக ஊடகங்களுள் ஒன்றான ஷேர்சாட்டை உருவாக்கிய நிறுவனம் ஆகும். மேலும் இந்தியாவின் 24 பிராந்திய மொழிகளில் செயல்படக்கூடிய ஷேர்சாட் செயலிக்கு டுவிட்டரால் நிதியளிக்கப்படுகிறது.
 இது 16 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. டுவிட்டர், பேஸ்புக், வாட்சப் போன்ற மற்ற சமூக ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரங்கள், பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கு முன்னால் ஷேர்சாட்தான் இவர்களுக்கு சோதித்து பார்க்கும் களமாக உள்ளது.
அடுத்து, பிரசிடெண்ட் சிஸ்டம் என்பது 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய-அமெரிக்க பொது தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இது நாக்பூரில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்தை மையமாக வைத்துக் கொண்டு டெக் ஃபாக் செயலியை இயக்குபவர்களை ‘சமூக ஊடகப் பொறுப்பாளர்கள்’ என்ற பெயரில் பணியமர்த்தி, ஊதியமும் வழங்குகிறது. 
இதற்கு மேற்பார்வையாளராக பா.ஜ.க.வின் தற்போதைய மகாராஷ்டிர தேர்தல் மேலாளர் தேவங் டேவ் இருக்கிறார்.
இந்த நிறுவனம் 2015 முதல் அரசாங்க ஒப்பந்தங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. 2018-ல் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பத்து மாநிலங்களில் இருக்கும் மக்களின் சுகாதார தகவல்களை சேகரித்து, சேமித்து வைக்கும் ஒரு டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தை இந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. 
அதாவது ஒரு நிழல் உலக இணையப் படைக்கு அரசின் மூலம் அதிகாரப்பூர்வமாகவே நமது விவரங்கள் சென்றுசேர்கின்றன.
இந்த டெக் ஃபாக் செயலி இல்லாமல், சட்டப் பூர்வமாகவே சமூக ஊடகங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல்வேறு சட்டங்களை கொண்டுவந்துள்ளது மோடி அரசு. 
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி, “சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் 2021” என்ற பெயரில் ஒரு விதியைக் கொண்டுவந்துள்ளது.
இதன்படி, சமூக ஊடகங்களில் சட்ட விரோத, தேச விரோத கருத்துகளை முதலில் பதிவிடும் நபரை கண்டுபிடிக்க முடியுமாம். 
அவர்களுக்கும் அந்த உள்ளடக்கத்தை பகிரும் நபர்களுக்கும் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில் இவ்விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விதிமுறைகள் செய்தி வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களையும் கட்டுப்படுத்துகிறது.
அதேபோல, 2020-ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுகின்ற தேசிய இணையவழி குற்றங்கள் புகாரளிக்கும் இணைய முகவரியின் சார்பாக, “இணையத் தன்னார்வலர்கள் திட்டம்” (Cyber Volunteers Program) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
சமூக அக்கறையுள்ளவர்கள் யாரும் தன்னை இந்த திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களாக பதிவுசெய்துகொண்டு, சமூக ஊடகங்களில் தேச விரோத, சட்ட விரோத கருத்துக்களை பதிவிடுவோரை அரசுக்கு அடையாளம் காட்டலாம் என்று அறிவித்துள்ளார்கள்.
இணைய வழியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச செய்திகளை பரப்புவோர்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு இதுபோன்ற ஒழுங்குமுறை விதிகளும் திட்டங்களும் பயன்படும் என்று மோடி அரசு தெரிவிக்கிறது. 
ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதை நம்மால் எப்படி நம்ப முடியாதோ அதைப் போன்றதுதான் இந்த பிரச்சாரங்கள்.
காவிகளின் ஆட்சியில், “சட்ட விரோத – தேச விரோத” என்றால் தங்களுக்கு விரோதமானது என்று பொருள் என்பது ஊரறிந்த உண்மை. எனவே இதுபோன்ற சட்டங்கள் எதற்கு பயன்படப்போகிறது என்பதை நாம் சொல்லாமல் புரிந்துகொள்ளலாம். 
என்.ஐ.ஏ, ஊஃபா, தேசப் பாதுகாப்புச் சட்டம் போன்றவைகளெல்லாம் எந்த ‘தேச விரோத’-‘சட்ட விரோத’ சக்திகளை ஒழித்துக் கட்டிவருகிறதோ, அதைப் போன்ற வேலைகளை இணையவழிகளில் மேற்கொள்வதற்குத்தான் இந்த சட்டங்கள்.
000
டெக் ஃபாக் என்ற ஒரு இரகசிய செயலியை வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்கள் வாயிலாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வினர் விரிந்த அளவில் மதவெறி பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டுசென்று கருத்துருவாக்குகின்றனர். கலவரங்களை மேற்கொள்கின்றனர்.
தங்களுடைய சித்தாந்தத்தை, பயங்கரவாத நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்திவரும் ஜனநாயக சக்திகளை இணையச் சித்திரவதை செய்து, அவர்களை சமூக ஊடகத்தைவிட்டே ஓடவைக்கவும் இச்செயலியைப் பயன்படுத்துகிறார்கள்.
மற்றொருபுறம், புதுப் புதுச் சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்டுவந்து மோடி அரசு மக்களுடைய கருத்துரிமையை பறித்துவருகிறது. 
தங்களுக்கு எதிராக கருத்து பதிவிடுபவர்களை சட்ட ரீதியாகவே ஒடுக்கும் ஏற்பாட்டைச் செய்துவருகிறது. 
திரிபுராவில், அண்மையில் முசுலீம்களுக்கு எதிராக காவி கும்பல்கள் நிகழ்த்திய வன்முறையைக் கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டர்கள் அனைவர் மீதும் ஊபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்பட்டது அதற்கு சிறந்த சான்று.
இவையெல்லாம் புதியதொரு போக்கை அறிவிக்கின்றன. யார் வேண்டுமானால் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த முடியும் என்ற நிலை புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துரிமையை, விரிந்த அளவில் மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான கருவியாக சமூக ஊடகங்கள் பயன்பட்டது.
 அந்த காலம் முடிவடைந்துகொண்டிருக்கிறது.
ஆனால், இதே சமூக ஊடகங்கள் மக்கள் விரோதிகளான பாசிஸ்டுகளுக்கு பயன்படுகிறது.
 மிகுந்த செல்வாக்கோடு தங்கள் சித்தாந்தத்தை விரிவான மக்களிடம் அவர்களால் கொண்டு செல்ல முடிகிறது.
ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகும் பாசிஸ்டுகளின் கைப்பாவையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை நேசிப்பதாகவும் சர்வாதிகாரத்தை எதிர்ப்பதாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய அனைவரும், இனி சமூக ஊடகங்களில் பதிவு போடுவதன் மூலம் மட்டுமே தங்கள் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்க முடியாது. 
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்காக மாபெரும் மக்கள்திரள் எழுச்சி ஒன்றிற்கு தயாராக வேண்டியிருக்கிறது. களத்தில் பாசிசத்தை வீழ்த்தாமல் இனி டுவிட்டரில் பதிவு போடும் ஜனநாயகத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது.
-----------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?