சனி, 5 மார்ச், 2022

நாங்கள் இந்தியர்கள் இல்லையா?

 உக்ரைன் தமிழ் மாணவர்கள் கோபம்.

மோடி அரசின் இழிவான செயல்.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய தினமே, இந்திய மாணவர்கள் அங்கு சிக்கி கொண்டனர்.. இவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வரும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ஏராளமான இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியறி வருகிறார்கள்.. அதேசமயம், எந்த மாணவரும் பணயக் கைதியாக அங்கு இருப்பதாக தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது..

தமிழக மாணவர்கள்

எனினும், உக்ரைனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் 75 ஆயிரம் பேரில், சுமார் 20 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவார்.. உக்ரைன் முழுவதும் இந்திய மாணவர்கள் படித்தாலும், கார்கிவ் நகரில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள்தான் அதிகம் என்கிறார்கள்.. இப்போது இவர்கள் அனைவரும் உக்ரைனிலுள்ள இந்தியத் தூதரகம் தங்களைக் கைவிட்டதாகவே உணர்கிறார்கள்... 

ஃபேஸ்புக், ட்விட்டர் வழியாக மட்டுமே இந்தியத் தூதரகத்தின் செய்திகளை தெரிந்து கொண்டு வருகிறார்கள்..

எனினும், ருமேனியா எல்லையில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மாணவர்கள் அனுப்பும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. 

போலந்து எல்லையில் இந்திய மாணவர்கள் உக்ரைன் காவல் படையினரால் தாக்கப்படும் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.. 

அதில், 'நாங்களும் இந்தியர்கள்தானே... எங்களை ஏன் கைவிட்டீர்கள்?' என்று மாணவர்கள் கதறி அழுவது காண்போரின் இதயத்தை உலுக்கி எடுப்பதாக உள்ளது..

கதறி அழும் மாணவர்கள்

இப்படிப்பட்ட சூழலில்தான் மற்றொரு பிரச்சனை வெடித்துள்ளது.. இந்தியர்களை, இந்தியர்களாக பார்க்காமல், வடமாநிலம், தென்மாநிலம் என பிரித்து மத்திய அரசு அதிகாரிகள் நடத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் உக்ரைனில் கொந்தளித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. 

ஒருசில அமைப்பினர், வடமாநில மாணவர்களை மட்டும் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.. அந்த மாணவர்கள், குறிப்பிட்ட 'இந்து அமைப்பின்' கோயில் முத்திரை பதித்த பிரத்யேகமான டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர்..

 கேவலமான இந்தி அதிகாரிகள்

அவர்களை சுட்டிக்காட்டி, தமிழக மாணவர் ஒருவர் கொந்தளித்து பேசுகிறார்.. 

சம்பந்தப்பட்ட அதிகாரியை எதிர்த்து கேள்வி கேட்கிறார்.. 'எங்களை எல்லாம் பார்த்தால் மனுஷங்களா தெரியலையா.. ஏன் இப்படி பிரிவினை? நீங்கள் அனைத்து இந்திய மாணவர்களையும் ஒரேமாதிரிதானே நடத்த வேண்டும்? இதோ இந்த டி-ஷர்ட்டில் பொறிக்கப்பட்டுள்ள முத்திரை என்ன? எங்களுக்கு இப்பவே தெரிந்தாக வேண்டும் யார் இவர்கள்? எதற்காக இவர்களை மட்டும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து செல்கிறீர்கள்?' என்று கொந்தளிக்கிறார்.

இந்தி தூதரகம்?

அதுமட்டுமல்ல, இந்திய தூதரகத்துல இருக்கும் அதிகாரிகளிடம் நம் தமிழக மாணவர்கள் உதவிகளை கேட்டாலும் செய்வதில்லையாம்.. ஆங்கிலத்தில் உதவிகளை கேட்டால், அவர்கள் இந்தியிலதான் பேசுறாங்களாம்.. 

ஆங்கிலத்துல பேச மறுக்கிறார்கள் என்றும் உக்ரைன்ல சிக்கியிருக்கிற தமிழக மாணவர் ஆவேசத்துடன் சொல்கிறார்.. 

இந்த மீட்பு விஷயத்திலும் தமிழக மாணவர்களை அவமானப்படுத்தி, புறக்கணிக்கப்படுவதும், தென்மாநிலம், வடமாநிலம் என்ற பிரிவினையை அதிகாரிகள் கையில் எடுத்திருப்பதும் பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் உண்மை நிலையை மறைத்து நேற்றைய தினம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்திருந்தார்.. 

அதில், 'வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 40 வருடங்கள் பல்வேறு நாடுகளில் வெளியுறவுப் பணி செய்தவர். இங்கே இருக்கும் முதல்வர் ஸ்டாலின் போன்று வாட்ஸ்அப் கால் பேசி பில்டப் செய்வது அவரது வேலை கிடையாது.. மாணவர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுதான் மாநில அரசின் கடமை.ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக எம்பி.,எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது...

முதல்வர் ஸ்டாலின்

இவர்களால் அங்கு சென்று ஒன்றுமே செய்ய முடியாது... இதில் முதல்வர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. 

மாணவர்களை மீட்பதில் அரசியல் செய்யக் கூடாது' என்று தெரிவித்திருந்தார்.. 

ஆனால், மாணவர்களின் இந்த கதறல் வீடியோக்களை பார்த்தால், ஒன்றிய மோடி இந்தி அரசு அவர்களின் கடமையை ஒழுங்காக செய்திருந்தால், தமிழர்களை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் தமிழ்நாடு அரசு இதுல தலையிட வேண்டிய தேவையே இருந்திருக்காது  என்பதுதான் உண்மை நிலை.--------------------------------------

இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தற்போது ருமேனியாவில் இருக்கிறார்.

வாக்குவாதம்

ருமேனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்திய மாணவர்கள் ருமேனிய மேயர் தலைமையில் தங்கி இருந்தனர். 

அப்போது, அங்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சென்றார். அப்போது, மாணவர்களிடம் இந்தியா எப்போது,எப்படி திரும்புவார்கள் என்ற விபரங்களை ருமேனியா மேயர் பேசி வந்தார். 

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நான் தான் அதைப் பற்றிபேசுவேன் என்றும், நான் என்ன பேசுவேன் என்று நான் தான் முடிவெடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

இதற்கு ருமேனிய மேயர், "இந்த மாணவர்களை  இதுவரை நான் தான் பாதுகாத்தேன். அவர்களுக்கு தேவையான உணவு, உடை அனைத்தையும் தந்தேன். கடைசி நேம் வந்த நீங்கள் இவர்களை இதுவரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்த்தாகப் பேசுவது தவறு.அதை, நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது" என்று பதிலளித்தார். 

இதைக் கேட்ட இந்திய மாணவர்கள் கைதட்டி அவரைப் பாராட்டினார்கள். இந்திய மாணவர்கள் ருமேனிய மேயரைப் பாராட்டி கைத்தட்டுவதும், இந்திய அமைச்சர் அவமானப் பட்டு தலைகுனிந்ததுநிற்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

-------------------------------------------------------------------------

வெள்ளையா இருப்பவன்

 சாகக் கூடாது.

உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு போர் நடத்தி வருகிறது ரஷ்யா. உக்ரைனின் கிழக்குப் பகுதி மக்கள் ரஷ்யாவையும், மேற்குப் பகுதி மக்கள் ஐரோப்பா, அமெரிக்காவையும் ஆதரிக்கிறார்கள். 

போரில் மக்களும், இராணுவ வீரர்களும் சாகிறார்கள். எந்தப் போராக இருந்தாலும் அதன் இறுதிச் சுமையை மக்கள்தான் சுமக்கப் போகிறார்கள். 

ரஷ்யாவின் இந்தப் போருக்கு முன்பு நடந்த இஸ்ரேலின் போர், ஈராக் மீதான அமெரிக்காவின் போர், செர்பிய போர், ஆப்கான் போர் போன்ற போர்களுக்கும் ரஷ்யாவின் இந்தப் போர்களுக்கும் என்ன வேறுபாடு? 

ஊடகங்களைப் பொறுத்த வரை மேற்கண்ட போர்கள் அவர்களது சொந்த மக்களுக்கு தொடர்பில்லாத போர். உக்ரைன் போர் தமது சொந்த மக்களின் இனம், நிறம், ஐரோப்பிய உணர்வோடு தொடர்புடைய போர்.

உக்ரைனிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் அருகாமை நாடுகளுக்கு புலம் பெயர்கிறார்கள். மேற்குல ஊடகங்கள் இந்தச் செய்தியை எப்படி வெளியிடுகின்றன?

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இருக்கும் டோனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகிய பகுதிகளின் பழங்குடி மக்களை உக்ரைன் அரசு ஒடுக்குகிறது. 

அவர்கள ஆதரிக்கும் பொருட்டே இந்தப் படையடுப்பு என்று ரசிய அரசு நியாயப்படுத்தியதோடு அவற்றை தனிநாடுகளாகவும் அங்கீகரித்திருக்கிறது. இது காகசியன் இனத்தைச் சேர்ந்த (வெள்ளையின) பத்திரிகையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இத்தகைய ஒடுக்கப்படும் பழங்குடி பிரிவு மக்களின் பிரச்சினைகள் ஐரோப்பாவிலும் செல்லுபடியாகி விடுமோ என்று அவர்கள் அச்சமுறுகிறார்கள். அதற்கேற்றவாறு போர்ச் செய்திகளின் கவரேஜ் வடிவம் பெறுகிறது.

“அவர்கள் (உக்ரேனிலிருந்து வெளியேறும் அகதிகள்) நம்மைப் போன்றவர்கள். அதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இனிமேலும் போர் என்பது வறிய, தொலைதூரத்தில் இருக்கும் மக்களுக்கு நிகழும் ஒன்றாக பார்க்க முடியாது. இது யாருக்கு (நமக்கு) வேண்டுமானாலும் நடக்கலாம்.” என்று பிரிட்டனின் தி டெலிகிராஃப் பத்திரிகையில் டேனியல் ஹென்னான் எழுதுகிறார். 

எனில் தொலை தூரத்தில் நடந்த ஏனைய போர்கள் குறித்து ஐரோப்பிய மக்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லையா? இல்லை அந்த போர்கள் என்பது ஒரு தொலைக்காட்சியில் காட்டப்படும் ஆக்ஷன் காட்சிகளும் செத்துப் போனவர்களின் புள்ளிவிவரம் மட்டுமா?

“நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஐரோப்பிய நகரங்களில் வசிக்கிறோம். ஒருவேளை நாம் ஈராக்கிலும் ஆஃப்கானிலும் இருந்தால் நம்மீது ஏவுகணைகள் வீசப்படுவது போல இப்போது ஐரோப்பாவில் நடக்கிறது. இதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?" என்று பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றில் புலம்புகிறார் ஒரு கருத்துரையாளர். 

ஈராக்கில் ஒரு ஏவுகணை தாக்கி அங்கு செத்து விழும் உடல்களின் ரத்தமும் ஐரோப்பியனின் ரத்தமும் வேறு வேறு என்று வெளிப்படையாகப் பேசுகிறது இக்கருத்து. ஐரோப்பாவில் இருக்கும் வெள்ளையின நிறவெறி நியோ நாஜிக் கட்சிகள் இதே கருத்துக்களை இன்னும் கடுமையாக தெரிவிக்கிறார்கள்.

“உக்ரைன் என்பது பல ஆண்டுகளாக போர் நடக்கும் ஈராக், ஆப்கான் போன்ற ஒன்றல்ல. உக்ரைன் என்பது ஒப்பீட்டளவில் நாகரீக நாடு, ஒரு ஐரோப்பிய நாடு. நான் இந்த வார்த்தைகளை கவனமானத்தான் பேசுகிறேன். 

நீங்கள் வசிக்கும் நகரங்களிலும் அதே மாதிரியான போர் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்" என்கிறார் உக்ரைன் தலைநகரம் கீவிலிருந்து அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சி செய்தியாளர் சார்லி டி அகதா. பின்னர் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வந்த உடன் இவர் மன்னிப்பு கேட்டார். ஆனால் எவ்வளவு இயல்பாக அந்த ஐரோப்பிய உணர்வு மேற்கு ஆசிய நாடுகளை கீழாகக் கருதுகிறது?

 இதுதான் மேற்குலகு உருவாக்கிய நாகரீக ஐரோப்பாவா?

மேற்குலக இனவெறி

Russia Ukraine War


இத்தகைய அரிய இனப்பாச முத்தான கருத்துக்கள் ஏதோ இப்போது நடக்கும் உக்ரைன் போரின் போது மட்டும் வருவதில்லை.

 2020 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தொலைக்காட்சியில் ட்ரம்புக்கும் அவரது போட்டியாளரும் இன்றைய அதிபருமான ஜோ பைடனுக்கும் விவாதம் நடந்தது. 

மேலும் ட்ரம்ப் நடத்தி பேரணிகள் பேச்சுக்கள் பிரச்சினைகள் தனி. இவற்றையெல்லாம் பார்த்த பத்திரிகையாளர்கள் இப்படியான பிரச்சினைகள் ஒரு மூன்றாம் உலக நாட்டில்தான் நடக்கும் அமெரிக்கவிலா இப்படி என்றார்கள். 

அமெரிக்கா இப்போது ஒரு மூன்றாம் உலக நாடு என்று ஃபார்ச்சூன் பத்திரிகை ஒரு தலைப்புச் செய்தியே வெளியிட்டது.

ஆக முதல் உலகம் மூன்றாம் உலகத்தை தரம் தாழ்ந்ததாக கருதுவதோடு அந்த லெவலுக்கு நாமும் இறங்க வேண்டுமா என்பதுதான் இதன் உட்கிடை. மூன்றாம் உலக நாடுகளின் செல்வ வளத்தைக் கொள்ளையடித்து, காலனியப்படுத்தி, நாசமாக்கிய கனவான்கள் நமது ஏழ்மை, அரசியலை இளக்காரமாகப் பார்க்கிறார்கள். கோட்டு சூட்டு போட்டிருந்தாலும் கனவான்களின் இதயம் என்னமோ இனவெறியில்தான் துடிக்கிறது.
ரஷ்யப் படையெடுப்பு ஐரோப்பாவின் தார்மீக நெறிமுறைகளின் சிதைவுகளையும் சேர்த்தே வெளிக் கொண்டுவந்திருக்கிறது.

உக்ரைனிலிருந்து வெளியேறும் ஸ்லாவிய வெள்ளையின மக்களை மரியாதையாக நடத்தும் உக்ரைன் வீரர்கள், ஆப்பிரிக்கர்களையும், 

இந்தியர்களயும், 

சீனர்களையும் 

இழிவாக நடத்துகிறார்கள்

ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் உக்ரைன் மக்கள் வீரத்தில் இது ஒரு கறையாக படிந்து விட்டது. ஒடுக்குபவரை எதிர்ப்பவர் யாரும் இன்னொருவரை ஒடுக்குபவராக இருந்தால் அவர்கள் விடுதலை பெறுவது சாத்தியமற்ற ஒன்று. சமத்துவ உணர்வும், ஒடுக்குமுறையை எதிர்ப்பதும் வேறு வேறு அல்ல.

உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரும் வெள்ளையின உக்ரைன் மக்களுக்கு ராஜமரியாதையுடன் கூடிய வரவேற்பு கிடைக்கிறது. 

ஆனால் இதே போர் காரணங்களுக்காக ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளிலிருந்து வரும் மக்களை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பதில்லை. அவர்களில் பலர் மத்திய தரைக்கடலில் மூழ்கடிக்கப்பட்டு இறந்து போயிருக்கின்றனர். 

அகதி என்றால் ஐரோப்பாவைப் பொறுத்தவரை நிறத்தை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. இதற்காக நாகரீக ஐரோப்பியர்கள் வெட்கப்படுவதில்லை. என்ன ஒரு நாகரீகம்!

மூன்றாம் உலக நாடுகள் முட்டாள்களாம்

பல்கேரிய பிரதமர் கிரில் பெட்கோவ் வெளிப்படையாக இப்படி அறிவிக்கிறார்: “இவர்கள் நாம் வழக்கமாக பார்க்கும் அகதிகள் அல்ல. இவர்கள் ஐரோப்பியர்கள்.

 எனவே நாமும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் அவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். இவர்கள் புத்திசாலிகள், படித்தவர்கள்... எனவே உக்ரைனிலிருந்து அலை அலையாக அகதிகள் வந்தாலும் எந்த ஐரோப்பிய நாடும் அஞ்சப் போவதில்லை." இந்த உரைக்குப் பொழிப்புரையே தேவையில்லை. 

படிப்பறிவற்ற முட்டாளான நம் மக்கள் ஐரோப்பாவின் அனைத்து எடுபிடி வேலைகளையும், கடும் உழைப்புப் பணிகளை பார்த்தாலும் சிவப்பாக இருப்பவனுக்குத்தான் முதல் மரியாதை. மற்றவருக்கு அவமரியாதை.

போலந்து நாட்டின் பிரதமர் இப்படிக் கூறுகிறார்: “ உக்ரைன் மக்கள் அச்சத்தாலும் அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்லாயிரக்கணக்கில் அகதிகளாக வந்தாலும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம்". இத்தகைய ‘மனிதாபிமானம்’ கொண்ட போலந்து நாடுதான் தனது எல்லையில் இருக்கும் பெலாரஸ் வழியாக வரும் ஈராக்கிய, ஆப்கானிய, சிரிய அகதிகளின் வருகையைத் தடை செய்திருக்கிறது.

இங்கிலாந்தில் வெள்ளையர் அல்லாத அகதிகளை இங்கிலீஷ் கால்வாய் கடலில் ‘தள்ளுவது’ குறித்து யோசித்து வரும் பிரதமர் போரீஸ் ஜான்சன், உக்ரைன் அகதிகளின் குடும்பத்தினர் யாராவது இங்கிலாந்தில் இருந்தால் விசா இல்லாமலே வரலாம் என உருக்கமாகக் குறிப்பிடுகிறார்.

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் மீது படையெடுக்கும் ரஷ்யாவை மேற்குல நாடுகள் கண்டிக்கின்றன. அது சரிதான். மேலும் இந்தப் படையெடுப்பை எதிர்த்து அவர்கள் ஐ.நா. சாசனம், மனித உரிமை, தீர்மானங்கள் என்று தொடர்ந்து கூச்சலிடுகிறார்கள்.

 ரஷ்யா இன்று செய்வதைப் பல ஆண்டுகளாக இஸ்ரேல் நாடு பாலஸ்தீன் மக்கள் மீது செய்துவருகிறது. ஆனால் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடையோ ஐ.நா .கண்டனமோ எதுவுமில்லை.

 இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அன்றாட உயிரிழப்புகளுடன் எதிர்க்கும் பாலஸ்தீன மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை இவர்கள் கொண்டாடுவதில்லை.

 உக்ரைனுக்கான நீதி ஏன் பாலஸ்தீனத்திற்கு கிடைக்கவில்லை?

மூன்றாம் உலகை காலனியாக்கி முதல் உலகாய் உயர்ந்த மேற்குல நாடுகளின் இனவெறி உக்ரைன் போரில் அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது. 

இப்படிப்பட்டவர்களின் பிடியில்தான் இந்த உலகின் செல்வ வளமும், ஆயுத பலமும், நம் தலைவிதியும் சிக்கியிருக்கிறது.

----------------------------------------------------------------------------