இருக்கு, ஆனா. இல்லை.!

 நீங்கள் கிரிப்டோ கரன்சி பற்றி அறிந்தவராக இருக்கலாம். அல்லது அதைப் பற்றிப் பிறர் பேசுவதைக் கேட்டிருக்கலாம். இரண்டில் ஒரு பிரிவில்தான் நீங்கள் இருக்க முடியும். 

காரணம் கிரிப்டோ கரன்சி அந்த அளவுக்குப் பிரபலமாகியிருக்கிறது. இந்த வர்த்தகத்தில் கிராம மக்கள்கூட ஈடுபட்டுவருகிறார்கள்.


எளிதாகச் சொல்வதானால், இது ஷேர் மார்க்கெட் போலத்தான். கிரிப்டோ கரன்சியில் பல்வேறு பிரிவுகள் உண்டு, பிரலமானது பிட் காயின். இவற்றை வாங்கிவைக்க வேண்டும். நாளை அவை ‘விலை’ ஏறும்போது உங்களுக்கு லாபம்.

இது எல்லாமே இணையம் மூலம் நடக்கும். இதற்கு மெய்நிகர் நாணயம் (virtual currency) என்று பெயர்

ஷேர் மார்க்கெட் மாதிரி இல்லாமல், கிரிப்டோவில் முதலீடுசெய்யும் நடைமுறை எளிது. குறைந்தபட்சம் நூறு, இருநூறு ரூபாய்கூட முதலீடுசெய்யலாம். இது நாடு என்ற வரையறை கடந்து உலகம் முழுவதுற்கும் பொதுவானது என்று, கிரிப்டோ பயன்படுத்துவோர் சொல்கிறார்கள்.

கிரிப்டோ என்றால் என்ன?

கிரிப்டோ கரன்சியை 2009ஆம் ஆண்டு, சடோஷி நகமோடோ என்ற புனைப்பெயரைக் கொண்டவர்தான் உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது.
என்னது நம்பப்படுகிறதா... என்கிறீர்களா?

ஆம்.. இந்த கிரிப்டோவை யார் உருவாக்கினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை. ஆனால் இந்த கிரிப்டோ உலகம் முழுதும் பரவியிருக்கிறது.

இந்தியாவில் இரண்டு கோடிப் பேர்வரை கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. இதில் 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

கிரிப்டோவில் எல்லாமே, ‘ சொல்லப்டுகிறது, நம்பப்படுகிறது, கூறப்படுகிறது’தான்.
இதைத்தான் ஆபத்து என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

கிரிப்டோ கரன்சி
‘ரூபாய், டாலர், யூரோ போன்று கிரிப்டோ கரன்சியை எந்த மத்திய வங்கியும் கிரிப்டோவை வெளியிடுவது கிடையாது. இது மூடுமந்திரமாக உள்ளது’ என்கிறார்கள் பொருளாதர நிபுணர்கள். 

நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லீஸ் சொல்வது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ”கிரிப்டோ கரன்சி குற்றச் செயல் புரிபவர்களுக்கு உதவியாக இருக்கிறது. ஹவாலா போன்ற குற்றங்கள் செய்வோர்களுக்குப் பயன்படுகிறது” என்றார்.

மேலும், “ஹவாலா போன்ற மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்காணித்துத் தடுத்தால் கிரிப்டோ மதிப்பு தானாக குறைந்துவிடும்” என்றும் கூறினார். இதை அவர் கூறியது, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம். ஆனால் நாளுக்கு நாள் கிரிப்டோ பரிவர்த்தனை அதிகரித்தேவருகிறது.

கிரிப்டோவைத் தடை செய்யும் ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதோடு ஒன்றிய அரசின் குழப்படியான நிலைப்பாடு குறித்தும் விமர்சித்தது.

இந்நிலையில் ஒன்றிய அரசு, 2021 நவம்பர் மாதம் ‘கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரப்பூர்வமான டிஜிட்டல் நாணயம் ஒழுங்குமுறை மசோதா 2021’ என்ற மசோதாவை முன்வைத்தது.

 "இந்தியாவில் உள்ள எல்லா தனியார் கிரிப்டோ கரன்சி நடவடிக்கைகளையும் தடைசெய்வது; பதிலாக ரிசர்வ் வங்கி மூலமாக அதிகாரபூர்வமான டிஜிட்டல் நாணயம் ஒன்றை உருவாக்குவது’ என்பது அந்த மசோதவின் சாராம்சம்.
நிர்மலா சீதாராமன்
இதெல்லாம் ஒருபுறம் இருக்கக, 2022 பிப்ரவரி 1ஆம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கையில், கிரிப்டோ குறித்த இரு விஷயங்களைக் குறிப்பிட்டார். 

“கிரிப்டோ பரிவர்த்தனை மூலமாகப் பெறப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்” என்றார். அதோடு, “(கிரிப்டோவுக்கு பதிலாக) ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் ரூபாய் ஒன்றை வெளியிடும்” என்றார்.

நாடாளுமன்ற மேலவையில், 2021 ஜூலை 27 ம் தேதி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் இது: “நாட்டில் உள்ள கிரிப்டோ பரிவர்த்தனை மையங்கள் குறித்த தகவலோ, எத்தனை பேர் இதில் முதலீடு செய்துள்ளார்கள் என்ற விவரமோ எங்களிடம் இல்லை!”

40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் புழங்குவதாகச் சொல்லப்படும் கிரிப்டோ கரன்சி குறித்த ஒன்றிய அரசின் குழப்பமான நிலைப்பாடுகள் அதிர்ச்சியையே  அளிக்கின்றன.


-------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?