உலகநாயகன்
பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப் 2 என இந்திய அளவில் தெலுங்கு, கன்னடப் படங்கள் கலக்குகின்றன.
அப்படியே தமிழுக்கு வந்தால் மகான், மாறன், வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் என தமிழக எல்லைக்குள்ளேயே தமிழ் படங்கள் தடுமாறுகின்றன.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் கீறி வைகுண்டம் போன கதையாக தமிழ் சினிமாவின் நிலை பரிதாபமாக உள்ளது.
அதற்காக மனம் தளர வேண்டியதில்லை. தமிழ்ப் படங்கள் ஒருகாலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.
ஷங்கரின் எந்திரன் (ரோபோ), 2.0 படங்கள் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் தான். அதற்கு முன்பு கமலின் இந்தியன் வசூல் சாதனை படைத்தது.
ஆனால், இந்தப் படங்களுக்கெல்லாம் முன்பு, 1989-ல் இதே ஏப்ரல் மாதத்தில் வெளியான கமல் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 100 நாள்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனைப் படைத்தது என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், உண்மை. அந்தப் படம் கமல் மூன்று வேடங்களில் நடித்த அபூர்வ சகோதரபுரியும்.
நேர்மையான போலீஸ் அதிகாரியை நான்கு கயவர்கள் கொன்று விடுகிறார்கள். கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவிக்கு விஷம் கொடுக்கிறார்கள். உயிர் பிழைக்கும் அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளை பிரசவிக்கிறாள். வில்லன்களின் சதியால் ஒரு குழந்தை (அப்பு) அவளிடமும், இன்னொரு குழந்தை (ராஜா) வேறொருவரிடமும் வளர்கிறது. அவளிடம் வளரும் குழந்தை விஷம் அருந்தியதால் வளர்ச்சி குன்றி குள்ளமாக இருக்கிறது. தனது தோற்றத்துக்கு யார் காரணம் என அறிந்து கொள்ளும் அப்பு அவர்களை பழிவாங்க, கொலைப்பழி ராஜா மீது விழுகிறது. இறுதியில், இரு சகோதரர்களும் இணைந்து தந்தையை கொன்றவர்களை பழி வாங்குகிறார்கள்.
அப்பாவை கொன்றவர்களை வழிவாங்கும் மகன்கள் என்ற சாதாரண பழிவாங்கும் கதைதான் அபூர்வ சகோதரர்கள். அதை குள்ள அப்பு கதாபாத்திரத்தை உருவாக்கி வரலாறாக்கினார் கமல். படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இந்தப் படத்தில் அப்பா கமல் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிரேம் நசீரை நடிக்க வைக்கத்தான் முதலில் முயற்சி செய்தனர். அவர் பிஸியாக இருந்ததால் கமலே அந்த வேடத்தை ஏற்று நடித்தார். அதேபோல், ஸ்ரீவித்யா வேடத்தில் நடிக்க முதலில் லட்சமியை அணுகினர். கமலுக்கு நான் அம்மாவாக நடித்தால், அவர் எனக்கு அப்பாவாக நடிப்பாரா என்று குதர்க்கமாகக் கேட்டு, லட்சுமி மறுக்க, ஸ்ரீவித்யாவை ஒப்பந்தம் செய்தனர். இன்று பார்க்கையில் இந்த இரு மாற்றங்களும் எத்தனை நல்ல மாற்றங்கள் என்பது புரியும்.
சென்னையில் தேவிபாரடைஸ் திரையரங்கில் 234 காட்சிகளும், அகஸ்தியாவில் 201 காட்சிகளும், அபிராமி, காசி திரையரங்குகளில் தலா 312 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, அபூர்வ சகோதரர்கள் புதிய சரித்திரம் படைத்தது.
திரையரங்கு உரிமையாளர்கள் அபூர்வ சகோதரர்களுக்கு தனித்தனியாக விளம்பரங்கள் அளித்தனர்.
பாண்டிச்சேரி பாலாஜி திரையரங்கில் அதுவரை வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து, அவற்றைப் போல் ஒரு மடங்கு அதிகம் வசூலித்ததாக அதன் உரிமையாளர் லக்கி ஆர்.பெருமாள் குறிப்பிட்டிருந்தார். நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் தொடர்ச்சியாக 201 காட்சிகளும், மொத்தமாக 253 காட்சிகளும் அரங்கு நிறைந்தன. அத்திரையரங்கை பொறுத்தவரை அது சாதனை.
கேரளாவில் பல திரையரங்குகளில் அபூர்வ சகோதரர்கள் 100 நாள்களை கடந்து ஓடியது. ஆந்திராவில் 150 நாள்கள் ஓடியது.
பெங்களூருவில் 3 திரையரங்குகளில் 3 காட்சிகளாக 100 நாள்களும், இரு திரையரங்குகளில் பகல் காட்சியாக 100 நாள்களும் ஓடின. பெங்களூரு பல்லவி திரையரங்கில் 3 காட்சிகளாக 150 நாள்கள் ஓடியபின், பகல் காட்சியாக 175 நாள்கள் ஓடி சாதனைப் படைத்தது.
அபூர்வ சகோதரர்கள் வெளியாகி ஒரு வருடம் கழிந்த பிறகு இந்தியில் அப்பு ராஜா என்ற பெயரில் வெளியாகி மும்பையில் 100 நாள்கள் ஓடியது.
அன்றைய தேதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் 100 நாள்கள் ஓடிய பம்பர்ஹிட் படமாக அபூர் சகோதரர்கள் இருந்தது.