திணிப்பு அறிவுப்பூர்வமானதல்ல
பேரறிஞர் அண்ணா அவர்கள் 1965 ஆம் ஆண்டு இந்தித் திணிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆற்றிய உரையில்,
“இந்தியாவின் ஒற்றுமைக்காகஇந்தியைப் புகுத்துகிறோம் என்று சொன்னால் அதை அறிவுப்பூர்வமானது என ஏற்றுக் கொள்ள முடியாது” என அன்றே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளங்களில் வலம் வரும் பேரறிஞர் அண்ணாஅவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
1935,36 ஆம் ஆண்டுகளிலே தமிழகத்திலே இந்தி மொழி கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டது. அப்போது ராஜா சர் அவர்கள் சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்கள்.நாங்கள் எல்லாம் அப்போது தமிழர் மன்றங்கள், தன்னார்வ மன்றங்கள், திராவிடர் கழகங்கள் என்ற பல்வேறு அமைப்புகளாலே நாங்கள் கிளர்ச்சி நடத்தி, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டும் என்று நாங்கள் ஏற்பாடுகளைச் செய்தோம்.
சென்னையில் ஒரே ஒரு தெருதான் நீண்ட நெடுஞ்சாலையாக இருப்பது, திருவொற்றியூர் கோடியிலே இருந்து சென்னையிலே உள்ள மத்திய மருத்துவமனை வரையில் ஒரு நீண்ட தெரு இருக்கின்றது. அந்தத் தெருவிலே முக்கால் பகுதிக்கு தம்முடைய தோளில் பெரியதோர் தமிழ்க் கொடியைத் தாங்கிக் கொண்டு ராஜா சர் அவர்கள் நடந்தே ஊர்வலத்தில் ‘இந்தி ஒழிக’, ‘தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டுக் கொண்டு வந்தார்கள். (பலத்த கை தட்டல்)
“முழக்கமிட்டுக் கொண்டு வந்தார்கள்’’ என்று நான் இறந்த காலத்திலேவைத்திருப்பதாலே, இப்போது வரமாட்டார்கள் என்று யாரும் கருதத் தேவையில்லை. அவர்களுக்கு எப்போதும் தொடர்ந்து மூன்று கருத்துக்கள் அவரிடத்திலே இருந்து வந்திருக்கின்றன.
ஒன்று தமிழ் மொழி இடத்தில் தளராத நம்பிக்கை.இரண்டாவது ஆங்கில மொழி இன்றியமையாதது என்ற ஒரு கருத்து, மூன்றாவது தமிழகத்தினுடைய பொருளாதார வளம் இந்தியப் பேரரசு விடத்திலே போராடி பெறப்பட வேண்டும் என்ற மூன்று கருத்துக்கள்.
இந்த மூன்று கருத்துக்களை அவர்கள் கிட்டத் தட்ட 30 ஆண்டுகளாக தமிழகத்திலே வலியுறுத்திக் கொண்டு வருகின்றார்கள். இதிலே ஒரு கருத்தைத்தான் நான் இப்போது எடுத்துச் சொல்கிறேன். மொழியைப் பற்றிய கருத்து. இப்போது ஆங்கிலமும் தமிழும் நம்மிடத்திலே இருக்கின்ற நேரத்தில் இந்தியை இணைப்பு மொழியாகக் கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.
பெரியவர்கள் சொல்லுவதாலே சொல்லுகிறார்கள் என்று மட்டும் சொல்லக் கூடாது,அறிவுறுத்துகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது உண்மையிலேயே அறிவின்பாற்பட்டதானால் ஏற்றுக் கொள்வதில் தமிழன் எப்போதும் தயக்கம் காட்டமாட்டான். ஏனென்றால் தமிழன் தான்சொன்னான், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று, ஆக எதுவாக இருந்தாலும் என்னுடைய நாடுதான். எல்லோருமே என்னுடைய உறவினர்கள் தான் என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எடுத்துச் சொன்னவன் தமிழ் மகன் ஒருவன் தான்.
ஆகையினால், அறிவு எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தமிழன் தயாராக இருக்கிறான்., ஆனால், இடம் உயர்ந்ததுஎன்பதாலே அது அறிவுடையது என்ற தத்துவத்தை தமிழன் ஒப்புக் கொள்ள மாட்டான். மாடியின் மேல் இருந்து கொண்டு உங்களுக்கு மலர்ச் செண்டுகள் வீசலாம், மாடி மேலே இருந்து கொண்டு அங்கே கூட்டிவிட்ட குப்பையையும் கொட்டலாம், மாடிமேல் இருந்து கொட்டப்படுவதாலேயே அது உயர்ந்த பொருளாக இருக்கும் என்று யாராவது சொல்வார்களேயானால் அது உண்மையிலேயே ஏற்புடையாகாது.
ஆகையினால் தரப்படுகின்ற பொருள் எப்படிப்பட்டது என்பதைத்தான் கவனிக்க வேண்டுமே தவிர அது எங்கிருந்து தரப்படுகிறது என்பது முக்கியமானதல்ல, அதனால் தான் நக்கீரன் சொன்னான், ‘நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே’ என்று சொன்னான். அதைவிட பெரியவர்களா இன்றைய தினம் நமக்கு பலனைச் சொல்லப் போகிறார்கள், மற்ற எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அனைவரும் இரண்டு கண் உடையவர்கள், சிலருக்கு அந்த இரண்டு கண் கூட சரியாக இருப்பதில்லை.
நன்றி : முரசொலி
--------------------------------------------------------------
அய்யா .இங்கிருந்த பாலத்தை
எவனோ ஆட்டயப் போட்டுட்டான்யா.!
வடிவேலு பட சிரிப்புக் காட்சியான கிணத்த காணோம் போல்
பீகாரில் பாலம் காணாமல் போன விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் ஆமியாவார் கிராமத்தில் 50 ஆண்டு பழமையான 60 அடி நீள இரும்பு பாலம் ஒன்று இருந்தது. சில நாட்களுக்கு முன்பு அந்த பாலத்தை சிலர் ஜே.சி.பி , கியாஸ் கட்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வெட்டி எடுத்து சென்று விட்டனர். திடீரென பாலம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அதிகாரிகள் என சொல்லி ஒரு கும்பல் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட நீர்பாசனத்துறை அதிகாரி அரவிந்தகுமார், துணை வட்ட அதிகாரி ராதேஷியாம்சிங் ஆகிய 2 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் அவர்களிடம் இருந்து ஜே.சி.பி எந்திரம், கார், கியாஸ் கட்டர்கள், திருட்டு போன இரும்பு தளவாடங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.