அவர்களுக்கே ஆபத்தானது! -
நாட்டின் உண்மையான பிரச்சினைகள் என்ன என்பதை அறியவிடாமல் திசை திருப்பும் காரியங்களை கனகச்சிதமாக பா.ஜ.க. பார்த்து வருகிறது. ‘ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரிகள் வாரிசு அரசியல்தான்' என்று பிரதமர் நரேந்திர மோடி புதிதாக, ஏதோ அரிய கண்டுபிடிப்பை நடத்தியதைப் போலப் பேசி இருக்கிறார்.
பா.ஜ.க. நிறுவியதன் 42ஆவது ஆண்டு விழா கடந்த வாரம் டெல்லியில் நடந்துள்ளது. அதில் பேசிய அவர், 2014 முதல் ஆளும்கட்சியாக அகில இந்திய அளவில் பா.ஜ.க இருப்பதால் அதனுடைய சாதனைகளைப் பற்றி பேசவில்லை. அதைத்தான் அவர் பேசி இருக்க வேண்டும்.
ஏழு ஆண்டுகளாக இந்த தேசத்துக்கும், மக்களுக்கும் எதைச் செய்தோம், இனி எதைச் செய்யப் போகிறோம் என்பது குறித்து அவர் பேசி இருந்தால் பாராட்டலாம். அப்படி எதுவும் இல்லாததால், ராகுல் காந்தியை மனதில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியல் குறித்து பேசி இருக்கிறார்.
வாரிசு அரசியல் கட்சிகள், குடும்ப ஆட்சியை நடத்துவதாகவும், இவர்களால் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து என்றும், பேசி இருக்கிறார்.
இத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. ‘வாரிசு அரசியலை பா.ஜ.க. மட்டுமே எதிர்க்கிறது. அதை தேர்தல் பிரச்சினையாகவும் பா.ஜ.க மாற்றி இருக்கிறது' என்று பேசி இருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.
அவருக்கு பா.ஜ.க.வை பற்றியே தெரியவில்லை போலும். பா.ஜ.க.வில் இருக்கும் வாரிசுகளைப் பற்றி பிரதமருக்குத் தெரியுமா?
அல்லது அவர்களை வாரிசுகளாக நினைக்க மாட்டாரா?
அப்படி வாரிசுகளாக பதவிகளில் இருப்பவர்களை நீக்கி விடுவாரா?
வேத்பிரகாஷ் கோயல், மத்திய அமைச்சராக இருந்தார். அவரது மனைவி சந்திரகாந்த் கோயல், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர்களது மகன்தான் இன்றைய ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் ஆவார்!
* தேபேந்திர பிரதான், முன்பு ஒன்றிய அமைச்சராக இருந்தார். இவரது மகன்தான் இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான்.
* முன்னாள் ஒன்றிய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதியத்ய சிந்தியா, இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.
* கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர்.பொம்மை அவர்களின் மகன்தான் இன்று கர்நாடக முதலமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை.
* இமாசலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர் பிரேம்குமார் துமால். இவரது மகனான அனுராக் தாகூர், இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.
* கைலாஷ் விஜய்வர்க்கியா என்பவர் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார். அவரது மகன்தான் இன்று மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆகாஷ் விஜய் வர்க்கியா.
* மத்தியபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வீரேந்திர சக்லேச்சாவின் மகன் ஓம் பிரகாஷ் சக்லேச்சா இன்று மத்திய பிரதேசத்தின் அமைச்சராக இருக்கிறார்.
* ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங், இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
* கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
* மேனகா காந்தி மகன் வருண் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
* முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிசிர் அதிகாரியின் மகன்தான் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.
* முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
* உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் மகன் ராஜ்வீர் சிங், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
* ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங், உ.பி. மாநில எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
* முன்னாள் ஒன்றிய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் ப்ரீத்தம் முண்டே, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
* முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.பி.தாகூரின் மகன் விவேக் தாகூர் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இதுதான் பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் ஆகும். இவர்களைத்தான் எதிர்க்கிறார்களா? அல்லது இவர்களை விட்டு விட்டு எதிர்க்கிறார்களா?
அரசியலில் பேச வேண்டியது எது? இன்றைய பிரச்சினை என்பது வாரிசு அரசியலா?
பொருளாதாரத்தை எத்தனையோ மடங்கு உயர்த்துவதாகச் சொன்னார்களே?
உயர்த்தினார்களா? வேளாண்மையை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு ஆக்குவோம் என்றார்களே? ஆக்கினார்களா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்களே? கொடுத்தார்களா?
கருப்புப் பணத்தை முழுமையாக மீட்டுக்கொண்டு வருவோம் என்றார்களே? மீட்டுக் கொண்டு வந்தார்களா?
கருப்புப் பணத்தை மீட்டு இந்தியர் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் பணம் கொடுப்போம் என்றார்களே? கொடுத்தார்களா?
பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல் விலை உயரவே உயராது என்றார்களே. அதுதான் இன்றைய நிலைமையா? பலவீனமான பிரதமர் இருப்பதால்தான் சீனா அத்துமீறுகிறது.
பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஆக்கிரமிப்பே இருக்காது என்றார்களே? சீனா இந்த ஏழு ஆண்டுகளில் அமைதியாகி விட்டதா?
மீனவர்கள் கடத்தப்படவோ, கைது செய்யப்படவோ மாட்டார்கள் என்றார்களே?
இப்படித்தான் இருந்ததா?
‘அரசியலமைப்புச் சட்டம் மட்டும்தான் எனக்கு வேதம்' என்றார்களே. அப்படித்தான் நடந்து கொள்கிறார்களா? இத்தகைய கேள்விகளை ஜனநாயக சக்திகள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பா.ஜ.க.வின் திசை திருப்பும் அரசியல் நடக்கிறது.
-------------------------------------------------------------------
அவர்களுக்கே ஆபத்தானது!
---------------------
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் இல்லை, பொருளாதாரம் எல்லாவிதத்திலும் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. வேலையில்லாதவர் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. இதுதான் பா.ஜ.க.வின் இந்தியாவாக இருக்கிறது.
அவர்கள் ஒரு விதமான ஒற்றைத் தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். அந்த ஒற்றைத் தன்மைக்கு எதிர்ப்பு என்பதும் அதிகமாக இருக்கிறது. மக்கள் பிரச்சினைகள் எதற்கும் விளக்கம் சொல்வதும் இல்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதும் இல்லை. கேள்விகள் கேட்டால் பதில் சொல்வதும் இல்லை. இதுதான் அவர்களது பாணியாக இருக்கிறது.
பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல; சில மாநிலங்களில் அவர்களது கூட்டணிக் கட்சிகளே நேரடியாகவும், மறைமுகமாகவும் இதனை எதிர்த்துப் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இத்தகைய மக்கள் விரோத - ஜனநாயக விரோத - நாட்டு விரோதத் தன்மைகளை எதையாவது சொல்லித் திசை திருப்புவது என்பது அவர்களது தந்திரம். மதவாதத்தைக் கிளப்புவார்கள். அல்லது இந்தி மொழியை ஆதரித்து குரல் கொடுப்பார்கள். எதிர்ப்புகள் அனைத்தையும் திசைதிருப்புவதற்கு அவர்கள் கையில் இருக்கும் ஆயுதம் என்பது அதுதான்.
“ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி இருப்பது என்பது இந்தியாவை - இந்தியின் இந்தியாவாக - இந்திக்காரர்களின் இந்தியாவாக மாற்றும் முயற்சியாகும். நாடாளுமன்ற அலுவல் குழுவின் 17 ஆவது கூட்டம் டெல்லியில் நடந்திருக் கிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.
“மத்திய அமைச்சரவையின் நிகழ்ச்சி நிரல்களில் 70 சதவிகிதம் இந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கியப் பகுதியாக இந்தியை அலுவல் மொழியாக மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இந்தியைக் கருதக்கூடாது. வெவ்வேறுமொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது பேசும் மொழி இந்தியாவின்மொழியாக இருக்கவேண்டும். உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு நெகிழ்வுத்தன்மையாக மாறாத வரையில் இந்தியைப் பரப்ப முடியாது” என்று அமைச்சர் அமித்ஷா சொல்லி இருக்கிறார்.
அதாவது ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்தியை உட்கார வைக்கப் போகிறார்கள். வர்களது உண்மையான விருப்பம் என்பதுஅப்படி இந்தி முழுமையாக உட்கார வைக்கப்பட்ட பிறகு இந்தியை அகற்றிவிட்டு,அங்கு சமஸ்கிருதத்தை உட்கார வைப்பதுதான்.
இதனை பா.ஜ.க.வின் மூதாதை அமைப்பான ஜனசங்கத்தின் தேர்தல் அறிக்கையானது 70 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது. ‘இந்தியை ஆட்சிமொழியாக ஆக்குவது என்பது தற்காலிக ஏற்பாடுதான். இந்தி முழுமையான ஆட்சி மொழியான பிறகு சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்” என்பது தங்களது இலட்சியமாக எப்போதோ சொல்லி விட்டார்கள். சமஸ்கிருத மயமாக்கல் என்பதன் முன்னோட்டம் தான் இந்திமயமாக்கல். ஆங்கிலத்தை அகற்றுவது தான் சிரமமானது. இந்தியின் இடத்தில் சமஸ்கிருதத்தை உட்கார வைப்பது என்பது எளிமையானது.
இந்தியையே முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலமாக, இந்தி பேசாதபெரும்பான்மையான மக்களை இந்தியாவின் இரண்டாம்தர மக்களாக மாற்றுவதும் - சமஸ்கிருதத்தை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்குவதன் மூலமாக, சமஸ் கிருதம் படிக்காதவர் நீங்கலாக அனைவரையும் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதும்தான் இதற்குப் பின்னால் இருக்கும் வஞ்சகம், தந்திரம்,வன்மம்.
இது ஏதோ நாடாளுமன்றத்தின் அலுவல் மொழிப் பிரச்சினை அல்ல. வெறுமனே கடிதம் எழுதும் பிரச்சினை அல்ல. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் பிரச்சினையும் அல்ல. மொழியைக்காக்கும் பிரச்சினை.
தமிழில் பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுதவேண்டும் என்பது தமிழ் நாட்டில் எழுந்த தனித்தமிழியக்கத்தின் குரலாகும். இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. மொழியைக் காப்பாற்றுவதற்கு நம்முடைய தமிழறிஞர்கள் எடுத்த
தனித்துவமான முயற்சி இது. ஆனால் இன்று அமித்ஷா சொல்கிறார்: ‘உள்ளூர் மொழிகளின் வார்த்தைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நெகிழ்வுத்தன்மையாக இந்தி மாற வேண்டும்' என்கிறார். உள்ளூர் மொழிகளை முழுமையாக உறிஞ்சி வாழ்ந்து கொள் என்று சொல்கிறார்.
‘மாநில மொழிகளுக்கு மாற்றாக நான் இந்தியைச் சொல்லவில்லை' என்கிறார் அமைச்சர் அமித்ஷா. மாநில மொழிகளுக்கு மாற்றாகத்தான் இந்தியை வளர்க்கிறார்கள். வெறுமனே கடிதம் எழுதுவதற்காக அல்ல.
புதிய கல்விக் கொள்கை என்பதும், ‘நீட்’ தேர்வு என்பதும், அனைத்துக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பதும் இந்தியை நுழைக்கும் தந்திரங்களே. மாநிலங்களில் நடக்கும் அனைத் துத் தேர்வுகளையும் ஒன்றாக மாற்றுவது என்பதே, நாளை இந்தியில்தான் தேர்வு என்பதை அறிவிப்பதற்காகத்தான்.
ஒன்றிய அரசின் அலுவலகங்கள் அனைத்தும் இந்தியில்தான் செயல்படும் என்று சொல்வதன் மூலமாக ‘இந்தி படித்தால்தான் ஒன்றிய அரசின் பணியிடங்களுக்குச் செல்ல முடியும்' என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கிறார்கள். இந்தி படிக்காதவர்களுக்கு இந்தியா இல்லை என்பதைப் போன்றதோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.
இதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தை உணரவில்லை. இந்தியை திணிப்பது என்பது இந்தி பேசாத மக்களை மனரீதியாக பாதிக்கும். காலம் காலமாக உருவாக்கி வைத்திருந்த ஒருமைப்பாட்டுச் சிந்தனையைபாதிக்கும்.
இதனைத்தான் மிகச்சுருக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். “ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சொல்வதுஇந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையை பழுதாக்கும் வேலையை பா.ஜ.க. தலைமை தொடர்ந்து செய்கிறது.இந்தி மாநிலங்கள் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அவர்நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது” என்று சொல்லி இருக்கிறார். இதுதான் அவர்களுக்கு விடுக்கப்பட்ட பகிரங்கமான எச்சரிக்கையாகும்.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்கள், “இந்தி நமது தேசிய மொழி அல்ல, இந்தியை தேசியமொழி ஆக்குவதற்கு நாங்கள் விடமாட்டோம். இந்தி பேசாத மாநிலங்கள் மீது பண்பாட்டு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட நினைக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் பல இடங்களில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை அங்கே பலரும் நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
பொதுவாக நாட்டுக்கு - மக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தான் நினைத்ததைச் செய்வதுதான் பா.ஜ.க.வின் பாணியாகும். அந்த பாணி இந்த நாட்டின் மக்களுக்கும், நாட்டுக்கும் ஆபத்தானது. இறுதியில் அவர்களுக்கே ஆபத்தானது!
--------------------------------------------------------------------------
பேரீச்சம்பழ விதை காபி
ஒரு புதிய விஷயம் அல்ல. இது பல ஆண்டுகளாக உள்ளது.
நீங்கள் காபிக்கு அதிக அடிமையாக இருந்தால், இனி காபியை விடுவது கடினம் என்று நினைத்தால், இந்தக் கட்டுரை உங்களுக்காக மட்டுமே.
சிறிய அளவு காஃபின் உடலுக்கு தீங்கு விளைவிக்காது, ஆனால் அதிகளவு உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும்.
காபி மட்டுமல்ல, தேநீர், குளிர்பானங்கள், சோடாக்கள் போன்ற பல பானங்களிலும் காஃபின் சேர்க்கப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலையில், பேரீச்சம்பழம் விதை காபி, உங்கள் வழக்கமான கப் காபிக்கு சரியான மாற்றாக இருக்கும்.
பேரீச்சம்பழ விதை காபி ஒரு புதிய விஷயம் அல்ல. இது பல ஆண்டுகளாக உள்ளது. இது தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது, பலர் இதை காஃபின் இல்லாத காபிகளுக்கு மாற்றாக பயன்படுத்துகின்றனர்.
பேரீச்சம்பழம் விதையிலிருந்து இந்த காபி தயாரிக்கப்படுகிறது. மிருதுவாகவும் சரியான நறுமணத்தைக் கொடுக்கவும், பேரீச்சம்பழ விதைகள் முதலில் நன்கு வறுக்கப்படுகின்றன.
இந்த வறுத்த பேரீச்சம்பழ விதைகள் பின்னர் ஒரு கரடுமுரடான தூளாக அரைக்கப்படுகின்றன. பேரீச்சம்பழ விதைத் தூள் காபியைப் போலவே தோற்றமும், சுவையும் கொண்டது, இதை காபி தயாரிக்க எளிதாகப் பயன்படுத்தலாம்.
பேரிச்சம்பழம் விதை காபி, சாப்பிடுவதற்கு முற்றிலும் பாதுகாப்பானது, அதே நேரத்தில் ஆரோக்கியமானது.
பேரீச்சம்பழ விதைகளில் பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கூட உள்ளது.
பேரீச்சம்பழ விதை காபி தூளில்’ 0% காஃபின் உள்ளது, இது காபி உட்கொள்ளலைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
இது அமிலமற்றது, பசையம் இல்லாதது, காஃபின் இல்லாதது மற்றும் காபியைப் போலவே உங்களுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது!
----------------------------------------------------------------------