இந்தியா மோடியால்

சுப்பிரமணியம் சுவாமி, தன்னை அறியாமல் சில நேரங்களில் சரியாகப் பேசிவிடுவார். அதிலும் குறிப்பாக பொருளாதாரம் தொடர்பான அவரது கருத்துக்கள் கவனிக்கத்தக்கதாக இருக்கும். பா.ஜ.க.வில் இருந்து கொண்டே பா.ஜ.க.வின் பொருளாதாரத்தை மிகச் சரியாக விமர்சிப்பதில் அவர் தயக்கம் காட்டுவது இல்லை.

 எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு எப்படி அவர்கள் பதில் சொல்ல மறப்பார்களோ, அதைப் போலவே சுவாமி கருத்துக்கும் பா.ஜ.க. அதிகாரப் பூர்வமாகப் பதில் சொல்வது இல்லை.

"பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் தோற்றுப்போய் விட்டார் மோடி. பொருளாதார வளர்ச்சியை மோடியால் ஏற்படுத்த முடியவில்லை!" என்று சுவாமி சொல்லி இருந்தார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட சுப்பிரமணிய சுவாமி, "கடந்த 8 ஆண்டுகளில் பிரதமராக, பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் நரேந்திர மோடி தோற்றுப் போய் விட்டார். மறு பக்கம் 2016-ஆம் ஆண்டிலிருந்தே வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது. 

தேசிய பாதுகாப்பு மிகப் பெரிய அளவில் பலவீனமடைந்துள்ளது. சீனா குறித்து மோடிக்கு எந்தத் தெளிவும் இல்லை. மீண்டு வர வழிகள் உள்ளன. ஆனால் மோடிக்கு அது தெரியுமா?"" என்று கேட்டு இருந்தார்.

அதற்கு ரிச்மேன் சுரேஷ் என்பவர் பதில் அளித்து இருந்தார். "உங்களது கூற்றிலிருந்து நான் மாறுபடுகிறேன். பிரதமர் பதவியில் மோடி அல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் இன்னும் நிலைமை மோசமாக போயிருக்கும். பாகிஸ்தானியர்கள் போலவோ அல்லது இலங்கைக்காரர்கள் போலவோ கத்திக் கொண்டிருந்திருப்போம். 

பிரதமர் மோடியின் முக்கியத்துவம், வேறு பிரதமர் யாரேனும் வந்தால்தான் தெரியும்" என்று கூறியிருந்தார். அதற்கும் சுப்பிரமணியசாமி பதிலடி கொடுத்து இருக்கிறார்.

"இப்படித்தான் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டுப் போகும் போதும், ‘இங்கிலாந்து வெளியேறிவிட்டால் இந்தியா வீழ்ச்சி அடைந்து விடும்’ எனச் சொன்னார்கள்.." என்று சுப்பிரமணிய சுவாமி பதில் அளித்தார்.

 இங்கிலாந்து வெளியேறிவிட்டால் இந்தியா வீழ்ச்சி அடைந்து விடும் என்பது எத்தகைய மாயையோ அத்தகைய மாயைதான் மோடி இல்லா விட்டால் இந்தியா வீழ்ச்சி அடைந்து விடும் என்று சொல்வதும் என்கிறார் சுவாமி.

பொருளாதாரத்தை கட்டமைப்பதை விட பா.ஜ.க. தனது தலைமையை கட்டமைப்பதைத்தான் மிக முக்கியமானதாகக் கருதுகிறது. இந்தியாவை பலப்படுத்துவதை விட, தனது கட்சியைப் பலப்படுத்துவதைத்தான் முக்கியமாகக் கருதுகிறது. 

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா எப்படிச் செழித்தது என்பதை விட, ‘மோடி இல்லாமல் போயிருந்தால் இந்தியா எவ்வளவு மோசமான பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தெரி யுமா?’ என்று செய்தியைப் பரப்புவதில்தான் பா.ஜ.க. ஊடகங்கள் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றன.

அதாவது நேரடியான பதில்களை விட, எதிர்மறைச் சிந்தனைகளில்தான் அவர்களும் அவர்களது கட்சியும், ஆட்சியும், கொள்கையும், கோட்பாடும் கட்டமைக்கப்பட் டுள்ளது. 

அதாவது தனது பலத்தை நம்பாமல், அடுத்தவர் பலவீனத்தைப் பேசுவதன் மூலமாக தங்கள் கட்சியை வளர்க்க நினைக்கிறார்கள். அதுதான் பிரச்சினையே!

அதனைத்தான் சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார். ‘நாங்கள் போய்விட்டால் இந்தியாவே இருக்காது’ என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். இந்தியாவுக்கு ஜனநாயகத் தேர்தல் முறை பொருந்தாது, பல்வேறு இன, மத, மொழிக் குழுக்களைக் கொண்ட ஒரு நாட்டை ஒரே கட்சியோ, ஒரே தலைவரோ ஆள முடியாது, 

ஜனநாயகத்தை பின்பற்றும் பக்குவம் அவர்களுக்கு இல்லை, தனித் தனியாகச் சிதறிவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். இரண்டு ஆண்டுகள் கூட இந்தியக் கட்டமைப்பு இருக்காது என்று பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் சில எழுதியது. ஆனால் எழுபது ஆண்டுகளைக் கடந்தும் ஜனநாயக அமைப்பைக் காப்பாற்றி வருகிறோம்.

எந்த வேற்றுமைகளை பலவீனமாக அவர்கள் நினைத்தார்களோ, அந்த வேற்றுமைகளில் ஒற்றுமையைக் கண்டோம். இந்த இடத்தில்தான் ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பு என்பது மகத்தானதாக அமைந் திருந்தது. 

ஜனநாயகம் - சோசலிசம் - கலப்புப் பொருளாதாரம்- மதச்சார் பின்மை - அணி சேராத் தன்மை ஆகிய ஐந்து கோட்பாடுகளின் மூலமாக நவீன இந்தியாவைக் கட்டமைத்தார் நேரு.

மொத்தமாக ‘சுரண்டப்பட்ட’ இந்தியாதான் நேருவின் கைகளில் தரப்பட்டது. இருக்கும் வளத்தை வைத்துக் கொண்டு ஒரு வளமான இந்தியாவை அவர் உருவாக்கினார். டெல்லியில் இருந்து ஆண்டாலும் கடைக்கோடி கன்னியாகுமரியின் குரலுக்கும் செவி சாய்த்தார்.

 இந்தி பேசும் தலைவர்கள் அவரைச் சுற்றி இருந்தாலும், ‘இந்தி பேசாத மாநில மக்களின் எண்ணத்துக்கு’ செவி மடுக்கக் கூடியவராக அவர் இருந்தார். அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் உறவாடினார். மக்களுக்குச் சேவையாற்றும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். 

தவறு செய்தவர்கள், தனக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுத்தார். ‘சோசலிசச் சிந்தனை’ கொண்ட திட்டங்களை வடிவமைத்தார்.

மதத்தை தான் மட்டுமல்ல, தனது அரசாங்கமும் விலகி இருக்கும் என்றார். எளிமையின் வடிவமாகக் காட்சி அளித்தார். அந்த எளிமையே கம்பீரமாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டது. இன்றைய நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. பா.ஜ.க.வினர் கம்பீரமாகக் காட்டுவது எல்லாம் காமெடியாகப் பார்க்கப்படுகிறது. 

எனவே அவர்கள் நடத்தி இருப்பது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, காட்சி மாற்றமும் சேர்ந்து நடந்துள்ளது. இத்தகைய சூழலில் பா.ஜ.க. கட்சிக்கும், ஆட்சிக்கும் இப்போதைய தேவை என்பது சுய விமர்சனம்தான்.

அடுத்தவர் மீதான விமர்சனத்தைத் தவிர்த்துவிட்டு, தங்களது கட்சியையும், ஆட்சியையும் பற்றிய சுயவிமர்சனத்தை அவர்கள் செய்து கொள்ள வேண்டும். (அப்படிச் செய்ய மாட்டார்கள்!) ஏனென்றால் நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தி அரசியல் செய்யாமல், மக்களின் உணர்ச்சிகளை மையப்படுத்தி அரசியல் செய்தால் என்ன ஆகும் என்பதைத்தான் இலங்கை எடுத்துக் காட்டிக் கொண்டு இருக்கிறது. 

மதவாதமும், இன வாதமும் வயிற்றுக்குச் சோறு போடுவதற்கு எதையும் தயாரித்துத் தரும் கருப்பொருளாக இருக்காது என்பதை இலங்கை இப்போதுதான் உணர்ந்துள்ளது. ஆனால் இது காலம் கடந்த ஞானோதயம் ஆகும்.

ஒற்றை மதம், ஒற்றை மொழி கொண்டதாக இந்தியாவை மாற்றுவதோடு - ஒரு சிலரிடம் மட்டுமே வர்த்தகம் என்பதையும் பா.ஜ.க. உருவாக்க நினைக்கிறது. இந்த வர்த்தகம் என்பது முழுக்க முழுக்க வட மாநிலச் சார்பாக இருக்கிறது. 

ஒற்றிக்கு கட்சி, ஒற்றைத் தலைமையாக அது ஜனநாயகத்தைச் சுருக்கப் பார்க்கிறது. மதம் - மொழி- வர்த்தகம் - கட்சி - தலைமை ஆகியவற்றில் உருவாக்கப்படும் ஒற்றைத் தன்மைதான் இந்தியாவுக்கு உலை வைக்கக் கூடியது. 

அந்த சிந்தனையில் இருந்து மாறாதது வரை இவர்கள் சொல்லும் பொருளாதார வளர்ச்சி - தற்சார்பு என்பது எல்லாம் வாணவேடிக்கைகள் மட்டும்தான். மறுநிமிடம் மறைந்து விடும் வெளிச்சங்கள். அந்த வெளிச்சங்கள் வழிகாட்டாது. மேலும் இருட்டாக்கவே செய்யும்!



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?