ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கொட்டு

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கிடப்பில் போட்ட ஆளுநர்

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

.
.
ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது?


அப்போது 'தன்னை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகும் கூட ஆளுநர் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.' என பேரறிவாளன் தரப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதிகள், 'விடுதலை தொடர்பாக குழப்பம் நீடித்து வருகின்றன். ஏன் பேரறிவாளவனை நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது. பேரறிவாளனை விடுவிப்பதுதான் ஒரே தீர்வு' என்று தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ஒவ்வொரு பரிந்துரையையும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவது ஏன் என கேள்வி எழுப்பியது. எல்லாவற்றையும் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்புவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான மோசமான முன்னுதாரணம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஆளுநரும் தமிழ்நாடு சட்டப்பேரவையும்

7 தமிழர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், இதனால் அவரை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியதுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும் புகாரளித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தகவல் வெளியானது.

தீர்மானங்களை கிடப்பில் போடும் ரவி

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால் மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதையும் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர் ரவி. இந்த நிலையில் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் 2 நாட்கள் முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

----------------------------------------------------------------------

கொடநாடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கடந்த ஏப்ரல் 21, 22ஆம் தேதிகளில், சென்னையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். 

கொடநாடு பங்களாவில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்கள், கட்சியினரிடம் எழுதி வாங்கிய கடித நகல்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில் பல முக்கிய தகவல்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல், பங்களாவில் பணியாற்றிய மேலாளர், சமையலர், காவலாளிகள், கார் டிரைவர்களை பணிக்கு பரிந்துரை செய்தவர்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர், கோவை, ஈரோடு, சேலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். முதற்கட்டமாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளை நடந்த நாளன்று, எஸ்டேட் பங்களாவில் பணியில் இருந்தவர்களின் மொபைல் போன் எண்களில் தொடர்புகொண்டு பேசியவர்களின் பட்டியல் போலிஸாருக்கு கிடைத்துள்ளது.

இந்த விவரங்களை கொண்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.கவினர் சிலரிடம் விசாரணை நடத்த, தனிப்படை போலிஸார் பட்டியலை தயாரித்துள்ளனர். அந்தப் பட்டியலில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.வி.ஐ.பி, ஒருவருடன் நெருக்கத்தில் இருந்து வந்த வி.ஐ.பி பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க. ஆட்சியின்போது அமைச்சர்கள், மாவட்ட செயலர்களுடன் நெருக்கமாக இருந்த போலிஸ் அதிகாரிகளுக்கு, இந்த வழக்கில் தொடர்புள்ளதா என விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களது பட்டியலையும் தனிப்படை போலிஸார் தயாரித்துள்ளனர்.

தனிப்படையினர் பட்டியல் தயாரிப்பால், கொங்கு மண்டல அ.தி.மு.கவினர் மட்டுமின்றி, கொங்கு மண்டலத்தில் பணியாற்றிய முன்னாள் போலிஸ் அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர்.

இதனிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க மாநில வர்த்தக அணியின் சஜீவனிடம் கோவையில் பி.ஆர்.எஸ் வளாகத்தில் விசாரணை நடைபெற்றது.

--------------------------------------------------------------------------

நாராயண குருவும் சங்கராச்சாரியும்

வ்வொரு குடியரசு நாளிலும் ஒன்றிய அரசு அலங்கார, ஆடம்பர அணிவகுப்பினை நடத்தும். ஒருபுறம் இராணுவ அணுவகுப்பு, இராணுவ தளவாடங்களுடனும் மறுபுறம் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வண்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் அணிவகுப்பில் பங்கேற்கும். 

ஒன்றிய அரசாங்கமே மாநிலங்களின் அலங்கார வண்டிகளைத் தெரிவு செய்யும். இந்த 2022-ம் ஆண்டு மேற்குவங்கம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் அலங்கார வண்டிகளை புறக்கணித்து விட்டது.

12 அலங்கார வண்டிகள் மட்டுமே இம்முறை அனுமதிக்கப்பட்டது. 
கேரள அலங்கார வண்டி வழக்கில், வேறு ஒரு அம்சமும் வெளிப்பட்டது. அலங்கார வண்டிகள் தேர்வுக்குப் பொறுப்பான ஜூரி (பாதுகாப்பு அமைச்சர்) கேரள அரசு நாராயண குரு பற்றிய அலங்கார வண்டிக்குப் பதில் அதே கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கரரைப் பற்றிய அலங்கார வண்டியை தயாரித்துக் கொண்டு வந்தால் அனுமதிக்கிறோம் என ஆலோசனையும் வழங்கினார். 
ஆதி சங்கரர் இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்பதால் அந்த அலங்கார வண்டியை அணிவகுப்பிற்குக் கொண்டு வாருங்கள் என்று கருத்தும் தெரிவித்தார். 2017லிலிருந்து கேரள அலங்கார வண்டிக்கான அனுமதி மறுப்பு இது மூன்றாவது முறையாகும்.
நாராயண குருவுக்கு பதில் ஆதி சங்கரரைப் பற்றிய அலங்கார வண்டி என்று பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ஆலோசனையின் பின்புலத்தில் மோடி அரசாங்கத்தின் ஆழ்ந்த திட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் குறிப்பாக இந்து ராஷ்ட்ரம் நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
கேரளாவைச் சேர்ந்த மிக உயர்வான இந்த இருவருமே நேரெதிரான, முரண்பட்ட சமூகக் கருத்துக்களைக் கொண்டவர்கள். நாராயண குரு ‘ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள்’ கொள்கைக்காக நின்றவர். சங்கராச்சாரியோ பிறப்பிலேயே ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட பார்ப்பனிய மேலாதிக்கக் கொள்கைகளைக் கொண்டவர்.
ஆதி சங்கரர் 8-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அக்கால கட்டத்தில் புத்த மதக் கொள்கைகள் சமூகத்தில் மேலோங்கியிருந்தன.
 சாதி சமத்துவக் கொள்கையையும், ‘இந்த உலகம் உண்மையானது’ எனவும் போதித்து, மக்களின் துயர் துடைக்கப் போராடியது. ஆதி சங்கரரோ இதற்கு நேரெதிராக ‘உலகே மாயம்’ எனவும் பிரம்மம் மட்டுமே உண்மை எனவும் வாதிட்டார்.
 புத்த மதக் கொள்கைகளை கடுமையாக மறுத்து சவால் விட்டதோடு, அதை இழிவு படுத்தினார். புத்த மதத்தை, புத்த தத்துவங்களை இந்தியாவிலிருந்தே துடைத்தழித்ததில் இவரது கருத்துக்களுக்கும், இதை ஆதரித்தவர்களுக்கும் முக்கிய பங்குண்டு.
இவர் துவாரகா, பத்ரிநாத், ஜகன்னாத பூரி மற்றும் சிரிங்கேரி என இந்தியாவின் நான்கு திசைகளிலும் திக்குக்கு ஒன்று என நான்கு மடங்களை நிறுவினார். (இதிலே காஞ்சி சங்கர மடம் இல்லையே என்பவர்களுக்கு! மற்ற நான்கு மடாதிபதிகளும் காஞ்சி மடத்தை சங்கரர் நிறுவவில்லை எனவும், அது திருட்டு மடம் எனவும் சொல்கிறார்கள்! 
சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த காஞ்சி மடத்துக்கு கும்பகோண மடம் எனத் திருநாமம்! இந்த மடங்கள் பற்றியே தனியே எழுத வேண்டும்!. புத்த மடாலயங்களைப் பின்பற்றி அதன் வடிவில் நிறுவப்பட்டவை. ஆனால் தத்துவ ரீதியாக நேரெதிரான கொள்கை கொண்டது.
 புத்த தத்துவம் பொருள் முதல்வாத அடிப்படையிலானது. ஆதி சங்கரரின் தத்துவமோ கருத்து முதல்வாத அடிப்படையிலானது. புத்த தத்துவம் சமத்துவத்திற்கானது. ஆதி சங்கரரின் தத்துவமோ பிறப்பிலேயே உயர்வு தாழ்வையும், சாதி அடுக்கையும் ஆணாதிக்கத்தையும் கொண்ட பார்ப்பன கொடுங்கோண்மையைக் கொண்டது.
நாராயண குரு ஆழ்ந்த மனிதாபிமானம் மிக்கவர். அவரது வளர்ச்சிப் போக்கில் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். யோகாவைக் கடைப்பிடித்தார்.
 1888-ல் தத்துவத்தைத் தேடிய பயணத்தில், அருவிப்புரம் வந்து, அங்கு தியானத்தில் ஆழ்ந்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில், ஆற்றிலிருந்து ஒரு பாறையை எடுத்து, அதை புனிதப்படுத்தி, அதை சிவனது சிலை என்றார். 
இந்த நடவடிக்கை பிற்பாடு அருவிப்புரம் பிரதிஷ்டை என அறியப்படுகிறது. அக்கால கட்டத்தில் இது மிகப்பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக ‘உயர்’ சாதி பார்ப்பனர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது.
பர்ப்பனர்கள் நாராயண குருவுக்கு சிலையை புனிதப்படுத்தும் தகுதியோ, உரிமையோ இல்லை எனக் கூறி ஏற்க மறுத்தனர். இதற்கு பதிலடியாக “இது பார்ப்பன சிவா இல்லை, ஈழவ சிவா” எனக் கூறினார் குரு. இந்த மேற்கோள் பிற்பாடு மிக பிரபலமானது. 
சாதியை எதிர்ப்பதற்குப் பயன்பட்டது. நாராயண குரு சாதிய அமைப்பை ஒழிக்க தனது வாழ்வை அர்ப்பணித்தார். இவரது நடவடிக்கைகள் ஆழப் பதிந்து போன சாதீய அமைப்பை ஒழிப்பதற்கான நடைமுறைக்கானதாகும்.
1904-ம் ஆண்டில் வர்காலா அருகில் உள்ள சிவகிரி என்ற இடத்திற்கு தனது இருப்பிடத்தை நாராயண குரு மாற்றிக் கொண்டார். 
இந்த இடத்தில் சமுதாயத்தில் ஆகக் கடைக்கோடி மட்டத்தில் வசிப்போரின் குழந்தைகள் இலவசமாகப் பயில பள்ளி ஒன்றை நிறுவினார். இது சாதிய ஒடுக்குமுறை நிலவும் பின்புலத்தில் ஒரு புரட்சிகர நடவடிக்கையாகும். மகாராட்டிரத்தில் தலித் குழந்தைகள் பயில பள்ளிகளைத் தொடங்கிய ஜோதிராவ் பூலேயின் நடவடிக்கைகளுக்கு இணையானது. 
சாதிய முறைக்கு எதிரான போராட்டத்தில் நவீன கல்வியானது மிகப்பெரும் விடுதலைக்கான சக்தியாகும். அன்றைக்கு ஆதிக்க சாதியினர் மட்டுமே கல்வி கற்கும் சிறப்புரிமை பெற்றிருந்த நிலைமையில், இதற்கு நேரெதிராக எல்லா சாதியினரும் இவரது பள்ளியில் படிக்க வரவேற்கப்பட்டனர். 7 ஆண்டுகள் கடந்து 1911-ல் நாராயண குரு அங்கு ஒரு கோயில் கட்டினார். பின் 1912-ல் மடம் ஒன்றை கட்டினார். 
இவை அனைத்து  சாதியினருக்கும் திறந்து விடப்பட்டது. பிறகு திரிச்சூர், கன்னூர், அன்சுதெங்கு, தலசேரி, கோழிக்கோடு மற்றும் மங்களூரு போன்ற இடங்களிலும் கோயில்கள் கட்டினார்.
இது அம்பேத்கார் பிந்தைய காலத்தில் முன்னெடுத்த கலாரம் கோயில் நுழைவுப் போராட்டத்தை நினைவு படுத்துகிறது. ஆதிக்க சாதியினர் இக்கோயில் நுழைவுப் போராட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
நாராயண குருவின் நடவடிக்கைகள் பார்ப்பனியக் கொடுங்கோண்மைக்கு சவாலாக இருந்தது. அவர் சாதியத் தடைகளை உடைத்தெறிய முயன்றார்.
 இவை நிலவும் சாதிய முறைகளுக்கு எதிரான முக்கிய இயக்கங்கள் ஆகும். தற்போது அதிகாரத்தில் உள்ள ஒன்றிய அரசாங்கமானது கடந்த காலத்தை, அப்போது நிலவிய சாதீய படிநிலையை, பார்ப்பனிய கொடுங்கோண்மையை புகழ்ந்து விதந்தோதுகிறது. 
பார்ப்பன மதத்தை இந்து மதம் என உயர்த்திப் பிடிக்கிறது. இதை வேத மதம் அல்லது சனாதன (எல்லா காலத்திற்குமானது, காலம் அறிய முடியாதது) தர்மம் எனப் புகழ்கிறது. ஆதி சங்கரர் இந்த உயர்ந்த ஆன்மீக பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற, மிகப் பெரும் ஆன்மீகப் பெரியவர் என புகழ்கிறது.
இந்திய வரலாறு என்பது புத்தர் முன்வைத்த சமத்துவத்துக்கும், வேத பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடித்த சாதீய அடுக்கு முறைக்கும் அல்லது அவர்கள் கூறும் சனாதன தர்மம் என்பதற்கும் இடையிலான இடைவிடாத பகைமையும் போராட்டமுமே என அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். 
தற்போது வலதுசாரிகள் ஆட்சியில் இருப்பதால் ஆதி சங்கரரை உயர்த்திப் பிடிப்பதும், அதே சமயம் பொருள்முதல்வாத பாரம்பரியத்தைக் கொண்ட புத்தா, சார்வாகா போன்றவர்களைப் புறக்கணிப்பதும் எனச் செய்கின்றனர். இதில் சுவாரசியமானது என்னவென்றால் அரசியல் தளத்தில் நாராயண குருவை பாஜக அங்கீகரிக்கிறது. 
ஆனால் இது முற்றிலும் ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டும்தான், ஒரு அடையாளத்துக்கு மட்டும்தான். ஆனால், உண்மையான அங்கீகாரம் என வரும்போது நாராயண குருவை முற்றாகப் புறக்கணிக்கின்றனர். 
தற்போதைய நாராயண குருவைக் கொண்ட கேரள அலங்கார வண்டியைப் புறக்கணித்தது, இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.


----------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?