ஓன்றிய அரசின் ஏமாற்று

 அல்லது

மோடி மஸ்தான் வேலை.

கடந்த புதன் கிழமை அன்று மோடியின் தலைமையில் ஒன்றிய அரசு முதலமைச்சர்களோடு ஒரு வீடியோ கான்பரன்ஸை நடத்தியது. அந்தக் கூட்டம் கோவிட் கூட்டம் பற்றி பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. 

ஆனால் அதில்  மோடி சம்பந்தமே இல்லாமல் பெட்ரோல், டீசல் விலைக்கான வரியை பாஜக ஆளும் மாநிலங்கள் குறைத்திருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குறைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். 

மேலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு எடுத்த சில முயற்சிகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறினார்.


தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், இது குறித்த வினாவை காங்கிரசுக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை எழுப்பினார். 
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் "இதனை ஒருவரியில் சொல்ல வேண்டுமெனில் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற கருத்தை பிரதமர் சொல்லியிருக்கிறார்" என்றார்.


இது போன்ற பல மாநில எதிர்க்கட்சி முதல்வர்களும் கடுமையாக கண்டனங்களை கூறியிருக்கின்றனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக ஒன்றிய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி தொடர்ச்சியான டிவிட்டுகளை டிவிட்டரில் வெளியிட்டார்.

அதில்,”இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களுக்கு பதிலாக எரிபொருளின் மீதான வரியை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் குறைத்தால் பெட்ரோல் மலிவாக இருக்கும்!
 மகாராஷ்டிரா அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ₹32.15 வரி விதிக்கிறது & காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் ₹29.10 ஆனால் பிஜேபி ஆளும் உத்தரகாண்டில் ₹14.51 மற்றும் உத்தரபிரதேசம் ₹16.50 மட்டுமே வரி விதிக்கிறது. போராட்டங்களால் உண்மைகளுக்கு சவால் விட முடியாது!”, என்றார்.

மோடியின் சார்பாக பேசிய ஒரே அமைச்சரான பூரி மேலும் கூறியதாவது: “விமான டிக்கெட் விலை ஏன் குறையவில்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? 
விமான எரிபொருள் விலை என்பது விமானச் செயல்பாடுகளின் செலவில் சுமார் 40% ஆகும். 
ஆனால் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகியவை விமான எரிபொருள் மீது 25% வரி விதிக்கின்றன. அதே நேரத்தில் பாஜக மாநிலங்களான 
உ.பி & நாகாலாந்து மற்றும் ஜம்மு காஷ்மீர் வெறும் 1% மட்டுமே வசூலிக்கின்றன.” என்றார்.

புதன்கிழமை மோடி நடத்திய கூட்டத்தில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்த வீடியோ கான்பரன்ஸ்க்குப் பிறகு, எரிபொருளின் மீதான வாட் வரியைக் குறைக்க பாஜக அல்லாத மாநிலங்களுக்கு மோடி அளித்த பரிந்துரையை பல எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

வங்காளத்தின் ரூ.97,000 கோடி நிலுவைத் தொகையில் பாதியையாவது மத்திய அரசு வழங்கினால், எரிபொருள் விலையில் கூடுதலாக ரூ.3,000 கோடி மானியம் வழங்குவதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார். 
எரிபொருள் வரியைப் பற்றி பேசுவதற்கு மோடி கோவிட் கூட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் விமரிசித்தார். 
மேலும் பாஜக ஆளும் மாநிலங்கள் எரிபொருள் வரியைக் குறைக்கலாம், ஏனெனில் மத்திய அரசு வேறு வழிகளில் அவர்களுக்கு இழப்பீடு வழங்கி வருகிறது என்றார்.

தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், தனது கட்சியான டிஆர்எஸ் துவங்கிய நாள் குறித்த நிகழ்ச்சியைக் காரணம் காட்டி வீடியோ கான்பரன்ஸை புறக்கணித்தார். மேலும் மோடியின் கூட்டத்தை "நாடக மாநாடு" என்று அழைத்தார்.

“மோடி வெட்கப்பட வேண்டும். மக்கள் மீது சுமையை ஏற்றாதீர்கள் என்று கூறுகிறார்.... மாநிலங்களைக் கேட்பதற்குப் பதிலாக மத்திய அரசால் ஏன் வரியைக் குறைக்க முடியாது? 
மத்திய அரசு வரிகளை உயர்த்தியது மட்டுமின்றி, செஸ் வரியையும் வசூலித்து வருகிறது.
 உங்களுக்கு தைரியம் இருந்தால் விளக்கவும்,” என்று ராவ் மேலும் கூறினார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அலுவலகம் புதன்கிழமை மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் எரிபொருள் விலை உயர்வுக்கு மாநில வரிகளே முக்கிய காரணம் என்ற கூற்றுக்கு சவால் விடும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி பாஜக-வை விமர்சனம் செய்து வெளியிட்டது.


தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசம் போது,” 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்த போதும் அதற்கேற்ற வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
 எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுவதையும் ஒன்றிய அரசு தனதாக்கிக் கொண்டது. 
பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படக் கூடிய மத்திய கலால் வரியானது, மாநில அரசுகளோடு பகிா்ந்து அளிக்கக் கூடியது என்ற காரணத்தால் அதனைக் குறைத்து மாநில அரசுகளுக்குப் பகிா்ந்து அளிக்கப்படும் வருவாயில் கைவைத்தது பாஜக அரசு.

பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படக் கூடிய மத்திய தலவரி மற்றும் தலமேல்வரியும், மாநில அரசுகளோடு பகிா்ந்து அளிக்கப்படத் தேவையில்லை என்பதால், இந்த வரிகளை மிகக் கடுமையாக உயா்த்தி மக்கள் மீது சுமையைத் திணித்து, அதனால் கிடைக்கும் லட்சக்கணக்கான கோடி வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டுள்ளது ஒன்றிய அரசு.

சில மாநிலங்களில் தோ்தலுக்கு முன்பாக இந்த வரிகளைக் குறைத்து ஒன்றிய அரசு வேஷம் போட்டது. 
தோ்தல் முடிந்த பிறகு விலையை முன்பு இருந்ததைவிட உயா்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது. பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே யாா் முனைப்பு காட்டுகிறாா்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். 
பெட்ரோல் விலையைக் குறைப்பது போன்று நடித்து பழியை மற்றவா்கள் மீது யாா் போடுகிறாா்கள் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.


பெட்ரோல், டீசல் விலை உயா்வு தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளுக்கு, தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை விளக்கமளித்து தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

அதில் “2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும் போது ஒரு லிட்டா் பெட்ரோலில் இருந்து கிடைக்கும் மொத்த வரி ரூ.9.40. அதில் பெரும்பாலானது மாநிலங்களுக்கு பகிா்ந்து கொடுக்கக் கூடிய கலால் வரியாக இருந்தது. 
இப்போது எட்டு ஆண்டுகள் ஆகி விட்டன. வரியை மூன்று மடங்குக்கு மேல் உயா்த்தி விட்டு, அதற்குப் பிறகு 5 சதவீதம் குறைத்திருக்கிறது மத்திய பாஜக ஆட்சி. மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை 200 சதவீதத்துக்கு மேல் வரி உயா்த்தப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வரும் போது டீசலுக்கான வரி ரூ.3.47 ஆக இருந்தது. இப்போது ஏழு மடங்கு உயா்த்தப்பட்டு ரூ.22 ஆக உள்ளது. மத்திய அரசின் மொத்த வருமானம் நேரடி வரி வருவாயில் இருந்து வராமல், மறைமுக வரி வகைகளில் இருந்து கிடைக்கிறது.

2011-ஆம் ஆண்டில் திமுக ஆட்சி நிறைவடையும் போது, பெட்ரோல் வரி ரூ.14.47. இப்போது பெட்ரோல் மூலமாக மாநிலத்தின் வருமானம் ரூ.22.54 ஆக உள்ளது. அப்படியெனில், கடந்த ஏழு ஆண்டுகளில் சுமாா் 50 சதவீதம்தான் நம்முடைய வரி அதிகரித்துள்ளது. 
மத்திய அரசு 300 சதவீதம் அதிகரித்துள்ளது. எது நியாயம்? 
இதேபோன்று, 2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்து விலகும் போது, டீசல் மூலமாக மாநில அரசுக்கான வரி வருவாய் ரூ.7.60 ஆக இருந்தது. இப்போது ரூ.18.45 ஆக உள்ளது. இரண்டு மடங்கு அளவு உயா்ந்துள்ளது. மத்திய அரசின் வருவாய் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

மத்திய அரசு விலையை அதிகரிக்கும் போது, நாம் அதிகரிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு விலையைக் குறைக்கும் போது, மாநில அரசுகள் குறைக்கவில்லை என்பதால், அவற்றை கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதி எனக் கூறுகிறாா்கள். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? 

மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பகிா்ந்து கொள்ளாமல் கூடுதல் வரிகளை விதித்து விட்டு, அவற்றை மாநிலத்துக்குக் கொடுக்காமல் இருப்பதுதான் கூட்டாட்சி தத்துவமா? 

நம்முடைய முழு நிதியை செலவு செய்து, மருத்துவக் கல்லூரிகளையோ, நம்முடைய கல்லூரிகளையோ நாம் நடத்தும் போது சோ்க்கையை மட்டும் மத்திய அரசின் தோ்வை வைத்து நடத்த வேண்டும் எனக் கூறுவது கூட்டாட்சி தத்துவமா?

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு ரூபாய் வரியாகச் சென்றால் 60 பைசா திரும்ப கிடைத்தது. அதன்பிறகு, 50, 40 பைசாக்களாகக் குறைந்து இப்போது 35 பைசாதான் வருகிறது. இதையும் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம் எனக் கூறாமல், நூறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதுதான் கூட்டாட்சி தத்துவமா? 

மக்களிடம் இருக்க வேண்டிய உண்மையான கேள்வி, யாா் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றுகிறாா்கள் என்பதுதான் என்றாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.

இப்படி எல்லா எதிர்க்கட்சி மாநில முதலவர்களும் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் கூறும் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். இவை அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் வைரலாகி வருகின்றன. 
தற்போது பாஜக அரசு இந்தப் பிரச்சினையை ஏன் எடுத்தோம் என்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறது.
------------------------------------------------------------------------------------
அரை நூற்றாண்டு கடந்த.

கலைஞர் சிலை.

திமுகவின் மறைந்த முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதியின் ஆளுயர வெண்கல சிலை சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
 இந்த அறிவிப்பு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால அதாவது ஒரு 47 ஆண்டு கால வரலாற்றை பின்னோக்கி பார்க்க வைக்கிறது.

இதே சென்னை அண்ணாசாலையில் 1984-ம் ஆண்டு வரை கலைஞர் கருணாநிதியின் ஆளுயர சிலை இருந்தது. கலைஞர் வாழ்நாளிலேயே அவருக்கு சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை ஒரு பதற்றமான துயரமான நாளில் இடிக்கப்பட்டது. 
அதற்கு பிறகு, கலைஞர் கருணாநிதி தனக்கு சிலை வைக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. சென்னையில் கலைஞர் கருணாநிதியின் முதல் சிலை வைக்கப்பட்டதும் அந்த சிலை இடிக்கப்பட்ட சூழல் குறித்து ஒரு பிளாஷ் பேக் பார்ப்போம்.
சென்னையில் இன்றைக்கு உள்ள தலைவர்களின் பெயரில் அமைந்த பல்வேறு சாலைகளில், தலைவர்களின் சிலைகளில் பாதிக்கும் மேல், கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் பெயர் வைக்கப்பட்ட சாலைகளாக இருக்கும். கலைஞர் கருணாநிதி திறந்து வைத்த சிலைகளாக இருக்கும். 
அவருக்கு சிலை வைப்பதற்கான பேச்சு எப்போது தொடங்கியது என்றால், அது அண்ணா காலத்திலேயே தொடங்கிவிட்டது என்கிறார்கள் திமுகவினர்.

கலைஞர் கருணாநிதி தனது பேச்சாற்றலாலும் தனது எழுத்தாற்றலாலும் தமிழகத்தில் தென்னகத்தின் முக்கிய அரசியல் தலைவராக பரிணாமம் அடைந்தவர். தனக்கென்று ஒரு தனி ஆதரவாளர்களை ஈர்த்தவர். 
அவர்கள் ரசிகர்கள் அல்ல. கலைஞரின் எழுத்தின் மீதும் அவருடைய பேச்சின் மீதும் எற்பட்ட ஈர்ப்பால் திரண்டவர்கள்.
திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா தலைமையில் பிரிந்து சென்ற பெரியாரின் தளபதிகள், அண்ணாவின் தம்பிகள் 1949 ஆண்டு திமுகவைத் தொடங்கினார்கள். 
திமுக தொடங்கப்பட்ட 18 ஆண்டுகளில் பேரறிஞர் அண்ணா தலைமையில் 1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்தது. 1968 இல் அண்ணா மறைவுக்கு பிறகு, கலைஞர் கருணாநிதி திமுகவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் முதலமைச்சரானார். கலைஞர் கருணாந்தி 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். தனது 94வது வயதில் காலமானார்.

தமிழகத்தை அரை நூற்றாண்டுக்கு மேலாக திமுகவும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவும்தான் ஆட்சி செய்து வருகிறது.
 இந்த இரு கட்சிகளைத் தாண்டி எந்த தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் பெரிய எழுச்சி அடைய முடியவில்லை. அந்த அளவுக்கு செல்வாக்குடன் இருந்து வருகின்றன

தற்போது கலைஞர் கருணாநிதியின் மகன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக முக்கால் நூற்றாண்டை நெறுங்குகிறது. 
இந்த சூழலில்தான் கலைஞர் சிலை இடிக்கப்பட்ட அதே சென்னையில் அவருக்கு சிலை வைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, கலைஞர் கருணாநிதிக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் 1971 ஆம் ஆண்டு விருப்பம் தெரிவித்தார். ஆனால், கலைஞர் கருணாநிதி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதற்கான பாராட்டு விழா சென்னை வேப்பேரியில் பெரியார் நடத்தினார். 
அந்த நிகழ்ச்சியில், கருணாநிதிக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் தனது விருப்பத்தை தெரிவித்தார். 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த குன்றக்குடி அடிகளார் இதைக் கேட்டு அப்போதே அதே மேடையிலேயே கருணாநிதி சிலை அமைக்க ரூ1,000 நன்கொடை கொடுத்தார் என்பதை இப்போது திராவிட இயக்கத்தினர் நினைவுகூர்கின்றனர்.
ஆனால், கலைஞர் கருணாநிதி தனக்கு சிலை அமைப்பதை விரும்பவில்லை. அனைவரும் வற்புறுத்தியபோது, கருணாநிதி , தந்தை பெரியாருக்கு சிலை வைத்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று கூறினார். 
அதன் அடிப்படையில், தற்போது சென்னையில் அண்ணா சாலையில், சிம்சனில் தந்தை பெரியாரின் கம்பீர சிலை அபோது நிறுவப்பட்டது.


பெரியார் சிலை வைக்கப்பட்ட பின்னர், 1975 ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் மணியம்மையார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. 
கலைஞர் கருணாநிதியின் சிலை பேரறிஞர் அண்ணாவைப் போல கையை உயர்த்தி பேசுவது போல அமைக்கப்பட்டது. இந்த சிலை 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி எம்.ஜி.ஆர். மறைந்த நாளில் அவரது ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் சிலையில் நெஞ்சுப் பகுதியில் ஒருவர் கடப்பாரை கொண்டு இடித்து சேதப்படுத்தும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அப்போது, நாளிதழ்களில் வெளியானது. 
இந்தப் படத்தை முரசொலியில் பிரசுரித்த கலைஞர் கருணாநிதி, உடன்பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை நெஞ்சிலேதான் குத்துகிறான்; அதனால் நிம்மதி எனக்கு! வாழ்க! வாழ்க!!” கவிதை எழுதினார்.

அதற்கு பிறகு, கலைஞர் கருணாநிதி தனது வாழ்நாளில், அவருக்கு சிலை அமைப்பதற்கு பலர் விருப்பம் தெரிவித்தாலும் அதை தவிர்த்தார்.
 அவருடைய மறைவுக்கு பிறகு, அவருடைய மகன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில், சென்னை அண்ணாசாலையில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு இடையே ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் கம்பீர சிலை மீண்டும் நிறுவப்பட உள்ளது. 
சென்னையில், கலைஞர் கருணாநிதியின் சிலை அமைப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு அரைநூற்றாண்டு வரலாறு கொண்டது என்றால் அது மிகையல்ல

----------------------------------------------------------------------------------இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு