வாதம் நல்லதல்ல.
மதவாதத்தையும் இனவாதத்தையும் தூக்கி வளர்த்த ராஜபக்ஷேக்களை தங்களது ஆபத் பாந்தவர்களாகவே அதே பவுத்த, சிங்களர்கள் நினைத்தார்கள். இதோ, இன்று அவர்களே, அவர்களை ஆட்சியை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள்.
மதவாதம், இனவாதத்தால் ஆட்சி நடத்துபவர்கள் அழியும் வரை, தாங்கள் செய்வது எல்லாம் தேசபக்தி என்று நம்ப வைப்பார்கள். இப்படித்தான் ஹிட்லர் நம்ப வைத்தார். இப்படித்தான் இலங்கையிலும் நம்ப வைத்தார்கள்.
இன்னும் சில நாடுகளிலும் நம்ப வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தேசபக்திக்குப் பின்னால் இருக்கும் வகுப்புவாதமும், தாராளமயமும், சர்வாதிகாரமும் இறுதி நேரத்தில் கை கொடுக்காது என்பதன் அடையாளம்தான் இன்றைய இலங்கை.மதவாதமும் - இனவாதமும் - தாராளமயமும் - சர்வாதிகாரமும் சேர்ந்து இலங்கையை இருள் சூழ வைத்துள்ளது. ‘கோத்தபய - வீட்டுக்குச் செல்' என்று இன்று பவுத்த சிங்கள மக்கள் முழங்குகிறார்கள்.
பதவி விலக மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார் அதிபர் கோத்தபய. “கோத்தபய பதவி விலக வேண்டும். பதவி விலகாவிட்டால் பதவி விலகும் வரை போராடுவோம்' என்று மக்களும், எதிர்க்கட்சிகளும் போராடுகின்றன. ராஜபக்ஷேவின் குடும்பத்தினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
கோத்தபய வீட்டுக்கு போ என்ற முழக்கம் நாட்டில் பலமடைந்துள்ளது என்றால் அதற்கு ராஜபக்ஷேவின் பலவீனமும், இந்த அரசாங்கத்தின் பலவீனமும், ஜனநாயகத்துக்கு எதிரான அடக்குமுறையும், நாட்டின் இன்றைய அராஜக நிலைமையுமே அதற்குக் காரணம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரா கூறியுள்ளார். கோத்தபய பதவி விலக வேண்டும், அதே நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, வெளியேற விடக்கூடாது என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான சுமந்திரனும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார். “நீங்கள் தான் இந்த நாட்டை வறுமை நிலைமைக்குத் தள்ளி இருக்கிறீர்கள்.
அதனால்தான் உங்களை வீட்டுக்குச் செல்லச் சொல்கிறார்கள் மக்கள். இது ஜனநாயக நாடாக இருந்தால் மக்கள் கருத்துக்கு செவி மடுக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
“இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வழங்கிய மக்களே இந்த அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்” என்று மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இலங்கையில் 69 லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தேர்வு ஆனவர் கோத்தபய ராஜபக்ஷே. இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளது.
இந்த அதிகாரத்தை வைத்து அரசியலமைப்பைத் திருத்தி - 20 ஆவது திருத்தத்தின் மூலமாக தனக்குத் தானே அதிகப்படியான அதிகாரங்களை அவர் கொடுத்துக் கொண்டார். அத்தகைய அதிகாரம் பொருந்தியவரைப் பார்த்து தான் ‘Go home gottha’ என மக்கள் முழங்குகிறார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியின் எம்.பி.யான அனுரகுமார திசநாயக, நாடாளுமன்றத்திலேயே ஜனாதிபதி எங்கே என்று கேட்டார். ‘ராணுவத்தின் பாதுகாப்பில் பதுங்குகுழியில் பதுங்கிக் கொண்டாரா?' என்று கேட்டார். “மக்களின் கோரிக்கைகளை சிறிதும் கருத்தில் கொள்ளாது ராஜாக்கள் போன்று வாழ்ந்ததன் விளைவே இவர்களை பதுங்கு குழியில் வாழ வைத்துள்ளது.
மக்களின் மன அழுத்தம் அவர்களின் வேதனையின் விளைவாக இன்று இவர்கள் வீட்டுக்கு போக வேண்டி உள்ளது. பாராளுமன்றத்தில் வெறுமனே 150 தலைகளும் இராணுவமும் உண்மையான பலம் அல்ல. மக்களின் ஆணையே பலம் என்பதை இப்போதாவது விளங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லி இருக்கிறார் அனுரகுமார திசநாயக.
சபைக்குள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சபைக்கு வெளியில் போராட்டம் நடக்கிறது. சில நாட்களுக்கு முன்னால் அமல்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்தை அவர்களே விலக்கிக் கொண்டு விட்டார்கள். அனைத்து அமைச்சர்களும் பதவி விலகிவிட்டார்கள்.
எல்லோரையும் சேர்த்துக் கொண்டு ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க நினைத்த தந்திரத்துக்குள் மற்ற கட்சிகள் வரவில்லை. ஒப்புக்கு நியமிக்கப்பட்ட அமைச்சரும் பதவி விலகினார். இப்போது இலங்கை நாடு, ‘ஜனாதிபதி கோத்தபய பதவி விலக வேண்டும்' என்ற மையப்புள்ளியில் வந்து நிற்கிறது. பதவி விலக மாட்டேன் என்கிறார் அவர்.
40க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசுக்கு தந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார்கள். ஆனாலும் தங்களுக்கு ஆதரவு இருப்பதாக ஆட்சியாளர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். ‘உங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்பது மே மாதத்தில் இன்னும் அதிகம் ஆகலாம்' என ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை செய்தலால்.
ஒரு சில நாடுகளில் இலங்கை தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசியப் பொருட்களுக்காக நாட்கள் முழுக்க காத்திருக்கிறார்கள்.
பெட்ரோல் இல்லை. மின்சாரம் இல்லை. இருள் சூழ்ந்த இலங்கையாக மாறியுள்ளது.
பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போலீஸ் எஸ்ஐ மற்றும் தனிப்பிரிவு காவலர் .
மாவட்ட எஸ்பி நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்தவர் வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது பிறந்தநாள் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அவரது நண்பர்கள் மற்றும் சகாக்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாளை கொண்டாடிய தினத்தன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் மாவட்ட எஸ்பியின் நேரடி கண்காணிப்பில் உள்ள தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணி ஆகியோர் பல்வேறு குற்ற பின்னணி உள்ள வைகுண்ட பாண்டியனின் (எ) வைகுண்டம் பிறந்த நாள் அன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்றுள்ளனர்.
அப்போது உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணி ஆகியோரை வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம் சால்வை அணிவித்து கேக் ஊட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 26.03.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வைத்து ஒருவரை அரிவாள் பிடியால் தாக்கியதாக கூறி ஸ்ரீவைகுண்டம் போலீசார் வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டத்தை கைது செய்தனர்.
இவர் மீது பல்வேறு குற்றங்கள் நிலுவையில் உள்ள காரணத்தினால் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவுப்படி இவரை நேற்றைய தினம் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு குற்றப்பின்னணி உடைய பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் காவல்துறை அதிகாரி மற்றும் தனிப்பிரிவு காவலர் கலந்து கொண்டது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.இந்த நிலையில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் இன்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
-----------------------------------------------------------