இலங்கை எரிகிறது.

இலங்கையில் ஆளும் கட்சி எம்.பி.க்கள், அரசு ஆதரவாளர்கள் வீடுகளுக்கு நேற்று போராட்டக்காரர்கள் தீவைத்ததால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதில், கோட்டாபய ராஜபக்ஷவின் பூர்வீக இல்லத்திற்கும் தீ வைக்கப்பட்டது.

முன்னதாக, நேற்று நண்பகலில் கொழும்பு காலி முகத்திடலில் ஆளும் அரசுக்கு எதிரான போராட்டக்குழுவினருக்கு போட்டியாக மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டதால் அங்கு வன்முறை சூழல் நிலவியது. 

இதைத்தொடர்ந்து, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பினார்.

காலிமுகத்திடலில் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என அறியப்படுபவர்கள் உருட்டுக்கட்டைகளுடன் போராட்டக்காரர்களை தாக்கியதாலும், போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரமும் தீக்கிரையானது.

இதையடுத்து, நேற்று மாலை முதல் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகளை போராட்டக்காரர்கள் தாக்கியதாக தகவல் வெளியானது. 

இதில் இலங்கையின் தென் மாகாணமான அம்பாந்தோட்டையில் உள்ள கிராமத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷக்களின் பூர்வீக வீட்டுக்கும் (தற்போது அருங்காட்சியகமாக உள்ளது) தீ வைக்கப்பட்டது.

மேலும், அலரி மாளிகைக்கு அருகிலுள்ள நுழைவாயிலுக்கும் தீவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருந்த அலரிமாளிகை இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கும் தீ வைக்கப்பட்டது. அப்போது கண்ணீர் புகைக்குண்டுகளை உபயோகித்து அவர்களை அங்கிருந்து போலீசார் கலைத்தனர்.

இதனிடையே, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு முழுமையாக தீக்கிரையாகியது.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, தீக்கிரையாகியது.

இதேவேளை, மொறட்டுவை நகர சபை தவிசாளர் சமல்லால் பெர்ணான்டோவின் வீட்டுக்கு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, பின்னர் தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புப் பிரிவினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அலரிமாளிகை இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைப்பு

இதேவேளை, அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் வீட்டின் மீதும் மக்கள் தீ வைத்தனர். அத்துடன், குருநாகல் நகர சபை தவிசாளர் துஷார சஞ்ஜீவவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அரசு ஆதரவாளர்கள், ஆளும்கட்சி எம்.பிக்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நிகழ்த்தினர்.

திங்கள்கிழமை ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 190-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, இலங்கை முழுவதும் புதன்கிழமை காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்..

------------------------------------------------------------------------

தேச துரோக வழக்கு: 124ஏ பிரிவை நீக்க முடிவு.

உச்ச நீதிமன்றம் தேச துரோக வழக்கு

பட மூலாதாரம்

நாட்டில் உள்ள தேச துரோக சட்டங்களின் விதிகளை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரத்தை அரசு பரிசீலிக்கும் நடைமுறைகள் முடிவடையும் வரை தேச துரோக சட்டப்பிரிவுகள் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேச துரோக சட்டத்த்தின் 124ஏ பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் 2021ஆம் ஆண்டை ஜூலை மாதம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது 

அதில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த தேச துரோக சட்டம் அவசியம்தானா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் உதவிடும்படியும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இத்தகைய சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், "பல்வேறு காலனித்துவ சட்டங்களை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

தேச துரோகத்தை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A பிரிவு தொடர்பாக நாட்டில் உள்ள சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் குடிமக்கள் ஆகியோரின் பொது தளத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' 
என முழங்கி 
ஓராண்டு நிறைவு
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்ற வார்த்தை முழங்கி இன்றோடு ஒருவருடம் ஆகிவிட்டது. பதவி ஏற்பு முதல் அனைத்திலும் அதிரடி காட்டினார் ஸ்டாலின். First Impression is the best Impression எனும் கூற்று போல் , கொரோனா எனும் பேரரக்கனை திறம்பட கையாண்டு, நோய் பரவலை குறைத்ததே திமுகவின் ஆட்சிக்கு முழுமுதற் சாட்சியாய் அமைந்தது.

அன்று தொடங்கி இன்று வரை, திமுக அரசு அதிரடியாக கையில் எடுத்த முடிவுகள் குறித்து பார்க்கலாம்.

பெண்களுக்குப் இலவச பேருந்து, ஆவின் பால் விலை குறைப்பு, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் திட்டம், 'இன்னுயிர் காப்போம்' மருத்துவ திட்டம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, நீட் தீர்மானம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம், சமூக நீதி நாள் அறிவிப்பு, சமத்துவ நாள் அறிவிப்பு, நான் முதல்வன் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என இன்னும் பல திட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
முதல் இன்னிங்ஸில் சமூக நீதி, சமத்துவம் என சிக்ஸர்களாலும், பவுண்டரிகளாலும் அடித்து ஆடிய திமுக,
எதிர் வரும் ஆண்டுகளில் என்ன என்ன திட்டங்களை செயல்படுத்த போகிறது, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?