டான்ஜெட்கோ ஊழல்
டான்ஜெட்கோ நிறுவனம் 2017 முதல் 2020 வரையிலான 3 ஆண்டுகளில் மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை அலுவலகம் விமர்சித்துள்ளது.
டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதி செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தயாரித்த இந்த அறிக்கையில் டான்ஜெட்கோ கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஒரு யூனிட் மின்சாரத்தை டான்ஜெட்கோவுக்கு 4 ரூபாய் 99 காசுகள் என்ற விலையில் அதானி நிறுவனம் விற்றதாக சிஏஜி கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து மேலும் 2 ஆண்டுகளுக்கு 3 ரூபாய் 50 காசுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை விற்க அதானி நிறுவனம் முன்வந்த நிலையில் டான்ஜெட்கோ அதை மறுத்துவிட்டதாகவும் சிஏஜி அறிக்கை கூறுகிறது.
மூன்றரை ரூபாய்க்கு கிடைத்த மின்சாரத்தை புறக்கணித்துவிட்டு 4 ரூபாய் 10 காசுகள் முதல் 5 ரூபாய் 48 காசுகள் வரை வேறு இடத்தில் அதிக விலை கொடுத்து டான்ஜெட்கோ வாங்கியதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியதால் டான்ஜெட்கோவுக்கு 149 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.
மின்சாரத்தை வாங்க டான்ஜெட்கோ சில நிறுவனங்களுடன் ஏற்கனவே நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த நிலையில், அதை கைவிட்டுவிட்டு வேறு
நிறுவனங்களுடன் குறுகிய கால ஒப்பந்தம் செய்து கொண்டு அதிக தொகைக்கு மின்சாரத்தை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் டான்ஜெட்கோவுக்கு 693 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிஏஜி தெரிவித்துள்ளது.
இந்த 693 கோடி யார்,யார் பைகளுக்கெல்லாம் சென்று மறைந்துள்ளது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------
புதிய தேர்தல் ஆணையர்
தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வருகிற மே 14 ஆம் தேதி நிறைவடைகிறது..
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த ராஜீவ் குமாரை தலைமை தேர்தல் ஆணையராக மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமனம் செய்து இருக்கிறது.
வருகிற மே 15 ஆம் தேதி இந்தியா ஜனநாயகத்தின் தலைமை பீடத்தை நிர்ணயிக்கும் அமைப்பான தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரியாக ராஜீவ் குமார் பதவியேற்க இருக்கிறார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டு உள்ள ராஜீவ் குமார் யார் எனப் பார்ப்போம்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் 1984 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் பிரிவில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை நிறைவு செய்தவர். உயிரியல் மற்றும் சட்டம் ஆகிய 2 இளங்கலை பட்டங்களை பெற்றுள்ளார். பொதுக் கொள்கை மற்றும் நிலையான தன்மை என்ற துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். சிக்கலான சூழல்களில் தீர்வுகளை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கக்கூடியவர் ராஜீவ் குமார் என அரசுத் துறையில் அவருக்கு நற்பெயர் உள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக திகழ்ந்த ராஜீவ் குமார், கடந்த 2019 ஆம் ஆண்டு 2 வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் மத்திய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான நிதித்துறை செயலாளரே மத்திய பட்ஜெட்டை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இரண்டரை ஆண்டுகள் நிதித்துறை செயலாளராக இருந்தபோதுதான் வங்கி ஊழியர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன.
குறிப்பாக பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கிகளின் இணைப்பில் ராஜீவ் குமாரின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல் நஷ்டத்தில் இயங்கிய ஐ.டி.பி.ஐ. வங்கியை விற்பனை செய்யும் திட்டத்தையும் அறிமுகம் செய்தவர் ராஜீவ் குமார்தான்.
குறிப்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதிலும் ராஜீவ் குமாருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு ராஜீவ் குமார் பதவிக் காலத்தின் இறுதியில் இருந்தபோதுதான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திய எல்.ஐ.சி.யை தனியார்மயமாக்கும் திட்டத்தை வடிவமைத்தவர் ராஜீவ் குமார்.
முன்னதாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றிய ராஜீவ் குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான சர்ச்சைக்குரிய 360 டிகிரி கோண ஊதிய உயர்வு திட்டத்தை கொண்டு வந்தவர்.
இந்த நிலையில் குஜராத் மாநில சட்டப்பேரவைத்தேர்தல் நெருங்கும் நிலையில், மோடியின் நம்பிக்கைக்குரிய தீவிர வலதுசாரி ஆதரவாளரும்,பா.ஜ.க வின் நம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதன் மூலம் குஜராத்தில் பா.ஜ.க.தடையின்றி வெற்றி பெறும் வாய்ப்பு உண்டாகும்.
---------------------------------------------------------------------