விலை குறைந்த மோ( ச) டி

 பண வீக்கத்தில் இருந்து மக்களை மீட்பதாக கூறி ஒன்றிய அரசு பெட்ரோல் கலால் வரியை குறைத்த கையோடு, பெட்ரோல் அடிப்படை விலையை உயர்த்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன. 

கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி தொடர்ந்து உயர்த்தப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். அத்தியாவசிய பொருட்கள் விலையும் கிடுகிடுவென அதிகரித்தது.

இந்நிலையில், பண வீக்கத்தில் இருந்து மக்களை மீட்பதாக கூறி, கலால் வரியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.8, டீசலுக்கு ரூ.6 என குறைக்கப்படுவதாக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

 மேலும், இந்த நடவடிக்கையால் டெல்லியில் பெட்ரோலுக்கு ரூ.9.50, டீசலுக்கு ரூ.7 குறையும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் நிரப்பச்சென்ற வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 அதாவது, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.9.50க்கு பதில் ரூ.8.69 மட்டுமே குறைந்திருந்தது. 

அதாவது, பெட்ரோல் விலை ரூ.95.91 என குறைவதற்கு பதிலாக, ரூ.96.72 என இருந்தது. அதாவது, நிர்மலா சீதாராமன் உறுதி அளித்த விலையை விட 81 காசு அதிகமாக இருந்தது.

அப்போதுதான், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மீதான அடிப்படை விலையை லிட்டருக்கு 58 காசு உயர்த்தியது தெரிய வந்தது. 

இதன்மூலம் பெட்ரோல் விலை குறைப்பில் ஏறக்குறைய ஒரு ரூபாய் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபமாக சென்று விட்டது.  இதுபோல் சென்னையில் பெட்ரோல் 110.85 ரூபாயில் இருந்து ரூ.8.22 மட்டுமே குறைந்து, 102.63க்கு விற்கப்பட்டது. 

ஆனால், அடிப்படை விலை உயர்த்தப்பட்டதற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் காரணம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விலை குறைப்பு பலனை கிடைக்கவிடாமல் உடனே தடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

* மக்களை குழப்ப இப்படி ஒரு திட்டமா?
பெட்ரோல், டீசல் வரியை குறைத்து ஒன்றிய அரசு அறிவித்த பிறகு, ஒரே இரவில் அடிப்படை விலையை எண்ணெய் நிறுவனங்கள் திடீரென மாற்றி அமைத்துள்ளன. 

விலை உயர்வு தெரியாத அளவுக்கு செயல்படுத்தவே இப்படி உயர்த்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதாவது, ஓரிரு நாட்கள் கழித்து உயர்த்தியிருந்தால், அடிப்படை விலை உயர்வு கண்கூடாக அனைவருக்கும் தெரிந்து விடும். 

எனவேதான் ஒரே இரவில் அடிப்படை விலை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த அடிப்படை விலை மாற்றத்தால், ஒன்றிய அரசு கூறியபடி ஏன் விலை குறையவில்லை என்ற குழப்பம் பலரிடையே நிலவியது. இதற்கான காரணம் தற்போதுதான் அம்பலம் ஆகியுள்ளது.


கடந்த 3 ஆண்டில் மட்டும் பெட்ரோல், டீசல் கலால் வரி வருவாய் (2018-19 முதல் 2020-21 வரை) ரூ.8,01,940 கோடி

கலால் வரியும், கச்சா எண்ணெய் விலையும்
மாற்றப்பட்ட தேதி    பெட்ரோல்    டீசல்    கச்சா எண்ணெய் பேரல் (டாலரில்)
மார்ச் 1, 2020    ரூ.19.98    ரூ.15.83    33.36
ஜூன், 16, 2020    ரூ.32.98    ரூ.31.83    40.63
நவ. 4, 2021    ரூ.27.90    ரூ.21.80    80.64
மே 22, 2022    ரூ.90.90    ரூ.15.80    107.36

* ஒன்றிய அரசுக்கு கிடைத்த வருவாய்
பெட்ரோலிய பொருட்கள் மூலம் கடந்த 2014-15 நிதியாண்டு முதல் ஒன்றிய அரசுக்கு கிடைத்த வருவாய் விவரம்:
2014-15    ரூ.1,72,065 கோடி
2015-16    ரூ.2,54,297 கோடி
2016-17    ரூ.3,35,175 கோடி
2017-18    ரூ.3,36,163 கோடி
2018-19    ரூ.3,48,041 கோடி
2019-20    ரூ.3,34,315 கோடி
2020-21    ரூ.4,55,069 கோடி
2021-22 (ஏப்.-டிச.)    ரூ.3,54,264 கோடி
மொத்தம்    ரூ.25,89,389 கோடி.

இவ்வளவு வருமானம் வரும்போது ஏன் மக்களைக் கொடுமைப்படுத்தும் விதமாக தினசரி பெட்ரோல் விலையை ஒன்றிய அரசுஉயர்த்துகிறது.

இதனால் அனைத்து நிலைகளும், போக்குவரத்துக் கட்டணங்களும் உயரும், உயர்கிறது என நிதியமைச்சர் நிர்மலாவுக்குத் தெரியாதா? 

இதனால்தான் பணவீக்க நிலையே வருகிறது எனப் புரியாதா??

விலையேற்றத்தால் இலங்கை எரிவதை உணரவில்லையா???

சில குஜராத்தி கள் உலகப் பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வருவதுதான் பா.ஜ.க.வின் பொருளாதாரக் கொள்கையா.

ஏழை நாடுகள் பட்டியலில் இந்தியா வேகமாக முன்னேறுவது தெரிந்தும் கண்மூடியிருப்பது ஏன்?


------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?