கச்சத் தீவும்
கச்சடைகளின் வாதமும்.
கச்சத்தீவும் கலைஞரும் என்ற தலைப்பில் முரசொலி நாளேட்டில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:-
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு முன்னால் ஒரு முக்கியமான கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வைத்தார்கள். "தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை பிரதமர் அவர்களுக்கு நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்" - என்று கூறினார் முதலமைச்சர் அவர்கள்
இந்தியாவின் தயவை இலங்கை அண்டியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இது சாத்தியமானது என்ற சரியான புரிதலோடு இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் அவர்கள் வைத்தார்கள். உண்மையில் பா.ஜ.க. தரப்பானது இதனை ஆதரித்திருக்க வேண்டும்.
'முதலமைச்சர் கோரிக்கையை நாங்களும் வலியுறுத்துகிறோம்' என்று சொல்லி இருக்க வேண்டும். அல்லது, 'எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்' என்றாவது சொல்லி இருக்க வேண்டும்.
மாறாக, கச்சத்தீவைப் பற்றி பேச தி.மு.க.வுக்கு உரிமை இல்லை, அவர்கள்தான் தாரைவார்த்தார்கள்; கருணாநிதிதான் இதற்குக் காரணம் என்று ஒரு சதவிகித உண்மை இல்லாத ஒரு பொய்யை விதைத்து வருகிறார்கள்.
முதலமைச்சர் கருணாநிதி, கச்சத் தீவை தாரைவார்க்கவில்லை.
ஏனென்றால் அவர் எந்தக் காலத்திலும் இந்திய நாட்டின் பிரதமராக இருந்தது இல்லை. பிரதமராக இருந்திருந்தால் மட்டும்தான் அதனைச் செய்திருக்க முடியும். இந்த அடிப்படை அறிவு கூட அவர்களுக்கு இல்லை.
இந்தியப் பிரதமராக இந்திரா காந்தியும்- இலங்கை பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் சேர்ந்து 1974 ஜூன் 26 ஆம் நாள் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது. பிரதமர் இந்திரா காந்தியை, தி.மு.க. ஆதரித்த காலமும் அல்ல அது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் தி.மு.க. ஆட்சிக் கலைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க!
இதனை மீறித்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. தெற்காசியாவில் தன்னை பலம் பொருந்திய நாடாக காட்டிக்கொள்ள அண்டை நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்திக் கொள்ள பிரதமர் இந்திரா அன்று நினைத்தார். (இலங்கை கேட்கும் போதெல்லாம் இன்று பிரதமர் மோடி கோடிக்கணக்கில் கடன் உதவி செய்வதைப் போல!)
இலங்கை சென்ற பிரதமர் இந்திரா, கச்சத்தீவை இலங்கைக்குத் தரப்போகிறோம், அது வெறும் பாறைதான் என்று சொன்னார். இந்தியா திரும்பிய பிரதமர் இந்திராவை, டெல்லிச் சென்று முதல்வர் கருணாநிதி சந்தித்தார்கள். 'கச்சத்தீவை வெறும் பாறை என்று நீங்கள் சொன்னது தமிழர்களின் மனதைப் புண்படுத்தக் கூடியது ஆகும்' என்று முதல்வர் கருணாநிதி சொன்னார்கள்.
'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று பிரதமர் விளக்கமளித்தார்.
கச்சத்தீவை இலங்கைக்குத் தரக் கூடாது என்று பிரதமர் இந்திராவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
அதற்கு பிரதமர் அனுப்பிய கடிதத்தில் (1973 அக்டோபர் 8), 'கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்ற ஆதாரங்கள் தேடப்பட்டு வருகின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங், இலங்கை போக இருக்கிறார். அப்போது உங்களையும் வந்து சந்திப்பார்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
கேவல் சிங், இங்கு வருவது வரை காத்திருக்காமல் முதலமைச்சர் கருணாநிதி டெல்லிக்குச் சென்றார். அவரே கேவல் சிங்கைச் சென்று சந்தித்தார். 'எக்காரணத்தைக் கொண்டும் கச்சத் தீவை இலங்கைக்குத் தரக் கூடாது' என்று வலியுறுத்தினார்.
அவருடன் சட்ட அமைச்சர் செ.மாதவனும் உடன் சென்றிருந்தார்.
பின்னர், பிரதமர் இந்திராவையும் முதலமைச்சர் கருணாநிதி சந்தித்தார். கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதற்கான அனைத்து ஆவணங்களையும் பிரதமரிடம் வழங்கினார். சென்னை திரும்பிய முதலமைச்சர் கருணாநிதி, இந்த ஆதாரங்களை அடுக்கி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். 'கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளியுறவுத் துறைச் செயலர் கேவல்சிங் என்னுடன் பேசினார். .கச்சத்தீவு பற்றிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் பல விஷயங்கள் நமக்குச் சாதகமாகவேஇருக்கின்றன.
கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்று தெரியவருகிறது. டச்சு, போர்த்து கீசிய மன்னர் காலத்து வரைபடங்கள் கூட அப்படித்தான் சொல்கின்றன.
1954-ல் இலங்கை என்று வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை. கச்சத்தீவுக்குச் செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குப் பகுதிக் கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.
அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்குக் கப்பம் கட்டியது கூட இல்லை. ஆக, கைவசம் இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். .
எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது, இந்த ஆதாரங்களை எடுத்துக் காட்டி, 'கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமல்ல' என்று நிரூபிக்க முடியும்.' என்று அதில் குறிப்பிட்டார் கருணாநிதி. பின்னர் இந்த கடிதத்தை அனுப்பிவிட்டு மீண்டும் டெல்லி சென்றார் கருணாநிதி.
_ மீதி நாளை.