அம்பானி அரசு.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உண்டு.
பங்கு மதிப்பை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுத்தால், அது தொடர்பான தகவல்களை (Price Sensitive Information) சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செபி (SEBI) எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு புதிய முதலீடு வரப்போகிறதெனில், எந்த நிறுவனம் முதலீடு செய்யப்போகிறது, எவ்வளவு முதலீடு, எந்த தேதியில் முதலீடு, முதலீட்டின் மற்ற விவரங்களை எவ்வளவு விரைவாக தெரிவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக செபிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.
இல்லையெனில், ஊடகங்களில் ஊகமாக பரவும் செய்திகள் பங்கு மதிப்பை பாதிக்கக்கூடும். உள்பேர வர்த்தகத்திற்கும் (Insider Trading) இது வழிவகுக்கலாம். ஊடகங்களில் ஊகமாக வரும் தகவல்கள் (Price Sensitive Information) பங்கு மதிப்பை கூட்டவோ, குறைக்கவோ உதவும். அன்றைய நாளின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை கூட இதுபோன்ற தகவல்கள் பாதிக்கும்.
அது பங்குச்சந்தையின் போக்கையே மாற்றும் திறன் பெற்றது.
முகேஷ் அம்பானி பங்குச் சந்தையை தன் போக்கிற்கு ஆட வைப்பதில் கில்லாடி. எவ்வளவுதான் மோசடிகள் செய்தாலும், ஹர்ஷத் மேத்தா போன்று, ஒருபோதும் அம்பானி சிக்கமாட்டார்.
அப்படியே சிக்கினாலும், செபி அம்பானியை சிறையில் தள்ளாது. மாறாக மாலை போட்டு வாழ்த்தி அனுப்பும். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.
வாட்சப் செயலி வழியாக சிறு தொழில்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் நோக்கத்தில் பேஸ்புக் நிறுவனம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்ய முனைகிறது. 2020-ம் ஆண்டில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு நிறுவனங்களும் ஈடுபடுபட்டன.
ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு, முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.43,574 கோடி (5.7 பில்லியன் டாலர்) முதலீடு செய்யப்போவதாக் பேஸ்புக் ஏப்ரல் மாதம் 22-ம் தேதி (புதன்கிழமை) அறிவித்தது. பேஸ்புக்கின் இந்த முதலீட்டால் கோடி ரூபாய் இலாபத்தில் திளைத்தார் அம்பானி
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்கு உலகிலேயே அதிக பயனாளர்கள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி செய்திப் பரிமாற்றச் செயலியான வாட்சப்புக்கு இந்தியாவில் சுமார் 30 கோடி பயனாளர்கள் உள்ளனர்.
“இந்தியா மீதான எங்களுக்குள்ள உறுதிபாட்டை இந்த முதலீடு காட்டுகிறது; மேலும் நாட்டில் ஜியோ ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய மாற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என ஃபேஸ்புக் (ஏப்ரல் 22 2020) அன்று அக மகிழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து 22-ம் தேதி மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் 10.20 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் ஆனது. அதுவல்ல விஷயம்.
ரிலையன்ஸும் பேஸ்புக்கும் அதற்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்து விட்டன. எனினும் முகேஷ் அம்பானி இது குறித்து செபியிடம் மூச்சு கூட விடவில்லை.
ஆனாலும் ஊடகங்களில் பேஸ்புக் – அம்பானி ஒப்பந்தம் குறித்த தகவல்கள் கசிந்தன; அதன் விளைவாக, மார்ச் மாதத்தில் மட்டும் 5 சதவிதத்திற்கும் அதிகமான ஏற்ற இறக்கங்களை 8 வர்த்தக நாட்களில் ரிலையன்ஸ் நிறுவனம் சந்தித்தது.
மார்ச் மாதத்தின் மொத்த வர்த்தக நாட்கள் 18. அதனைத் தொடர்ந்த ஏப்ரல் மாதத்திலும் ரிலையன்ஸ் பங்கு விலை 31 சதவிதம் அதிகரித்தது. இதுபோன்ற திடீர் ஏற்ற இறக்கங்கள் பங்குச்சந்தையை வெகுவாக பாதிக்கும் என்பதால் முன்கூட்டியே செபிக்கு ரிலையன்ஸ் தெரிவித்திருக்க வேண்டும்.
ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் டிஜிட்டல் யூனிட்டில் முதலீடு செய்த தகவல்கள் நாளேடுகள், இணையதளங்கள், சேனல்களில் செய்தியாக வெளியாகின.
ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் இதை அதிகாரபூர்வமாக செபி அமைப்பிடம் தெரிவிக்கவில்லை. ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் இடையே எந்தமாதிரியான நிதி ஒப்பந்தங்கள் நடந்துள்ளன; பங்கு கைமாற்றம், பங்குவிற்பனை ஆகியவை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
செபி திங்கள் (ஜுன் 20, 2022) இரவு வெளியிட்ட அறிவிப்பில், “ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை பங்குப் பரிமாற்றம், விலைநிலவரம் குறித்த எந்தத் தகவலையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அது குறித்து தெளிவுபடுத்தவும் இல்லை.
நாளேடுகள், உள்ளிட்ட பிற வாய்ப்புகள் மூலம் தகவல்கள் கிடைத்த பின்பும் கூட ரிலையன்ஸ் விளக்கமளிக்கவில்லை. இதன்மூலம் அந்த நிறுவனம் தனது பொறுப்பை துறந்தது தெரியவருகிறது.
ஆதலால், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இரு அதிகாரிகளுக்கும் சேர்த்து ரூ.30 இலட்சம் அபராதம் விதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
2020 நடந்த இந்த விதிமிறல் நிகழ்வை விசாரித்த செபி, தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம் விதித்திருக்கிறது. 17 இலட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம் இந்த 30 இலட்சம் அபராதத்தைக் கண்டு பயந்து நடுங்கும் என்பதால் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளது.
முறையாக தகவல்களை தெரிவிக்காமல் பல ஆயிரம் கோடிகளை ரிலையன்ஸ் சம்பாதித்திருக்கலாம்.
ஆனால், செய்த மோசடிக்கு பெற்ற அபராதமோ வெறும் 30 இலட்சம். ரிலையன்ஸ் ஏமாற்றுகிறது, மயிலிறகால் தடவிக் கொடுக்கிறது செபி.
இந்த மோசடியான பங்குச் சந்தைக்குள் முதலீடு செய்து பணக்காரர்களாக மாற நடுத்தர வர்க்க மக்களை தூண்டில்போட்டு இழுக்கின்றனர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளம்பரதார நடிகர்கள்.
செபியின் விதிமுறைகளை மீறீயதற்காக கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.14 கோடி அபராதமும், 2021 ஆண்டில் 25 கோடி அபராதமும் செபி முகேஷ் அம்பானிக்கு விதித்தது.
இத்தனை முறை தன் வயிற்றுப் பசிக்காக ஒருவர் திருடி இருந்தாலும், அவர் மீது குண்டர் சட்டமோ, தேசப் பாதுகாப்பு சட்டமோ பாய்ந்திருக்கும்.
ஆனால், இப்படி செபியையும் நாட்டு மக்களையும் ஏமாற்றுவது முகேஷ் அம்பானிக்கு புதிதல்ல. அதேபோல் ஒவ்வொரு முறையும் முகேஷ் அம்பானி முறைகேட்டில் ஈடுபடும்போதும், செபி மயிலிறகால் தடவிக் கொடுக்க தவறுவதில்லை.
எத்தனை முறை முகேஷ் அம்பானியும் அவருடைய ரிலையன்ஸ் நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டாலும், செபி கடுமையான தண்டணை அளிக்காது.
நீ திருடுவதுபோல் திருடு; நான் வலிக்காத மாதிரி அடிக்கிறேன் என இரு தரப்பும் சொல்லி வைத்து மக்களை ஏமாற்றுவார்கள். ஏனெனில், இது தான் தனியார்மயம்..
- வினவு.
-------------------------------------------------------------------------------------------
குழப்பக் குழு.
மாணவிகள் மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்..
இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் (scholarship for college students) வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், அரசு பள்ளியில் இருந்து கல்லுாரிகளுக்கு சென்று முதல், இரண்டு, மூன்றாவது ஆண்டு படிக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அந்தவகையில், 6 முதல் 12வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை 25.06.2022 முதல் 30.06.2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு புதிய இணைய முகவரியை தொடங்கியுள்ளது.
அதன்படி, பயன்பெறும் மாணவிகளின் விவரங்களை, penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆதார், வங்கி கணக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் நகலை வழங்கி மாணவர்கள் தங்களது கல்லூரிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணைய வசதி உள்ள மாணவிகள் தாங்களாகவே கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும், தங்களது விவரங்களை பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கும், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்