"விக்ரம்"
1986ல் வெளிவந்த 'விக்ரம்' படத்தையும், 2019ல் வெளிவந்த 'கைதி' படத்தையும் வைத்து, அந்த இரண்டு படங்களின் தொடர்ச்சியாக 2022ல் 'விக்ரம்' என்ற ஒரு படத்தை இயக்க முடியுமா என வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
தமிழ் சினிமாவில் இதுவரையிலும் கிளைமாக்சில் தான் ஹீரோவை அல்லது வில்லனை சாகடிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் படத்தின் நாயகன் கமல்ஹாசனை பட ஆரம்பத்திலேயே கொடூரமாகக் கொன்றுவிட்டு அதன் பிறகு படத்தை ஆரம்பிக்கிறார்கள்.
இந்த உண்மையான வித்தியாசத்தை கமல்ஹாசனால் மட்டுமே கொடுக்க முடியும்.
'மாநகரம், கைதி, மாஸ்டர்' என த்ரில்லர் கலந்த ஆக்ஷன் கதைகளைக் கொடுத்து தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ் இந்த 'விக்ரம்' படத்தில் தமிழ் சினிமாவில் தனது இடத்தை, தடத்தை மிக மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரிகளான ஹரிஷ் பெரடி, காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரையும், கமல்ஹாசனையும் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கொலை செய்கிறது. போலீஸ் அதிகாரிகள் கொலைகளைப் பற்றி விசாரிக்க அன்டர்கவர் வேலை செய்யும் பகத் பாசிலை அழைக்கிறார் போலீஸ் அதிகாரி செம்பன் வினோத் ஜோஸ்.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் இப்படி ஒரு திரைக்கதையைப் பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான். அதிலும் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என திறமையான மூன்று நடிகர்கள். மூவருக்கும் முக்கியத்துவம், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு என மூன்று மணி நேரம் ஓடுவதே தெரியவில்லை.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி. அந்தப் படத்தின் நடிப்புச் சாயல் சற்றே இந்தப் படத்தில் தெரிந்தாலும், பேச்சிலும், உடல் மொழியிலும் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.
படத்தின் முதல் பாதி வரை பகத் பாசில் தான் ஹீரோ. அவரை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.
மற்ற கதாபாத்திரங்களில் நரேனுக்கு மட்டுமே கொஞ்சம் அதிகமான காட்சிகள். போலீஸ் அதிகாரியாக செம்பன் வினோத் ஜோஸ், காவல் துறையில் ஒரு கருப்பு ஆடு கதாபாத்திரம்.
கிளைமாக்ஸ் சர்ப்ரைஸாக சூர்யா. கொஞ்சமே வந்தாலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தெறிக்க விடுகிறார். அவரது கதாபாத்திரத்துடன் 'கைதி 2' ஆக வருமா, 'விக்ரம் 3' ஆக வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
படத்தில் விஜய் சேதுபதிக்கு 3 மனைவியர்கள். ஒரு மனைவியான மகேஸ்வரி ஒரிரு வார்த்தை வசனமும், மற்றொரு மனைவியான மைனா நந்தினி இரண்டு, மூன்று வசனமும், இன்னொரு மனைவியான ஷிவானி நாராயணன் வசனமே பேசாமலும் வந்து போகிறார்கள். எதற்காக இப்படி ஒரு 3 மனைவி காமெடி எனத் தெரியவில்லை.
பின்னணி இசைக்காக அனிருத் நிறையவே உழைத்திருக்கிறார் போலிருக்கிறது. கமல்ஹாசன் அவரை விட்டிருக்க மாட்டார். என்னதான் அனிருத் பின்னணி இசையமைத்தாலும் இடைவேளையில் இளையராஜாவின் இசையில் 36 வருடங்களுக்கு முன்பு ஒலித்த 'விக்ரம்…விக்ரம்'...இசையைக் கேட்கும் போது புல்லரிக்கிறது.
போதைப் பொருள் பற்றிய மற்றுமொரு ஆக்ஷன் படம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டுப் போக முடியாதபடி மொத்த குழுவும் உழைத்திருக்கிறது. சமீபத்தில் 1000 கோடி வசூலித்த டப்பிங் படங்களைக் காட்டிலும் இந்தப் படம் எந்த விதத்திலும் குறைந்ததில்லை.
"விக்ரம் - வியக்குறோம்…"
அமர் கேரக்டரில், முதல் பாதி படத்தை தன்வசப்படுத்தியுள்ள பகத் பாசில் எங்களுக்கு எந்த சட்ட விதியும் இல்ல உங்களுக்கு சட்ட விதி எதாவது இருந்தா அது மீறப்படும் என பல காட்சிகளில் நடிப்பில் தனித்துவத்தை காட்டியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் வில்லனாக களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி சந்தானம் என்ற கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
மாஸ்டர் படத்தின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும், தனது வசன உச்சரிப்பின் மூலம் வித்தியாசத்தை காட்டியுள்ளார்.
ஒரு வித்தியாசமான திரைக்கதை 3 வித்தியசமான நடிகர்கள் 3 பேருக்கும் முக்கியத்துவம என நகரும் இந்த கதையில், கைதி படத்தில் வரும் காவல்துறை அதிகாரி நரேன் தனது வழக்கமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
கதையில் 3 பேருக்கும் முக்கியத்துவம் இருந்தாலும் மற்ற இருவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கமல்ஹாசன் நடிப்பு அசுரன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளர்.
படத்தில் வரும் காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி என 3 பேரும் கொடுத்த வேலையை செய்துள்ளனர். அதேபோல் இறுதிகட்டத்தில் வரும் நடிகர் சூர்யா தனது பங்கிற்கு தெறிக்கவிடும் நடிப்பை கொடுத்துள்ளார்.
பின்னணி இசையில் அனிருத்திடம்கமல்ஹாசன் நன்றாக வேலை வாங்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பத்தல பத்தல பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பின்னணி இசையில் அனிருத் தனது வேலையை செவ்வனே செய்துள்ளார்.
பகல் காட்சிகள் அதிகம் இல்லாத இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.
சண்டைப்பயிற்சியாளர் அன்பறிவ் படத்தொகுப்பு பிலேமின்ராஜ் ஆகியோர் படத்தின் நல்ல விமர்சனத்திற்கு துணை நின்றுள்ளனர்.
மொத்தத்தில் 4 வருடங்களுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம், படம் கைதி 2 என்று சொல்வதா விக்ரம் 2 என்று சொல்வதா என்று யோசிக்க வைத்தாலும் கமலின் கம்பேக் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது கோலிவுட்ட வட்டாரத்தையும் பிரம்மிக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
நன்றி:indian express
---------------------------------------++++---------------------------------