ஜக்கி (விதிமீறல்)தேவ்

 கோவையில் உள்ள கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சுற்றுசூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மோடி ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தொடர் சர்ச்சையில் ஈஷா யோகா மையம்

வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தின் மீது வன ஆக்ரமிப்பு தொடர்பாக, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது.

* யானையின் வழித்தடங்களை ஆக்ரமித்தது; அரசு நிலங்களை வளைத்தது; மலையில் இருந்து இறங்கி வரும் சிற்றோடையை ஆசிரமத்திற்குள் மடைமாற்றியது;

* இளம்பெண்களை சந்நியாசியாக மாற்றியது எனக் கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா பெயர் அவ்வப்போது சர்ச்சையில் அடிபட்டது உண்டு.

எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்ட சிவன் சிலை

இன்னொரு பக்கம் ஆண்டுதோறும் அங்கு கோலாகலமாக கொண்டாடப்படும் மகாசிவராத்திரி கொண்டாட்டம் குறித்தும் சர்ச்சைகள் எழுவது உண்டு. 

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்ட ஆதி யோகி சிவன் சிலையையே, கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார்.

* 'காட்டு வளங்களை அழிக்கும் ஈஷா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கக் கூடாது' என சூழல் ஆர்வலர்கள் அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடவும் செய்தனர். ஆனாலும், திட்டமிட்டபடி மோடி சிலையைத் திறந்து வைத்தார்.

ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகள்

இது குறித்து அப்போது முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், "

* விதிகளை மீறி 13 லட்சம் சதுர அடியை ஆக்கிரமித்து, ஈஷா யோகா மையம் கட்டடங்களை நிறுவியுள்ளது.

* நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, தொடர்ந்து அவர்கள் கட்டடங்களை எழுப்பி வருகின்றனர்" எனக் கூறியிருந்தார்.

அதேபோன்று சூழல் ஆர்வலர்கள்,

* " தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இக்கரை பொல்லுவ பட்டி எனும் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஈஷா அமைந்துள்ளது.

* 1994-ல் தொடங்கியபோது, 2913.34 சதுர அடி கட்டடங்களை மட்டுமே கட்டியிருந்தது. இப்போது 4 லட்சத்து 27 ஆயிரத்து 700 சதுர அடிக்கு கட்டடங்கள், பூங்காக்கள், விளையாட்டு இடங்கள், யோகா மண்டபங்கள், கார் நிறுத்தும் இடங்களை எழுப்பியுள்ளது.

* இவற்றிற்கு மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலையும் அவர்கள் பெறவில்லை. இந்தக் குழுவில் மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

* இவர்களின் அனுமதிக்கு விண்ணப்பிக்காமல், உள்ளூர் ஊராட்சியின் ஒப்புதலை மட்டும் பெற்றிருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஈஷா வந்த பிறகுதான், யானைகளின் வாழ்விடத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது" என்ற குற்றச்சாட்டுகளையும் அவர்கள் அப்போது முன்வைத்திருந்தனர்.

நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு

இந்த நிலையில்தான், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு, ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

மோடி அரசின் விளக்கமும் நீதிபதிகளின் கேள்வியும்

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,

"கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், 

சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என மோடி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கிலே கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியில் இருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக ஒன்றியஅரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவாக ஒன்றியஅரசின் விலக்கு அளிப்பது சரியா என்றும், ஈஷா அறக்கட்டளை எத்தகைய கல்வி நோக்கில் கட்டடங்களையும், மாணவர் விடுதிகளையும் கட்டி உள்ளது என்றும் விதிமீறல்கள் வெடித்துள்ளன.

------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?