70 ஆண்டுகள்

இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் கலைஞரின் வசனம்!

பராசக்தி!

தங்கை கல்யாணியின் திருமணத்துக்கு பர்மாவில் இருந்து அண்ணன் குணசேகரன் கப்பலில் கிளம்புகிறான். போரால் பயணம் தடைபடுகிறது. 

சில மாதங்களுக்கு பின் மீண்டும் பயணம் தொடங்கி, தமிழ்நாட்டுக்கு அண்ணன் வருதற்குள், கல்யாணிக்கு குழந்தை பிறந்துவிடுகிறது. 


கணவன் விபத்தில் மரிக்கிறான். அப்பாவும் இறக்கிறார். 

கல்யாணி நடுத்தெருவில் நிற்கிறாள். வந்த இடத்தில் அண்ணனின் பணமெல்லாம் திருடு போகிறது. தங்கையை தேடி அலைகிறான். வாழ்வாதாரத்துக்காக திருடுகிறான். கிறுக்கனாக நடிக்கிறான். 

தங்கையை கண்ட பிறகும் தான் தான் அண்ணன் என சொல்ல முடியாத சூழல். அவனிடம் ஈர்க்கப்படும் விமலா அவன் கதை விசாரிக்கிறாள். நடந்தவற்றை சொல்கிறான். 

அவள் காதலிக்க தொடங்குகையில், தங்கையை தேடிச் சென்றுவிடுகிறான். வாழ வழியின்றி கல்யாணி குழந்தையை கொன்று விடுகிறாள். போலீஸ் பிடிக்கிறது. குடும்பம் சேர்ந்ததா இல்லையா என்பது மிச்சக்கதை.

பராசக்தி’ படம் என்றதும் நமக்கு சிவாஜிதான் ஞாபகம் வருவார். நீதிமன்ற காட்சி ஞாபகம் வரும். சிவாஜி என்ற மகத்தான நடிகனை கண்டெடுத்தது ‘பராசக்தி’ படம்தான் என்றாலும், அதன் கதை சிவாஜியை பற்றியது அல்ல. ‘கல்யாணி’ என்ற பெண் கதாபாத்திரத்தை பற்றியது. 

ஆணாதிக்கமும் அதற்கு துணை போகும் புரோகிதமும் எப்படி கல்யாணி என்ற பெண்ணை துன்புறுத்தி விரட்டுகிறது என்பதுதான் கதை.

இந்தக் கதைக்குள் எங்கேனும் புரட்சி பேசிட முடியுமா? அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட குடும்பக்கதை! 

இன்றைய கதாசிரியர்களிடம் எல்லாம் சிக்கியிருந்தால், இந்த கதை என்னவாகி இருக்குமென யோசித்து பாருங்கள்.

கல்யாணி’ பாத்திரம் மட்டுமல்ல, இன்னொரு பெண் பாத்திரமும் படத்தில் உண்டு!

“இப்போதும் உன்னை குற்றம் சாட்டுகிறேன். நீ ஒரு சுயநலவாதி! உன் சொந்த தங்கைக்காக, அவள் சோக வாழ்வுக்காக சுருண்டு போனாயே தவிர, நாட்டிலே எத்தனை தங்கைகள் நலிந்து கிடக்கிறார்கள் என நினைத்தாவது பார்த்தாயா? அதற்காக உன் நாவு அசைந்தது உண்டா, உன் நெஞ்சு துடித்ததுண்டா?”

“எனக்கேன் துடிக்க வேண்டும்? இந்த கேடு கெட்ட சமுதாயத்துக்கு, நன்றி கெட்ட நாட்டுக்கு, ஏழைகளை மிதித்து வாழும் எத்தர்களுக்கு துடிக்க வேண்டும் நெஞ்சு, உயிர், உடல் எல்லாம்… எனக்கேன் துடிக்க வேண்டும்?”

“அந்த சமுதாயத்தில் நீயும் ஒரு அங்கம்!”

“ஆனால் நான் ஏழை…..”

“அப்படி ஆக்கப்பட்டாய்!”

இந்த உரையாடல் நடப்பது குணசேகரனுக்கும் அவன் காதலி விமலாவுக்கும். வாழ்க்கையையும் சமூகத்தையும் குறை கூறியே வாழ்ந்து வரும் குணசேகரனிடம் அவனது தவறை எடுத்து சொல்லி, சமூகத்துக்காக அவன் சிந்திக்க வேண்டும் என்ற அறிவை வழங்குவது படத்தில் ஒரு பெண்ணே.

இச்சமூகம் பேசும் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக வசனம் எழுதியவர் கலைஞர். 

அதனாலேயே அவர் காலத்துக்கும் நிற்கிறார். அவரது வசனங்கள் பார்ப்பனீயத்தின் ஆணி வேரை அசைத்து பார்ப்பவை. சுருங்கக்கூறின், இந்தியச் சமூக நீதிக்கான வசனத்தை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. 

ஆதிக்கத்துக்கு எதிரான இந்தியா அரசியலின் வசனமே கருணாநிதி!

’பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்?

 பஞ்சத்தின் குற்றமா? 

அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? 

கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? 

கடவுளின் குற்றமா? 

அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? 

இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்!

ஆம், காலத்தால் நிலைத்திட்ட கலைஞர்தான் கருணாநிதி!

--------------------------------------------------------------------அதிகரித்த ஆளுநர்களின் அட்டகாசம்.

கேரள மாநிலத்தில் தற்போது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆளுநராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த ஆரிஃப் முகமது கான். பாஜக ஆட்சி புரியாத மாநிலங்களில் ஆளுநர்கள் தொல்லை அதிகரித்த வண்ணமாகவே காணப்பட்டு வருகிறது

அந்த வகையில் தமிழ்நாட்டில் முன்பு பன்வாரிலால் புரோஹித், தற்போது ஆர்.என்.ரவி. அதே போல் இடதுசாரி சிந்தனைகொண்ட கேரளா அரசுக்கும், வலதுசாரி சிந்தனைகொண்ட பாஜகவை சேர்ந்த ஆளுநர் ஆர்ஃப் முகமது கானுக்கும் அண்மைக்காலமாக அரசியல் ரீதியான மோதல் போக்கு காணப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த பரபரப்பான சூழலில் கேரளாவிலுள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த உத்தரவுக்கு ஆளும் இடதுசாரி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து ஆளுநரின் உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது துணை வேந்தர்கள் பதவியில் நீடிக்கலாம் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கடும் அரசியல் மோதல் போக்கு தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஆளுநர் விருந்தினர் மாளிகையில் நேற்று காலை செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இரண்டு செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்களை வெளியேறச்சொன்னார் கேரள ஆளுநர்.

அதாவது கேரளாவில் மிகவும் பிரபல செய்தி நிறுவனமான கைரளி நியூஸ் மற்றும் மீடியா ஒன் ஆகிய 2 மலையாள செய்தி தொலைக்காட்சி செய்தியாளர்கள் வெளியேற வேண்டும். அவர்கள் வெளியேறுமாறும், அவர்களை தான் சந்திக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் வெளியேறினால் தான், நான் பத்திரிகையாளர் சந்திப்பேன் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், "நான் ஊடகங்களை முக்கியமாவையாக கருதுகிறேன். ஆனால் இப்போது ஊடகங்கள் என்று மாறுவேடமிடுபவர்களை என்னால் கையாள முடியவில்லை. அவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அரசியல் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். அவ்வாறு ஒரு கட்சி சார்புடையவாராக இருக்கும் பத்திரிகையாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேறி விடுங்கள்" என்றார்.

மேலும் மீடியா ஒன் சேனலை குறிப்பிட்ட அவர், "நீங்க வெளியே போங்க.. உங்களிடம் பேச விருப்பமில்லை. கைரளி செய்தியிடமும் பேச எனக்கு விருப்பமில்லை. நீங்கள் எனக்கு எதிராக செய்தியை வெளியிடுகிறீர்கள். அவர்கள் இருந்தால் நான் கிளம்பிவிடுவேன், பேசமாட்டேன்.'' என கறாராக கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்களை வெளியேற சொன்ன கேரளா ஆளுநரின் செயலுக்கு ஆளுங்கட்சி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

. முன்னதாக கடந்த அக்டோபர் 24-ம் தேதி, இதே கைரளி, ஜெய்கிந்த்,மீடியா ஒன் உள்ளிட்ட 4 மலையாள செய்தி சேனல்கள் ஆளுநரின் செய்தியாளர் சந்திப்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள ராஜ் பவன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் வெளியேற சொன்ன கைரளி செய்தி நிறுவனம் கேரளாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் சிபிஐ (எம்) கட்சியின் தொலைக்காட்சி என்பது குறிபிடத்தக்கது.

ஜெய்கிந்த் காங்கிரஸ் ஆதரவு தொலைக்காட்சி.மீடியாஒன் உரிமையாளர் இசுலாமியர்.

செய்தி தொலைக்காட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை வெளியேற சொன்ன கேரளா ஆளுநரின் செயல் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது

-------------------------------------------------------------------------

கனவில் வந்த கடவுள்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை அடுத்துள்ள அந்தா டவுனில், ஷிவ் காலணியில் வசித்து வருபவர் ரேகா கணவர் ஹடா. 

இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவரும் அந்த பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, 12 வயது மகளை இவர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். 

இதனை இவரது மகன் தெரிவிக்க, உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரேகாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ரேகா, தனது மகனுக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதாகவும், அதை போக்க வேண்டுமென்றால் தனது மகளை நரபலி கொடுக்க வேண்டும் என்று தனக்கு கனவு வந்ததாகவும், அதனால் தான் தனது மகளை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

மேலும் தொடர்ந்து ரேகாவின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டதில், ரேகாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர் ஏற்கனவே அவரது கணவரை கொல்ல முயற்சி செய்ததும் தெரியவந்தது.

 அதோடு சம்பவத்தன்று தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மகன் மற்றும் மகள் இருவரையும் கொல்ல முயற்சித்ததும், அதில் மகன் தப்பியோடி அக்கம்பக்கத்தினரிடம் சம்பவத்தை கூறியதும், இதனிடையே தான் அவர் மகளை கழுத்தை நெரித்து கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரேகா மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை  நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உதார்விட்டுள்ளனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-----------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?