ஞாயிறு, 13 நவம்பர், 2022

மாட்டிக்கொண்டு முழிப்பவர்கள்

 1,போலி மருந்துகள் பாபா.

யோகா குரு பாபா ராம்தேவ் 'பதஞ்சலி' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த பதஞ்சலி நிறுவனத்தில் பல்வேறு பொருட்களும் கிடைக்கும். 

இவர்கள் தயாரிக்கும் பொருட்கள்,மருந்துகள் தரமற்றவை.போலியானவை என பலமுறை குற்றசாட்டுகள் வந்துள்ளன.பல முறை ,பல தயாரிப்புகள் தடை செய்யப் பட்டுள்ளன.

நேபாளம் உட்பட பல நாடுகள் பதஞ்சலி தயாரிப்புகளை தடை செய்துள ளன.

ஆனால் ராம்தேவ் பா.ஜ.க வில்,மோடியிடம்  தனக்குள்ள செல்வாக்கினால் தொடர்ந்து பல முறைகேடுகளைத் தொடர்ந்து்செய்து கொண்டேயிருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் கீழ் திவ்யா பார்மசியின் - மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட் மற்றும் லிப்பிடோம் (Madhugrit, Eyegrit, Thyrogrit, BPgrit and Lipidom) ஆகிய மருந்து பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த 5 மருந்து பொருட்களின் உற்பத்தியும் நிறுத்துமாறு உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

ஏனென்றால் இந்த 5 மருந்து பொருட்களும் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, குளுக்கோமா எனும் கண் நோய், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றை குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அந்த மருந்து பொருட்களை ஆய்வு செய்ததில், அதற்கு அதனை குணப்படுத்தும் சக்தி இல்லை என்பது தெரியவந்தது. 

எனவே குறிப்பிட்ட இந்த 5 மருந்து பொருட்களுக்கு பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தியதால் இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திவ்யா பார்மசிக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் இந்த மருந்துகள் மூலம் குறிப்பிட்ட நோய்களில் இருந்து மீண்டு வரலாம் என்பதை சுட்டிக்காட்டி, இந்த மருந்துகளின் தயாரிப்பை மதிப்பாய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கும்வரை, 5 மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

-------------------------------------------------------------------

2.தலை சிலிர்க்குமா பலியாடு?

கடந்த 29ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது’ ‘கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்னிடம் சில ஆவணங்கள் உள்ளன.

என்.ஐ.ஏ விசாரித்தால், என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் கொடுப்பேன். அந்த ஆவணங்கள் எப்படி வந்தது? என்றும் சொல்வேன். எந்த அதிகாரி அதனை எனக்கு அனுப்பி வைத்தார்? என, பெயர்களை சொல்ல முடியாது.

நான் ஆவணங்களை வெளியிட்டால், பல உயரதிகாரிகளின் பதவி போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மிக பெரிய பூதங்கள் இங்கு வெடிக்க ஆரம்பித்து விடும். நான் ஒன்றும் சும்மா பேசவில்லை.

இப்போதும் சவால் விடுகிறேன்... தைரியம் இருந்தால், எனக்கு சம்மன் அனுப்புங்கள். தமிழக அரசிடமே வந்து ஆவணங்களை காட்டுகிறேன். உங்களிடம் ஆவணம் கொடுத்த பிறகு பொதுவெளியில் வெளியிடுவோம். அப்போது, பல தலைகள் உருளும்’ என கூறி பகிரங்கமாக கூறி இருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேட்டி, அரசு மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறை தங்களது பங்குக்கு உள்ளே நுழைந்து அதிரடி காட்டியது.

கோவை சம்பவம் பற்றி அண்ணாமலை கூறியது அபத்தமானது என்றும், அவர் குறிப்பிட்டது போல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து வந்தது பொதுவான சுற்றறிக்கை என்றும் காவல் துறை கருத்து தெரிவித்தது.

மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே, அது என்ன? என, கருத்துக்களை கூறியுள்ளதன் மூலம் விசாரணையை அண்ணாமலை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் போலீஸ் குற்றம்சாட்டி இருந்தது.

திருநங்கைகள் அட்டூழியம்

இதற்கு பதிலடியாக அண்ணாமலை நீண்ட ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ‘காவல் துறையா? 

அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா? 

வாழ்க கலைஞர். வாழ்க தளபதி. வாழ்க இளவரசர் உதயநிதி போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தால் காவல் துறை வெளியிட்ட பத்திரிகை செய்தி மிக சிறப்பாக இருந்திருக்கும்’ என்று கடுமையாக சாடி இருந்தார்.

இந்த விவகாரம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 அதே சமயம், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை ஒட்டுமொத்த காவல் துறையையும் இந்தளவுக்கு கீழ்த்தரமாக மதிப்பீடு செய்தது தமிழக அரசின் இமேஜையும் வெகுவாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டுமென கோவை திமுகவினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இதையடுத்து அண்ணாமலை கூறியபடியே அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் இதை அண்ணாமலை எப்படி சமாளிப்பார் எனபாஜக வட்டாரத்திலேயே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

------------------------------------------------------------------

3.மாற்றம் செய்யப்படுவாரா ரவி.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு, பழிவாங்கும் விதமாக செயல்படுவதாக திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில் பல்கலைக்கழக வேந்தராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் பற்றி பேசி வருவது தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.

அத்துடன் ஹரிஜன் என்கிற சொல்லை பயன்படுத்தி அதே திருமாவளவனிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் நன்றாகவே வாங்கிக்கட்டிக்கொண்டார். 

இந்த விவகாரத்தில் ‘ஹரிஜன்’ சொல்லை சாதி சான்றிதழ் மற்றும் பிற இடங்களில் பயன்படுத்தக்கூடாது என, 1982ம் ஆண்டே இந்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறி ஆளுநருக்கே திருமாவளவன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

இப்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான உறவில் சிறுசிறு விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் ஆளுநரை திரும்பக்பெற கோரி திமுக சார்பில் குடியரசு தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என திமுக அறிவித்து உள்ளதால் மத்திய அரசு மற்றும் பாஜக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த சூடு இன்னும் ஆறாத நிலையில் உச்சநீதிமன்றம் வாயிலாக மேலும் ஒரு சிக்கலில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாட்டி இருப்பது மத்திய அரசுக்கும், பா.ஜ.க தலைமைக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரும், சிறையில் இருந்தபடியே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சித்து உள்ளனர்.

எனவே, பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அனைத்து அம்சங்களுமே இவர்களுக்கும் பொருந்தும் என கூறி அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் ஆளுநர் அரசமைப்பு சட்டத்தின்படி, தனது பொறுப்பை உணர்ந்து ஆற்ற வேண்டிய கடமையை செய்யாமல் தட்டிக் கழித்துள்ளதாகவும், பிழையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகுவதே சரி என, திருமாவளவன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ‘மனசாட்சி, மனிதாபிமானம் இல்லாதவர் ஆளுநர் ஆர்.என்.ரவி’ என வைகோ எம்.பி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது பாஜவை ஏகத்துக்கும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கு, திமுக கூட்டணிக்கட்சிகள் போர்க்கொடி என அடுத்தடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க பாஜ தலைமையிலான மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்கி விட்டு, ஒடிசா மாநிலத்தில் கவர்னராக உள்ள கணேஷி லாலுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க உள்ளதாக சமூக தலைதளங்களில் தகவல் பரவி வருவதால் தமிழக அரசியலில் அனல் பறக்கிறது.

----------------------------------------