மோடியின் (வாக்குறுதி) வடைகள்

 இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 14-ம் தேதி அறிவித்தது. அன்றே குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அன்று அறிவிக்கப்படவில்லை. 

நவம்பர் 3-ம் தேதி குஜராத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. 

இந்த இடைப்பட்ட 20 நாட்களில் குஜராத் பா.ஜ.க அரசு மாநிலத்தில் உள்ள பல்வேறு சமூகங்களை குறிவைத்து அறிவிப்புகளை வெளியிட்டு, வாக்குறுதிகள் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் 5 நாட்கள் பயணம் மேற்கொண்டு ரூ.7000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 

இந்த 20 நாட்களில் குஜராத் பா.ஜ.க அரசு அறிவித்த அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்.

அக்டோபர் 15

விவசாயம் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளுக்கு நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வரும் பாரதிய கிஷன் சங்கம் என்ற பா.ஜ.க அமைப்பின் பிரச்சனைகளை ஆராய குஜராத் அரசு 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

அக்டோபர் 17

மாநில அரசு இயற்கை குழாய் எரிவாயு (Piped Natural Gas-PNG), சி.என்.ஜி கேஸ் மீது 10% வரி சலுகை அறிவித்தது. உஜ்ஜவாலா யோஜனா திட்டத்தின் கீழ் 38 லட்சம் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வனத்துறையில் காலியாக உள்ள 823 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது.

அக்டோபர் 18

தீபாவளிக்கு முன்னதாக, 71 லட்சம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட அட்டைதாரர்களுக்கு தள்ளுபடி விலையில் கூடுதலாக 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 20

காந்திநகரில் ராணுவத் தளவாடங்கள் கண்காட்சி மற்றும் மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆகியவற்றை மோடி திறந்து வைத்தார். மேலும், ஜூநகரில் ரூ.4,155 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அக்டோபர் 21

அக்டோபர் 21-ம் தேதி மோடி, லைஃப் (LIFE) (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) (Lifestyle for Environment) முன்முயற்சியை கெவாடியாவில் தொடங்கி வைத்தார். தாபியில் ரூ.2,192 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.

உகை அணை திட்டத்தால் (Ukai Dam project) திட்டத்தால் பாதிக்கப்பட்ட 16,000 நபர்களுக்கு வழங்கப்பட்ட 18,000 ஏக்கர் இழப்பீட்டு நிலம் எந்தவித பிரீமியம் தொகையும் வசூலிக்கப்படாமல் பழைய நிலத்தில் இருந்து புதிய நிலத்திற்கு மாற்றப்படும் என்று முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கான சுகாதார பரிசோதனைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 27-ம் தேதி பாய் டூஜ் வரை மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது. மாறாக போக்குவரத்து காவல்துறையினர் சிவப்பு ரோஜா வழங்குவார்கள் என உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி அறிவித்தார்.

அக்டோபர் 28

2022 காரிஃப் பருவ மழை காலத்தில் பாதிக்கப்பட்ட 8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.630 கோடி இழப்பீட்டு தொகையை முதல்வர் படேல் அறிவித்தார்.

அக்டோபர் 29

அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான குழுவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. பஞ்சாயத்து மற்றும் காவல் துறையில் 13,000 பேருக்கு பணி நியமன ஆணை. சோயாபீன், நிலக்கடலை, பாசிப்பருப்பு ஆகியவற்றிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது.

அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை

3 நாள் பயணத்தின் முதல் நாளில், டாடா-ஏர்பஸ் தயாரிப்பு திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டினார். அன்று மாலை மோர்பியில் உள்ள தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 31-ம் தேதி பட்டேல் சிலை அருகே நடைபெற்ற ஏக்தா திவாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி,

பனஸ்கந்தா மாவட்டம் மற்றும் அகமதாபாத்தின் அசர்வா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

பஞ்சமஹால் மாவட்டத்தின் ஜம்புகோடாவில் நவம்பர் 1-ம் தேதி ரூ.885 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் மோடி மோர்பிக்கு சென்றார்.

நவம்பர் 3

தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மாநிலத்தில் உள்ள ஊர்க்காவல் படையினர் மற்றும் கிராம ரக்ஷக் தளப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கவுரவத் தொகை ரூ.300-ல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சங்கவி அறிவித்தார்.

இது போன்றவற்றை மோடி செய்யத்தான் தேர்தல் ஆணையம் புஜராத் தேர்தல் தேதியைதாமதமாக அறிவித்ததாகக் குற்றசாட்டு கூறப்படுகிறது.

--------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?