அரசு வேலைக்கு வேட்டு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலிருந்தும் பொறியியல் கல்லூரிகளிலிருந்தும் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் முக்கிய கனவாக இருப்பது அரசு பணிகள்தான்.
ஆனால் அதற்கு வேட்டு வைக்கும் விதமாக, இளைஞர்களின் எதிர்கால கனவில் திராவகம் ஊற்றி பொசுக்கச் செய்யும் விதமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 115 இருப்பதாக கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளதோடு, அதனை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
'அரசு வேலைக்கு வேட்டு வைக்கும் அரசாணை'
வழக்கமாக தமிழக அரசுப் பணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு ஏஜென்சிகள் மூலமாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இன்றைய சூழலில் வேலைவாய்ப்பு, அதுவும் அரசு வேலைவாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் போட்டி நிறைந்ததாகவும் குதிரைக்கொம்பாகவும் மாறிவிட்டது. ஆயினும் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மிகுந்த முயற்சியுடனும், வெளியூர்களில் தங்கி பயிற்சி மையங்களில் பயின்றும் அரசு வேலைக்காக முட்டி மோதி வருகின்றனர்.
ஏற்கெனவே சமீப காலமாக மத்திய அரசு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், எஞ்சி இருப்பது தமிழக அரசு பணி மட்டுமே. தற்போது அதற்கும் வேட்டுவைக்கும் விதமாக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான விதிகளை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த குழுவானது, அரசு பணிகளில், திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்ப ஆய்வு மேற்கொள்வது. டி மற்றும் சி பிரிவு பணிகளுக்கு வெளிமுகமை மூலம் பணியாட்களை நியமிக்க சாத்திய கூறுகளை ஆராய்வது, வெளிமுகமை ஆள்சேர்ப்பு நிறுவனங்களை ஆராய்ந்து அதன் மூலம் அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்வது என பல்வேறு ஆய்வுகளை மேற்கண்ட குழு மேற்கொள்ள உள்ளது.
ஆனால் இந்த அரசு ஆணைக்கு. அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
------------------------------------------
டுவிட்டருக்கு மாற்று.
ட்விட்டர் பயனர்கள் பெருமளவில் மாஸ்டடோன் (Mastodon) தளத்திற்கு மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், இது நடந்து வருகிறது. 'சிறைப்பட்ட பறவை விடுபட்டது' என மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் ட்வீட் செய்திருந்தார். இப்போது அந்தத் தளத்தில் உள்ள பயனர்கள் அனைவரும் சிட்டாக சிறகடித்து பறந்து வெளியேறிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சூழலில் மாஸ்டடோன் தளம் குறித்தும், அதன் பயன்கள் என்ன என்பது குறித்தும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.
அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் எலான் மஸ்க். அப்போது முதலே அவர் அந்த தளத்தின் மூலம் லாபம் ஈட்டுவதற்கான வழிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் ப்ளூ டிக் பயனர்களிடம் மாதந்தோறும் சந்தா வசூலிப்பது. அதோடு ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பலரையும் அவர் பணி நீக்கம் செய்துள்ளார். அவர் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியது முதலே அது குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், இப்போது ட்விட்டர் பயனர்கள் பலரும் மாஸ்டடோன் தளத்திற்கும் மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் மட்டுமே சுமார் 2.3 லட்சம் பயனர்கள் புதிதாக இந்தத் தளத்தில் இணைந்துள்ளனர்.
Mastodon: கடந்த 2016 வாக்கில் இந்த தளம் அறிமுகமாகி உள்ளது. சுமார் 82 மொழிகளில் இயங்கி வருகிறது. இதுவும் ட்விட்டரை போலவே மைக்ரோ பிளாகிங் தளம்தான். ட்விட்டர் தளத்தை போன்ற அம்சங்கள் இதிலும் உள்ளன. ஆனால், இது பிரைவேட் சர்வர்களில் இயங்கும் சமூக வலைதளம்.
இந்தத் தளமானது, மற்ற சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதாவது, இதில் ஒருவர் இணைய வேண்டுமெனில் தங்களுக்கு பிடித்தமான சர்வர்களை தேர்வு செய்ய வேண்டும். பல்வேறு ஜானர்களில் இந்த சர்வர்கள் உள்ளன. இந்த சர்வர்களை சுயசார்பு அமைப்புகள் அல்லது தனிநபர்கள் நிர்வகித்து வருகின்றனர். ஒவ்வொரு சர்வர்களின் கொள்கைகளும் மாறுபடுகின்றன.
பயனர்கள் தங்களது சர்வரின் கணக்கு மூலம் மாஸ்டடான் தளத்தில் உள்ள எந்தவொரு பயனரின் பதிவையும் ஹோம் ஃபீடில் பார்க்கலாம். ஆனால், அதற்கு அந்தப் பயனரை பின்பற்ற வேண்டும். இந்த தளத்தில் பயனர்கள் தாங்கள் பின்பற்றும் நபர்களின் கணக்குகளை சார்ந்த பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும்.
மேலும், இந்த தளத்தில் பயனர்கள் தங்களுக்கு பிடித்த வேறு சர்வர்களுக்கும் சுலபமாக மாறலாம். அதோடு தங்களுக்கென பிரத்யேகமாக ஒரு சர்வரையும் கட்டமைக்கலாம். இதில் இயங்கும் சர்வர்களை கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிகிறது. ஆனால் இந்தப் பக்கத்தில் புரோமோட் செய்யப்படும் கன்டென்ட்டுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தில் பயனராக இணைய 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதோடு மின்னஞ்சல் முகவரியும் தேவைப்படுகிறது. அதைக்கொண்டு பயனர்கள் தங்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கி இந்த தளத்தில் பதிவுகளை இடலாம்.
ட்விட்டரில் இருக்கும் அம்சங்களில் சில இதில் உள்ளன. ரீட்வீட் செய்வதை போலவே இதில் ரீபிளாக் என அறியப்படுகிறது. லைக்குகள் ‘ஃபேவரைட்’ என இந்த தளத்தில் அறியப்படுகிறது.
--------------------------------------------------