2022 நிகழ்வுகள்.

 கோகுல்ராஜ் கொலை வழக்கு

தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆணவக்கொலை வழக்குகளில் முக்கியமானது நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு. 2015-ம் ஆண்டு நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. 

சாதி ஆணவக் கொலை வழக்கில், மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. இந்த கொலை வழக்கில் சுவாதி பிறழ் சாட்சியாக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு

ஹிஜாப் 

 மாணவர்கள் போராட்டம்!

கர்நாடக மாநிலம், உடுப்பி பி.யூ பெண்கள் கல்லூரியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளானது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் 25-வது பிரிவை மேற்கோள்காட்டி, `ஹிஜாப் அணிவதென்பது மதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையின் பகுதியல்ல' எனக் கூறி ஹிஜாப் அணியத் தடைவிதித்தது.

 இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து, சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 'கலாசார இனப்படுகொலைக்கு எதிராகப் போராடுவோம்' , 'ஹிஜாபை நாங்கள் ஆதரிக்கிறோம்' என ஹிஜாபுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலீட்டாளர்கள் மாநாடு

முதல்வராகப் பொறுப்பேற்று முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இதற்காக மார்ச் மாதம் 24-ம் தேதி மாலை சென்னையிருந்து தனி விமானத்தில் கிளம்பினார். 

துபாயில் நடந்த கண்காட்சியில் தன் குடும்பத்தினர், நிர்வாகிகள், அமைச்சர்களோடு கலந்துகொண்டார். அந்த கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்றது. இந்த நிலையில், முதல்வரின் துபாய் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா... இல்லை குடும்பச் சுற்றுலாவா என்று பா.ஜக விமர்சனம் செய்தனர்.

மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

அதன்பின் இது தொடர்பான அரசாணைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக நடந்த மேல்முறையீடு வழக்கில், ``வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது. சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது'' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தது.

புதிய கல்விக் கொள்கை:

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். 

இந்த நிலையில்,  டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், புதிய கல்விக் கொள்கைக்கான 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது.  இந்த குழு ஓராண்டுக்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மு.க ஸ்டாலின்

இரட்டைஇலை சின்னம்; வழக்கறிஞர் தற்கொலை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால், அ.தி.மு.க கட்சியில் இரண்டு அணிகள் உருவானது. 

அந்த சமயத்தில் நடைபெற்ற ஆர். கே நகர் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இதனால், இந்தியத் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், பல்வேறு தகவல்களை கொடுத்தவர் வழக்கறிஞர் கோபிநாத். முக்கிய சாட்சியான இவரை விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் தேர் 🔥விபத்து:-

தஞ்சாவூர் பூதலூர் சாலையில், சதய விழாக் கொண்டாட்டத்தில் தேரில் வீதியுலா சென்ற போது உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதால், மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் துள்ளத் துடிக்க உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியது.

தஞ்சாவூர் தேர்த் திருவிழா விபத்து

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து:-

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலுள்ள கல்லீரல் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில், மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில், பெரும் வெடிச்சத்தத்துடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, பொது மக்களை பீதியில் ஆழ்த்தியது.

 அந்த கட்டடத்தில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு ஐ. சி.யூ வார்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

பல நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மருத்துவமனை சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

ஆதீனம் பல்லக்கு 

பட்டணப்பிரவேச வைபவத்தில் ஆதீனங்கள் பல்லக்கில் பவனி வருவது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின், பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை:- 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்துவந்த எழுவரில் ஒருவரான பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்தது. 

பேரறிவாளனை அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிகழ்வு இந்திய அளவில் உற்று நோக்கப்பட்ட முக்கியமான நிகழ்வாகும்.

பேரறிவாளன் விடுதலை

அதிமுகவின் ஒற்றைத் தலைமை 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசியல் களம் தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என்ற இந்த மூன்று முக்கிய புள்ளிகளை சுற்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க கட்சிக்குள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கிடையே யார் தலைமை என்ற போட்டி நிலவிவருகிறது. 

இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு இபிஎஸ் தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது. இதனால் ஓபிஎஸ் அணியினர் அதிருப்தில் இருப்பதாக தெரிகிறது. 

இந்த விவகாரம் நாளுக்கு நாள் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறதுவருகிறது.

செஸ் ஒலிம்பியாட்:- 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை-28 முதல் ஆகஸ்ட்10-ம் தேதி வரை நடைபெற்றது. 

185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர். செஸ் போட்டிகளில் ஒலிம்பிக் போட்டிக்கு நிகரான செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடப்பது இதுவே முதன்முறையாகும்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம், தொடரும் விசாரணை !

ஜூலை 13-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பள்ளிவளாகத்தில் இறந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

மாணவியின் மரணத்துக்கான காரணம் மர்மமாக இருந்த நிலையில், ஜூலை 17-ம் தேதி அந்த பள்ளிவளாகத்தில் கலவரம் வெடித்தது . CBCID-க்கு வழக்கு கைமாற்றப்பட்டது.  

சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மேலும் பலத் திருப்பங்களுடன் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பொன்முடி !

ஜூலை மாதத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்துக்கொண்ட நிலையில், உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே. பொன்முடி பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தார்.

ஸ்டெர்லைட் படுகொலைகள்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தூத்துக்குடி மக்களை நோயாளிகளாக்கிய நாசகார ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி பல ஆண்டுகளாக போராடிய தூத்துக்குடி மக்கள் தங்கள் மனுவை மாவட்டாட்சியரிடம் கொடுக்க ஊர்வலமாகச் சென்ற போது அவர்களைத் தாக்கி,தூப்பாக்கியாலும் காவல்துறையினர் சுட்டனர்.

இதில் பெண்கள் உட்பட 14 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அன்றைய முதலமைச்சர் பழனிச்சாமி இப்படுகொலையை தொலைக்காட்சியில்தால் பார்த்து தெரிந்து கொண்டதாக்க் கூறினார்.

இப்படுகொலைகளுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததால் நீதிபதி அருணா ஜெகதீசன்  தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டது.

அவ்விசாரணை ஆணையம் அறிக்கையை வெளியிட்டது.அதில் காவல்துறையினர் 7 பேர்கள்,வருவாய்த்துறையினர் 4 பேர்கள் குற்றவாளிகள் என குறிப்பிட்டிருந்தது.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி பொய் கூறியதாகவும்,தேவையில்லாமல் போராடிய மக்களை சமூக விரோதிகள் எனக்கூறிய நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை கண்டித்தும் அறிக்கை குறிப்பிட்டது.

ஆளுநர், ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்:-

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டச் செயலிகளுக்குத் தடைவிதிக்கும்விதமாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் கொண்டுவந்தது. ஆனால், இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

 இந்த ஆண்டு மட்டுமே நிறைய நபர்கள் தமிழ்நாட்டில் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 

இதற்கு தடை விதிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி

ஆவின் பால் முறைகேடு 

அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகளில் 70 மிலி.அளவு குறைந்து வருவதாக  குற்றஞ்சாட்டப்பட்டது.

. இந்த நிலையில், நுகர்வோர்களின்‌ நலன்‌ பேணும்‌ வகையில்‌ அனைத்துத் தரம், அளவுகள்‌, உணவு பாதுகாப்பு மற்றும்‌ தர நிர்ணய சட்டத்துக்கு உட்பட்டு ஆவின் பால் விநியோகம் செய்கிறோம் என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்தது.

பாரத ஒற்றுமை யாத்திரை.
ராகுல் காந்தியின் 3,570 கி.மீ பாரத் ஜோடோ யாத்திரை செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் ஆரம்பித்தது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா உட்பட பல மாநிலங்களில் யாத்திரை நடைபெற்று வருகிறது. 

100 நாள்களை கடந்த யாத்திரை மூலம் ராகுல் காந்தி மக்கள் மனதை வெல்வார் என காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர் .

டெல்லி பயணத்தில் கமல்ஹாசன் ராகுல் காந்தியுடன் இணைந்து நடந்தார்.

ஸ்டாலினின் துபாய் விசிட்; தஞ்சை தேர் விபத்து; எழுவர் விடுதலை, இன்னும் பல...  தமிழ்நாடு ரீவைண்ட் 2022

மலக்குழி மரணம்:-

 தமிழகத்தில் கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி, விஷவாயு தாக்கி பணியாளர்கள் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

துப்புரவு பணியில் ஈடுபடும் போது அதிக உயிரிழப்பு நடந்த மாநிலங்களில் தமிழகம் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது என மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் அண்மையில் அறிக்கை வெளியிட்டது.

 இந்த நிலையில், இது அனைவருக்கும் தலைகுனிவு என முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஆறுமுகசாமி ஆணையம்:

2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். 

அவரின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தை குறித்து விசாரிக்க, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் 4 வருடங்கள் கழித்து அறிக்கையை தாக்கல் செய்தது. ஜெயலலிதா மரணத்தில் தொடர்பு இருப்பதாக சசிகலா ,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை இந்த ஆணையம் குற்றம்சாட்டியிருக்கிறது.

ஆறுமுகசாமி ஆணையம்

நிர்மலா சீதாராமனின் டாலர்.

சமீபத்தில் டாலர் - ரூபாய் மதிப்பு ஒப்பீடு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

'ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை, டாலர் மதிப்புதான் உயர்ந்திருக்கிறது' என்று அவர் குறிப்பிட்டார். 

அவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் கேலிக்குரியதாகவும், பேசுபொருளாகவும் மாறியது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “நான் வெங்காயம் அதிகம் சாப்பிடும் குடும்பத்திலிருந்து வரவில்லை” என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம்

மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. 

அதில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் இந்தியை பயிற்சி மொழியாக்க வேண்டும். ஒன்றிய அரசின் நிர்வாகத் தொடர்புகள் அனைத்துக்கும் இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது.

இது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிரான தனி தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். 

அதில், `` இது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; தமிழினத்தை, தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டம்'' என்றார். மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் இந்தி மொழி திணிப்புக்கு குரல் கொடுத்தனர்.

இந்தி மொழி

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்!

அக்டோபர் மாதம் கோவை உக்கடத்தில் ஜமேசா முபின் என்பவர் ஓட்டி சென்ற சார் வெடித்து விபத்துக்குள்ளானது. விசாரணையிலும், அவரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்த தேவையான பொருள்கள் 109 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

 மேலும் முபினுக்கு  பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் , வழக்கை என்.ஐ.ஏக்கு பரிந்துரைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். 

இதையடுத்து பல திருப்பங்களுடன் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?