தனிமனிதம் தனித்துவம்
தனிமனித தனித்துவம்(சுதந்திரம்) குறித்த அழுத்தமான கருத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அமர்வின் முன் வந்த ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில், ‘‘தனிநபரின் சுதந்திரமானது மதிப்பு மிக்கதும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தவிர்க்க இயலாத உரிமையும் ஆகும்.
அந்தச் சுதந்திரம் பறிக்கப்படும் போது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பொறுப்பையும் கடமையையும் உச்சநீதிமன்றம் தவறாமல் நிறை வேற்றும். அவ்வாறான பிரச்சினைகளில் நீதிமன்றங்கள் தலையிடவில்லை என்றால் குரல் நசுக்கப்பட்டு சுதந்திரம் பறிக்கப்படும்.தனிமனிதசுதந்திரத்தைக் காக்க வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டத்தின் 136 ஆவது பிரிவால் உச்சநீதி மன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புணர்வு ஆகும். அவ்வாறான வழக்குகளில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்வு வழங்கவில்லை என்றால் நாங்கள் இங்கு இருப்பதற்கே பொருள் இல்லை.
அது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் ஆகும். இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றம் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த தீர்ப்பினைக் குறிப்பிட்டு மும்பையில் நடந்த விழாவிலும் பேசி இருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட். ‘‘தனிமனித சுதந்திரத்தை நீதிமன்றங்களே காக்கும்” என்று அப்போதும் வலியுறுத்திப் பேசி இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவர் டி.ஒய்.சந்திரசூட் அவர்கள். தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டபோது, ‘‘இந்திய நீதித்துறைக்குத் தலைமை தாங்குவது மிகப்பெரிய வாய்ப்பும் பொறுப்பும் ஆகும்.
பொதுமக்களுக்குச் சேவையாற்றுவதே எனது முன்னுரிமை. நாட்டில் உள்ள அனைவருக்காகவும் நான் பணியாற்றுவேன்” என்று சொன்னார். இந்தியாவின் புனித நூல் அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே என்பதைச் சொல்லி வந்தவர் அவர். ‘அரசியலமைப்பு’தான் அனைத்துக்கும் முக்கியத்துவம் என்று சொன்னவர் அவர்.
தனி மனிதனின் அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் விரிவாக வரையறுத்து வழங்கி இருக்கிறது.
குடிமையியல் உரிமையை அனைத்து தனி மனிதர்களுக்கும் சட்டம் வழங்கி உள்ளது. சம உரிமை, பேச்சு உரிமை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, கூடி வாழும் உரிமை, வழிபாட்டு உரிமை, மத சுதந்திரம், சமூக நீதி கோரும் உரிமை ஆகியவை இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த உரிமைகளை வழங்க மறுப்பதோ, தடுப்பதோ சட்டப்படி குற்றமாகும்.
இன்னும் சொன்னால், ‘குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவோ, அதற்கு முரணானதாகவோ எந்தச் சட்டத்தையும் இயற்றக் கூடாது’ என்றும் விதிகள் உள்ளன.
அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அந்தச் சட்டம் ஏற்கப்படாது என்றும் விதி உள்ளது. அனைவர்க்கும் சமமான பாதுகாப்புச் சட்டம் என்பதை அமெரிக்கச் சட்டத்தில் இருந்து எடுத்ததாகச் சொல்வார்கள்.
ஆனால் அமெரிக்கச் சட்டத்தை விட இந்தியச் சட்டம் வலிமையானது ஆகும்.
இந்த உரிமைகள் இன்னாருக்கு மட்டுமே உண்டு, இன்னாருக்கு இல்லை என்ற பாகுபாடு சட்டத்தில் இல்லை.
சாதி, மதம், இனம், மொழி, பால், நிறம் ஆகிய அனைத்துப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து உரிமைகளும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது என்கிறது அரசியலமைப்புச் சட்டம்.
‘‘பா.ஜ.க. ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன” என்ற என்.ஹெச்.ஆர்.ஓ.அறிக்கையை இங்கு நினைவுகூர வேண்டியதாயுள்ளது. ‘‘பா.ஜ.க. பொறுப்பேற்று ஆட்சியிலுள்ள கடந்த எட்டு ஆண்டுகளில் முற்போக்கு சிந்தனாவாதிகள், மதச்சார்பற்ற தலைவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்கப்படுவதை தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு கண்டித்து இருக்கிறது.
‘‘அதிகாரத்தைப் பயன்படுத்தி பொய் வழக்குகள் பதிவு செய்து கொடும் அடக்குமுறைச் சட்டங்களில் சிறையில் அடைக்கப்படுவது தொடர்கிறது.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளை வெளியுலகத்துக்குக் கொண்டு வருவோர் மீது பா.ஜ.க. அரசு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.
மனிதனின் அடிப்படை உரிமைகளை கோர முடியாத அளவுக்கு தேசத்துரோக வழக்குகள் பதியப்படுகின்றன” என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.பா.ஜ.க.
ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.
குடியுரிமைச் சட்டம், பணமதிப்பிழப்பு ஆகிய பா.ஜ.க.வின் தோல்வி அடைந்த திட்டங்களை எதிர்ப்பவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.
இத்தகைய சூழலில்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
--------------------------------------------------------------------