4℅ அகவிலைப்படி உயர்வு.
பற்றாக்குறையும்,
வீண்டித்தலும்.
உலகில் வறுமை மிகுந்த நாடுகளில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உணவு இல்லாமலும் தகுந்த சத்து இல்லாமலும் ஆயிரக்கணக்கில் மடிகின்றனர்.ஆனால் இதே
உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களும் ஒருபக்கம் வீணடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
உணவு பற்றாக்குறையை போக்குவது எப்படி என்ற ஆலோசனைகளுக்கு மத்தியில் உணவை வீணாக்காமல் தவிர்த்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும்.உலகளவில் 1 பில்லியன் டன் உணவை மக்கள் வீணடிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் அறிக்கை தெரிவித்துள்ளது. உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவுக்கும் உட்கொள்ளும் உணவின் அளவுக்கும் இடையிலான வித்தியாசம் அதிக அளவில் உள்ளது.
உலகளாவிய இந்த உணவு வீணாக்குதல் என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக கடுமையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினையாகும்.
உலகளாவிய பசுமை வாயு வெளியேற்றத்தில் 8-10 சதவீதம் உட்கொள்ளப்படாத உணவுடன் தொடர்புடையது.
உணவு கழிவு குறியீட்டு அறிக்கை 2021 இன் படி, உலகளவில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டன் உணவை வீணடிக்கிறார்கள்.
அதாவது, உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது என்கிறது அந்த அறிக்கை.
வீட்டு உணவுக் கழிவு என்பது உலகளாவில் சவாலாக உள்ளது என உணவுக் கழிவுக் குறியீட்டு அறிக்கை.
சுற்றுச்சூழல் திட்டம் 2013 இல் Think Eat Save எனும் உலகளாவிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஐ.நா அறிமுகப்படுத்தியது.
2030 ஆம் ஆண்டுக்குள் உணவு வீணடிக்கப்படுவதை பாதியாக குறைக்க உறுதிபூண்டுள்ளது.
ஆப்பிரிக்கா, ஆசிய பசிபிக், லத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் மேற்கு ஆசியாவில் உணவுக் கழிவுப் பணிக் குழுக்களைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பணிக்குழுக்கள், தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதுடன், 25 நாடுகளில் தேசிய உணவுக் கழிவுத் தடுப்பு உத்திகளை யும் வகுத்து அந்நாடுகளில் செயல் படுத்துவார்கள்.
---------------------------------------------------------------
வங்கிகளும்,கடன்களும்.
ஏழை, எளிய மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது குதிரைக்கொம்பாக மாறியுள்ளது. நடுத்தர மக்கள் வாங்கியுள்ள வீடு மற்றும் வாகனங்களுக்கான வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லையென்றால் அபராதம், ஏ.டி.எம்மில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் என பல வகைகளிலும் பொதுமக்களின் பணம் சூறையாடப்படுகிறது.
மறுபுறத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பெரும் தொகையை கடனாக பெற்றுவிட்டு ஏப்பம் விடுவது அதிகரிக்கிறது.
பல கார்ப்பரேட் முதலாளிகள் திட்டமிட்டு மோசடி செய்து கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விடுகின்றனர்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி என வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய யாரும் இதுவரை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்படவில்லை.
அவர்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்துக் கொண்டு வெளிநாடுகளில் சொகுசாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியின் தொடர்ச்சியாக வீடியோ கான் நிறுவனர் வேணுகோபால் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலிருந்து ரூ.3,250 கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக வீடியோகான் நிறுவனங்களின் உரிமையாளர் வேணுகோபால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் செயலதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களும் விரைவில் பிணையில் விடுதலையாகி விடுவார்கள்.
வழக்கு பல ஆண்டு காலம் நடக்கும். பிறகு ஒன்றுமில்லாமல் போய்விடும். வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததற்கு ஒன்றிய அரசு சூட்டியுள்ள நாகரிகமான பெயர் வராக் கடன்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ விபரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.
வங்கிகளில் கடன் வாங்கி 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மோசடி செய்துள்ள தொகை ரூ.92 ஆயிரத்து 570 கோடி. கீதாஞ்சலி ஜெம்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை மட்டும் ரூ.7,848 கோடி.
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வராக் கடன் தொகை அதிகரித்து வருகிறது. அதை தள்ளுபடி செய்வதும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.11.18 லட்சம் கோடி வராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.
வசூலிப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் விசித்திரமான விளக்கம் அளிக்கிறார்.
இந்த கூட்டுகளவாணி முதலாளித்துவத்தால் சூறையாடப்படுவது எளிய மக்களின் பணம்தான். பா.ஜ.க இத்தகைய மோசடியாளர்களிடமிருந்து முன்கூட்டியே நன்கொடை பெற்றுவிடுவதும், சாதாரண நடைமுறையாகிவிட்டது.
வீடியோகான் வேணுகோமால் பா.ஜ.க வுக்கு 100 கோடிகளுக்குமேல் நிதி வழங்கியுள்ளார்.
அதற்கு கைமாறு செய்ய வேண்டாமா. இதுதான் மோடி அரசின் லட்சணம்.
-----------------------------------------------------------------
34℅ல் இருந்து38℅
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.
இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது.
இதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும்.
இதனால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுமெனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இந்த நிதிச் சுமையை அரசு ஏற்றுள்ளது.
மேலும் சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் - செலவினம் அவர்களின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை ஏற்று, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தினை உவகையுடன் கொண்டாடி மக்கள் வாழ்வை வளம் பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------