எல்ஐசி, க்கு உண்டான இழப்பு
முறைகேடுகள் அம்பலமானதால். அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவால் எல்ஐசிக்கு ரூ.18,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு நாட்களில் மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளது எல்ஐசி.
முன்னதாக, அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. கடந்த 2 நாட்களில் மட்டும் அதானி நிறுவனங்களின் மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்துள்ளது.
அதானி என்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் 20% அளவில் சரிந்தன
இந்நிலையில், அதானி குழும பங்குகள் சரிவால் எல்ஐசி மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தின் ஐந்து நிறுவனங்களில் எல்ஐசி மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு ஜனவரி 24, 2023-ல் ரூ.81,628 கோடியாக இருந்த நிலையில், ஜனவரி 27-ல் அது ரூ.62,621 கோடியாக சரிந்துள்ளது.
அதாவது, அதானி குழும பங்குகள் சரிவால் எல்ஐசிக்கு ரூ.18,647 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று தொடங்கி இன்று இச்செய்தி பதிவிடப்பட்ட நேரம் வரையிலான சரிவு இது.
எல்ஐசி இழப்பை முதலீடு வாரியாக பிரித்துக் கூற வேண்டும் என்றால் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் வீழ்ச்சியால் ரூ.6,237 கோடி, அதானி என்டர்ப்ரைசஸ் பங்கு வீழ்ச்சி வாயிலாக ரூ.3,279 கோடி, அதானி போர்ட்ஸ் பங்கு வீழ்ச்சி வாயிலாக ரூ.1,474 கோடி, அதானி க்ரீன் எனர்ஜி பங்கு சரிவு வாயிலாக ரூ.871 கோடி மற்றும் ஏசிசி பங்கு சரிவு வாயிலாக ரூ.544 கோடி என இழப்பை சந்தித்துள்ளது.
இவை தவிர அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகளிலும் எல்ஐசி மெகா முதலீடு செய்திருந்தது. 2022 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டு நிலவரப்படி இந்நிறுவனத்தில் எல்ஐசி 4,06,76,207 பங்குகள் கொண்டிருந்தது.
பங்கு சதவீதம் என்று பார்த்தால் 3.65% ஆகும். கடந்த இரண்டு நாட்களில் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்கு விலை ரூ.2762.15-ல் இருந்து ரூ.2014.20 என்றளவில் சரிந்தது.
ஒரு பங்கின் விலை சராசரியாக ரூ.747.95 பைசா சரிந்துள்ளது. எல்ஐசி-க்கு இதில் 4,06,76,207 பங்குகள் இருப்பதால் அதானி ட்ரான்ஸ்மிஷன் நிறுவன முதலீடு ரீதியாக மட்டும் எல்ஐசி ரூ.3,042 கோடி இழந்துள்ளது. ( ₹747.95 x 4,06,76,207) என்பதுதான் கணக்கு.
அதானி நிறுவனங்களால் எல்ஐசி க்கு உண்டான இழப்பு
அதானி டோட்டல் கேஸ் ரூ.6,237 கோடி
அதானி என்டர்ப்ரைசஸ் ரூ.3,297 கோடி
அதானி போர்ட்ஸ் ரூ.3,205 கோடி
அதானி ட்ரான்ஸ்மிஷன் ரூ.3,036 கோடி
அம்புஜா சிமென்ட்ஸ் ரூ.1,474 கோடி
அதானி க்ரீன் எனர்ஜி ரூ.871 கோடி
ஏசிசி ரூ.544 கோடி
எல்ஐசி இழப்பால் சாமானிய மக்கள் கூட கலங்கிப் போயுள்ளனர். இந்நிலையில், ஆனந்த் ரதி ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் நிறுவனத்தில் ஈக்விட்டி ரிசேர்ச் துறை தலைவர் நரேந்திர சோலன்கி ஊடகப் பேட்டியில், "முதலீட்டாளர்கள் இன்னும் தெளிவுக்காகக் காத்திருந்து, சிக்கலைத் தீர்க்க அனுமதிக்க வேண்டும். அதன்பிறகு, புதிய தகவல்களின் அடிப்படையில் அதானி குழும பங்குகளை ஒருவர் அணுகலாம். பெரும்பாலான சிக்கல்கள் சந்தை பங்கேற்பாளர்களிடையே அறியப்பட்டவைதான்" என்று தெரிவித்துள்ளார்.