தமிழ்நாடு' வரலாறு
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிப் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அப்போது,* " தமிழகத்தில் வித்தியாசமாக ஒரு அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் 'நாங்கள் திராவிடர்கள்' என்று சொல்கிறார்கள்.
* இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், தமிழ்நாடு அதை வேண்டாம் என்று சொல்கிறது.
* 'தமிழ்நாடு' என்பதைவிட 'தமிழகம்' என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை நாம் முறியடிக்க வேண்டும். எது உண்மை என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
அவரது இந்த பேச்சுக்குத்தான் தமிழ் உணர்வாளர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
* "இனி 'தமிழ்நாடு' என்பதை உரக்கச் சொல்வோம், அப்படியே எழுதுவோம்" என தமிழார்வலர்கள் ட்விட்டரில்' #தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக்கை இன்று ட்ரெண்ட் செய்தனர்.
கூடவே மதராஸ் மாநிலத்தை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956 -ம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து செய்த உயிர் தியாகம், 1969 -ம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றியதையும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
'மதராஸ் மாநிலம்' 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டதன் பின்னணி, அந்தப் பெயர் சூட்ட அப்போது காங்கிரஸ் கட்சியினரும், மத்திய அரசும் தெரிவித்த எதிர்ப்புக்கும் அண்ணா என்ன பதிலளித்தார் என்பதையும் பார்க்கலாம்...
'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை மாற்றி 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1956, ஜூலை 27-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி, 76 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார்.
சங்கரலிங்கத்தின் மறைவு இந்தப் போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது.
1957-ல் திமுக முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தபோதே 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் நுழைந்தது.
1957, மே 7-ம் தேதி வாக்கெடுப்புக்கு வந்த திமுக-வின் தீர்மானத்துக்கு 42 பேர் ஆதரவாகவும், 127 பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அந்தத் தீர்மானம் அப்போது தோல்வியடைந்தது.
அதன் பிறகு 1967-ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த திமுக ஜூலை 18-ம் தேதி `மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து 23.11.1968-ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969, ஜனவரி 14-ல் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' என அதிகாரபூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முன்னதாக தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய அண்ணா, " தமிழ்நாடு என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்பது மட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்னாள் இருந்த வெங்கட்ராமன் அவர்கள், “ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் இடையே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் எல்லாம் திருத்தி எழுதப்பட வேண்டிவரும், அதனாலே சிக்கல்கள் விளையும்” என்றெல்லாம் சொன்னார்கள்.
அதிலிருந்து அவர்கள் வெளிநாடுகளுக்கெல்லாம் போய் வந்தார்கள் என்பதைத் தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாகச் சிக்கல்கள் இருக்கின்றனவா என்பதைக் கவனப்படுத்தவில்லை.
மதிப்பிற்குரிய நண்பர் பாலசுப்பிரமணியம் அவர்கள் எடுத்துச் சொன்னபடி “கோல்டு கோஸ்ட்” என்பது “கானா” ஆகி விட்டது. அதனால் எந்தவிதமான சர்வ தேசச் சிக்கல்களும் ஏற்பட்டுவிடவில்லை.
ஆகவே, இந்தத் தீர்மானத்தை அனைவரும் தங்கள் தங்கள் கட்சியின் சார்பில் ஆதரிக்க வேண்டு மென்பதை ஒருகடமையுணர்ச்சியாகக் கொண்டதற்காக மிக்க மகிழ்ச்சியடை கிறேன் " என்றார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில், "நாட்டுக்குள்ளேயே ஒரு நாடா? இது பிரிவினை வாதம் இல்லையா?" என அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசில் இருந்தவர்கள் கேள்வி எழுப்பியபோது, " திருத்திக்கொள்ளுங்கள். இந்தியாவே ஒரு நாடு அல்ல. மாநிலங்களின் தொகுப்பு" எனப் பதிலடி கொடுத்தார்.
---------------------------------------++++------------------