ஆட்டம் முடியும் நேரம்.

 ஒன்றிய அரசின் ஏஜென்டாக நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள், பா.ஜ.க ஒன்றிய அரசின் ஆட்சிக்கு வந்த பின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசுகளின் கொள்கை முடிவில் தலையிடுவது, சிறப்பு திட்டங்களை நிறுத்துவது, அரசியல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் வகித்து வரும் ஆளுநர் பதவிக்கு உரிய வேலைகளை மட்டும் செய்வதில்லை.

அவர்கள் நோக்கம் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சீரழிப்பதும்,அக் கட்சிகளுக்கு மக்களிடையே கெட்டப் பெயரை உண்டாக்குவதுதான்.

தங்களின் பல்கலைக் கழக வேந்தர் பதவிக்கான வேலையையும் கூட ஆர்.என்.ரவி செய்வதில்லை. பட்டமளிப்பு விழா நடத்தி மாணவர்களுக்கு பட்டம் வழங்காமல் வெறும் அரசியல் செய்து வருகின்றனர். 

தமிழக இல்லை.தமிழ்நாடு  ஆளுநர்ரவி அவருக்கு கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பாஜ சார்ந்த கொள்கைகளை பரப்புவதில் மட்டுமே குறியாக உள்ளார். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசியல் ,ஆன்மீகம் பேசும் ஆளுநர், தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கொடுக்காமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.புதியகல்வி கொள்கைக்கு ஆதரவான செயல்களையே செய்ய வலியுறுத்துகிறார்.

 இதனால்பாதிக்கப்படுவது பல கனவுகளுடன் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள்தான்.தாங்கள் படித்த கல்விக்கு பட்டம் கிடைக்காத்தால் உயர் கல்வியை தொடர முடியாமலும், வேலைக்கு செல்ல முடியாமலும் முடங்கி உள்ளனர்.    

தமிழகத்தில் அரசுக்கு சொந்தமாக 21 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களின் இறுதி பருவத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, மே அல்லது ஜூன் மாதங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு  செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு பட்டச்சான்றிதழ்கள் வழங்கப்படும். 

பட்டமளிப்பு விழாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும். மீதமுள்ள மாணவ, மாணவியருக்கு அவர்களின் கல்லூரிகள் மூலமாகவே சான்றிதழ்கள் வெளியாகியுள்ளது.

இந்த நடைமுறைகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். ஆனால்,  நடப்பாண்டில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களுக்கு கவர்னர் மாளிகையில் இருந்து இன்னும் அனுமதி அளிக்கப்படாதது  தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதிலும் குறிப்பாக, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 49 தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகள் இணைப்பு கல்லூரிகளாக உள்ளன. இதில் இணைப்பு கல்லூரிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலை துறைகளில் 3,000க்கும் மேற்பட்டவர்கள், தொலைநிலைக்கல்வி வாயிலாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-2020 கல்வியாண்டு, 2020-2021 கல்வியாண்டு, 2021-2022 கல்வியாண்டு என மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்த கவர்னர் மாளிகையில் இருந்து ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுவருகிறார்.

காரைக்குடி அழகப்பா பட்டமளிப்பு விழா கிடப்பில் போடப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 20, 21 தேதிகளில் நடத்தப்படலாம் எனவும், இதில் ஒன்றிய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரை சிறப்பு விருந்தினராக அழைக்க கவர்னர் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. தவிர பட்டமளிப்பு விழா முடிந்ததும் இணைப்பு கல்லூரி தாளாளர்கள், முதல்வர்கள், மாணவர்களுடன் கவர்னர் மற்றும் சிறப்பு விருந்தினர் கலந்துரையாடல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

 பட்டமளிப்பு விழா முடிந்ததும் வழக்கமாக கவர்னர் சென்று விடும் நிலையில், வழக்கத்துக்கு மாறாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்ற தகவல் கல்வியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் கவர்னர் அரசியல் பேசவே இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீப காலமாக கவர்னர் தான் இருக்கு பதவியை மறந்து கல்லூரி, பல்கலை விழாக்களில் அரசியல் பேசி வருகிறார்.

 கவர்னர் என்பவர் மக்களுக்காக பிரதிநிதி. ஆனால், அவர் ஒரு கட்சியை சார்ந்த முடிவுகளை, கொள்கைகளையும் மாணவர்கள் மத்தியில் புகட்டி வருகிறார்.

பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு அவர்கள் உயர் கல்வியை தொடரவோ, வேலைக்கு செல்லவோ தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழை வைத்து உயர்கல்வி சேரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு சேரும் நிறுவனங்களில் மாணவர்கள் அளித்து வந்தனர். இந்த தற்காலிக சான்றிதழ் 6 மாதங்கள் வரைதான் செல்லுபடியாகும். தற்போது, இந்த சான்றிதழ்கள் காலாவதியாகிவிட்டதால், படித்த படிப்புக்கு தகுதி சான்று இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

2021ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம் தவிர பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்கள் டிசம்பர் மாதத்திற்குள்ளாக நிறைவடைந்து விட்டன. ஆனால், நடப்பாண்டில் இதுவரை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மட்டும் தான் கடந்த டிசம்பர் 24ம் தேதி நடைபெற்றது. மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்கள் எப்போது நடைபெறும் என்ற வினாவுக்கான விடை அவற்றின் துணைவேந்தர்களுக்கே தெரியவில்லை. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் கடந்த டிசம்பர் 19ம் தேதி தமிழக ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவியை ஆளுனர் மாளிகையில் சந்தித்து பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கேட்டதாகவும், ஆனால், இதுவரை அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறாத பல்கலைகள்

1. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
2. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
3. அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
4. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
5. பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
6. சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
7. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை
8. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
9. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்
10. பெரியார் பல்கலைக்கழகம், சேலம்
11. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை
12. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை
13. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை
14. தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டுப் பல்கலைக்கழகம், சென்னை
15. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை
16. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
17. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை.
18. திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்
19. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்
20. தமிழ்நாடு இசை, கவின்கலை பல்கலைக்கழகம், சென்னை


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கட்பாண்டி கூறுகையில், ‘‘ஆளுநர் மாளிகை காலதாமதம் செய்வதால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலும் வேலை கிடைத்தும் மாணவர்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கவர்னர் வரமுடியாவிட்டால் மாற்று ஏற்பாடாவது செய்ய வேண்டும். 

இப்பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளில் இளநிலை படித்தவர்கள் தற்போது முதுநிலை முடித்து அதற்கான பட்டம் பெற்றுள்ளனர். ஆனால் இளநிலை பட்டம் இன்னும் வாங்காத நிலை உள்ளது கேலிக்கு உரியதாக உள்ளது. மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் கவர்னரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் சார்பில் சமூகஆர்வலர்கள் இணைந்து நீதி மன்றத்தை நாட உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

நீதிமன்றங்களோ ஆளுநர் மீது வழக்கே தொடுக்க முடியாது எனக் கையை விரித்து விடும் நிலையில் இந்த ரவி ஆளுநர் பதவியை வைத்துக்கொண்டு அரசியலமைப்புச்சட்டத்தை மீறி ஆடுகின்ற ஆட்டங்களை முடிவுக்கு எப்போதுதான் வரும்.

நீட்,ஆன்லைன் ரம்மி என மக்கள் நல சட்டங்களையும் கொண்டு வரவிடாமல் ஆர்.என்.ரவி ஆடுகிற  சங்கிஆட்டம் விரைவிலேயே முடிவுக்கு வரும் என்பதுதான் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு.

----------+---+-++++--------------------------++++-------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?