ராகுல்காந்தி சந்திக்கும் சூழல்.
ராஜீவ்காந்தி நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் :-
லண்டன் பேச்சு குறித்து நான் மன்னிப்பு கேட்க பாஜகவினர் கோரினர். இந்தியாவிற்கு எதிராக நான் பேசியதாக மத்திய அமைச்சர் கூறும் எனது லண்டன் பேச்சுக்களை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். லண்டன் பேச்சு குறித்து பேச அனுமதி கேட்டதற்கு மக்களவை சபாநாயகர் மறுத்துவிட்டார்.
அதானாயின் போலி நிறுவனங்களுக்கு 20,000 கோடி ரூபாய் யாருடைய பணம். அது எங்கிருந்து வந்தது?
உண்மையை சொல்வது தவிர வேறு எதிலும் எனக்கு விருப்பம் இல்லை. கைது செய்யப்பட்டாலும் உண்மையை தொடர்ந்து பேசுவேன்” என்று கூறினார்.
4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்த நாளிலேயே அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 102 (1) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் கீழ் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ராகுல் காந்தியின் பேச்சிற்காக அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம், 15,000 ரூபாய் அபராதமும் விதித்தது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி கர்நாடகாவின் கோலாரில் ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது, தன்னுடைய பேச்சில் "எப்படி திருடர்கள் அனைவருக்கும் மோதி என்ற குடும்ப பெயர் இருக்கிறது" என்று நீரவ் மோதி, லலித் மோதி போன்றோரை குறிப்பிட்டு ராகுல் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த புர்னேஷ் மோதி என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞரான புர்னேஷ் மோதி சூரத் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. வாகவும் உள்ளார். பூபேந்திர படேல் அரசில் அமைச்சராகவும் இருந்தவர் அவர். ராகுல் தெரிவித்த கருத்து மொத்த மோதி சமூகத்தையும் அவதூறு செய்வதாக புர்னேஷ் மோதி தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 499, 500 ஆகியவற்றின் கீழ் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 499வது பிரிவு, குற்றவியல் அவதூறு வழக்குகளில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்க வழிவகுக்கிறது.
சட்டப்பிரிவு 102(1) மற்றும் 191(1) இன் படி, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினர் ஏதேனும் லாபம் ஈட்டும் பதவியை வகித்தால், மனநிலை சரியில்லாதவராக இருந்தால், திவாலானவராக அல்லது சட்டப்பூர்வ இந்திய குடிமகனாக இல்லாவிட்டால், அவரது உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுகிறது.
தகுதி நீக்கம் செய்வதற்கான 2வது விதி, அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணையில் உள்ளது. கட்சித் தாவல் அடிப்படையில் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான விதிகள் இதில் உள்ளன.
இது தவிர, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் கீழ், எம்பி அல்லது எம்எல்ஏ உறுப்பினர் பதவியை இழக்கலாம்.
இந்த சட்டத்தின் மூலம் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வழிவகை உள்ளது.
பிரிவு 8 (2) இன் கீழ், பதுக்கல், லாபம் ஈட்டுதல், உணவு மற்றும் பானங்களில் கலப்படம் செய்தல் அல்லது வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் ஒருவரது பதவி ரத்து செய்யப்படும்.
பிரிவு 8 (3)ன் கீழ், ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அவர் உறுப்பினர் பதவியில் இருப்பதற்கான தகுதியை இழக்கிறார். இந்த விவகாரத்தில் சபாநாயகரின் முடிவு இறுதியானது.
இந்த குற்றவியல் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது மற்றும் பிரிவு 8(3) இன் கீழ் அவரது உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விதியின்படி, அந்த எம்பி அல்லது எம்எல்ஏ குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். அவர் விடுதலையான பின்பும் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கப்படும். அதாவது இரண்டு ஆண்டுகளுக்கும், அதன் பிறகு ஆறு ஆண்டுகளுக்கும் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது.
இதற்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்ட வர்கள்
லட்சத்தீவு எம்பியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது பைசல் தனது உறவினரான முகமது சாஹில் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. 5 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் முகமது பைசல் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜனவரி 11, 2023 அன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து தனது எம்பி பதவியை அவர் இழந்தார்.
இந்தியாவில் முதன்முதலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத் மசூத். 1990ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக ரஷீத் மசூத் பதவி வகித்தார். அப்போது திரிபுரா மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசின் இடங்களில் தகுதியில்லாத மாணவர்கள் சேர்ந்து படிக்க அவர் முறைகேடாக அனுமதி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்த 2013ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவ் பிகார் முதலமைச்சர், மத்திய அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். பிகார் மாநிலத்தை உலுக்கிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது பிகாரில் உள்ள சரண் தொகுதி எம்.பி.யாக அவர் இருந்தார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து லாலு பிரசாத் யாதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் சர்மாவும் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால், 2013-ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர் பதவியை அவரும் இழக்க நேரிட்டது. அப்போது பிகாரின் ஜெகனாபாத் தொகுதி எம்.பி ஆக அவர் இருந்தார். 1991-96 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
செப்டம்பர் 27, 2014ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மைக்கல் டி குன்ஹா ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்தார். இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் முசாஃபர் நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்துக்கள் - இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 62 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ ஆக இருந்த விக்ரம் சைனி மீது வழக்குப் பதியப்பட்டது. எம்எல்ஏ, எம்பி மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. முசாஃபர் நகர் கலவர வழக்கில் விக்ரம் சைனி குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் கடந்த 2022 அக்டோபர் மாதம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து விக்ரம் சைனியின் தொகுதி காலியாக இருப்பதாக உத்தரப்பிரதேச சட்டமன்றம் நவம்பர் 7, 2022 தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆசம் கான் 2019ல் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பாஜக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.
அக்டோபர் 27, 2022 அன்று, கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நிஷாந்த் மான் , சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஆசம் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அடுத்த நாள், உத்தரப் பிரதேச சட்டமன்றச் செயலகம் ஆசம் கானை சபையில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தது.
ஆசம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லா ஆசாம் ஆகியோர் 2008ஆம் ஆண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் கீழ் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
15 ஆண்டுகள் கழித்து பிப்ரவரி 2023ல் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இருவரும் குற்றவாளிகள் என்றும் அப்துல்லா ஆசாமுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் மொராதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எம்எல்ஏ பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்..'
-------------------------------------------------------------------------------------------------------------------------------------