ரவி யா?ஆளுனரா?
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் துரைமுருகன் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தின்மீது சட்டப்பேரவையின் கதவுகள் மூடப்பட்டு எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்..
``தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் நண்பராக இருக்க ஆளுநர் ரவி தயாராக இல்லை. ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராகத் தற்கொலைகள் அதிகரித்தபோதிலும் சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். அரசியல்வாதிபோல் ஆளுநர் செயல்பட்டுவருகிறார். தமிழக சட்டமன்றத்தை அவமதிக்கிறார். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் விமர்சனம் என ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றிவிட்டார். அரசின் கொள்கை முடிவுகளை விமர்சித்து பொதுவெளியில் ஆளுநர் பேசுகிறார். ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும். சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடையூறு செய்தால் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்” என்றார் முதல்வர் ஸ்டாலின்..
ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை துரைமுருகன் கொண்டுவந்தார். தமிழக ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும், சட்டப்பேரவையிலுள்ள ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆளுநருக்கு எதிரான தீர்மானத்துக்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையின் கதவுகள் மூடி, எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு, எம்.எல்.ஏ-க்களின் பகுதி வாரியாக முறைப்படி நடைபெற்று நிறைவேற்றப்பட்டது..
முன்னதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அது தொடர்பான விவாதத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ஆகியோரை வலியுறுத்தும் விதமாக தமிழக அரசு இந்தத் தனித் தீர்மானத்தைக் கொண்டுவருகிறது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, சட்டசபை குறித்தும் தமிழகத்தில் நடைபெற்ற கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மேலும், நிலுவையிலுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் வேண்டும் என்று அவர் கூறிய கருத்துகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.
இந்த நிலையில்தான் தமிழக அரசு இன்று தனித் தீர்மானத்தைதமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினே கொண்டுவருகிறார்.
-----_--------_---------_-----------_--------------_
மூன்று நாள் முன்தேதியிட்டு
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தேறிய வண்ணம் இருந்ததால், அத்தகைய ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடைவிதிக்கும் விதமாக கடந்த ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருமாத காலம் கழித்து நவம்பரில், விளக்கம் கேட்டு மசோதாவை அரசுக்கே திருப்பியனுப்பினார். பின்னர் தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து உடனடியாக ஆளுநருக்கு மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தினார்.
ஆனால், ஒப்புதலளிக்காமல், `மாநில அரசுக்கு இதில் சட்டமியற்ற அதிகாரம் இல்லை' என கடந்த மாதம் மசோதாவை மீண்டும் அரசுக்கே திருப்பியனுப்பினார். அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வியொன்றில், `மாநில அரசுக்கு சட்டமியற்ற அதிகாரம் உண்டு' என மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றினார். ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் மசோதா அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கிடையில் அண்மையில், ``மசோதா ஒன்று நிறுத்துவைக்கப்பட்டாலே அது கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம். மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதும், நிலுவையில் வைப்பதும், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதும் ஆளுநரின் முடிவு" என ஆளுநர் ரவி கூறியது பெரும் பேசுபொருளானது.
முதல்வர் ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஏப்ரல் 12-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன.
இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த நிலையில் ஆளுநருக்கெதிராக தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதலளித்திருக்கிறார்.
அதை மூன்று நாள் முன் தேதியிட்டு கையெழுத்திட்டு "தான் மூன்று நாள் முன்னதாகவே ஒப்புதலளித்து விட்டதாக்க் கூறியுள்ளார்.
மேலும், தற்போது ஒப்புதலளிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின்படி, ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், இது தொடர்பாக விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
-----_-------------------_------------------------_----------