முழுமையாக மூடு

 ''குஜராத், கோவா, மகாராஷ்டிரா முதலான மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு தொழிற்சாலைக்கு தமிழ்நாட்டில் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பதும் பிரச்சனைக்குரிய விவகாரமாகவே உள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விவகாரங்களை தாறுமாறாக மாற்றி, உண்மைகளை மறைத்து, தமிழ்நாடு அரசின் ஒப்புதலை பெற்றதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) கூறியுள்ளது.

இந்நிறுவனம், தவறான சுற்றுச்சூழல் விளைவு அளவீடுகள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்து சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை அமைய உள்ள இடத்தைச் சுற்றி குறைந்தது 25 கிலோ மீட்டர் தூர அளவிற்கு, சூழலியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடிய இடங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்னும் விதியை மீறும் வகையில் தவறான விவரங்களை கூறி சுற்றுச் சூழல் ஒப்புதலை பெற்றுள்ளது.

ஏனெனில் இத்தொழிற்சாலை அமைந்த இடம் மன்னார் வளைகுடா தேசிய பூங்காவிற்கு வெகு அருகாமையில் உள்ளது என்றும், மேலும் இந்த நிறுவனம், சமர்ப்பித்துள்ள சுற்றுச் சூழல் சான்றிதழ், பொதுமக்களின் பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்டது அல்ல என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்ட நாளிலிருந்து, பொது மக்கள், இத்தொழிற்சாலையால் சுற்றுப்புற சூழலுக்கு மாசு உண்டாக்குகிறது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வேதாந்தா நிறுவனம் தொழிற்சாலையில் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்குவதற்காக அனுமதி கோரிய போது, பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

டெல்லியைச் சார்ந்த மேலே கூறிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் பொது இயக்குனர் சுனிதா நரேன் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக, இத்தொழிற்சாலை அனைத்து விதிகளையும் புறந்தள்ளிவிட்டு, இப்பகுதியில் பெரிய அளவில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி உள்ளது, என்று தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

இவ்வளவு மோசமான வரலாற்றை கொண்ட வேதாந்தா நிறுவனத்தின், தொழிற்சாலை உலகத்தின் எப்பகுதியிலும் அமையக் கூடாது. தூத்துக்குடி நகரத்திற்கு தொழிற்சாலையால், சுற்றுப்புற சூழலுக்கு பெரும் தீங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனம், தனது உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்க அனுமதி கோரியது. பொதுமக்களின் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த தொழிற்சாலையை மூடச் சொல்லி 2010ஆம் ஆண்டு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.



2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதற்காக ரூபாய் 100 கோடி அபராதம் விதித்தது. 2013, மார்ச் மாதத்தில், இத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையால், சுற்றுப்புறத்தில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலையை மூடும்படி 29.3.2013 அன்று ஆணையிட்டது. ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம், சில டெக்னிக்கல் விதிகளைக் காட்டி அனுமதி பெற்று நடத்தத் துவங்கியது.

இந்நிலையில் மக்களின் போராட்டம் வலுப்பெற்று வந்தது. 2018 ஆம் ஆண்டு மே திங்கள் 22 ஆம் நாள், அமைதியாக போராடி வந்த மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 102 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிறுவனத்தின் பொறுப்பற்ற, மோசமான செயல்களால் சூழலியல்ரீதியாக பாதிப்பு ஏற்படுத்திய காரணங்களுக்காக, இத்தொழிற்சாலையை தூத்துக்குடியில், நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட இந்நிறுவனம், பல தவறான சான்றிதழ்களைக் கொடுத்து தமிழ்நாட்டில் அனுமதி பெற்ற விவரங்களை ஆராய்ந்து, அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிடும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.''

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை உடனே முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புவேந்தர் யாதவுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எழுதி அனுப்பியுள்ள கடிதம்.

--------------------------++++++------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?