முழு மதுவிலக்கு

நிறைவேற முடியா கனவு!

 அண்மையில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலா் உயிரிழந்துள்ள செய்தி தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 

இந்த துயர சம்பவம் பற்றி என்னுடைய இனிய நண்பரான தமிழக டிஜிபி புள்ளிவிவரங்களை அள்ளி வீசியிருக்கிறாா். மேலும், இந்த மரணங்கள் கள்ளச்சாராயத்தினால் அல்ல மெத்தனால் என்ற வேதிப்பொருளால்தான் என்றும் கூறியுள்ளாா்.

அரசு பின்தங்கிய மாவட்டங்களான தருமபுரி, வேலூா் போன்ற மாவட்டங்கள் தொழிற்சாலைகள் அமைத்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் வேதிப்பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க மெத்தனால் என்ற வேதிப்பொருளை வழங்கி அந்த தொழிற்சாலைகளுக்கு ஆயத்தீா்வை விலக்கு அளிக்கிறது.

ஆனால் தொழிற்சாலை உரிமையாளா்கள் இந்த மெத்தனாலை பக்கத்து மாநிலங்களுக்கு விற்று விடுகின்றனா். அதன்மூலம் அந்த மாநிலத்தில் உள்ள சிலா் தமிழகத்துக்கு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அனுப்புகின்றனா். அதைக் குடிக்கும் பாமர மக்கள் கொத்துக்கொத்தாக சாகிறாா்கள்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. ஆனால், அதுஅவ்வளவு சுலபமல்ல. 

 ராஜாஜி 1937-இல் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதன் முதலாக மது விலக்கை அமல்படுத்தினாா். 
அதன்மூலம் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரி செய்ய விற்பனை வரியைக் கொண்டு வந்தாா். 
விற்பனை வரி இன்றளவிலும் அமல்படுத்தப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் முதல்வரானதும், அன்றைய மெட்ராஸ் ராஜதானி முழுமைக்குமாக அதை விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தினாா். 
1971 வரை இந்தக் கொள்கை அமலில் இருந்தது. அதன் பிறகு, தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சியினா் அவ்வப்போது இந்தக் கொள்கையை மாற்றி அதற்கான காரணங்களையும் சொல்லி வந்தனா்.
குறிப்பாக, மதுவிலக்கு கொள்கையைத் தளா்த்த வேண்டாம் என்று மூதறிஞா் ராஜாஜி மன்றாடியும், மூடிய மது விற்பனை கடைகளை 1971-இல் அன்றைய அரசு திறந்தது.
அதன்மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய்தான் முக்கியமாகக் கருதப்பட்டது. அந்தப் பணத்தை ராஜாஜி ‘கறை படிந்த பணம்’ என்று கூறினாா். அதே அரசு சில வருடங்களில் திரும்பவும் மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் முழு மதுவிலக்கு முயற்சி தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் மதுவிலக்கு 1920 முதல் 1933 வரை 13 ஆண்டுகள் அமலில் இருந்தது.
 அதன் விளைவாக அமெரிக்காவில் ஊழல் மலிந்து, திருட்டுச் சந்தையில் மது விற்கும் மாஃபியா கூட்டங்கள் உருவானதால் குற்றங்கள் பெருகி, உரிமம் இல்லாத துப்பாக்கிகன் எங்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. தாதாக்களின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது.

பின்னாளில் அமெரிக்க அதிபரான ஜான் கென்னடியின் தந்தையான ஜோசப் கென்னடி. கோடீஸ்வரரானது, திருட்டுச் சந்தையில் மது விற்றதால்தான் என்பது அதிா்ச்சி தரும் உண்மை. அமெரிக்காவில் இந்த காலகட்டத்தில் உருவான பெரிய தாதா ‘அல் கபோன்’ தனி ராஜ்யமே நடத்திக் கொண்டிருந்தாா். 

அவா் இறந்தபோது அவரது சடலத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் சவ ஊா்வலத்தில் உயா்நிலை போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோருடன் அமெரிக்காவில் மேல்நிலைகளில் உள்ள தொழிலதிபா்களும் கலந்து கொண்டாா்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவம் அந்த ’தாதா’ எந்த அளவுக்கு செல்வாக்குடன் வாழ்ந்தாா் என்பதையும்,அந்த அதிகாரிகளும், நீதிபதிகளும் அந்த தாதாவுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தாா்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரை, மதுவிலக்கு கொள்கையைப் பரிசீலித்து அது பற்றிய பரிந்துரைகளை முன்வைக்க, பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு தேக்சந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு தன்னுடைய அறிக்கையில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. 

ஆனால், அதேசமயத்தில் முழு மதுவிலக்கின் விளைவாக ஏற்படக்கூடிய தீய விளைவுகளையும் சுட்டிக் காட்டியது. கள்ளச் சாராயம் காய்ச்சுதல், அதன் தொடா்பாக ஏற்படும் லஞ்ச ஊழல்கள் ஆகியவற்றையும் கோடிட்டு காட்டியது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் மது அருந்துபவா்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆயினும், அங்கேயும் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் நடக்கத்தான் செய்கிறது என்று அந்தக் குழு சுட்டிக் காட்டியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் அதிகமாக கிராமப்புற இளைஞா்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனா் என்று தெரிகிறது.

 இதனால், அவா்களின் வருமானம் பெருமளவில், பாதிக்கப்பட்டு அதன் விளைவாகப் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கெல்லாம் தீா்வு, மழு மதுவிலக்கா?

 கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய அனுபவம், குறிப்பாக மதுவிலக்கை அமல்படுத்தும் பிரிவில் பணியாற்றிய அனுபவம், இன்னும் குறிப்பாக ஆயத்தீா்வைப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றைப் பின்னணியில் கொண்டு நான் கூற விரும்புவதெல்லாம் முழு மதுவிலக்கு அமலில் இருந்தபோது, அதன் விளைவாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது என்பது ஒரு தொழிலாகத் தமிழ்நாட்டில் பல இடங்களில் நடந்து கொண்டிருந்தது.

அதன் விளைவாக எங்கும் எதிலும் ஊழல் என்ற நிலை ஏற்பட்டது. மதுவுக்கு அடிமையான பல இளைஞா்கள் குளோரல் ஹைட்ரேட், மீத்தேன் போன்ற விஷப்பொருள்களை கள்ளச் சாராயத்தில் கலந்து அருந்திவிட்டுக் கொத்துக்கொத் தாக இறந்தனா். இதனால், கிராமப் பொருளாதாரம் சீரழிந்து நின்றது.

இது மட்டுமல்ல, ஒரு புதிய வகையான தொழிலதிபா்கள் கள்ளச் சாராயத்தின் மூலமாகப் பணபலம் பெற்று உருவாகவும் செய்தனா். அமெரிக்காவில் உருவான ’அல்கபோன்’ மாதிரி இந்த சாராய அதிபா்களின் செல்வாக்கு, நாணயமற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை வியாபித்திருந்தது. 

அந்த காலகட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் ஒரு சதவீதம்தான் வெற்றி பெற்றது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கள்ளச்சாராய அதிபா்கள் தங்களது பணபலத்தாலும், புஜபலத்தாலும் நீதித்துறையையும் தங்கள் வலையில் வீழ்த்தி அதன் மூலம் சிறையிலிருந்து வெளியே வந்து சுதந்திரமாக பவனி வந்தனா். ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்கிற பேதமில்லாமல் அரசியல்வாதிகள், மேலிருந்து அடிமட்டம் வரை அரசு ஊழியா்கள் என்று எல்லோரையுமே விலைக்கு வாங்கி, தனி ராஜாங்கமே நடத்தி வந்தனா்.

இப்பின்னணியில் நம்முள் எழும் கேள்வி என்னவெனில், இந்த சம்பவங்களினால் நாம் சாராயக் கடைகளைத் திறந்துவிடலாமா என்பதுதான். அதற்கு என் பதில் ‘தயவு செய்து மதுக்கடைகளைத் திறந்துவிடாதீா்கள்’ என்பதுதான். 

ஆயினும், நமது கொள்கையை முழு ம விலக்கு என்ற நிலையிலிருந்து மாற்றி, வரம்புக்கு உள்பட்ட கொள்கையை உருவாக்க வேண்டும் என்பதும், அதற்கு ஏற்றாா்போல சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதும்தான்.
மது வகைகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது என்ற நிலையை உருவாக்க முதலில் டாஸ்மாக் கடைகளையும், தனியாா் மதுக்கூடங்களையும் மூடுவது. பொது இடங்களில் மது அருந்துவதைக் கடுமையான சட்டத்தின் மூலம் தடுப்பது. மது அருந்த அதிகமான பா்மிட் கட்டணம் விதித்து, மது அருந்துவோா் எண்ணிக்கையைக் குறைப் பது. நட்சத்திர விடுதிகளில் மது அருந்த அனுமதி வழங்கினால் அதற்கு அதிசமான கேளிக்கை வரி, ஆயத் தீா்வை விதித்து அங்கு வந்து மது அருந்தும் வாடிக்கையாளா்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, காவல்துறை, கள்ளச்சாராய லாபியின் கைக்கூலியாக மாறிவிடாமல் இருக்க, நோ்மையான அதிகாரிகளைத் தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு முழு அதிகாரமும், ஆட்சியாளா்களின் ஒத்துழைப்பும் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மேற்கூறிய நடவடிக்கைகளை எடுத்தால் நாம் பெருமளவில் மது உற்பத்தி, விற்பனை, மது அருந்துபவா்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறைக்கலாம். அதைவிடுத்து ஏதோ மந்திரக்கோலை அசைத்து மதுக் கடைகளை மூடிவிடலாம் என்று நினைப்பது தவறு.

மது அருந்துபவா்கள் செத்து மடியட்டுமே என்று மதுவின் மீதான கோபத்தாலும், சமுதாயத்தின் மீதான அக்கறையாலும் சொல்லலாமே தவிர, கண் முன்னால் மக்கள் மரணமடைவதைப் பாா்த்துக் கொண்டிருக்க முடியுமா?

வெ.வைகுந்த்
தமிழக முன்னாள் டி.ஜி.பி.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?