லாட்டரி (கொள்ளை)அடிக்குது

 2 நாள் முடக்கத்திற்கு பின் இன்று கூடுகிறது நாடாளுமன்றம். மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான முகாம்கள் தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம். தர்மபுரி மாவட்டம் தொக்கூரில் சிறப்பு முகாமமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பு ஏற்று மணிப்பூர் பாஜ அரசு பதவி விலக கூறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

• வெளி மாநிலங்களில் இருந்து வரத்த குறைந்ததால் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. காய்கறி, மளிகை பொருட்கள் விலையை தொடர்ந்து அரிசி விலையும் உயர்ந்ததால், ஏழை, எளிய மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

• தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்றது. சிறுபான்மையின விரோத நடவடிக்கை எனக்கூறி பல்வேறு ஊர்களில் எஸ்.டி.பி.ஐ கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது.

• மணிப்பூரில் பெண்கள் பலர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. உடனடி தீர்வு காண வலியுறுத்தி குக்கி மகளிர் அமைப்பினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்னர்.

• வேலூர் பீஞ்சமந்தையில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்ட சாலை இன்று திறக்கப்படுகிறது. மலைகிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியது தமிழக அரசு.

-------------------------------------------------

ஹரியானாவில்  பாஜக நிலமை?

ஹரியானவில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 

இந்நிலையில் தான் வரும் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக பெரியஅளவில் சரியும் எனவும் பரபரப்பான கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். 

இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில் தான் கடந்த 2019 ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

பாஜக 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜேஜேபி கட்சி 10 தொகுதிகளிலும், ஐஎன்எல்டி, எச்எல்பி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும்,பெற்றனர்.*

இதையடுத்து ஹரியானாவில் பாஜக ஆட்சியை பிடித்தது. ஜேஜேபி கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. 

முதல்வராக பாஜகவின் மனோகர் லால் கட்டார் பொறுப்பேற்றார். துணை முதல்வராக ஜேஜேபி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்றனர். 

இதன்மூலம் தற்போது ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அக்டோபர் மாதத்தில் ஹரியானாவில் தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது.

 இந்நிலையில் தான் ஹரியானா சட்டசபை தேர்தல் குறித்து 'ஸ்மால் பாக்ஸ் இந்தியா' எனும் அமைப்பு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.

இந்த 'ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பு குஜராத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் எனவும், இமாச்சல பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனவும், டெல்லி மாநகராட்சிதேர்தலில் ஆம்ஆத்மி வெல்லும் எனவும் கணித்து கூறி இருந்தது. இந்த கணிப்புகள் அப்படியே பலித்த நிலையில் தான் ஹரியானா சட்டசபை தேர்தல் குறித்த கணிப்பும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

தற்போது வெளியாகி உள்ள இந்த கருத்து கணிப்பின்படி ஹரியானாவில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில்காங்கிரஸ் கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் அதனை விட கூடுதல் இடங்களை கைப்பற்றும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தற்போது ஆட்சியில்உள்ள பாஜக அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜக கூட்டணியில் உள்ள ஜேஜேபி கட்சி 6 தொகுதிகளிலும், ஐஎன்எல்டி கட்சி 2 இடங்களிலும், மற்றவர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என 'ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39 சதவீத ஓட்டுகளை பெறும் எனவும் பாஜக 33 சதவீத ஓட்டும், ஜேஜேபி கட்சி 11 சதவீத ஓட்டும், ஐஎன்எல்டி கட்சி 10 சதவீத ஓட்டும், மற்றவர்கள் 7 சதவீத ஓட்டுகளையும் பெறுவார்கள் என 'ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த கருத்துகணிப்பு பலிக்கும் பட்சத்தில் ஹரியானாவில் பாஜகவின் 10 ஆண்டு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.*

ஏனென்றால் கடந்த 2014 முதல் ஹரியானாவில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. அன்று முதல் மனோகர் லால் கட்டார் முதல்வராக செயல்பட்டு வருகிறார். வரும் தேர்தலில் தற்போதைய கருத்து

கணிப்பின்படி முடிவுகள் அமைந்தால் 10 ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்வராக ஒருவர் பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------


லாட்டரி (கொள்ளை)அடிக்குது

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரபரப்பு இல்லாத பகுதிகளில் சிறிய கடையோ, வீடோ எடுக்கும் இந்த கும்பல் முதலில் வாடிக்கையாளர்களை சேர்க்கிறது.

தினக்கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் நம்பர் லாட்டரி சூதாட்டம் மீது இருக்கும் மோகத்தால் இங்கு தேடி வந்து சேர்கின்றனர். வாடிக்கையாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க, இவர்களுக்காக வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டுகிறது.

இந்த குழுவில் மூன்று அல்லது ஐந்து எண்களை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிடுகின்றனர். இதில் ஒரு எண்ணையோ அல்லது பல எண்களையோ பணம் கொடுத்து வாங்க வேண்டும். 

தாங்கள் வாங்கும் எண்ணுக்கு பரிசு விழுந்தால் அதை ஆயிரம் மடங்கு பரிசு வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி இந்த மோசடி நடைபெறுகிறது.

கேரளா, பூடான், அசாம் என பல்வேறு மாநிலங்களின் லாட்டரி விற்பனையை மையமாக கொண்டு தமிழ்நாட்டில் செயல்படுகிறது 

இந்த நம்பர் லாட்டரி சூதாட்டம். எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த இந்த காட்டன் சூதாட்டம், இப்போது ஊருக்கு ஊர் பெருகி வருவதை காணமுடிகிறது. 

சிலர் சில ஆயிரங்களை சம்பாதித்துவிட்டு பல லட்ச ரூபாய்களை இழக்கின்றனர். 70 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நம்பர் லாட்டரிக்கு பரிசு விழுந்தால் 100 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பரிசாக கிடைக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்குகிறது இந்த சூதாட்ட கும்பல். ஒரு பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்துவிடும் நிலையில், அவர்கள் அனைவரும் நேரில் வந்து எண்களை தேர்வு செய்வதோ, பணத்தை செலுத்துவதோ முடியாத நிலை ஏற்படுகிறது.

 இதனால் இவர்களுக்கு என்று வாட்ஸ் ஆப்பில் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதில் வாடிக்கையாளர்கள் இணைக்கப்படுகின்றனர்.

அதன் பின்னர் தினமும் வாடிக்கையாளர்களுக்கு நான்கு இலக்க எண் உதாரணமாக 1234 என ஒரு பட்டியல் வெளியிடப்படும். அதில் ஏதேனும் ஒரு எண்ணை தேர்தெடுத்து பதிவு செய்ய வேண்டும். 20 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை பணம் செலுத்த வேண்டும். 

ஒருவர் அவரின் வசதிக்கு ஏற்ப எத்தனை எண்களை வேண்டுமானாலும் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். பணத்தை நேரடியாக வந்து செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பேடிஎம், ஜிபே மூலமாக பணத்தை செலுத்துகிறார்கள். 

அவர்கள் தேர்ந்தெடுக்கும் எண் சரியாக இருந்து பரிசு விழுந்தால், 70 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 5 ஆயிரம் பேர் வரை தினமும் இந்த சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த கும்பலிடம் சிக்குவது, தினக்கூலி தொழிலாளர்கள், ஆடோ ஓட்டுனர்கள் என தினமும் உழைத்து வேர்வை சிந்தி சம்பாதிக்கும் தொழிலாளர்களே அதிகம். கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டுகளுக்கும் தமிழ்நாட்டில் நடைபெறும் நம்பர் லாட்டரி சூதாட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

 என்றாலும் கேரளா, அசாம் மாநிலங்களில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டுகளின் நம்பர்களை அடிப்படையாக கொண்டே தமிழ்நாட்டில் நம்பர் லாட்டரி சூதாட்டம் நடைபெறுகிறது.

அதாவது கேரளா, அசாம் மாநிலத்தில் எந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுகிறதோ, அதே எண்ணை தேர்தெடுப்பவர்களுக்கே தமிழ்நாட்டிலும் பரிசு வழங்கப்படும். பரிசு தொகை விழுந்தால் அன்று மாலை அல்லது மறுநாள் காலை பரிசு தொகை வழங்கப்படுகிறது. 

இதையும் நேரில் சென்று வாங்க வேண்டியதில்லை. ஜிபே, போன் பே, பேடிஎம் மூலமாக பணம் வந்து சேர்ந்து விடும். ஒவ்வொரு பகுதியிலும் நாள் ஒன்றுக்கு 20 லட்ச ரூபாய் வரை வசூலாகிறது.

நம்பர் லாட்டரி சூதாட்டம் குறித்து சமூக செயல்பாட்டாளரும், பத்து ரூபாய் இயக்கத்தில் மாநிலச்செயலாளர் பாஸ்கரிடம் பேசினோம். அவர் பேசுகையில், "10 ரூபாய் செலுத்தினால் 1000 ரூபாய் கிடைக்கும் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டுகிறது என்ற ஆசைவார்த்தை கூறி வியர்வை சிந்தி உழைக்கும் மக்களை சுரண்டுகிறது இந்த கும்பல். 

குறிப்பாக பெட்டிக்கடை மற்றும் சிறு வீடுகளை வாடகைக்கு எடுத்து இந்த காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது. சிலர் வீடுகளுக்குள் அலுவலகம் அமைத்து சூதாட்டத்தை நடத்துகின்றனர். 

வேலூர் மாவட்டத்தில் 3ம் நம்பர் காட்டன் தான் மாஸ் காட்டுகிறது. நம்பர் எழுதிய சின்ன சின்ன டோக்கன்களை பணம் கொடுத்து வாங்க வேண்டும். பிறகு ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அறிவிக்கப்படும் முடிகள் இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக மொபைல்ஆப் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் வெளியிடப்படுகிறது.

வெற்றி பெறுபவர்களுக்கு குறைவான பணமே கொடுக்கப்படுகிறது. ஆனால், ஒரு மணிநேரத்திற்கு 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பெரும் முதலாளிகள் இந்த சூதாட்டத்தின் மூலம் பெருவதாக கூறப்படுகிறது.

மிட்டர் வட்டிக்கு கடன் வாங்கி காட்டன் சூதாட்டத்தில் விளையாடிய பல பேர் வீடு, பொருட்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். 

கடனாளியான சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் புரளுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டான் ஜாக்பாட் என்ற பெயரில் சென்னை புறநகர் பகுதிகளான திருவள்ளூர்,ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் நடத்தி வரும் சூதாட்டத்தை காவல்துறையினரும் கண்டுகொள்ளவில்லை.

ஆகையால் இதுபோன்ற ஏழை மக்களின் வாழ்க்கையை சூதாடும் காட்டன் சூதாட்டத்தை தமிழக அரசு காவல்துறை மூலம் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் .

மக்கள் பணம் வீணாவதைத் தடுக்க கேரளாவைப் போல் சட்ட,திட்டங்களுடன் தமிழ்நாடு அரசே லாட்டரியை துவக்கி நடத்தலாம்.

அதன் மூலம் ஆன்லைன் ரம்மியையும் ஓரங்கட்டலாம்.

---------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?