தங்கச்சாலை

 சென்னையில் நிர்பயா திட்டத்தில் 4,300 மின்கம்பங்கள் அமைக்கும் பணி ஆரம்பம்.

இந்தியா கூட்டணி.மும்பை கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம். இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளதாக தகவல்.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.10 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,910,780 பேர் கொரோனா வால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 694,229,081 பேர்பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 666,204,445 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,534 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 திருவள்ளூரில் இருந்து சென்னை  வந்த மின்சார ரயில் பெட்டியில் திடீரென கரும்புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஓடினர். மதுரையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலையில் ரயில் பெட்டி தீப்பிடித்து 9 பேர் பலியாகினர். 

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை. தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும். இன்று இறுதி முடிவு .

,"ஒன்றிய அரசில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எல்லா ஆட்சிக் காலத்திலும் நடப்பது தான். இதை ஊழல் எனக் கூறக் கூடாது."     -எடப்பாடி பழனிசாமி.

இரு சமூகத்தினர் இடையேயான மோதலால் கலவர பூமியாக மாறிய மணிப்பூரில், பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது.

-----------------------------------------

தங்கச்சாலை அமைப்பு?

துவாரகா விரைவுச்சாலை பாலம் தொடர்பான வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, இது ஒரு இன்ஜினியரிங் அதிசயம் என்று குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், இது சாதாரண அதிசயம் அல்ல, இதுவரை நடந்திராத அளவுக்கு அரங்கேறியுள்ள கற்பனைக்கே எட்டாத ‘அதிசய ஊழல்’ என எதிர்க்கட்சிகள் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக வரிந்து கட்டி களம் இறங்கியுள்ளன. 

டெல்லி குருகிராம் இடையேயான இந்த திட்ட ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது ஆம் ஆத்மி.துவாரகா விரைவுச்சாலை தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து தான் இந்த பூதாகரமான பிரச்சனை தலைதூக்கி, ஒன்றிய பாஜ அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. 

பாரத் மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக துவாரகா விரைவுச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் குருகிராம் இடையே தேசிய நெடுஞ்சாலை 48ல் 14 வழி உயர் மட்டச் சாலை அமைப்பதன் மூலம் அந்தச் சாலையில் நெரிசலை போக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலில் இந்தச் சாலை அமைக்கும் திட்டத்தை 2006ம் ஆண்டு செயல்படுத்த முன்வந்தது காங்கிரஸ் தலைமையில் இருந்த அப்போதைய அரியானா அரசு தான். குருகிராம் மானேசர் நகர்ப்புற கட்டுமான திட்டத்தின் கீழ், டெல்லி துவாரகாவில் இருந்து குருகிராம் வரை 29.06 கிலோமீட்டர் தூரத்துக்கு விரைவுச் சாலை அமைக்க முடிவு செய்திருந்தது. 

இதற்காக 150 மீட்டர் நிலத்தையும் கையகப்படுத்தியது. ஆனால் இந்தத் திட்டம் பின்னர், ஏதோ காரணங்களால் கிடப்பில் போய்விட்டது. இதன் பிறகுதான் இந்தத் திட்டத்தை பாரத் மாலா பரியோஜனா – 1 திட்டத்தின் கீழ் செயல்படுத்த பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து 90 மீட்டர் நிலம் அரியானா அரசால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இலவசமாக ஒப்படைக்கப்பட்டது. 

ஒன்றிய அரசு செயல்படுத்தும் இந்த திட்டத்துக்கான செலவு பல மடங்கு அதிகரித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது, கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ.18.20 கோடிக்கு திட்டப்பணிகளை மேற்கொள்ள மட்டுமே ஒன்றிய அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியிருந்தது. 

ஆனால், அமைச்சரவை குழுவின் ஒப்புதல் கிடைத்தபிறகு, கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடி என்ற விகிதத்தில் பொறியியல், கொள்முதல், மற்றும் கட்டுமான டெண்டரை விட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம், திட்டப்பணிக்கான செலவு அமைச்சரவை ஒப்புதல் அளித்த ரூ.529 கோடியில் இருந்து ரூ.7,287 கோடியாக அதிகரித்து விட்டது. 

அதாவது அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியதை விடவும் கூடுதலாக ரூ.6,758 கோடி முறைகேடாக செலவிடப்பட்டுள்ளது என்பதை சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 

இந்த பகீர் விவரம் வெளிவந்த பிறகுதான், தார்ச்சாலைக்கு பதிலாக தங்கத்தில் சாலைபோடும் திட்டத்தையா செயல்படுத்துகிறது ஒன்றிய பாஜ அரசு என எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்கத் துவங்கியுள்ளன.

ஏற்கெனவே 6 வழிச்சாலை இருக்க அதை விரிவுபடுத்துவதை விட்டு விட்டு, உயர்மட்டச் சாலை அமைக்க திட்டமிட்டது ஏன் என்ற கேள்வியையும் சிஏஜி எழுப்பியுள்ளது. ஆனால், முதலில் 14 வழிச்சாலையை தரையில் அமைக்க திட்டமிட்டதாகவும், பின்னர் உள்ளூர் மக்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக 8 வழி மேம்பால சாலையையும், 6 வழிச்சாலை தரையிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது என நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

உள்ளூர் மக்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக பல மடங்கு அதிக பணம் செலவிட்டு உயர்மட்டச் சாலையை அமைக்க வேண்டிய அவசியமே இல்லை.

மக்கள் சாலையை கடக்க தீர்வு காணும் வகையில், தேவைப்படும் இடங்களில் சுரங்கப்பாதை அமைத்தாலே போதுமே. இதற்காக இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தி கூடுதலாக ரூ.6,758 கோடி செலவு செய்து வீணடித்திருக்கிறீர்களே என சிஏஜி அறிக்கை கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. 

மேலும் இந்த திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்த்தீர்கள் அனைவரும் ஒன்றியமைச்சர் நிதின் கட்கரியுடன் நெருக்கமாக உள்ளவர்கள் எனவும் கூறப்படுகிறது.

விரிவான திட்ட அறிக்கை இல்லாமலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய சிஏஜி, அரியானா அரசு 90 மீட்டர் நிலம் வழங்கியிருந்தாலும் 14 வழிச்சாலை அமைக்க 70 முதல் 75 மீட்டர் நிலம் போதுமானது என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒன்றிய பாஜ அரசு மீதான இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. துவாரகா விரைவுச்சாலை திட்டம் கற்பனைக்கெல்லாம் எட்டாத அளவுக்கு அதிக செலவில் அமைக்கப்படுவது யாராலும் ஏற்க முடியாத ஒன்று என அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த சிஏஜி அறிக்கை சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. 

-------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?