நிபா ஆபத்து.

 ஆன்லைன் வர்த்தக நடைமுறைக்கான சட்ட விதிகளை மீறியதாக அமேசான் நிறுவனம் மீது வழக்கு.அமெரிக்க அரசு தொடர்ந்தது.

அக்.1 முதல் கட்டணங்கள் காசோலை, வரைவோலை, ஆன்லைனில் மட்டுமே குடிநீர் வரி செலுத்த வேண்டும்.    ரொக்கமாக பெறப்படாது  குடிநீர் வாரியம் அறிவிப்பு .

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து புதுச்சேரியில் கல்லூரி மாணவர் போராட்டம்.

சென்னை ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை.

ஈராக்கில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 113 பேர் #உயிரிழப்பு.. 150 பேர் படுகாயம்.. மணமக்களும் பலி.

வெளிநாடுகளில் போலி கணக்குகள் மூலம் பல கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் பாஜ க சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் , பாஜ மாநில தலைமை அலுவலக ஊழியர் ஜோதிகுமார் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாட்டு முதலீடு ஆவணங்கள், பினாமி பெயரில் உள்ள சொத்துக்கள் சிக்கியதாக தகவல் .

-------------------------------------------

நிபா ஆபத்து.

கேரளா, கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியில் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 49 வயதான ஒருவர், கடந்த மாதம் 30ம் தேதி இறந்தார். 

அவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தன.இந்தச் சூடு காய்வதற்குள் 40 வயது மதிக்கத்தக்க இன்னொருவரும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இந்த மாதம் 11ம் தேதி காலமானார். 

இவருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தன.

இறந்த இவ்விருவரும் தொடர்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தவிர, கடந்த மாதம் இறந்தவரின் குழந்தைகள் இருவருமே காய்ச்சல் காரணமாக இக்கட்டுரை எழுதப்பட்டபோது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோக இறந்த இருவருடனும் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் காரணமாக கோழிக்கோட்டில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் மரணம் அடைந்தனர். தொடர்ந்து கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி 17க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

அப்போது வேகமாக செயல்பட்ட கேரள மாநில சுகாதாரத் துறை, தொடர்ந்து நிபா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தியது. இதற்காக உலக சுகாதார மையத்தின் பாராட்டுதலையும் பெற்றது.

இந்நிலையில்தான் இப்போது மீண்டும் கேரள மாநிலம் நிபா வைரஸ் பரவல் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. 2018 போலவே கேரள சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் ஒரு ஜூனோடிக் வைரஸ். அதாவது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ். குறிப்பாக நிபா வைரஸ் பழம் உண்ணும் பழ வவ்வால்களிடமிருந்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவுகிறது.மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தில் 1998 - 1999ம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு நிபா வைரஸ் என்று பெயர்.

1999ல் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் நோய் பரவியது. அப்போது, 100க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தார்கள். நோய் பரவலைத் தடுக்க இந்த இரண்டு நாடுகளிலும் 10 லட்சத்துக்கும் அதிகமான பன்றிகள் கொல்லப்பட்டன.

அதன் பிறகு, வங்கதேசத்திலும் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு பலரும் இறந்தார்கள். இந்த மூன்று நாடுகள் தவிர பல ஆசிய நாடுகளிலும் இந்த தொற்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் 2018ம் ஆண்டில் கேரளாவில் இந்தத் தொற்று ஏற்பட்டு 17க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தார்கள்.

பழம் தின்னும் வவ்வால்களின் உடலில் இந்த வைரஸ் இருக்கும். பதநீரில் வவ்வால்களின் சிறுநீர் அல்லது உமிழ்நீர் கலக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் வழியாக பதநீரிலும், வவ்வால்கள் கடித்த பழங்களிலும் இந்த வைரஸ் இருக்கும். அவற்றில் இருந்து பன்றிகள், குதிரை, ஆடு, பூனை, நாய் போன்ற பிற விலங்குகளுக்கு பரவும். இந்த விலங்குகளிடம் இருந்து அவற்றைக் கையாளும் மனிதர்களுக்குத் தொற்று ஏற்படும்.

அதாவது இந்த விலங்குகளின் ரத்தம், சிறுநீர், உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் பட்ட உணவுகளை உட்கொள்ளும் போது மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவிவிடும். வவ்வால்கள் கடித்த பழங்களை உண்பவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படும். இப்படி நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் தொற்று பரவும் வாய்ப்புள்ளது.

நிபா வைரஸ் ஒருவரது உடலில் நுழைந்த 4 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். சிலருக்கு அறிகுறிகள் தெரியாமலும் இருக்கலாம்.தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இருமல், தொண்டைவலி, தலைவலி, வாந்தி, தசை வலி, பக்கவாதம், தொண்டைப் புண், தலைசுற்றல், தூக்கம் போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்.

தொடர்ந்து, மூளை அழற்சியைக் குறிக்கும் நரம்பியல் கோளாறுகள், நிமோனியா, கடுமையான சுவாசக் கோளாறு, வலிப்பு, குழப்பம், தன்னிலை இழந்து பிதற்றுதல், வாய் குழறுதல் ஆகிய அறிகுறிகள் தோன்றும். மூளை பாதிக்கப்பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிகள் இவை.தொடர்ந்து மயக்கம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்று நோயாளி இறந்துவிடலாம்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாம் என்னவெல்லாம் செய்தோமா அதேதான்!கொரோனாவுக்காவது தடுப்பூசி வந்துவிட்டது. ஆனால், நிபா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகவே, தொற்று ஏற்படாமல் தடுப்பது, தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவைதான் இந்த வைரஸ் நோயின் பிடியில் இருந்து மக்களைக் காப்பதற்கான ஒரே வழி!

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பை குறைக்கலாம்.

நிபா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் செவிலியர், மருத்துவப் பணியாளர்களும் முழு பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும்.பாதிக்கப்பட்ட நபரும் சரி அவருடன் தொடர்பு கொண்டவர்களும் சரி தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்.

கழிப்பறை அல்லது குளியலறையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், உடைகள் போன்றவற்றை தனித்தனியாக சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

நிபாவால் மரணமடைந்த நபர்களின் உடல்கள் பொது சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி கையாளப்பட வேண்டும். சிறு அலட்சியமும் நிலைமையை மிக மோசமாக்கும் வாய்ப்புள்ளது.பழங்களை நன்றாகக் கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். பறவைகள் அல்லது விலங்குகளால் பாதி சாப்பிடப்பட்ட பழங்களை சாப்பிடக்கூடாது.

------------------------------------------

இந்திய,கனடா மோதல்?

கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவின் மீது குற்றம் சுமத்தியது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்த ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடா்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பேசியது இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசலும் கொந்தளிப்பும் ஏற்படக் காரணம்.

ஜி20 உச்சி மாநாட்டுக்காக இந்தியா வந்திருந்த கனடாவின் பிரதமருடன், இந்திய பிரதமா் நரேந்திரமோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். குறிப்பாக காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் கனடாவில் கட்டுப்படுத்தப்படாதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாா். இதனை ஜஸ்டின் ட்ரூடோ விரும்பவில்லை.

நாடு திரும்பியவுடன் தனது நாட்டின் நாடாளுமன்றத்தில், ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொல்லப்பட்டதில், இந்திய அரசாங்கத்தின் முகவா்களுக்குத் தொடா்பிருக்க சாத்தியமுள்ளதாகவும் இதுதொடா்பான குற்றச்சாட்டுகள் நம்பும்படியாக உள்ளன என்றும் பேசினாா். 

ட்ரூடோவின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, கனடாவுக்கான இந்தியாவின் உயா்நிலை தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் அறிவித்தாா்.

இதற்கு பதிலடியாக, இந்தியாவும் கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதன் விளைவாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையேயான உறவில் கசப்புணா்வு ஏற்பட்டுள்ளதையும் வருங்காலத்தில் இது இன்னும் இறுக்கமாகக் கூடும் என்றும் உலக ஊடகங்கள் பேசத் தொடங்கியுள்ளன.

கனடாவின் தூதரக அதிகாரியிடம் நான்கு நிமிட சந்திப்பை நிகழ்த்தி வெளியேறச் செய்தது நமது அரசு. நமது வெளியுறவுத்துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்ஷி ஒரு நீண்ட செய்தியாளா் சந்திப்பை நிகழ்த்தினாா். 

அதில் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா இருப்பதாகக் கூறினாா். அதனால் பாதுகாப்பை உறுதி செய்ய கனடா குடியுரிமை கொண்டவா்களுக்கு இந்தியாவில் விசா மறுக்கப்படுகிறது என்ற தகவலையும் தெரிவித்தாா். கனடாவில் பயிலும் 3,20,000 இந்திய மாணவா்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினாா்.

ஜனநாயக நாடுகளில் தோ்தல் என்பது அவரவா் வசதிக்கேற்ப சில மாறுதல்களைக் கொண்டிருக்கும். ஆனால், தோ்தல் அரசியல் என்பதில் பல அரசியல் கட்சிகளும் உலகம் முழுவதும் ஒரே விதமான அரசியலைச் செய்கின்றன. 

இதனை நிரூபித்திருக்கிறாா் ஜஸ்டின் ட்ரூடோ. தனது கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள சீக்கியா்களின் உறவு தனக்கு அவசியம் என்று கருதுகிறாா். அதன் காரணமாகவே இந்தியாவுக்கு எதிரான பாா்வையும் தனிநாடு கோரிக்கையும் கொண்டுள்ள காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்களை மகிழ்விப்பதற்காக நாடாளுமன்றத்தில் இத்தகைய குற்றச்சாட்டினை இந்தியாவின் மீது சுமத்தியுள்ளாா்.

ஜஸ்டின் ட்ரூடோ, 2018-ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்ட பொழுது முழுமையாக கனடாவில் வாழும் சீக்கியா்களைக் கவரும் வகையில் அவா்களைப் போலவே உடை அணிந்து கொள்வதில் தொடங்கி குருத்வாராவில் வழிபாடு நடத்துவது வரை அனைத்து முயற்சிகளையும் செய்தாா்

. எட்டு நாள் பயணம் மேற்கொண்டு கனடாவுக்கான தனது அரசியலை இந்தியாவில் மேற்கொண்டாா்.
உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஏராளாமானோா் வாழ்கின்றனா். 

குறிப்பாக சீக்கியா்கள், கடந்த 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் 7,70,000 சீக்கியா்கள் உள்ளனா்.
2015-இல் கனடா நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத்தோ்தலில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 19 போ் நாடாளுமன்ற உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். 

இவா்களில் 17 போ் ட்ரூடோவின் லிபரல் கட்சியைச் சோ்ந்தவா்கள். இதிலிருந்து கனடாவில் இந்தியா்களுக்கு உள்ள செல்வாக்கையும் ட்ரூடோ ஏன் இந்தியாவில் எட்டு நாள் பயணம் மேற்கொண்டாா் என்பதும் விளங்கும்.

ஜஸ்டின் ட்ரூடோ தனது முதல் அமைச்சரவையில், சீக்கியா்கள் நான்கு பேருக்கு இடம் அளித்ததிலிருந்தே அவா்களுக்கு அவா் அளிக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். தன்னுடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சீக்கியா்களின் எண்ணிக்கை இந்திய அரசின் அமைச்சரவையில் கூட இல்லை என்று அப்போதே ட்ரூடோ பேசியிருந்ததையும் மறந்து விடுவதற்கில்லை.

கனடாவில் கணிசமாகக் குடியேறியுள்ள சீக்கியா்களின் அரசியல் செல்வாக்கு இந்தியா - கனடா உறவைத் தீா்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. எந்த இயக்கத்திற்கும் ஆதரவு இல்லாமல் பணி நிமித்தம் கனடாவில் குடியேறிய சீக்கியா்களும் இருக்கிறாா்கள். முழுமையாகப் பிரிவினைவாதக் குழுக்களை ஆதரிப்போரும் இருக்கிறாா்கள். 

அதனால் கனடாவில் வாழும் சீக்கியா்கள் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட முடியாது.

சீக்கிய பிரிவினைவாதிகள் விஷயத்தில் ட்ரூடோ தலைமையிலான அரசு மென்மையான அணுகுமுறையைக் கையாள்வதாக இந்தியா கருதுகிறது. இதற்கு சில காரணங்களும் இருக்கின்றன.

 சில மாதங்களாக கனடாவில் இந்தியாவுக்கு எதிரான செயல்கள் நடைபெறுகின்றன. பிராம்ப்டனில் சில மாதங்களுக்கு முன் ஒரு அணிவகுப்பு நடைபெற்றது. அதில் இந்திரா காந்தியின் மரணத்தைக் கொண்டாடும் விதமாகப் படங்கள், பதாகைகள் இடம்பெற்றன.

இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் விதத்தில் சுவரொட்டிகளும் கனடாவில் ஒட்டப்பட்டன. காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகளால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே மோசமடைந்துள்ளது. 

இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுக்குமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியிருந்தது.

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள பலருக்கும் கனடா அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இத்தகைய பிரிவினைவாத கும்பலைச் சோ்ந்தவா்கள் சமீபத்தில் தொடா்ந்து மா்மமான முறையில் கொல்லப்படுகின்றனா். 

இது அவா்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவோ கனடா தனது சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது.
75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவுடன் கனடாவின் உறவு ஏற்ற இறக்கங்களையும், பிணக்குகளையும் கொண்டதாகவுமே இருந்து வந்திருக்கிறது. 

வாஜ்பாய் ஆட்சியில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தியபொழுது இந்தியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து கடுமையாக கனடா நடந்து கொண்டது வரலாறு.

கனடாவில் 2015-இல் நடைபெற்ற பொதுத்தோ்தலில், லிபரல் கட்சி வெற்றி பெற்று, ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு அமைந்தபோதே இந்தியா -கனடா உறவுக்கு ஊறு ஏற்படக்கூடும் என்று அரசியல் பாா்வையாளா்கள் கருத்துத் தெரிவித்தனா். அதனை மெய்ப்பிக்கும் விதமாகவே ட்ரூடோ நடந்து கொண்டிருக்கிறாா்.

இந்த பிரச்னையை உலக நாடுகள் எப்படிப் பாா்க்கின்றன? கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆகிய ஆங்கிலம் பேசும் ஐந்து கூட்டமைப்பு நாடுகள் கூட இந்தியாவைக் கடிந்து கொள்ள யோசிக்கின்றன என்ற நிலைதான் நிலவுகிறது. 

அதன்பொருட்டே, இந்தியா வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார நாடாக இருப்பதால் தயக்கம் காட்டுகின்றன என்று ட்ரூடோ ஒப்புக்கொண்டிருக்கிறாா். உலக நாடுகளில் கனடாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவிக்கும் ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே என்பதிலிருந்தே நிலைமை விளங்கும்.
கனடாவுடனான இந்த மோதலால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியான பாதிப்பு ஏற்படுமா? கடந்த 2022-இல் கனடாவின் பத்தாவது பெரிய வா்த்தக பங்காளியாக இந்தியா இருந்தது. 

2022-23-இல், இந்தியா கனடாவிற்கு 4.10 பில்லியன் டாலா் அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. 

இதுவே 2021 -22-இல் 3.76 பில்லியன் டாலா்களாக இருந்தது. நகைகள், விலையுயா்ந்த கற்கள், மருந்து பொருட்கள், ஆயத்த ஆடைகள், இரும்பு, எஃகு உள்ளிட்ட பொருட்கள் இந்தியா கனடாவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது.

இதேபோன்று, 2022- 23-இல், கனடா இந்தியாவிற்கு 4.05 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2021 -22 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 3.13 பில்லியன் டாலராக இருந்தது. 

இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளில் கனடா 17-ஆவது இடத்தில் உள்ளது. குறைந்தபட்சம் 600 கனடா நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. ஏறத்தாழ 1,000 நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது வணிக வாய்ப்புகளைத் தேடி வருகின்றன.
இதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் கனடா நாட்டு மக்கள் தற்போதைய இந்த சூழ்நிலையை விரும்பவில்லை. அந்நாட்டில் நடந்துள்ள கருத்துக்கணிப்புகள், மீண்டும் ஜஸ்டின் பிரதமராக வருவதை 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் விரும்பவில்லை என்கின்றன.

கனடாவில் ஏற்கனவே அந்நாட்டைத் துண்டாட பல தனிநாடு கோரும் அமைப்புகள் இருக்கின்றன. அவை தொடா்ந்து சிக்கல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்னும் பிரிவினைவாத சக்திகளை அரசியல் ரீதியாக வளா்ப்பதும் ஆதரிப்பதும் தேசத்தின் எதிா்காலத்திற்கு நல்லதல்ல .

---------------------------------------

மணவிழாவில் "தீ".

112 பேர்கள் பலி?

வடக்கு ஈராக், நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு கிறிஸதவ முறை திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

இந்த நிகழ்வில் 750க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.

திருமண மண்டபத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் கட்டடத்தின் கூரைகள் அங்காங்கே இடிந்து விழுந்ததில் தீ வேகமாக பரவியுள்ளது.

இதனால் மண்டபத்தைவிட்டு வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
முதல்கட்ட விசாரணையில் திருமண நிகழ்வின்போது வெடித்த பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும், உயர்நிலைக் குழு விசாரணைக்கு ஈராக் அரசு உத்தரவிட்டுள்ளது.

------------------------------------

" இஸ்கான்" தான் மாபெரும்

மாட்டிறைச்சி விற்பனையாளர்.

பசுக்கூடங்களைப் பராமரிக்கும் International Society for Krishna Consciousness எனும் ISKCON நிறுவனம், பசுக்களை இறைச்சிக்கு விற்பதாக, பா.ஜ.க எம்.பி மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

`ஹரே கிருஷ்ணா’ இயக்கத்துடன் தொடர்புடைய இந்த ISKCON நிறுவனம், உலக அளவில் நூற்றுக்கணக்கான கோயில்களையும், மில்லியன் கணக்கில் பக்தர்களையும் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமை ஆர்வலருமான மேனகா காந்தி, இது பற்றிச் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ``ISKCON இந்தியாவின் மிகப்பெரிய ஏமாற்று நிறுவனம்.

 பசுக்கூடங்களைப் பராமரிக்கும் இந்த நிறுவனம், பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்திடமிருந்து பல்வேறு பலன்களைப் பெற்றுவருகிறது. ஆந்திராவின் அனந்த்பூரில் ISKCON நிறுவனம் பராமரித்துவரும் பசுக்கூடத்துக்கு ஒரு முறை சென்றேன். 

அங்கு, பால் தராத பசுக்கள் மற்றும் கன்றுகள் எதுவுமே இல்லை. அப்படியென்றால், அவையெல்லாம் விற்கப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.

அதாவது, ISKCON தனது மாடுகளையெல்லாம் இறைச்சிக்கு விற்கிறது. '

ஹரே ராம ஹரே கிருஷ்ணா' என்று சாலைகளில் அவர்கள் பாடிக்கொண்டே செல்கிறார்கள். தங்களின் வாழ்நாள் முழுவதும் பாலைத்தான் நம்பியிருப்பதாகக் கூறுகிறார்கள். 

ஆனால், அவர்கள் செய்யுமளவுக்கு மாடுகளை யாரும் கசாப்புக் கடைக்காரர்களுக்கு விற்கவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?