ஒளிவட்டப் பாதை

*ஆதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி; 3அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு.

*அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 10-ம் தேதிக்குதள்ளிவைக்கப்பட்டுள்ளது.

*தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

*அமைச்சர் உதயநிதி மகன் பெயரில் "இன்பநிதி பாசறை" - புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் இருவர் அதிரடி சஸ்பெண்ட்.

'*கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கே போதிய நீர் இல்லாத சூழலில் தமிழ்நாட்டிற்கு எங்கிருந்து நீர் திறந்துவிடுவது' - முதல்வர் சித்தராமையா,

*பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட்டில் விண்ணில் சீறி பாய்ந்த ஆதித்யா எல் -1 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இலக்கை அடைய விண்கலம் 4 மாதங்கள் பயணிக்கும்.

---------------------------------------------

*தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், ஆர்.எஸ்.சிவாஜி

இவர் கமல்ஹாசன் தயாரித்து நடித்து பெரும் வெற்றிபெற்ற அபூர்வசகோதரர்கள் திரைப்படத்தில் போலீசாக நடித்து இருந்தார்.

இந்த படத்தில் இவர்  ‘சார் நீங்க எங்கயோ போயீட்டீங்க சார்’ என்று பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்தது.

 ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் என்றால் கண்டிப்பாக இவருக்கான பாத்திரம் நிச்சியம் படத்தில் இருக்கும்.

குணா,வில்லன், ஆயுத எழுத்து, கோலமாவு கோகிலா, சூரரைப் போற்று போன்ற படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக கார்கி படத்தில் சாய் பல்லவியின் தந்தையாக நடித்து இருந்தார்.

இயக்குநர்-நடிகர் ஆன சந்தானபாரதி,சிவாஜிக்கு உடன் பிறந்த அண்ணன் ஆவார்.

 சென்னையில் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக ஆர்.எஸ்.சிவாஜி மரணமடைந்தார். 

அவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கமல் ஹாசன் பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருந்த வீடியோ தற்போது பரவலாகிறது.

முன்னதாக அவர் கமல் ஹாசன் குறித்து பேட்டி அளித்து இருந்தார்

. அவர் கூறியதாவதது, “ நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் கமல் தான். நன்றியை மறக்க மாட்டேன். என் இதயத்தில் 4 ஓட்டைகள் இருந்தது. சிகிச்சைக்கு அவரிடம்தான் உதவி கேட்டேன். எனக்கான எல்லா சிகிச்சையையும் அவரே பார்த்து கொண்டார்.

அதேபோல் கொரோனா காலத்தில் மாத்திரைகள் வாங்கவும் காசு இல்லை. தயக்கமாக இருந்தது. அதனால் நேராக சென்று அவரிடம் உதவி கேட்டேன்.

அப்போது முதல் இப்போது வரை எனக்கு ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து மாதம் மாதம் மாத்திரைகள் வந்து கொண்டிருக்கிறது. கமல் இல்லை என்றால் நான் இல்லை. மாத கடைசியில் போன் செய்து தேவையானவற்றை கேட்டு வாங்கி கொடுப்பார்கள்” எனக் கூறினார்.

---------------------------------------------------

ஒளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்

பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட்டில் விண்ணில் சீறி பாய்ந்த ஆதித்யா எல் -1 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

 இலக்கை அடைய விண்கலம் 4 மாதங்கள் பயணிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. 

அதை தொடர்ந்து கடந்த 23ம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது.

இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் -1 திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 

சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் திட்டம் இது. இந்தியாவின் முதல் முயற்சி என்றாலும் சூரியன் ஆய்வு செய்யப்படுவது இது முதன்முறை அல்ல. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஈசா ஏற்கனவே சூரியனை ஆய்வு செய்ய விண்கலம்களை அனுப்பியுள்ளது. 

சூரியன் குறித்த ஆய்வை முதலில் தொடங்கிய நாடு அமெரிக்கா தான். 1960களிலேயே சூரியனை ஆராய விண்கலம்களை நாசா அனுப்பியுள்ளது.

2018ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா அனுப்பிய ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ என்ற விண்கலம் 2021ம் ஆண்டு சூரியனுக்கு மிக அருகில் சென்று சூரியனின் சக்தி மற்றும் சூரிய புயல் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதை தொடர்ந்து, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2020ம் ஆண்டு அனுப்பிய ’சோலார் ஆர்பிட்டர்’ என்ற விண்கலம் பூமியில் இருந்து 5 கோடி கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, சூரியனின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டது.

 மேலும் ஜெர்மனியும் சூரியன் குறித்த ஆய்வில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்டத்தின் நோக்கம் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை கண்காணிக்கவும் சூரியக் காற்று போன்ற விண்வெளி வானிலை அம்சங்களை ஆய்வு செய்யவும், சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதியில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கொரோனா மற்றும் சூரியனின் முதல் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேற்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டவுடன் திட எரிபொருள் கொண்ட 6 மோட்டார்கள் செயல்பட்டு பூமியில் இருந்து விண்ணில் பாய உந்துவிசை அளித்தது. அதை தொடர்ந்து ராக்கெட் ஏவப்பட்டு 2வது நிமிடத்தில் முதல் பாகம் பிரிக்கப்பட்டது.

 5வது நிமிடத்தில் 2வது பாகம் பிரிக்கப்பட்டு தொடர்ந்து 10வது நிமிடத்தில் 3வது பாகம் பிரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 4வது பாகம் இரண்டு கட்டங்களாக எரியூட்டப்பட்டு கடைசியாக 60வது நிமிடத்தில் அதாவது ஒரு மணி நேரத்தில் எரியூட்டுதல் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 63வது நிமிடத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம் ராக்கெட்டின் கடைசி பாகத்தில் இருந்து பிரிந்து புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின் தொடர்ந்து 4 மாதங்கள் லிக்விட் அப்போஜி மோட்டார் மூலம் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியான் பாயிண்ட்டை மையமாக கொண்டு ஒளிவட்ட பாதைக்கு சென்றடையும். பூமியில் இருந்து 15 கோடி கி.மீ. தொலைவில் இருக்கும் சூரியனை நெருங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. மற்ற கோள்கள் குறித்த ஆய்வு போல் இல்லாமல் சூரியனை நோக்கி

மேற்கொள்ளப்படும் ஆய்வு அதனின் சக்தி குறித்து அறிய உதவும். இதன் மூலம் சூரியனால் நமக்கு ஏற்படவிருக்கும் அபாயங்கள் குறித்து தெரிந்துகொள்ள இயலும்.

மேலும், சூரிய கதிர் வீச்சு, வெப்பநிலை, காந்த புலம் போன்றவை குறித்து தெரிந்துகொள்ள முடியும். பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியான் பாயிண்ட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஹெலோ ஆர்பிட் எனப்படும் ஒளிவட்ட பாதையில் பயணித்து ஆய்வுகளை மேற்கொள்ளும். இரண்டு பொருட்களின் ஈர்ப்பு விசைக்கு நடுவில் இருக்கும் இடமே லெக்ராஞ்சியான் பாயிண்ட் என குறிப்பிடப்படுகிறது. 

அதன் நடுவில் ஒரு பொருளை நிலைநிறுத்தினால், அந்த பொருள் இரண்டு ஈர்ப்பு விசைகளுக்கு நடுவில் அங்கேயே நிற்கும் என்று கூறப்படுகிறது.

சூரியன் மற்றும் பூமி ஆகிய இரண்டு ஈர்ப்பு விசைக்கு நடுவில் உள்ள அமைப்பை எல்1, எல்2, எல்3, எல்4 மற்றும் எல்5 என்று 5 லெக்ராஞ்சியான் பாயிண்ட் ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் எல்1 பகுதியில் ஆதித்யா எல்1 செலுத்தப்படவுள்ளது.

 இந்த விண்கலம் சுமார் 1480.7 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 இந்த விண்கலத்தில் மொத்தம் ஏழு பேலோட் கலன்கள் உள்ளன. விஇஎல்சி, எஸ்யுஐடி, ஏஎஸ்பிஇஎக்ஸ், பாபா, எஸ்ஓஎல்இஎக்எஸ், ஹெச்இஎல்ஒன்ஓஎஸ், மேக்னட் மீட்டர் ஆகிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

 இவை சூரியனின் வெளிப்புற பகுதியான கொரோனா, சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சு குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளளும்.

இந்த கலம்கள் பிரதிபலிப்பின் ஒளி வளைய வரைவை பல பிளவு ஸ்பெக்ட்ரோகிராஃப் வாயிலாக ஆராயவும், வெடிப்புகளால் எற்படும் சூரிய கதிர்களையும், சூரிய காற்று மற்றும் அதில் இருப்பவை குறித்து புரிந்து கொள்ளவும், சூரிய காற்றில் உள்ள அயனிகள் குறித்து ஆராயவும், மேலும் மென்மையான மற்றும் கடினமான எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்களை பயன்படுத்தி சூரிய கதிர்வீச்சுகளை ஆராயவும், புற ஊதா தொலைநோக்கி மூலம் சூரிய வட்டுகளை படமெடுக்கவும், சூரிய காற்றில் உள்ள புரோட்டான், ஆல்பா துகள்கள் மற்றும் அதிக சக்தி கொண்ட அயனிகளை அளவிடவும், மேலும் விண்வெளியில் கிரகங்களுக்கு இடையேயுள்ள மின்காந்த புலன்கள் குறித்து ஆய்வு செய்யவும் ஆதித்யா விண்கலத்தின் பேலோட் கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே விண்கலம்கள் செலுத்தியுள்ள நிலையில் இந்த திட்டத்தில் வெற்றி கண்டால் சூரியனை ஆராயும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் இலக்கை  அடைந்து விட்டோம், புவி வட்ட பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது.  முதல் முறையாக பிஎஸ்எல்வி ராக்கெட்டில் 4வது கட்டத்தில் 2 கட்டங்களாக எரியூட்டுவதை முயற்சித்து வெற்றி கண்டுள்ளோம் என கூறினார்.

  125 நாட்கள் பயணித்த பின் விண்கலம் ஒளி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும் .

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி அதிலிருந்து ரோவரும் நிலவில் உலா வந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் ரோவர் லேண்டரில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை நிலவில் பயணித்து இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் நிலவில் இரவு வந்தவுடன் லேண்டர் மற்றும் ரோவர் ஆப் செய்யப்படும் .


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?