முறைகேடாக வந்த பணம்?புதிய ஆய்வறிக்கை!

 அதானி குழுமம்  மொரிஷியஸ் வழியே முதலீடு? 

ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பங்குகளை விற்று வாங்கும் நிறுவனம், அதானி குழுமம் பங்குகளின் விலைகளை அதிகரித்துக் காட்டியதாக ஒரு ஆய்வறிக்கையில் குற்றம் சாட்டியபோது, ​​அதன் உரிமையாளர் கவுதம் அதானி உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்தார்.

ஆனால் இந்த அறிக்கை வந்தபின், அவரது சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலரில் இருந்து 39.9 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது.
அதாவது, ஒரே இரவில் அவரது சொத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது. அதானி குழுமம், அதன் நிறுவனங்களின் பங்கு விலைகளை மிகவும் அதிகரித்துக் காட்டியதாகவும், வரிவிலக்கு சூழல் நிலவும் நாடுகள் மூலம் மோசடி செய்வதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குற்றம் சாட்டியிருந்தது.

அதன் பின் இப்போது வரை அதானி குழுமத்தின் சில நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. 
ஆனால் ஆகஸ்ட் 31 அன்று, OCCRP ஆவணங்களின் அடிப்படையில் பிரிட்டிஷ் செய்தித்தாள்களான 'தி கார்டியன்' மற்றும் 'பைனான்சியல் டைம்ஸ்' வெளியிட்ட மற்றொரு ஆய்வறிக்கை அதானி குழுமத்துக்கு மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வறிக்கை வந்த பிறகு, அதானி குழும நிறுவன பங்குகளின் விலை இதுவரை தோராயமாக ரூ.35,200 கோடி குறைந்துள்ளது.
ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் குறித்த ஆய்வறிக்கையின் ஆவணங்களில் என்ன தகவல்கள் இடம்பெற்றுள்ளன?

'தி கார்டியன்' மற்றும் 'பைனான்சியல் டைம்ஸ்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள், வரிவிலக்கு சூழ்நிலையுள்ள நாடான மொரிஷியஸில், எமர்ஜிங் இந்தியா ஃபோகஸ் ஃபண்ட் (EIFF) மற்றும் ஈஎம் ரிசர்ஜிங் ஃபண்ட் (EMRF) ஆகிய இரண்டு நிதியங்கள் மூலம் 2013 முதல் 2018 வரை அதானி குழுமத்துக்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு பங்குகளின் விலைகளை செயற்கையாக அதிகரித்துக் காட்டியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிதி நிறுவனங்கள் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலீட்டாளர் நசீர் அலி ஷபானா அஹ்லி மற்றும் தைவான் முதலீட்டாளர் சாங் சுங் லியுங் ஆகியோர் அதானி குழும நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்திருந்தனர்.

இந்த பணம் பெர்முடா'ஸ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் குளோபல் ஆப்பர்ச்சூனிட்டிஸ் (Bermuda's investment fund Global Opportunities) மூலம் கொண்டுவரப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், நசீர் அலி மற்றும் சாங் சுங் லியுங்கின் இந்த முதலீடு சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்புடையது. தற்போது அதன் மதிப்பு (தற்போதைய மாற்று விகிதம்) ரூ.3550 கோடி ஆகும்.
ஜனவரி 2017 இல், இந்த இரண்டு முதலீட்டாளர்களும் முறையே அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றில் 3.4, 4 மற்றும் 3.6 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.

ஆகஸ்ட் 31 அன்று, OCCRP ஆவணங்களின் அடிப்படையில் பிரிட்டிஷ் செய்தித்தாள்களான 'தி கார்டியன்' மற்றும் 'பைனான்சியல் டைம்ஸ்' வெளியிட்ட மற்றொரு ஆய்வறிக்கை அதானி குழுமத்துக்கு மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
OCCRP ஆவணங்களின்படி, கௌதம் அதானியின் சகோதரரும் அதானி ப்ரோமோட்டர் குழும உறுப்பினருமான வினோத் அதானிக்கு சொந்தமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் இரகசிய நிறுவனமான எக்ஸல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் அட்வைசரி சர்வீஸஸ் லிமிடெட் (Excel Investment and Advisory Services Ltd) க்கு EIFF, EMRF மற்றும் GOF நிறுவனங்கள் மூலம் ஜூன் 2012 முதல் ஆகஸ்ட் 2014 வரை 1.4 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது.

OCCRP யின் விசாரணையில் EIFF, EMRF மற்றும் GOF ஆகியவை அதானி குழும நிறுவனங்களில் வினோத் அதானிக்காக பணத்தை முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பொருள் EIFF, EMRF மற்றும் GOF போன்ற நிதி நிறுவனங்கள் ஷெல் நிறுவனங்களாக செயல்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அதானி குழும நிறுவனங்களில் வினோத் அதானி பெரும் பணத்தை முதலீடு செய்தார். இதன் காரணமாக, எந்தவொரு உண்மையான வணிகமும் மேற்கொள்ளப்படாமல் ஷெல் நிறுவனங்கள் மூலம் அதானி குழும பங்குகளின் விலைகள் அதிகரித்துக் காட்டப்பட்டுள்ளன.

எனவே, முதலீட்டாளர்களின் பார்வை அதானி குழுமத்தை நோக்கித் திரும்பியது. 
இது அதானி குழும பங்குகளின் விலையை உயரக் காரணமாக இருந்த போதிலும், உண்மையில் அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகள் அந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கவில்லை.
உண்மையில், வினோத் அதானியின் விருப்பத்தின் பேரில், நசீர் அலி மற்றும் சாங் சுங் லியுங்கின் நிதி ஷெல் நிறுவனங்கள் அதானி குழும நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்தன.
 இதன் மூலம், வினோத் அதானி உறுப்பினராக இருந்த குழுவினர், அதானி குழும நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனப் பங்குகளில் 78 சதவீதத்திற்கும் அதிகமான (ஜனவரி 2017) பங்குகளை வைத்திருந்தனர். இது பங்கு பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகள் 1957 இன் விதி 19A ஐ மீறுவதாகும்.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குறித்து செபி விசாரணை நடத்திவருகிறது.
விதி 19A என்றால் என்ன?
பங்கு பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகள் 1957 இன் விதி 19A, ஜூன் 4, 2010 அன்று ஒரு திருத்தத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டது.
 இதன்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும், 25 சதவீத பங்குகளை பொது பங்குகளாக வைத்திருக்கவேண்டும்.
 அதாவது, அந்த நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை பொது முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கவேண்டும்.

மனைவி, பெற்றோர், சகோதரர், சகோதரி அல்லது நிறுவன உரிமையாளர்களின் குழந்தைகள் அல்லது குழுவில் உள்ளவர் தவிர, குழுவின் துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களால் இந்த பங்குகளை வாங்க முடியாது.

ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலையை நிர்ணயிப்பதில் இது மிகவும் முக்கியமானது. இந்த விதியை மீறுவது பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரிக்கும் செயலாகக் கருதப்படுகிறது.

 இது உள்ளுக்குள்ளேயே நடைபெறும் வர்த்தகத்தையும் காட்டுகிறது.
 இதனால், பங்குச் சந்தையின் நம்பகத்தன்மை பெருமளவு பாதிக்கப்படுகிறது.

OCCRP யின் இணையதளத்தில் இந்த விவகாரம் தொடர்பான ஆய்வறிக்கையில், இந்திய பங்குச்சந்தை நிபுணரும் வெளிப்படைத்தன்மைக்கான பிரச்சாரகருமான அருண் அகர்வாலிடம் பேசப்பட்டு, அது தொடர்பான விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒரு நிறுவனம் தனது 75 சதவிகித பங்குகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல என்றாலும், அவ்வாறு செய்வதன் மூலம் சந்தையில் பங்குகளுக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் பங்குவிலை அதிகரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
பங்குகளின் விலை அதிகரிக்கும் போது, ​​சந்தை மூலதனமும் (சந்தையில் இருக்கும் பங்குகளை அவற்றின் விலையால் பெருக்கினால் கிடைக்கும் மதிப்பு) அதிகரிக்கிறது. 
அதாவது பங்கு விலைகளை செயற்கையாக அதிகரிப்பதன் மூலம் நிறுவனம் தனது நிதி வளத்தை அதிகரித்துக் காட்டுகிறது.
அதானி குழுமத்தின் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

அதானி குழுமம் இந்த ஆய்வறிக்கையை 'ரீ-சைக்கிள்' செய்யப்பட்டது என்று முழுமையாக நிராகரித்துள்ளது. அதாவது பழைய அறிக்கையே புதிய பாணியில் முன்வைக்கப்பட்டுள்ளது என அதானி குழுமம் கூறியுள்ளது.

இது மூத்த முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்புடையவர்களின் திரிபுபடுத்தப்பட்ட ஆய்வறிக்கை என்று கூறப்படுகிறது என்றும், வெளிநாட்டு ஊடகங்களின் ஒரு பிரிவினரின் ஆதரவையும் பெற்றுள்ளது என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.

மேலும், தற்போதைய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள மொரிஷியஸ் நாட்டு நிதி நிறுவனங்கள் ஹிண்டன்பர்க் அறிக்கையிலும் முன்னர் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளே இதில் மீண்டும்மீண்டும் கூறப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ள அதானி குழுமம், ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், பொது பங்குகள் தொடர்பான ஒழுங்குமுறை விதிகளை அதன் நிறுவனங்கள் முழுமையாகப் பின்பற்றுவதாகவும் கூறியுள்ளது.

இந்த ஆய்வறிக்கை வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டதாகவும், பத்தாண்டுகளுக்கு முன்பே காலாவதியான பல விஷயங்களைப் பற்றி புதிதாகப் பேசியுள்ளதாகவும் அதானி குழுமம் கூறியுள்ளது.
 மேலும், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை மீண்டும் ஒருமுறை வெளியிடவேண்டும் என்பதற்காக சில வெளிநாட்டு ஊடகங்களும் அதற்கு தூபம் போடுவதாகவும் அதானி குழுமம் கூறியுள்ளது.

பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரித்துக் காட்டியது, வெளிநாடுகளுக்கு நிதி பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து டிஆர்ஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியதாக அதானி குழுமம் கூறியுள்ளது. 
மேலும், தன்னாட்சியுடன் செயல்படும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் இது குறித்து விசாரித்து அனைத்து பரிவர்த்தனைகளும் சட்டத்துக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்கெனவே உறுதி செய்துள்ளது என்பதையும் அதானி குழுமம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுமட்டுமின்றி மார்ச் 2023 இல், உச்ச நீதிமன்றம் அதானி குழுமத்துக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கியது என்றும், எனவே இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் குழுமத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரம், 'பைனான்சியல் டைம்ஸ்' ஆய்வறிக்கையில் செபியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தில் சட்டவிரோத நிதிப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில், பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவராக யு.சி. சின்ஹா ​பதவி வகித்ததாககக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், அதானி குழுமத்தின் ஊடக நிறுனமான என்டிடிவியின் அலுவல் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். ஆனால், இதுபற்றி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' யு.சி.சின்ஹாவிடம் கேட்டபோது, ​​அந்த அறிக்கையில் தனது பெயர் இல்லை என்று தெரிவித்தார்.

இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக முட்டுக்கட்டை போடும் வகையில், "2014ல் அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது.
 இதில், செபிக்கு ஆதாரம் அளிக்கப்பட்டும், அதானி குற்றமற்றவர் என செபி அறிவித்தது. செபியின் அப்போதைய தலைவர் இப்போது என்டிடிவியின் அலுவல் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால் ஏதோ பெரிய தவறு நடந்துள்ளது என்பது தெளிவாகிறது," என்று கூறியுள்ளார்.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான போது பங்குச் சந்தையில் பாதிப்பு ஏற்பட்டதைப் போல் தற்போது பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

OCCRP என்பது புலனாய்வு ஊடகவியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது 2006 இல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜனநாயக நிதியம் உதவி அளித்தது.

இந்த நெட்வொர்க்கின் முதல் அலுவலகம் சரஜெவோவில் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் OCCRP ஆறு பத்திரிகையாளர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தது. ஆனால் இப்போது 30 நாடுகளில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர்.

ஊழல் மற்றும் குற்றங்களின் உலகளாவிய வலையமைப்பை நன்கு புரிந்துகொண்டு அவற்றை அம்பலப்படுத்துவதற்கு தங்களுக்குள் தகவல்களை எளிதில் பகிர்ந்து கொள்ளக்கூடிய உலகளாவிய ஊடகவியலாளர்களின் வலையமைப்பை உருவாக்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

OCCRP இதுவரை 398 குற்றம் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரித்துள்ளது. இதன் காரணமாக 621 பேர் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 131 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
 இதுமட்டுமின்றி 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதே அளவுக்கான தொகை மீட்கப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான போது, ​​வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கேள்விகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என்று ஜார்ஜ் சொரோஸ் கூறியிருந்தார்.

உலகின் பல பெரிய நிறுவனங்கள் OCCRP க்கு நிதி உதவி அளிக்கின்றன. ஜார்ஜ் சொரோஸின் ஓபன் சொசைட்டி அறக்கட்டளையும் இதற்கு நிதி உதவி வழங்குகிறது.

ஓபன் சொசைட்டி அறக்கட்டளை உலகின் 120 நாடுகளில் செயல்படுகிறது.
 இது 1984 இல் உருவாக்கப்பட்டது. அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான போது, ​​வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கேள்விகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என்று ஜார்ஜ் சொரோஸ் கூறியிருந்தார்.

ஜார்ஜ் சொரோஸ் ஒரு ஹங்கேரிய-அமெரிக்க தொழிலதிபர் மற்றும் சமூகசேவகராவார். 2021 இல் அவரது மொத்த சொத்து மதிப்பு 8.6 பில்லியன் டாலர் ஆகும். அவர் தனது 32 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை ஓபன் சொசைட்டி அறக்கட்டளைக்கு வழங்கினார். 
இதில் 15 பில்லியன் டாலர்கள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் வலைத்தளத்தின்படி, இது செயல்திறன் மிக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்திற்காக செயல்படுகிறது.
 இதில் அரசாங்கங்கள் தங்கள் மக்களுக்கு பதில் சொல்லும் இடத்தில் இருக்கவேண்டும் என்பவதை பெருமளவில் வலியுறுத்துவதே இந்த சொசைட்டியின் முக்கிய கடமையாக இருந்துவருகிறது.

ஜனவரி 25 அன்று, அமெரிக்காவில் பங்குகளை "விற்று-வாங்கும்" நிறுவனமான 'ஹிண்டன்பெர்க்' ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பங்கு விலைகளை செயற்கையாக அதிகரித்துக் கூறியதாகவும் வரிவிலக்கு சூழ்நிலையில் உள்ள நாடுகளை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அதானி குழும நிறுவனங்களுக்கு அதிக கடன் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அதானி குழுமம் மறுத்தது. ஆனால் இதற்குப் பிறகு, அதனி குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு வேகமாகக் குறைந்து, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலரிலிருந்து 39.9 பில்லியன் டாலராகக் குறைந்தது.

தற்போது இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால், இந்த விசாரணையில் அதானி குழுமத்தின் குறைபாடுகள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை என உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்திய நிபுணர் குழு தெரிவித்துள்ளது. 
ஆனால், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்கு முன்பே சில நிறுவனங்கள் அதானி குழுமத்தின் பங்குகளிளை விற்று-வாங்கி லாபம் ஈட்டியுள்ளன.

இந்த விவகாரத்தில் செபி தனது அறிக்கையை ஆகஸ்ட் 25ஆம் தேதி தாக்கல் செய்தது. மொத்தம் 24 அம்சங்களை ஆய்வு செய்ததாக செபி தெரிவித்துள்ளது. 
இதில் 22 அம்சங்களில் விசாரணைகள் முடிந்துள்ளது என்றும், இரண்டு அம்சங்களின் விசாரணை அறிக்கைகள் இடைக்கால நிலையில் உள்ளன என்றும் தெரியவித்துள்ளது. மேலும், விசாரணையில் தெரியவரும் உண்மைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செபி கூறியுள்ளது.

செபியின் விரிவான விசாரணை அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. 24 அம்சங்களின் விசாரணையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, விசாரணையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் தற்போது தெரிவிக்கப்படவில்லை.

                                                    நன்றி; BBC.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?