நிலையான போர் நிறுத்தம்
இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம் துவங்கியது25 பணய கைதிகள் விடுவிப்பு.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல். வாக்குப்பதிவு தொடங்கியது.
கருத்தரங்குகளில் மது விநியோகிப்பது சட்டத்திற்கு எதிரானது - சென்னை உயர் நீதிமன்றம் .
முதலமைச்சர்,அமைச்சர்கள் குறித்து அவதூறு.. தூத்துக்குடி பாஜக ஜான் ரவி என்பவர் பிணை மனு தள்ளுபடி .
அக்டோபர் -– 7 முதல் தொடர்ச்சியாக போர் நடந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக் கொடூரங்கள் அளவிட முடியாதவை.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 2700க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. காசாவின் மொத்த மக்கள் தொகை 23 லட்சம் பேர். இதில் இரண்டு பங்கு மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி விட்டார்கள்.
இஸ்ரேலைச் சேர்ந்த 1200 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
‘போரில் ஒருவர் செத்தால் மட்டும்தான் மரணம். அதற்கு மேற்பட்டவர்கள் செத்தால் அது வெறும் புள்ளிவிவரம் தான்’ என்று சொல்வதைப் போல -– இவை அனைத்தையும் வெறும் புள்ளிவிவரமாகக் கடந்துவிட முடியாது.
‘உலகம் ஒரு குடைக்குள் வந்துவிட்டது’ என்று பெருமை பீற்றிக் கொள்ளும் இந்தக் காலத்தில் தான் உலகின் ஒரு பகுதியில் -– வெளிச்சத்தில் -– உலக சமுதாயத்தின் கண் முன்னால் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறின. அரங்கேறி வருகின்றன.
“நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தின் போது காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் சிறார்கள் விடுவிக்கப்படுவார்கள்.
அந்த நாட்களில் மோதல் ஏற்படாது. மீதமுள்ள கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள்.
போர் நிறுத்தம் ஒவ்வொரு நாளாக நீட்டிக்கப்படும்”என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தால் நாங்கள் எங்கள் வசம் இருக்கும் இஸ்ரேல் கைதிகளை விடுவிக்கத் தயார்’ என்று ஹமாஸ் படையினர் சொன்னதால் தான் இந்த நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது போலத் தெரிகிறது.
இஸ்ரேலில் இருந்து 240 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்று காசாவில் வைத்துள்ளார்கள்.
இவர்களைப் பெறும் தந்திரமாகவே இந்த நான்கு நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் இறங்கி வந்ததைப் போலத் தெரிகிறது.
இப்படி கைதிகளை விடுவிப்பது தொடர்பாக யாருக்காவது எதிர்ப்பு இருந்தால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்று இஸ்ரேல் அறிவித்து இருப்பதும் சரியான நடவடிக்கை அல்ல.
ஏதாவது காரணம் தேடுவதைப் போலவே உள்ளது.
நான்கு நாட்கள் போர் நிறுத்தம் எதற்காக என்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையும் அபத்தமாக இருக்கிறது.
‘இஸ்ரேல் தாக்குதலால் ஹமாஸ் படையினருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது’ என்று அவர் அறிவித்திருப்பது இஸ்ரேல் இன்னும் மனம் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.
‘ஹமாஸ் படையினரை ஒழித்தல், இனி இஸ்ரேல் பாதுகாப்புக்கு காசாவால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற இலக்குகளை அடையும்வரை போர் தொடரும்’ என்றும் அவர் அறிவித்திருப்பது போர் நிறுத்தத்துக்கு எதிரான நிலைப்பாடு ஆகும்.
நான்கு நாட்கள் போர் நிறுத்தம் என்றும், அது படிப்படியாக ஒவ்வொரு நாளாக நீடிக்கும் என்றும் சொல்வதும் இஸ்ரேல் அரசாங்கம்தான்.
அந்த நாட்டு அமைச்சர்கள் அனைவரும் கூடி எடுத்த முடிவுதான். அமைச்சரவைக் கூட்டம் நடந்து 3 அமைச்சர்கள் எதிர்க்க –- 35 அமைச்சர்கள் ஆதரிக்க எடுக்கப்பட்ட முடிவுதான் இது.
அதே நேரத்தில், ‘ஹமாஸ் படையினரை ஒழிக்கும் வரை போர் தொடரும்’ என்று சொல்வதும் இஸ்ரேல் அரசாங்கம்தான். ‘இது போர் நிறுத்தம் அல்ல, நடவடிக்கை இடை நிறுத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்’ என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. பிரதமர் –- அமைச்சரவை –- ராணுவம் ஆகிய மூன்றும் வேறு வேறு நிலைப்பாடு களில் உள்ளதை இதன் மூலமாக உணரலாம்.
‘இஸ்ரேல் -–ஹமாஸ் போர் என்பது பிற நாடுகளையும் உள்ளடக்கிய மோதலாக உடுவெடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் சொல்லி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
ஈராக்கில் உள்ள இரண்டு ஹமாஸ் நிலைகள் மீது தங்களது போர்விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டிருப்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். எனவே இஸ்ரேல் - – ஹமாஸ் போரை இரு தரப்பின் மோதலாக மட்டும் பார்க்க முடியாது.
இந்த நான்கு நாள் நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து –- நிரந்தரப் போர் நிறுத்தத்தை இரண்டு தரப்பும் ஒப்பந்தமாக ஆக்க வேண்டும்.
நிரந்தர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேலை உலக நாடுகள் பணிய வைக்க வேண்டும்.
•--------------------
மர்ம(?) காய்ச்சல்.
சீனாவில் புதிதாகப் பரவிவரும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வகை கண்டறியப்படாத காய்ச்சல் காரணமாக சீன குழந்தைகளிடையே ஏற்படும் சுவாசக் கோளாறு அதிகமாக உள்ளது.
ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாச பிரச்னைகளின் பாதிப்பு ஆகிய இரண்டிலும் இந்தியாவிற்கான பாதிப்பு குறைவாக உள்ளதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இருந்து வெளிப்படும் எந்தவொரு நெருக்கடியையும் இந்தியா எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வடக்கு சீனாவில் உள்ள குழந்தைகளிடையே மர்மமான சுவாச நோய் பரவுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஒன்றிய சுகாதார அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கடந்த சில வாரங்களில் சீனாவில் சுவாச நோய்களின் பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வைரஸ் தொற்றானது, ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் மற்றும் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் சுவாச கோளாறு நோய்க்கு வழக்கமான காரணங்கள் பல இருந்தாலும் அசாதாரண நோய்க்கிருமி அல்லது எதிர்பாராத ஏதேனும் அடையாளம் காணப்படவில்லை எனவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.