சலவை எந்திரத்தால் தூய்மை

மணல் குவாரிகள் தொடர்பாக 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. 

இதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ‘’சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் எனும் அமலாக்கத்துறையின் அதிகார வரம்புக்குள் மணல் எடுப்பது வராது; ஆனால், அதிகார வரம்பை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது’’ என தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியிருக்கிறது.


சம்மன் அனுப்புவது, வழக்கு போடுவது, சொத்துக்களை முடக்குவது, கைது செய்வது என அமலாக்கத் துறை ஒவ்வொரு வினாடியும் பா.ஜ.க. அல்லாத கட்சிகளை மட்டுமே குறி வைத்து நடவடிக்கை மேற்கொள்கிறது. மோடி அரசின் ஏவல் படையாக இருக்கும் அமலாக்கத் துறை 9 ஆண்டில் நடத்திய நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றிய அரசின் எதிர்க் கட்சிகளை மட்டுமே குறி வைத்து நடத்தப்பட்டவை.

 அவற்றின் பட்டியல் தான் இது...

«2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஏப்ரல் 27-ம் தேதி ஃபதேபூரில் பிரதமர் வேட்பாளரான மோடி பேசும் போது, ‘’மன்மோகன் சிங்கின் பத்தாண்டு கால ஆட்சியில் சி.பி.ஐ., ஐ.பி, ரா, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை அமைப்புகளை எனக்கு எதிராகப் பயன்படுத்திய போதிலும் காங்கிரஸ்காரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை’’ என்றார்.

 மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அதிகார அமைப்புகளை எதிர்க் கட்சிகள் மீதும் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் மீது ஏவியது. சி.பி.ஐ., ஐ.பி., ரா, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, தேர்தல் கமிஷன் ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு தான் ஆட்சி கவிழ்ப்பு ஃபார்முலாவை அமல்படுத்தியது மோடி அரசு. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 9 ஆண்டுகளில் மட்டும் அதிகார அமைப்புகளை வைத்து கொண்டு அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களின் ஆட்சிகள் கவிழ்க்கப் பட்டன. 

அங்கே தனது ஆதரவு வேட்பாளர்களை முதலமைச்சாராக்கி னார்கள். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஆட்டி படைத்தார்கள்.

«‘‘சி.ஏ.ஜி., சி.பி.ஐ, அமலாக்க துறை உட்பட அனைத்து தன்னிச்சையான, ஜனநாயகஅமைப்பு களையும் காங்கிரஸ் ஆட்சிதான் மட்டம்தட்டி அவமதித்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தேவைப்பட்ட போதெல்லாம் கட்சிகளை மிரட்ட சி.பி.ஐ-யைப் பயன்படுத்தினீர்கள்’’ என்று பிரதமர் ஆவதற்கு முன்பு 2014 ஏப்ரல் 17-ம் தேதி பேசிய மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு சி.பி.ஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, என்.ஐ.ஏ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் போனது. 

ரஃபேல் விமான முறைகேடு பற்றிப் பேசாத சி.ஏ.ஜி. அமைப்பை எல்லாம் யார் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்?

«தவறு செய்தவர்கள் என்று பாஜகவினரால் குற்றம் சாட்டப் பட்டவர்கள், பா.ஜ.க-.வில் இணைந்து விட்டால் மகாத்மா ஆகிவிடு வார்கள். அப்படிப்பட்ட ‘புனி தர்கள்’ மீதான வழக்குகள் புஸ்வானம் ஆகிவிடும். “கட்சியில் இணைந்தால் சி.பி.ஐ, அமலாக்கத்துறை வழக்குகளை முடித்து வைத்துவிடுகிறோம் என பா.ஜ.க பேரம் பேசியது. அவர்களிடம் தலைகுனிய மறுத்துவிட்டேன்’’ என்று ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சொன்னார்.

 ‘’நீங்கள் ஏன் பா.ஜ.க.வில் சேரக் கூடாது? என்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் கேட்டனர்’’ என செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரே நீதிமன்றத்தில் சொன்னார். 

இதுதான் பா.ஜ.க.வின் யோக்கியதை ஆகும்.

«மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸில் எம்.பி., அமைச்சர் எனப் பொறுப்புகளை வகித்து, முதல்வர் மம்தாவின் தளபதியாக இருந்த சுவேந்து அதிகாரி, அஸ்ஸாம் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மா, மகாராஷ்டிரா முன்னாள்முதல்வர் நாராயண் ராணே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், சிவசேனா கட்சியின் எம்.பி பாவனா கவாலி, சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப்சர்நாயக், சிவசேனா பிரமுகர் யஷ்வந்த் ஜாதவ் ஆகியோர் மீதான வழக்குகள் பா.ஜ.க-வில் சேர்ந்த பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. 

மேல் நடவடிக்கை இல்லாமல் முடக்கப்பட்டு விட்டன.

«பா.ஜ.க.வுக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கூட்டம் பட்னாவில் நடந்து, அது தொடர்பான புகைப்படம் வெளியானது. 

உடனே பிரதமர் மோடி, மத்தியப் பிரதேசம் போபாலில் 2023 ஜூன் 27-ம் தேதி பேசும் போது, ‘’பா.ஜ.க-வுக்கு எதிராக பாட்னாவில் சில எதிர்க் கட்சிகள் கைகோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அந்த போட்டோவில் உள்ள அனைவரையும் சேர்த்தால் 20 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பார்கள்.

 தேசியவாத காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால் அதன் மீது 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் புகார் உள்ளது. மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஊழல், மகாராஷ்டிரா பாசனத் திட்ட ஊழல், சட்டவிரோத சுரங்க ஊழல் இந்த பட்டியலும் நீண்டு கொண்டே போகும்’’ என்றார். 

மோடி இப்படிப் பேசிய அடுத்த 5-வது நாளில் அதாவது 2023 ஜூலை 2-ம் தேதி ஒரு அதிசயம் நடந்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளக்கப்பட்டு 30 எம்.எல்.ஏ-க்கள் மஹாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க. சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர்.

 தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வர் ஆனார். அவருடன் தேசியவாத காங்கிரஸின் 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். 

எந்த தேசிவாத காங்கிரஸ் கட்சி மீது 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் புகார் உள்ளது என மோடி சொன்னாரோ அந்த கட்சியின் எம்.எல்.ஏ-களை வளைத்துதான் ஆட்சியை அமைத்தார்கள். இப்போது அவர்கள் மீதான வழக்குகள் புனிதத்துவம் பெற்றது.

« ‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் 2021 செப்டம்பரில் சோதனை நடத்தினர். விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகளை ’நியூஸ் கிளிக்’ கவரேஜ் செய்த வீடியோக்கள் மில்லியன் கணக்கானவர்கள் பார்த்ததுதான் ரெய்டுக்குக் காரணம்.

«சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளரான சஞ்சய் ராவத்எம்.பி-க்கு எதிராக குடிசை சீரமைப்பு திட்டத்தில் பண மோசடி என சொல்லி அமலாக்கத்துறை பழிவாங்கியது.

«தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் குறிவைக்கப்பட்டார்.

«ரயில்வே வேலைக்கு லஞ்சம் என சொல்லி லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தி னருக்கு சொந்தமான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக் களை அமலாக்கத்துறை முடக்கியது.

«சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலை நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் அங்கே ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் மீது கரும்புள்ளியை குத்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வீடு உள்பட அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை போட்டது.

«மதுபான கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங்கின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

«ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு நடுவே அமலாக்கத்துறை 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அரசை ஊழல் அரசாக சித்தரிக்க முயன்றார்கள்.

சொன்னது கொஞ்சம் தான். அமலாக்கத் துறையை வைத்து பா.ஜ.க.அரசு செய்து வரும் அடாவடிகள் ஏராளம். அந்த அமலாக்கத் துறை பா.ஜ.க. வின் கொள்கையை அமலாக்கம் செய்யும் துறையாகவே மாறிபோனது. அமலாக்கத்துறை இயக்குநரான சஞ்சய் மிஸ்ராவின் பதவி காலம் முடிந்த பிறகும் அவருக்கு 3 முறை மோடி அரசு பணி நீட்டிப்பு வழங்கியது. 3-வது முறையாக சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட போது அந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ‘’அமலாக்கத்துறை இயக்குநர் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது. அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் ஜூலை 31-ந் தேதி வரை மட்டும்தான் மிஸ்ரா பதவியில் இருக்க வேண்டும். அதற்கு பின் அந்தப் பதவியில் அவர் நீடிக்கக் கூடாது’’ என அதிரடியாக உத்தரவிட்டது. அதன் பிறகும் கூட ஒன்றிய அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி மிஸ்ராவின் பதவி நீட்டிப்புகாக மன்றாடியது. அப்போது செப்டம்பர் 15-க்குப் பின்னர் மிஸ்ரா எந்த நிலையிலும் அமலாக்கத்துறை இயக்குநராக நீடிக்கவே கூடாது’’ என உச்ச நீதிமன்றம் சொன்னது. அமலாக்கத் துறையில் அரசியல் தலையீடு இருப்பது உச்ச நீதிமன்றம் வரை நாறடித்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளை அந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸே அதிரடியாக கைது செய்த சம்பவம் எல்லாம் அமலாக்கத் துறையின் முகமுடியை கிழித்தெறிந்தது.

அதானியின் ஷெல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருக்குச் சொந்தமானது? 

அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? 

அமலாக்கத் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 

அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை ஏன் அமைக்க வில்லை? 

கர்நாடகாவில், ‘எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆட்சியில் 40 சதவீத கமிஷன் அரசு’ என குற்றச்சாட்டு எழுந்த போது சட்டவிரோத பணப் பரிமாற்றம் என சொல்லி மோடியின் அமலாக்கத் துறை ஏன் நடவடிகை மேற்கொள்ளவில்லை?

 ராஜஸ்தானில் சஞ்சிவாணி கூட்டுறவு ஊழல், மத்தியப் பிரதேசத்தில் போஷன் ஊழல், சத்தீஸ்கரில் நான் (NAAN) ஊழலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது மோடிக்குத் தெரியாதா? 

சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ.கதலை வர்கள் மீது எழுப்பப்பட்ட ஊழல் புகார்கள் பற்றி வாய் திறக்காதது ஏன்? 

எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை, சி.பி.ஐ விசாரணை எனத்தீவிரம் காட்டிய மோடி அரசு, பா.ஜ.க தலைவர்கள் மீது ஏன் பாய்ச்சலை காட்டவில்லை. ?

அவர்கள் சலவை எந்திரத்தால் தூய்மை செய்யப்பட்டவர்களா?

நன்றி:முரசொலி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?