கொடநாடும் வெளிநாடும்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கொடநாடும் வெளிநாடும்
தமிழ் நாடு சட்டப் பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆகிய துறைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது: "நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு40 என்ற வெற்றியைப் பெற்ற பெருமிதத்துடன், இந்தப் பேரவைக்கு நாங்கள் வந்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஆய்வு செய்தால், திமுக கூட்டணி 221 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள்? யாரை மக்கள் அடியோடு புறக்கணித்து உள்ளார்கள்?
என்பதையெல்லாம் இதன் மூலம் உணர முடியும். அதனால் தான், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்று விட்டார்கள்.
இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித் திட்டம் தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது.
கடந்த 19ம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன்.
அது குறித்து இதே அவையில் 20ம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்தேன். சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டேன்.
அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். குற்றவாளிகளில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசை திருப்பல் நாடகம்.
எதை மறைத்தோம் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள்?
‘சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சிபிஐ விசாரணை கேட்டீர்களே’ என்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார்.
மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்பு தான்.
சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அதிமுக அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது.
அதனால் அப்போது சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர் கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.
விஷச்சாராய விற்பனை என்பது ஒரு சமூகக் குற்றம். விலை மதிப்பில்லாத மனித உயிர்களை பலி வாங்குகிற இதை முற்றிலுமாக ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல் துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன்.
அதைப் போலவே, போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். மது, போதைப் பழக்கங்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு ஒரு பக்கம் எடுத்தாலும் இது தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரங்கள் அதிகம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது.
போதை மருந்தின் பாதிப்புகளை உணர்த்துதல், குடிநோயாளிகளை மீட்பது ஆகியவற்றை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது.
அந்த இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, மிக முக்கிய வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன்.
கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.
சட்டம், ஒழுங்கைக் காப்பதில் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி இருக்கிறோம்.
18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவகங்கை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி, சுமூகமாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.
அதற்காக, அந்தப் பகுதி மக்கள் என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள். மேலும் 40 லட்சம் பேர் திரண்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, 2 லட்சம் பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா, 8 லட்சம் பேர் கூடிய திருச்செந்தூர் சூரசம்ஹாரம், 5 லட்சம் பேர் கூடிய பழனி தைப்பூசத் திருவிழா, 12 லட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா, 3 லட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா, 20 ஆயிரம் பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தையும் அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.
இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதி மிகு மாநிலமாக அது இருப்பதால் தான். காவல் துறையில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதில் 179 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. மற்ற அறிவிப்புகளும் விரைவில் அரசாணையாக ஆகும் என்று உறுதி அளிக்கிறேன். வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
தமிழ்நாடு இன்று இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்ந்து வருகிறது,
தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்பில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல. என்னை முதல்வராக ஏற்றி வைத்து, ஒவ்வொரு துறையையும் தங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் வளர்த்து வரும் எனது அருமை அமைச்சரவை சகாக்களால் தான்.
உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகளைப் பொறுத்தவரை, பரந்தாமன் சென்னை மாநகரில் காவலர் குடியிருப்புகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையில் சிறப்புப் பழுதுபார்க்கும் பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் ரூ.40 கோடி, இந்த ஆண்டு முதல் ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டு அப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா, சின்னதுரை ஆகியோர் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் காவல் துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் கடவுச் சீட்டு மற்றும் தடையில்லாச் சான்று போன்றவைகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இது போன்ற பல ஆயிரம் வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
மீதமிருக்கும் வழக்குகள் குறித்தும் உரிய தரவுகள் பெற்று திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநரை அறிவுறுத்தியிருக்கிறேன்.
பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பணி செய்த காவலர்களுக்கு தேர்தல் பணிப்படி வழங்க கோரிக்கை விடுத்தார்.
அக்கோரிக்கையின் அடிப்படையில் காவல்துறை தலைமை இயக்குநரிடம் கருத்துரு பெற்று விரைவில் தேர்தல் பணிப்படி வழங்கப்படும். மேலும் அவை முன்னவர் பேரணாம்பட்டு காவல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டார்.
அந்த காவல் நிலையத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
* அவையில் குந்தகம் ஏற்படுத்திய அதிமுக
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையில்,‘‘முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இந்தக் கூட்டத் தொடரில் எடுத்த தவறான நிலைப்பாடு எனக்கு வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது.
ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அந்த பதிலைக் கேட்பதற்குத் தான் அதிமுக தயாராக இல்லை.
ஒருபுறம் தேர்தல் தோல்வி, மறுபுறம் சொந்தக் கட்சியில் நெருக்கடி என இரண்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு, அதில் இருந்து தப்பிப்பதற்காக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தியது அதிமுக.
நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எதிர்க்கட்சியினர் இந்த அவையில் எவ்வளவு நேரம் பேசியுள்ளார்கள் என்பதையும், அதிமுக ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டு ஆட்சிகளின் ஜனநாயகப் பண்பும் தெரியும், புரியும்’’ என்றார்.
* மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்று விட்டார்கள்.
பா.ஜ.க ரவுடி சத்யா பின்னணி
ஏராளமான கொலைகள், ஆள் கடத்தல், கொலை முயற்சி என தமிழ்நாட்டையே கதி கலங்க வைத்த கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா முதல்முறையாக போலீசில் பிடிபட்டுள்ளார். ரவுடி சத்யா, கொடூர கொலையாளியாக மாறியது எப்படி?
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கூலிப்படையினர், ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது ஏ-பிளஸ் ரவுடிகளை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு பயங்கர ரவுடியான சீர்காழி சத்யா வந்திருப்பதாக செங்கல்பட்டு எஸ்பி சாய் ப்ரனீத்துக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு வாகனச் சோதனை நடத்தி சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 2 பேரையும் கைது செய்தனர். அதில் சீர்காழி சத்யா கொடூரக் கொலையாளி என்பதால், அவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீர்காழி சத்யாவின் சொந்த ஊர் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் சாலை. அப்பா, அம்மா இருவருமே கூலி தொழிலாளிகள். சத்யாவுக்கு படிப்பு வரவில்லை. 8ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாததால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். அருகில் உள்ள ஆத்தூரில் பிரபல சாராய வியாபாரி கண்ணையாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
அவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அப்போது கண்ணையாவுக்கும், மணல்மேடு சங்கர், கேபிரியேல் ஆகியோருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
அதில் கண்ணையாவின் கூட்டாளி ராஜலிங்கத்தை, மணல்மேடு சங்கரின் ஆட்கள் கொலை செய்தனர்.
இதற்கு பழிக்குப் பழியாக சங்கரின் ஆள் அஞ்சப்பனை, கண்ணையாவின் ஆட்கள் படுகொலை செய்தனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக கேபிரியேலின் கூட்டாளி டெலிபோன் ரவியை, சீர்காழி சத்யா மற்றும் அவரது ஆட்கள் சேர்ந்து 2005ம் ஆண்டு படுகொலை செய்தனர்.
அதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குள் நடந்த மோதலில், கண்ணையா கொலை செய்யப்பட்டார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சீர்காழி சத்யா, வல்லம்படுகை சந்திரனின் கூட்டாளியாக சேர்ந்தார். பின்னர் மீன்சுருட்டி சிற்றரசு, குடவாசல் ராஜேந்திரன் ஆகியோருடனும் கூட்டணி சேர்ந்தார்.
குடவாசல் ராஜேந்திரனுக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் நிலப் பிரச்னை ஏற்பட்டது. அதில் குடவாசல் ராஜேந்திரனுக்காக 2006ல் இரண்டு கொலைகளை செய்தார். பின்னர் 2011ல் திருச்சி புல்லம்பாடியில் முருகேசன், 2012ல் திண்டுக்கலில் ஜாபர் என்பவரை படுகொலை செய்தார்.
2013ம் ஆண்டு காரைக்காலில் ராமு என்பவரை குடவாசல் ராஜேந்திரனுக்காக கொலை செய்தார். அதைத் தொடர்ந்து சீர்காழி சத்யா, பெரிய ரவுடியாக வலம் வரத் தொடங்கினார். அதன்பின்னர் 2014ல் சிதம்பரம் அண்ணாமலை நகரில் ஒரு திருமண மண்டபத்துக்குள் புகுந்து, மணமகனாக இருந்த ஆம்புலன்ஸ் ராஜா மற்றும் மணமகளை வெட்டி தனியாக தலையை எடுத்துச் சென்ற சம்பவம் நடந்தது.
இந்தச் சம்பவம் அந்த நேரத்தில் பெரும் பரபரப்பையும், பீதியையும் உருவாக்கியது. அதுமுதல், சீர்காழி சத்யா என்றால் ரவுடிகளே நடுங்க ஆரம்பித்தனர்.
பின்னர் தமிழகத்தில் தற்போது நம்பர் 1 ரவுடியாக வலம் வரும் திண்டுக்கல் மோகன்ராமிடம் கூட்டாளியாக சேர்ந்தார்.
2015ம் ஆண்டு சூலூரில் வக்கீல் ஒருவரின் அண்ணன் மற்றும் அவர்களது நண்பர்கள் 2 பேர் என 3 பேரை நடுரோட்டில், பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்தனர்.
இந்தக் கொலைகளுக்குப் பிறகு திண்டுக்கல் மோகன்ராம், சீர்காழி சத்யா என்றால் தமிழகத்தில் உள்ள அத்தனை ரவுடிகளும் பீதியில் உறைய ஆரம்பித்தனர். அதன்பின்னர் நரிக்குடியில் பன்னீர் என்பவரை படுகொலை செய்தனர்.
2017ல் சென்னை சங்கர் நகரில் சங்கர்லால் என்பவரை படுகொலை செய்தனர். அதன்பின்னரும் ஏராளமான படுகொலைகளை கூலிப்படையாக இருந்து நிகழ்த்தியுள்ளனர். சத்யா கூலிப்படை தலைவனாக மாறிய பிறகு, கூலிக்கு செய்யும் கொலைகளுக்கு யாராவது சில்லரை ரவுடிகள் சரண் அடைந்து விடுவார்கள்.
சத்யா மீது நேரடியான வழக்குகள் வராது. அதேபோல தமிழகம் முழுவதும் ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டாலும் துப்பாக்கி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் தாக்குவது போன்றவற்றால் பலர் புகார் செய்வதற்கே அஞ்சினார்கள்.
இதற்கு முன்பு இருந்த போலீஸ் அதிகாரிகள், ரவுடிகளையோ, கூலிப்படையினரையோ கைது செய்ய முன்வரவில்லை. தற்போதுதான் ரவுடிகளை ஒடுக்கும் படலம் தொடங்கியுள்ளதால், சீர்காழி சத்யா முதல் முறையாக போலீசில் சிக்கியுள்ளார். போலீசார் தன்னை பிடிக்க முயன்றதால்தான் தாக்குதலும் நடத்தியுள்ளார்.
அதில் போலீசார் திருப்பித் தாக்கும்போது துப்பாக்கி குண்டு காலில் பட்டுள்ளது.
தமிழகத்தில் பல கொடூர கொலைகளை செய்தாலும், ஒரு வழக்கில் கூட போலீசார், சீர்காழி சத்யாவை கைது செய்தது இல்லை. போலீசிலும் சத்யாவுக்கு ஆட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 20 வக்கீல்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவார்.
சிறைக்கு செல்வார். போலீசார் காவலில் எடுத்து விசாரித்தாலும் அடிக்க முடியாது. இதனால் மாப்பிள்ளை போல சரண்டராகி, மாமியார் வீட்டில் இருப்பதுபோல ஜெயிலில் இருந்து விட்டு, புது மாப்பிள்ளைபோல வெளியில் ஜாமீனில் வந்து சுற்றி வருவார். தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில்தான் தமிழகத்தில் இதுவரை வலம் வந்தார்.
* பாஜவில் உள்ள ரவுடிகள் 183 பொறுப்பில் மட்டும் 156 பேர்
பாஜவில் தற்போது தமிழகம் முழுவதும் 261 ரவுடிகள் சேர்ந்துள்ளனர். அதில் குற்றப்பதிவேடு உள்ள ரவுடிகள் மட்டும் 183 பேர். ரவுடிகளாக உள்ள 156 பேருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதில் மிகப் பெரிய ரவுடிகளாக சீர்காழி சத்யா, கே.ஆர்.வெங்கடேஷ் (ஓபிசி அணியின் மாநில செயலாளர்), அஞ்சலை (வடசென்னை மேற்கு மகளிர் அணியின் மாவட்ட செயலாளர்), படப்பை குணா (ஓபிசி அணியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்), சூர்யா (எஸ்.சி/எஸ்டி அணியின் மாநில செயலாளர்), ராஜா(எ)வசூல் ராஜா (விளையாட்டு அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்), கார்த்திக் (எ) கார்த்திகேயன் (ஓபிசி அணியின் மாநில செயலாளர்), அகோரம் (மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர்), ராஜசேகர் (எ) எஸ்.ஆர்.தேவர் (மாநில துணை தலைவர்) ஆகியோர் முக்கியமானவர்கள்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்