அறிவிப்பில்லா அவசரநிலை!

 அறிவிப்பில்லா அவசரநிலை!

அவசர நிலைக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆதரவாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது.

1975 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதை நினைவு கூர்கிறார் மோடி. அதாவது காங்கிரசு கட்சிக்கு எதிராகப் பேசுவதற்காக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார். இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை ராகுல் எடுத்துக் காட்டுவது அவருக்கு எரிச்சலைத் தருகிறது. அதனால் பழைய வரலாற்றைச் சொல்லி காங்கிரசைக் கேள்வி கேட்கிறாராம் மோடி.

“எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு, நமது அரசியலமைப்புச் சட்டத்தை நேசிப்பதற்காகச் சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. எமர்ஜென்சியைக் கொண்டு வந்த மனநிலை, அதே கட்சியினரிடம் இப்போதும் உயிர்ப்புடன் உள்ளது. தேசத்தை சிறையாக மாற்றியவர்கள் அவர்கள்” என்று சொல்லி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டுள்ளார் பிரதமர்.

எமர்ஜென்சியைக் கொண்டு வந்ததற்கு வருத்தம் தெரிவித்து, 1979 செப்டம்பர் 30 சென்னையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழா, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ஆகியவை இணைத்து நடைபெற விழாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களே பேசிவிட்டார்கள். இது வரலாறு.

ஆனால், எமர்ஜென்சியைப் பற்றி பேசுவதற்கான தகுதி இன்றைய பிரதமருக்கு இருக்கிறதா? பத்தாண்டுகாலமாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமலில் வைத்திருப்பவர் அல்லவா மோடி?

எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகளைக் கலைக்கும் 356 ஆவது பிரிவை விட மோசமானது கட்சிகளை உடைப்பது, ஆட்களை இழுப்பது, ஆட்சிகளைக் கவிழ்ப்பது. இதைத் தானே பத்தாண்டு காலமாக மோடி செய்து கொண்டு இருக்கிறார். மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு அரசாங்கங்களை அமைப்பதை விட, இருக்கும் ஆட்சிகளை கவிழ்த்து தங்களது கொத்தடிமைகளாக மாற்றுவது தானே மோடி பாணி சட்டம். அதிகப்படியான மாநில அரசுகளைக் கவிழ்த்து, அங்கெல்லாம் பா.ஜ.க.வின் தொங்கு சதை ஆட்சிகளை உருவாக்கியது அவரது மிசா பாணியல்லவா?

நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றிய காலமல்லவா மோடி காலம். எத்தனையோ சட்டங்களை விவாதம் இல்லாமல் நிறைவேற்றி விட்டார்கள். அதை விட முக்கியமாக 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையை விட்டு டிஸ்மிஸ் செய்துவிட்டு நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றியதை விட மக்களாட்சியின் மாண்பு குலைக்கப்பட்டதற்கு எடுத்துக் காட்டு தேவையா?

இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் என்று தேர்ந்தெடுத்து அவர்களது தொலைபேசி எண்கள், அந்நிய நாட்டு நிறுவனத்தின் துணையோடு ஒட்டுக் கேட்கப்பட்ட தகவல் வெளியானது. ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம், மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் விவாதம் நடத்த வேண்டும் என்பது தான் எதிர்க்கட்சிகளின் ஒரே ஒரு கோரிக்கை. அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்தார்கள். மணிப்பூர் குறித்தோ, அதானி விவகாரம் பற்றியோ, ரஃபேல் ஊழலைப் பற்றியோ விவாதம் நடத்தப்பட்டதா? பல்லாயிரம் கோடி போட்டு புது பில்டிங் கட்டியதால் என்ன பயன்?

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டாண்டு காலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வெயில் -–- மழை பாராமல் தலைநகர் சாலைகளை முடக்கிப் போட்டுப் படுத்துக் கிடந்த பரிதாபக் காட்சிகள் பா.ஜ.க.வின் எமர்ஜென்சி கொடுமைகளாக எல்லாக் காலத்திலும் சொல்லும். சிறுபான்மை மக்களை மொத்தமாக முடக்க குடியுரிமைச் சட்டம் என்ற குற்றுயிர் ஆக்கும் சட்டமும் எமர்ஜென்சியின் சாட்சியம் அல்லவா?

அரசியல் சட்ட காலம் முதல் இருந்த காஷ்மீரின் சிறப்புரிமையை -– காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் வீட்டுச் சிறையில் வைத்து நிறைவேற்றியவர் தான், ‘தேசத்தை சிறையாக மாற்றினார்கள்’ என்று இப்போது பேசுகிறார். 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் உண்டா? நடத்தும் தைரியம் தான் உண்டா?

டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார். ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சிறையில் இருக்கிறார். எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் எமர்ஜென்சி அமைப்புகளாக சி.பி.ஐ., வருமானவரித் துறை, அமலாக்கத்துறை மாற்றப்பட்டு விட்டது. பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சித் தலைவர்கள் இவர்கள் மூலமாக மிரட்டப்படுகிறார்கள். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ரசாயன மாற்றம் செய்ய இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது. பல்லாயிரம், பல லட்சம் கோடி ஊழல் வாதிகள் கூட பா.ஜ.க.வுக்குள் போனால் சுத்தமாகி வரும் வாஷிங் மிஷின் ‘மோடி பாணி எமர்ஜென்சி’யின் சாட்சியங்கள் அல்லவா?

‘400 கொடுங்கள் -– நினைத்ததைச் செய்ய வேண்டும்’ என்று கொக்கரித்தது பா.ஜ.க. 240க்கு இறக்கினார்கள் இந்திய நாட்டு மக்கள். அதனால் தான் இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை தலைகுனிந்து வணங்கினார் மோடி. இல்லாவிட்டால் நிலைமையே வேறு. இந்த பத்து நாட்களில் என்னென்னவோ செய்திருப்பார்கள். நீட்டி முழங்கி இருப்பார். ‘நிரந்தர எமர்ஜென்சியை’ அவரால் செய்ய முடியாமல் போன ஆத்திரத்தை தான் பழைய கதையைப் பேசி தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறார் பிரதமர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?