சொந்த காசில் சூனியம்?

 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

தேவகோட்டை அருகே மலேசிய சுற்றுலா பயணிகள் வந்த வாகனமும் காரும் மோதிக் கொண்ட விபத்து.4 பேர் உயிரிழப்பு.
டெல்லியில் மா.கம்யூ தலைவர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி.

சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது ஒன்றிய அரசு.

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 3,814 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்.

சொந்த காசில் சூனியம்?


பன் - கிரீம் மற்றும் கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம் தமிழக பா.ஜ.க-வுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.


பன் - கிரீம் மற்றும் கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம் தமிழக பா.ஜ.க-வுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.  

கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநர் டி சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் புதன்கிழமை நடைபெற்ற தொழில்துறை கூட்டத்தில் ஜி.எஸ்.டி விகிதங்களின் “அபத்தம்” குறித்து நகைச்சுவையாகப் பேசியதுடன் இது தொடங்கியது.


இது குறித்து பா.ஜ.க-வினர் கடுமையாக விமர்சித்த நிலையில், சீனிவாசன் மறுநாள் வியாழன் அன்று இந்த விவகாரத்தை சரி செய்ய நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு மேற்கொண்டார்.

இந்த நேரத்தில், பா.ஜ.க தலைவர்கள் ஆவலுடன் சீனிவாசன் மன்னிப்பு கோரியதாக கூறி, சந்திப்பு நடத்திய வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

ஆனால், சாதாரண பின்னணியில் உருவாகிய அன்னபூர்ணா டீக்கடை, இன்று வளர்ந்து முன்னணி நிறுவனமாக இருந்து வரும் நிலையில், அவர்கள் மூலம் தங்களுக்கு வரும் பின்னடைவை தமிழக பா.ஜ.க எதிர்பார்க்கவில்லை. 


இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், மூன்று மாத படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள பா.ஜ.க மாநில தலைவர் கே.அண்ணாமலை, நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் பேசிய வீடியோவை பா.ஜ.க-வினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். 


கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற்ற ஜி.எஸ்.டி குறைதீர்க் கூட்டத்தில், சிறு,குறு தொழில் முனைவோர் , பஞ்சாலை  உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துரையாடினார்.

இதில் அனைத்து துறைகளைச் சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளையும் கருத்துகளையும்தெரிவித்தனர். இந்நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ  வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.


அப்போது, பேசிய கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், “பன்னுக்கு ஜி.எஸ்.டி இல்லை, ஆனால், அதுக்குள்ள வைக்குற கிரீம்க்கு 18% ஜி.எஸ்.டி வரி.

உங்க எம்.எல்.ஏ எங்க கடையின் ரெகுலர் கஸ்டமர் தினமும் வந்து சாப்பிட்டுவிட்டு சண்டை போடுகிறார்கள், ஸ்வீட்டுக்கு 5% ஜி.எஸ்.டி, காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி, ஒரே குடும்பத்துல இத்தனை வகையா ஜி.எஸ்.டி போட்டா சண்டை வருது. கஸ்டமர் பன் மட்டும் எடுத்துட்டு வாங்க, சீனி, ஜாம் நாங்க போட்டுக்கிறோம் என்கிறார்கள், கடை நடத்த முடியல மேடம். அதனால், ஜி.எஸ்.டி வரியை ஒரே மாதிரி ஆக்கிவிடுங்கள்” என்று அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கொங்கு தமிழில் நகைச்சுவையாகப் பேசி கோரிக்கை விடுத்தார்.


அப்போது அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், மோடி அரசாங்கம் ஜி.எஸ்.டி தொடர்பான குறைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது என்று கூறினார்.

“சமீபத்திய ஜி.எஸ்.டி கூட்டத்தில் கூட, அமைச்சர்கள் குழு அனைத்து குறைகளையும் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தேன். யாரோ ஒருவர் சுவாரசியமான முறையில் கேள்வி கேட்டதால், அது ஜி.எஸ்.டி-யின் தீவிர எதிர்ப்பாளர்களை நியாயப்படுத்துகிறது. மக்கள் மீதான சுமையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மட்டுமே என்னால் கூற முடியும்,” என்று அவர் கூறினார். 


இருப்பினும், இந்த வீடியோ வைரலாக பரவியதால், சீனிவாசனின் தைரியமான பேச்சுக்காக அவரை பலரும் பாராட்டினார். மேலும், ஜி.எஸ்.டி வரி மற்றும் மத்திய பா.ஜ.க அரசு மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். 

மறுநாள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பா.ஜ.க கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுடன் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் சந்திப்பு மேற்கொண்ட வீடியோவை தமிழக பா.ஜ.க-வின் டிஜிட்டல் விங் பிரிவின் முக்கியத் தலைவர்கள் வெளியிட்டனர்.


அதில், சீனிவாசன் சீதாராமனுடன் பேசுவதையும், அவரிடம் ஏதோ பேசுவதற்காக கைகளைக் கட்டிக்கொண்டு எழுந்திருப்பதையும் காணலாம். 


தமிழக பா.ஜ.க கன்வீனர் பாலாஜி எம்.எஸ், நிதியமைச்சரிடம் சீனிவாசன் தனது "அநாகரீகமான" பேச்சுக்காக "மன்னிப்பு" கேட்டதாகவும், தொழிலதிபரின் ஜி.எஸ்.டி கருத்துகளை தெளிவுபடுத்துவதற்காக வீடியோ வெளியிடப்பட்டதாகவும் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். 


ஆனால் இந்த வீடியோவுக்கு மாநிலத்தில் உள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்வாக்கு மிக்க நாயுடு சமூகத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய தொழிலதிபரான சீனிவாசன் இப்படி நடத்தப்பட்டது குறித்து கோபமடைந்தனர்.


இது ஆளும் தி.மு.க-வும், காங்கிரஸும் ஆக்சனில் குதிக்க வழிவகுத்தது.


பா.ஜ.க சீனிவாசனை "நிர்ப்பந்தித்து" மன்னிப்பு கேட்க வைத்துள்ளது என்று குற்றம் சாட்டினர்.


இந்த வீடியோவை பகிரங்கப்படுத்தியதன் மூலம் சீனிவாசனை பாஜக அவமானப்படுத்தியதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டினார்.

வெளி ஆளான பா.ஜ.க தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என்கிற தி.மு.க-வின் சொல்லாடலுடன் இந்த சர்ச்சை ஒத்துப்போகிறது.


தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் பா.ஜ.க-வின் 4 சட்டமன்றத் தொகுதிகளில் கோவையும் ஒன்று. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், கோவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை, தி.மு.க.,விடம் தோல்வியடைந்தார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இந்த பிரச்சினையை எழுப்பினார். 'சிறு வணிக உரிமையாளர்கள் மீது மோடி அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை' என்ற தனது நிலையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். "கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற சிறு வணிகத்தின் உரிமையாளர், பொது ஊழியர்களிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி முறையைக் கேட்டால், அவரது கோரிக்கை ஆணவமாகவும், அப்பட்டமான அவமரியாதையுடனும் சந்திக்கப்படுகிறது.


ஆனால், மோடி அரசாங்கம் சிறிய மற்றும் நடுத்தர கோடீஸ்வரர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி மற்றும் பிற பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நிறுவனங்கள் (எஸ்.எம்.இ) போராடி வருவகிறது" என்றும் அவர் கூறினார். 


இந்த சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், வணிக உரிமையாளருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலை பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


தனிப்பட்ட சந்திப்பை பாஜகவினர் வீடியோ எடுத்து வெளியிட்டதற்காக அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார்.


மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறினார். 


அண்ணாமலை இல்லாத சூழ்நிலையை கையாண்ட பாஜக மூத்த தலைவர் ஒருவர், இந்த முழு சர்ச்சைக்கும் வருத்தம் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனுடனான தொழிலதிபர்களின் சந்திப்பில் சீனிவாசன் "சாதாரணமாக" பேசியதாக அவர் கூறினார். "ஆனால் சமூக ஊடகங்கள் அதை வைரலாக்கியது" என்றார். “இது நிதியமைச்சருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.


மத்திய அமைச்சர் வருத்தமடைந்ததாக வானதி சீனிவாசன் சீனிவாசனுக்குத் தெரிவித்தார். சீனிவாசன் உடனடியாக கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.


மன்னிப்பு கேட்க அல்ல, ஆனால் அவருக்கு எந்த தவறான எண்ணமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக. இருப்பினும், உரையாடலில் ஒரு பகுதி இருந்தபோது, ​​​​அவர் தனது செய்தியை அமைச்சரிடம் பணிவுடன் தெரிவிதத்தார். இந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அதை பதிவு செய்து ஆன்லைனில் காட்சிகளை பகிர்ந்து கொண்டனர்,” என்று அவர் கூறினார்.


அண்ணாமலைக்கு நெருக்கமான ஒருவர், கட்சித் தலைமை வருத்தமடைந்ததாகவும், சைபர் பிரிவு கண்டிக்கப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.


சீனிவாசனுக்கு நெருக்கமான தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், அவர் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை என்றும், சந்திப்பின் போது வீடியோ எடுக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாது என்றும் கூறினார்.


“இந்த சந்திப்பு மூடிய கதவுக்கு பின்னால் நடநதது. ஜி.எஸ்.டி தொடர்பான ஹோட்டல் துறையின் குறைகளை மட்டும் சீனிவாசன் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் அறிவும் விவேகமும் உள்ளவர். அவர் அமைச்சரை சங்கடப்படுத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்பினார். அதனை அவர் தனது பாணியில் மட்டுமே முன்வைத்தார்.ஆனால் வானதி சீனிவாசன் அதை வீடியோவாக எடுத்து தெளிவற்ற ஒலிப்பதிவுடன் மன்னிப்பு கேட்டதாக தனது ஆட்கள் மூலம் பரவலாக்கி பாஜகவுக்கு சூனியம் வைத்துவிட்டார். " என்று அவர் கூறினார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக