என்ன பிணக்கு?

 டெல்லி முதல்வர் பதவியை விட்டு இன்று கெஜ்ரிவால் விலகல்.

கந்துவட்டிக் கொடுமையால் பேக்கரி கடைக்காரர் தற்கொலை; ஆபத்தான நிலையில் மனைவி.

தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்.

ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு.அகிலேஷ் குற்றச்சாட்டு.

கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன்மோடி குறைக்கவில்லை? எதிர்கட்சிகள் கேள்வி!

எனக்கும் கடவுளுக்கும் என்ன பிணக்கு?


"எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்."


தந்தை பெரியார் தன்னைப் பற்றி இப்போது எழுதியிருந்தால் என்ன எழுதியிருப்பார் என அவர் கூற்றிலேயே எழுத்தாளர் மருதன் இந்து தமிழ் இணையதளத்தில் சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்று வரவேற்பைப் பெற்றுள்ளது.

“ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்...” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை பின்வருமாறு :


“என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.


தேவை என்று பட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள்.


என் வழியும் அதுதான். உங்கள் சாதி ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தி, உன் அம்மா யார், உன் அப்பா யார், உன் தாத்தா, பாட்டி எல்லாம் யார், அவர்கள் பின்னணி என்ன என்றெல்லாம் விசாரணை நடத்துகிறது. அதன் பிறகே அந்த மனிதனை மதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறது.

அப்படிப்பட்ட மோசமான சாதி என் பக்கத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனுடைய பக்கத்திலும் நெருங்கி வரக்கூடாது என்பேன்.

உங்கள் மதம் இன்னொரு மதத்தை உளமாற வெறுக்கக் கற்றுக் கொடுக்கும் என்றால்; வேறு மதங்களை நம்புபவர்களையோ ஒரு மதத்தையும் நம்பாதர்களையோ பழிக்கும் என்றால்; அப்படி ஒரு மதத்தைப் பின்பற்றுவதால் வரும் புண்ணியமோ பலனோ எனக்கு வேண்டாம் என்று அடித்துச் சொல்வேன்.


மற்றபடி எனக்கும் கடவுளுக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கல் சண்டையோ பூர்வ ஜென்மத்துப் பகையோ இல்லை.

என் நாட்டில் சிலருக்கு மட்டும்தான் சுதந்திரம் உண்டு, வேறு சிலருக்கு இல்லை என்றால்; சிலரே இந்தியர்கள் வேறு சிலர் அந்நியர்கள் என்றால்; ஏழைகள் ஏழைகளாகவே நீடிப்பார்கள் என்றால்; பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட மாட்டார்கள் என்றால்;


ஒருவரால் அச்சமின்றி எழுதவோ பேசவோ முடியாது என்றால்; இந்தக் குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டுவது தேச துரோகம் என்றால்; நான் என்ன செய்தாலும் நீ என் பக்கம்தான் நின்றாக வேண்டும் என்று என் நாடு என்னிடம் எதிர்பார்க்கும் என்றால்; அப்படியொரு நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லை என்பேன்.


என் மொழி அறிவை வளர்க்கிறதா? அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்துகிறதா?

பரந்த மனத்தோடு உலகம் எங்கிலும் இருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்கிறதா? பதிலுக்கு எல்லோருக்கும் தன் கதவுகளைத் திறந்துவிடுகிறதா?

வேறுபாடின்றி எல்லோரையும் அணைத்துக்கொள்கிறதா என்றெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். இல்லை என்று தெரிந்தால் அந்தக் கணமே என் மொழிப்பற்றை உதறிவிடுவேன்.


கோயிலில் சிலர் நுழையலாம், வேறு சிலர் நுழையக் கூடாது என்று சொன்னால், அப்படி ஓர் இடம் எனக்குத் தேவையில்லை என்று என் வழியில் போய்விடுவேன்.

கடவுளோ காந்தியோ நேருவோ அல்லது வேறொரு மகானோ, யாராக இருந்தாலும் ஒருவர் செய்வது தப்பு என்று என் மனதுக்குப் பட்டால் தப்பு என்றே அடித்துச் சொல்வேன்.

மனிதர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குத்தனமான கருத்து என்று தெரிந்துவிட்டால் அது எவர் வாயில் இருந்து வந்திருந்தாலும் அதை வலுவாக எதிர்ப்பேன்.


ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத எந்தத் தத்துவமும், எந்தக் கோட்பாடும், எந்தப் படைப்பும், எந்தக் கலையும், எந்த ஓவியமும், எந்த இசையும், எந்த வழிபாடும், எந்தப் பண்பாடும், எந்தப் பெருமிதமும், எந்த வாழ்க்கைமுறையும் எனக்கு வேண்டாம்.

எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறாயே, உனக்கு என்னதான் வேண்டும் என்று எரிச்சலோடு கேட்கிறார்கள்.


ஒவ்வொரு மனிதனும் தன்மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குக் குறுக்கே வரும் சக்திகள் என்னவாக இருந்தாலும் ஒன்றுவிடாமல் அவை அனைத்தையும் எதிர்க்கிறேன்.


எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும் வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன். எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்.


இதை எல்லாம் செய்ய நான் யார் என்றால்? பலவற்றைப் படித்தவன் என்றோ பெரிய பண்டிதன் என்றோ மாபெரும் சிந்தனையாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொதுவாழ்க்கைக்கு வந்துவிடவில்லை. வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே இந்தப் பணியை எடுத்து மேலே போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

இதில் விருதோ மதிப்போ கிடைக்காது என்று தெரியும்.

ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரையும் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்; ஒவ்வொருவரிடமிருந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் தெரியும். தெரிந்தேதான் வந்தேன்.


நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை, எழுதுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒருவர் காதிலும் விழாவிட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்றுகொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன்.


நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும் உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ வெறுப்போ கொள்ளமாட்டேன்.

வலிக்குமே என்று அஞ்சிக் கொண்டிருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய்கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.


உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்துவருகிறேன்.

நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன்.


கை சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன்.

கால்கள் துவளும்வரை உங்கள் பட்டித் தொட்டிகளில் எல்லாம் நடப்பேன்.


எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள்.

அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்.


- ஈ.வெ.ராமசாமி

இந்திய துணைக்கண்டத்தில் என்றென்றும் ஒலிக்கப்பட்டுவரும் ஒரு பெருஞ்சொல்

"தந்தை பெரியார்"

தனக்கு எதிராக வீசப்பட்ட அத்தனை கணைகளையும் தாங்கிக் கொண்டு தமிழினத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தந்தை பெரியார் வாழ்ந்த வயது 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாட்கள்.

அவர் சுற்றுப் பயணம் செய்த தூரம் - 8,20,000 மைல்கள். இது பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு. பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகள் 10,700. பெரியார் உரையாற்றிய நேரம் - 21,400 மணி நேரம். பெரியாரின் சொற்பொழிவுகளை பதிவுசெய்து ஒலிபரப்பினால் - 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலிக்கும்.

தமிழ்நாடு பெரியார் மண். திராவிடக் கொள்கையின் சங்கநாதம் தந்தை பெரியார்.

ஜாதியையும், மதத்தையும் ஒழித்து நாத்திகனாக, மானமும் அறிவும் உள்ள சுயமரியாதைக்காரர்களாக தமிழர்கள் வாழ பிரசாரம் செய்தவர் தந்தை பெரியார். தம் பெயருக்கு பின்னால் போட்டிருந்த ஜாதி பட்டத்தை பெரியாரும் தூக்கி எறிந்தார். அவரை பின்பற்றியோரும் தூக்கி எறிந்தனர். இதை தாம் நடத்தி வந்த குடி அரசு ஏட்டில் சாதிப் பட்டத்தைத் துறந்தவர்கள் என பதிவும் செய்தார்.

சமூகத்தின் சரிபாதி பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என குரல் கொடுத்தார். 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உள்ளிட்ட புரட்சிகர தீர்மானங்களை அம்மாநாட்டில் நிறைவேற்றினார். அன்றைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டன. அரசாங்கத்தில் இருந்த நீதிக்கட்சி மூலமாக இடஒதுக்கீடு, கோவில் நுழைவு என சாத்தியமான அத்தனையையும் சாத்தியப்படுத்தினார் தந்தை பெரியார். அதுவரை ஒடுக்கப்பட்டிருந்த பெரும்பான்மை மக்கள் தங்களது சமூக விடுதலைக்கான பயணத்தில் மானமும் அறிவும் உள்ளவர்களாக பெரியாரின் தலைமையை ஏற்றனர்.

என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar146 !

ஈ.வே.ராமசாமி என்று அறியப்பட்டவருக்கு பெரியார் என்ற பட்டத்தை அளித்தவர்கள் பெண்கள்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் பெரியார் இயக்கத்தில் சமமாக பங்காற்றினார். குடும்பம் குடும்பமாக தந்தை பெரியாரை ஏற்று அவர் வழியை பின்பற்றினர். ஒருகட்டத்தில் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானார்.

1938-ம் ஆண்டு முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்பு போர் தமிழ் மண்ணில் நடக்கிறது. தந்தை பெரியார் தலைமை வகிக்கிறார். தந்தை பெரியாரின் தளபதியாக களமாடியவர் பேரறிஞர் அண்ணா.

தாளமுத்து. நடராசன் ஆகியோர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதல் களப் பலியாயினர். ஆண்களும் பெண்களும் பெருந்திரளாக இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றனர். அந்த இந்தி எதிர்ப்புப் போரில்தான்…. ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே என 13 வயது சிறுவனாக முழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். இப்படித்தான் பெரியார் தலைமையில் ஒட்டுமொத்த தமிழகமே அணிதிரண்டது.

இந்தி எதிர்ப்புக்கு வித்திட்ட நீதிக்கட்சிதான் 1944-ம் ஆண்டு திராவிடர் கழகமானது. கல்வி, வேலைவாய்ப்பில் ஜாதி எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம்- வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என்பதும் ஜாதிய கட்டமைப்பை தகர்க்க அதைத் தாங்கிப் பிடிக்கிற அத்தனையையும் தகர்ப்பதும் திராவிட பேரியக்கத்தின் அடிநாதமாக இருந்தது. தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கம் தலையெடுத்த பின்னர்தான் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு கூழை கும்பிடு போட்டுக்கொண்டிருந்த சமூகங்கள் தோளிலே துண்டைப் போட்டு வலம் வரத் தொடங்கினர்.

இன்றைய தினம் தந்தை பெரியார் பிறந்து 146 ஆண்டுகள் ஆகியும் அவரது கொள்கையால்…. அவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல… இந்தியாவுக்கே இன்றளவும் தேவைப்படுகிறார்.

தமிழன் தலைநிமிர அடிப்படை கல்வியும், பொதுஅறிவும், மூடநம்பிக்கை ஒழிப்பும்தான் என்று தன் வாழ்நாளெல்லாம் ஓங்கி ஒலித்தவர் தந்தை பெரியார்.

கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடிப் போனால்தான் தமிழன் வாழ்வு மலரும் என்று உரக்கச்சொன்னார் திராவிடப் பெருந்தலைவர் தந்தை பெரியார்.

இந்திய தேச விடுதலைக்கு முன்னரே தனித்தமிழ்நாடு முழக்கத்தை முன்னெடுத்தவர் தந்தை பெரியார். அவருடைய சிந்தனைகள் காலத்திற்கும் பொருந்துபவை.

இந்திய அரசியல் சாசனத்தில் முதலாவது திருத்தமாக இடஒதுக்கீட்டை இடம்பெறச் செய்தவர் தந்தை பெரியார். இதற்காக அவர் நடத்திய போராட்டங்கள், தியாகங்கள் ஏராளம். அந்த இடஒதுக்கீடுதான் இன்று தமிழினமே கல்வியின் முன்னோடிகளாக இருக்க அடிப்படை. அதனால்தான் தமிழினம் அவரை தந்தை பெரியார் என்று உள்ளன்போடு… உணர்ச்சிப்பெருக்கோடு கொண்டாடி வருகிறது.

என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar146 !

பெண்கள், ஆண்களைப் போன்று துணிவாக நடந்து கொள்ளவேண்டும். பெண்கள் தனியாக வாழமுடியும்; எதையும் சாதிக்க முடியும் என்கின்ற நிலையில் வாழ வேண்டும். சுதந்திரமாக, கவலையற்று வாழ, தொல்லையற்று வாழ, அறிவைக் கொண்டு சிந்தித்து, அதன்படி நடந்துகொள்ள வேண்டும்” பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தில் எடுத்துரைக்கிறார் தந்தை பெரியார். சமூக வலைத்தளங்களில் பெரியாரை பெண்ணினம் கொண்டாடக் காரணம் அவரது பெண்ணிய சிந்தனைகளே.

மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதும் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமாணம் என்பதும் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் ஆகும். சாதி ஒழிப்பும், பெண் அடிமைத்தனம் ஒழிப்பும் தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன. பெரியார் போட்ட அடித்தளத்தால் தான், இன்று தேசிய அளவில் சமூகநீதிக் கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன.

ரஷியாவுக்குப் பயணம் சென்று வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. உலக கம்யூனிஸ்டுகளின் முதல் ஆவணமான கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை என்ற புத்தகத்தை தமிழில் முதன் முதலில் மொழி பெயர்த்துப் பதிப்பித்தவர் பெரியார். தமது கருத்துகளைப் பரப்ப 'குடியரசு' முதற்கொண்டு பல பத்திரிகைகளையும் நடத்தியவர் பெரியார்.

தமிழ்நாட்டில் தோழர் என்ற வார்த்தையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, கழகத் தோழர்களே… என்று அழைக்கவும் தொடங்கி பொதுவுடமை சிந்தனைகளை வளர்த்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் மொழியுணர்வு, எழுத்து சீர்திருத்தங்கள் தமிழுக்கு அவர் அளித்த கொடை.

தந்தை பெரியார் இன்றும் தேவைப்படுகிறார். அவரது சமூகநீதிச் சிந்தனைகளும்.. பெண்ணிய சிந்தனைகளும்.. பகுத்தறிவு முழக்கங்களும் நவீனயுகமான இணைய உலகில் பெரும் வரவேற்பை பெற்று,,, தந்தை பெரியாரின் தேவையை உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

தமது பிரசாரங்களில் தாம் சொல்வதாலேயே ஒரு கருத்தை ஏற்கவேண்டியதில்ல என்றும், சிந்தித்துப் பார்த்து அவரவர் கருத்துக்கு சரியெனப் படுகிறவற்றை மட்டுமே ஏற்றால் போதுமென்றும் வாதிட்டவர் தந்தை பெரியார்.

திராவிட இயக்கத்தின் முன்னோடி… திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் வழிகாட்டி தந்தை பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று சாதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்து தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதிநாள். ஆம், தமிழினத்தின் விடியலான தந்தை பெரியாருக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar146 !
தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ள நன்றி அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த இந்த ஆட்சி மகுடம் - மாணிக்கக் கற்கள் பொருத்தப்பட்ட ஒளிவீசும் மகுடமாக சமூகநீதி பிரகடனத்தைச் செய்துள்ளது.

இது காலம் காலமாக நின்று பேசும் வரலாற்றுக் கல்வெட்டாக, சிலாசாசனமாக ஒளிவீசப் போகிறது, போகிறது! நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி என்றும் ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்றழைக்கப்பட வேண்டியது - வரலாற்றின், காலத்தின் கட்டளை! எனக் கூறிப்பிட்டுள்ளார்.

ஆம்… தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளை வென்றெடுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதிக்கான சரித்திர நாயகர்தான்.

பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சியையும், பேரறிஞர் அண்ணாவின் லட்சிய ஆட்சியையும், முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனை ஆட்சியையும் தந்து கொண்டிருக்கிறார் சாதனை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது பெயர் அல்ல. அதுஒரு பெருஞ்செயல்.

தந்தை பெரியாரின் பிறந்தநாள் வெறுமனே சமூகநீதி நாள் மட்டும் என்று அறிவித்துவிடவில்லை. செப்டம்பர் 17ந் தேதி சமூகநீதி நாள் உறுதியேற்பையும் அரசாணையாக வெளியிட்டுள்ளது கழக அரசு.

சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை மத வேறுபாடுகளை உதறித்தள்ளி, பெண்களை சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் பிறந்ததினமான செப்டம்பர் 17-ம் தேதி அன்று ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் ''சமூக நீதி நாள்'' உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் விதமாக பின்வரும் உறுதிமொழியை அனுசரிக்க முடிவுசெய்து கழக அரசு ஆணையிட்டுள்ளது.

''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பன்பு நெறியும்

எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன் !

சுயமரியாதை ஆளுமைத் திறனும் -பகுத்தறிவுக் கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்..!

சமத்துவம் , சகோதரத்துவம், சமதர்மம், ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்..!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்..!

சமூகநீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்..!''

இந்த உறுதிமொழியை ஒவ்வொரு திராவிடத் திருமகன்களும் இனி ஏற்பார்கள். தந்தை பெரியார் என்றென்றும் ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் வீற்றிருப்பார்.

ஓங்குக தந்தை பெரியார் புகழ்!. வாழ்க சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!.

                                                     -பி.என்.எஸ்.பாண்டியன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?