நீதியும் நிதியும்!
நிதியில் நீதி வேண்டும் !
சென்னையில் நடைபெற்ற 16 ஆவது நிதிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘தமிழ்நாட்டுக்கு நிதி வேண்டும்' என்ற கோரிக்கையை வைக்காமல், ‘தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதியில் நீதி வேண்டும்' என்ற தன்மையோடு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தமிழ்நாடு என்ற தனிமாநிலத்துக்கான கோரிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இந்திய மாநிலங்கள் அனைத்துக்குமான கோரிக்கையாக அமைந்துள்ளது.
மாநில உரிமைகளை நிலைநாட்டி, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை நிலைநாட்டும் உரையாக மாண்புமிகு முதலமைச்சரின் உரை அமைந்திருந்தது.
16 ஆவது நிதிக்குழுவின் தலைவராக இருப்பவர் அரவிந்த் பனகாரியா.
இதுவரை 12 மாநிலங்களுக்கு இக்குழு சென்றுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உரையும், தமிழ்நாடு அரசின் நிதித் துறை அளித்த விளக்கமும் அவருக்கு மிகப்பெரிய கண்திறப்பாக அமைந்திருந்தது. இதனை அவரே செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் விளக்கமானது மிகச் சிறந்தது என்று பாராட்டி இருக்கிறார் அரவிந்த் பனகாரியா.
இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இன்று வளர்ந்து நிற்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.87 விழுக்காடு என்ற அளவில் தமிழ்நாடு பங்களிப்பினை வழங்குகிறது. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தினை அடைவதற்கான பெருங்குறிக்கோளினை தமிழ்நாடு இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதற்கான பங்களிப்பை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசு 16 ஆவது நிதிக்குழுவிடம் வலியுறுத்தியது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.87 விழுக்காடு அளவில் தனது பங்கினைச் செலுத்தும் மாநிலத்துக்கு அதற்கு இணையான நிதியைத் தருவதுதானே நீதியாக இருக்க முடியும் என்பதுதான் தமிழ்நாடு அரசு எழுப்பும் கேள்வியாகும்.
‘“ஒன்றிய அரசால் பகிர்ந்தளிக்கப்படும் நிதியிலிருந்து குறைந்தபட்சமாக 50 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். வரி அல்லாத வருவாய் களையும் பகிர்ந்தளிக்கப்படும் நிதிகளின் தொகுப்பில் இணைப்பதற்கு உரிய அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அல்லது பகிர்ந்தளிக்கக் கூடிய தொகுப்பில் மாநிலங்களுக்கான பங்கினை அதிகரித்து வழங்க வேண்டும். மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் பத்து சதவீதத்திற்கு மிகாமல் விதிக்கும் வகையில் ஒரு செயல்முறையினை வரையறுக்க வேண்டும்.
அதற்குமேல், வசூலிக்கப்படும் கூடுதல் தொகை பகிர்ந்தளிக்கப்படும் தொகுப்பில் இணைக்கப்பட வேண்டும்.
மாநில அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனங்களின் கீழ் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களுக்கு 75 சதவீத பங்களிப்பை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
மாநில பேரிடர் மேலாண்மை நிதியினை 2026-27 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 58 சதவீதமாக உயர்த்தி, 98:16 என்ற அளவில் ஒன்றிய - மாநில நிதிப் பங்கீட்டில் வழங்க வேண்டும்.
பரிந்துரை காலத்தில் செயல்படுத்துவதற்கான நிதி அளவுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற அளவிலிருந்து 10 சதவீதம் என்ற அளவில் உயர்த்தப்பட வேண்டும்.” என்ற கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு வைத்துள்ளது.
இக்கோரிக்கைகளுக்கான நியாயத்தை முதலமைச்சர் அவர்களது உரை மிக அற்புதமாக விளக்கியது. ஒன்றிய அரசிற்கும் பல்வேறு மாநிலஅரசுகளுக்கும் இடையேயான அதிகார பகிர்வு மற்றும் பொறுப்புகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்படி வரையறுத்துத் தந்திருக்கிறது என்பதை முதலமைச்சர் அவர்கள் விளக்கினார்கள்.
சுகாதாரம், கல்வி, சமூகநலம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கான பல முக்கியமான திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாநில அரசுகள்தான் நிறைவேற்றி வருகின்றன, எனவே மாநில அரசுகளுக்குத் தான் நிதித் தேவை அதிகமாக இருக்கிறது என்று நடைமுறை உண்மையோடு கோரிக்கை வைத்தார் முதலமைச்சர் அவர்கள்.
கடந்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரி வருவாய்ப் பங்கினை 41விழுக்காடாக உயர்த்தியது.
ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு தருவது 33.16 விழுக்காடு மட்டும்தான். உண்மையில் 56 விழுக்காடு நிதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு அதிகமாகி வருகிறது, ஒன்றிய அரசு தரும் நிதி குறைந்து வருவதை விளக்கினார் முதலமைச்சர் அவர்கள்,
“சமச்சீரான வளர்ச்சியையும், திறமையான நிர்வாகத்தையும் இந்த வரிப் பகிர்வு முறையில் சமக் குறிகோள்களாகக் கருதி இந்த நிதிக் குழு தனது பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறோம். நாட்டின் சமச்சீரான வளர்ச்சியை எதிர்நோக்கும் வகையில் வளர்ச்சி குன்றிய பகுதிகளுக்கு தேவையான நிதியை வழங்குவதுஅவசியம் என்றாலும் அதே வேளையில், பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை அளிப்பதன் மூலமாகவே அவற்றின் வளர்ச்சியைத் தக்கவைப்பதுடன் அந்த மாநிலங்களின் வளர்ச்சிப்பாதைக்கும் வழிவகுக்க முடியும், என்பதையும் நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியக் கூட்டாட்சி, ஒருமைப்பாடு, மாநில உரிமைகள், வளர்ந்த மாநிலங்கள், வளர்ச்சி குன்றிய மாநிலங்கள் - ஆகிய ஐந்து நிலைகளையும் சீர்தூக்கிப் பார்த்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையானது இந்திய நிதி நிர்வாகத்துக்கான மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது. அதனால்தான் 16 ஆவது நிதிக்குழுத் தலைவர் பாராட்டி இருக்கிறார்.
பாராட்டுடன் சேர்த்து செயல்பாட்டையும் தமிழ்நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
பாகிஸ்தான் கப்பலை விரட்டிப் பிடித்து 7 பேரை மீட்ட இந்திய கடற்படை குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி.தமிழ்நாடு மீனவர்களுக்கு ஒரு நீதியா? ஒன்றிய அரசு மீது மீனவர்கள் அதிருப்தி.