அதானிக்கு பிடி வாரண்ட்

 அதானியை சுத்துப்போட்ட அமெரிக்கா.. ரூ. 2 ஆயிரம் கோடி லஞ்சம்.. பிடிவாரண்ட் பிறப்பிப்பு!

லஞ்சம் கொடுத்து அமெரிக்க முதலீடுகளை ஈர்த்தாக தொழில் அதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான கவுதம் அதானி, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டக்கூடிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும், இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் நிலையத் திட்டத்தை உருவாக்குவதற்கும் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதானியின் இந்த செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டத்திற்கு எதிரானது என நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


குஜராதர்தைச் சேர்ந்த அதானி பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்.


அமெரிக்க நீதித் துறை இணையதளத்தில் உள்ள குற்றப்பத்திரிகையின்படி, இந்தியாவில் சூரிய மின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர அதானி முன்வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



இதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் இந்திய ரூபாயில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த முறைகேடான ஒப்பந்தங்களின் மூலம் சர்வதேச முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தி 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதாவது சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் பெற்றதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2020ஆம் ஆண்டு முதல், இந்திய அதிகாரிகளை அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதுதொடர்பாக சாகர் அதானி, அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நியூயார்க் நீதிமன்றம் கவுதம் அதானி மற்றும் அவரது மருகன் சாகர் அதானிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.



கவுதம் அதானி தற்போது இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.


ஃபோர்ப்ஸ் இதழின்படி 62 வயதான அதானியின் மதிப்பு 69.8 பில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5 லட்சம் கோடிக்கு மேல் ஆகும்.

மேலும் உலகின் 22 வது பணக்காரராகவும் இந்தியாவின் 2வது பணக்காரராகவும் கவுதம் அதானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?