அமெரிக்கா வரைச் சென்ற

 அதானிப்  புகழ் (?)க் கொடி?

அதானி நிறுவனத்தின் தலைவர் கெளதம அதானி, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் செயல் இயக்கநர் சாகர் அதானி, அதானி கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த வினீத் ஜெயின் உள்ளிட்ட 5 பேர் மீது அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் ப்ரூக்லின் நீதிமன்றத்தில், லஞ்சம், நிதி மோசடி புகாரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அதில் கூறப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றன. அதில், இந்திய அரசு அதிகாரிகள், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய அதிகாரிகளுக்கு அதானி நிறுவனத்தின் மோசடியில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது,``2019 டிசம்பர் - 2020 ஜூலை காலகட்டத்தில், இந்திய அரசு நிறுவனமான, இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனுக்கு(SECI), சூரிய ஒளி மின்சாரம் வழங்க, அதானி நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றுக்கும், அமெரிக்க பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட, இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலை கொண்ட சோலார் மின் உற்பத்தி நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

(அதானி நிறுவனத்தின் துணை நிறுவனம் அதானி கிரீன் எனர்ஜி என்றும், அமெரிக்காவில் லிஸ்ட் செய்யப்பட்டு இந்தியாவில் செயல்படும் அசூர் பவர் குளோபல் நிறுவனம் என்றும் CNBCTV18, Economic Times போன்ற செய்தி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன).

அந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்த நிறுவனங்கள், 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் சம்பாதிக்க முடியும்.


இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,800 கோடி. அந்த ஒப்பந்தத்தின் படி, அதானி கிரீன் எனர்ஜி 8 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தையும், அசூர் பவர் 4 ஜிகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்து தரவேண்டும். அதை இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் மாநில பகிர்மானக் கழகங்களுக்கு விற்கும் என்று உடன்பாடு ஏற்படுத்தப்படுகிறது.


ஆனால், அந்த மின்சாரத்தின் விலை மிக அதிகமாக இருந்ததால், மாநில மின் பகிர்மானக் கழகங்கள் இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனிடமிருந்து, மின்சாரத்தை வாங்க முன்வரவில்லை. மின்சாரத்தை வாங்க மாநில பகிர்மானக் கழகங்கள் முன்வந்தால் மட்டுமே, அதானி மற்றும் அசூர் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனால் கொள்முதல் செய்ய முடியும்.


மின்சாரத்தை வாங்க மாநிலங்கள் முன்வராததால், அதானி கிரீன் மற்றும் அசூர் பவர் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை, இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் கிடப்பில் போட்டது.


எனவே, மாநிலங்களை இந்திய சோலார் கார்ப்பரேஷனடமிருந்து மின்சாரம் வாங்க வைப்பதற்காக, அதானி நிறுவனத்தின் தலைவர் கெளதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் மற்றும் அசூர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால், செளரவ் அகர்வால், சிரில் சைப்னஸ் இணைந்து ஒரு லஞ்சத் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றனர்.


இந்திய அரசு அதிகாரிகள் மற்றும் மாநிலங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து லஞ்சம் கொடுப்பதே அவர்களின் திட்டம்.

லஞ்சத்துக்கு கைமாறாக, இந்திய சோலார் கார்ப்பரேஷனிடமிருந்து, மாநில மின் பகிர்மானக் கழகங்கள் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என டீல் பேசப்பட்டிருக்கிறது. இந்திய அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய அதிகாரிகளை அந்த சிண்டிகேட் சந்தித்து டீல் பேசியிருக்கிறது.


கெளதம் அதானி நேரடியாக ஆந்திராவுக்குச் சென்று, உச்சபட்ச அதிகாரி ஒருவரிடம் டீல் பேசியிருக்கிறார். மொத்தம் வழங்கப்பட்ட லஞ்சத் தொகை ரூ. 2,029 கோடி. அதில், ஆந்திர உயரதிகாரிக்கு மட்டும் ரூ. 1,750 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

இதையடுத்து, ஆந்திர அரசு சார்பில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.


ஆந்திராவையடுத்து, ஜூலை 2021 முதல் பிப்ரவரி 2022 காலகட்டத்துக்குள் தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்களின் மின் பகிர்மானக் கழகங்களும் இந்திய சோலார் கார்ப்பரேஷனிடம் மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆந்திராவுக்கு மட்டும் 2.3 ஜிகாவாட் மின்சாரமும், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சேர்த்து 650 மெகாவாட் மின்சாரமும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.


அசூர் பவர் நிறுவனம் சார்பாக லஞ்சப் பணத்தை கெளதம் அதானியே கொடுத்ததாகவும், பிறகு அந்த தொகையை அசூர் பவர் நிறுவனம் அதானிக்கு திருப்பிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. திருப்பிக் கொடுத்ததில் ஒரு பகுதி 7 மில்லியன் டாலர்களை பணமாக கொடுத்திருக்கிறது.


மற்றொரு பகுதியாக, 2.3 ஜிகாவாட் மின்சார உற்பத்திக்காக அசூர் பவர் நிறுவனம் பெற்ற ஒப்பந்தத்தை இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனுக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறது. திருப்பிக் கொடுக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அதானி கிரீன் நிறுவனம் வாங்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


இந்த ஒப்பந்தத்தை கைமாற்றும் பணியை இந்திய அதிகாரிகளிடம் பேசி, தான் பார்த்துக் கொள்வதாக அதானி மெயில் உரையாடலில் தெரிவித்திருக்கிறார். 650 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தத்தை மட்டும் அசூர் பவர் நிறுவனம் வைத்துக் கொண்டது.


 இந்த மின் உற்பத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதலீடாக 3 பில்லியன் டாலர்களை அமெரிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பாண்டு பத்திரங்கள் மூலமாக பெற்றிருக்கிறது அதானி கிரீன் நிறுவனம்." என்கிறது அந்த புகார் அறிக்கை.

இந்த பரிவர்த்தனைகள் நடப்பதை முதலில் இருந்தே கவனித்த Securities and Exchange Commission (அதாவது இந்தியாவுக்கு செபி போல, அமெரிக்காவுக்கு SEI), சில விளக்கங்களை இரு நிறுவனங்களிடமும் கேட்டிருக்கிறது. ஆனால், பரிவர்த்தனைகளை மறைத்து, தவறான ஆவணங்கள் மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டதாக SEI குற்றம்சாட்டுகிறது.

. மேலும், இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அதை மறைத்து அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் மோசடியாகக் கடன் பெற்றதும், அமெரிக்க சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் லஞ்சப் புகாரில் சிக்கியதும்தான், அதில் முக்கியக் குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


இந்த லஞ்ச திட்டம் செயல்படுத்தப்படும்போது நடத்தப்பட்ட தொலைபேசி மற்றும் மெயில் உரையாடல்கள், யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற தகவல்களை, அழித்து விசாரணைக்கு தடையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இந்தக் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் 20% சரிந்துள்ளன. சுமார் ரூ.2.5 லட்சம் கோடிக்கு அதானி பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கெளதம் அதானி உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கைது வாரண்ட்டும் அமெரிக்க நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.


மறுபுறம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவை அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது.


குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில், அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தத்தையும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் போடவில்லை என மின்சாரத்துறை அதைச்சர் கூறியுள்ளார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?